அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்து கொள்ள இந்த நூல் முயலுகிறது. ‘ அரசியல் இஸ்லாமியர்களின் திட்டங்கள், இலக்குகள் நோக்கங்களுடன் இடதுசாரிகளும் மார்க்சியர்களும் உடன்பட வேண்டியதில்லை. தமது விமர்சன நிலைபாட்டை மார்க்சியர்கள் மூடி மறைக்காது, தெளிவாக முன்வைக்க வேண்டும்‘ என பாகிஸ்தானிய மார்க்சியரான தாரிக் அலி கோருவதனை அடியொற்றி, இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன்