கார்ல் மார்க்ஸ், அம்பேத்கார், ரோஸா லக்சம்பர்க், அந்தோனியோ கிராம்ஸி, பெரியார் போன்றவர்களதுநம்பிக்கையே எனது நம்பிக்கை. ழான் பவுல் சார்த்தர் சொன்னது போல ‘தன் காலத்தின் முழுமனிதன் சேகுவேரா’ என்பதனை நம்புபவன் நான். சே குவேராவின் மரணமுற்ற நாளான அக்டோபர் 9 ஆம் நாளில் எனதுஇணையதளம் உயிர்க்கிறது.
‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல்இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என்நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெயர்ப்பாளன், செயற்பாட்டாளன் என்கிறஅடையாளங்களெல்லாம் தற்காலிகமானவை, சமயங்களில் கூச்சத்திற்குரியவை என்றே நான் புரிந்திருக்கிறேன்.
இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை மொழியாக்கம் என இதுவரையிலும் என்னுடைய 30 நூல்கள்வெளியாகியிருக்கின்றன. அன்றாட வாழ்வு, இலக்கிய வாழ்வு, அரசியல் வாழ்வு என்பதற்கிடையில் என்னளவில் மலையளவு பிளவுகள்ஏதும் இல்லை. எதிர்வரும் நாட்களில் எனது அனுபவம் கவிதைத் தொகுப்புகள், நாவல்கள் எனும் புனைவிலக்கிய வடிவங்களிலும்விரிவுபெறும். இனிமேல் நான் எழுதும் அனைத்தும் இங்கு ஆவணப்படுத்தப்படும்.
நண்பர்களுக்கான கடிதமும் முதல்காதல் கவிதைகளும் இலக்கியம் என்றே நான் கருதுவதால் எழுதத்துவங்கி அரைநூற்றாண்டுஆகிவிட்டது. பிரசுரம்தான் எழுதுவதற்கான அடையாளம் எனில் எழுதத்துவங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது எழுத்துக்களைஇதுவரை பிரசுரித்த இதழ்களின் ஆசிரியர்களுக்கும் இணையதளங்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் எனது நன்றி சொல்ல இது தருணம்.
தளத்திற்கான ஓவிய வடிவமைப்பைச் செய்த ஓவியர் புகழேந்தி, தளவடிவமைப்பை மேற்கொண்ட இயக்குனர் சுஜீத்ஜி, எனதுஉருவப்படங்களைத் எடுத்த ஓவியர் கே.கிருஷ்ணராஜா மற்றும் புகைப்படக் கலைஞர் சாந்தன் சாந்தகுணம், இத்தளத்தை நிர்வகிக்கும் பேரன்பு கொண்ட கணிணி விற்பன்னர்கள் சசீவன் கணேசானந்தன், சாத்விகா சுதாகர் ஆகிய அறுவரும் எனது நிரந்தர அன்புக்கு உரியவர்கள்.
என்றும்போல எனக்கு எல்லாவகையிலும் நண்பர்களும் உடன்பயணிகளும் வழிப்போக்கர்களும், கருத்து எதிரிகளும் உண்டு. தற்போதுஇலண்டனுக்கு வெகு தொலைவிலுள்ள குறுநகரொன்றில் வசிக்கிறேன். ‘எமது வாழ்வு இவ்வாறுதான் கொண்டு செல்லப்படவேண்டும்என நாம் திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும்போது, எமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்வு’ எனும் பீட்டில்ஸ் பாடகன்ஜான் லென்னானது கூற்றை எனது தலையினுள் எங்கெங்கும் நான் கொண்டு திரிகிறேன்.
*
யமுனா ராஜேந்திரன்
9 அக்டோபர் 2016