இன்சென்டிஸ் : அழிவும் இழிவும்

பிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். லெபனானில் 1970 களில் அந்நாட்டின் தெற்குத் திசையில் பேருந்தொன்றில் பயணம் செய்த பாலஸ்தீன இஸ்லாமிய அகதிகளும் அவர்தம் குழந்தைகளும் கிறித்தவ ஆயுததாரிகளால் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எஞ்சியவர்கள் பேருந்துடன் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தப்படுகிறார்கள். 28 பேர் இந்தப் படுகொலையில் மரணமுற்றார்கள். இந்தப் பிம்பத்தின் அடியொற்றி லெபனானிய வரலாற்றில் முன்னும் பின்னுமாக பயணம் செய்யும் நாடகாசிரியர் வாஜ்தி மவாத் 2003 ஆம் ஆண்டு தனது படைப்பனுபவத்தை இன்சென்டிஸ்/ஸ்கோர்ச்ட் எனும் நாடகமாக எழுதி முடிக்கிறார்.

நாடகமாக நிகழ்த்தப்பட்ட இன்சென்டிஸ் கதையை 2010 ஆம் ஆண்டு கனடிய-கியூபெக் இயக்குனரான டெனிஸ் வில்யானேவு திரைப்படமாக உருவாக்குகிறார். இன யுத்தங்கள் உள்நாட்டுப் போர்கள் இடப்பெயர்வு நூறு நூறாகப் பிளவுண்ட ஆளுமைகளின் தோற்றம் நன்மைக்கும் தீமைக்கும் அர்த்தம் இடம் பெயர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி என நாம் வாழும் காலத்தைப் பிரதிநித்துவம் செய்யும் இந்தப் பிரதியின்/நாடகவடிவ நூலின் அட்டைப்படம் மானுடத்தாயின் அரவனைப்பில் இருக்கும் மிருகமான ஓரு ஓநாய் அவளது மார்ப்புக் காம்பிலிருந்து சொரியும் பாலில் நிரம்பிய கிண்ணத்திலிருந்து பாலை உறுஞ்சிக் கொண்டிருக்கிறது.

லெபனானிய வரலாறு குறித்த மிகக் கொஞ்சமான புரிதலேனும் இப்படத்தை பழுதறப் புரிந்துகொள்ள நமக்கு அவசியம். பிரெஞ்சுக் காலனியான லெபனான் எழுபதுகளில் மெரினட் கிறித்தவர்களால் ஆளப்படும் ஒரு நாடு. இவர்களில் பெரும்பான்மையோர் நாட்டின் வடக்கில் வாழ்கிறார்கள். சிறுபான்மையினங்களான ஷியா-சன்னி முஸ்லீம்களும் அந்நாட்டில் தெற்கில் வாழ்கிறார்கள். இந்த இரு இஸ்லாமிய இனக்குழுக்களுக்குள்ளும் பகைமையும் மோதல்களும் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. என்றாலும் இஸ்ரேலினது ஒடுக்குமுறையினால் பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த நான்கு இலட்சம் பாலஸ்தீன இஸ்லாமிய மக்களிடம் இவர்கள் பரிவாகவே இருந்தார்கள். அன்றைய நிலைமையில் லெபனான் இராணுவம் என்பது கிறித்தவ தேசிய ராணுவம். இது நாட்டின் வடக்கில் இயங்கி வந்த கிறித்தவ ஆயுதக் குழக்களுக்கு ஆதரவாகவே இயங்கிவந்தது. இந்த ஆயுதக் குழுக்கள் தெற்கில் வாழும் இஸ்லாமிய மக்களின் மீதும் பாலஸ்தீன அகதிகளின் மீதும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தது. ஆட்சியாளர்களான மெரினட் கிறித்தவர்கள் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய அரசியல் ஆதரவும் ஆயுத ஏற்றுமதியும் பெற்றவர்கள். இஸ்லாமிய மக்களையும் பாலஸ்தீனர்களையும் அரபு நாடுகள் ஆதரித்தன. கிறித்தவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இவர்களை ஆயுதபாணிகளாகவும் ஆக்கின. இந்த அரசியல் யதார்த்தத்தையும் மக்களின் பிரதிநித்துவத்தை முன்வைப்பதாகவுமே இன்சென்டிஸ் படத்தின் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள்.

மர்வான் லெபனானின் வடக்கைச் சேர்ந்த ஒரு கிறித்தவப் பெண். அவளது காதலனான வஹாப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் அகதி. ஓரு முஸ்லீம் அகதியான வஹாபுடன் மெரினட் கிறித்தவப் பெண்ணான மர்வான் ஓடிப்போவதென்பது தமது இனத்துக்கு இழைக்கும் அவமானம் எனக் கருதியே மர்வானின் சகோதரர்கள் வஹாபைச் சுட்டுக் கொள்கிறார்கள். கர்ப்பமுற்றிருக்கும் மர்வான் உரியகாலத்தில் ஆண்மகவைப் பிரசவிக்கிறாள். அவளது பாட்டி பிறந்த குழந்தைக்கு அவனது இடது குதிகாலுக்குக் கொஞ்சம் மேலாக அடையாளமாகச் செங்குத்தாக மூன்று ஆழக்காயங்களை உருவாக்கி தாயிடமிருந்து பிரித்து நள்ளிரவில் அநாதை விடுதிக்கு எடுத்துச் செல்லத் தந்துவிடுகிறாள். மர்வான் அங்கிருந்து தப்பி தரேஸ் நகரிலிருக்கும் தனது மாமாவின் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கவும் செய்கிறாள். இடைப்பட்ட நேரங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் உள்நாட்டில் கிறித்தவ-இஸ்லாமிய மோதலில் சமாதானத்துக்காகவும் செயலாற்றத் துவங்குகிறாள்.

அநாதை மகனைத் தேடிக்கண்டடைவது அவளது பிரதான நோக்கமாக இருக்கிறது. தெற்கில் கிறித்தவ ஆயுதக் குழுக்கள் முஸ்லீம் அகதிகளின் மீது நடத்திய தாக்குதலையடுத்து முஸ்லீம் ஆயுதக் குழுக்களுக்கும் கிறித்தவ ஆயுதக் குழக்களுக்கும் லெபனானிய ராணுவத்துக்கும் இடையில் மோதல் மூண்டுவிட்டது. கிளர்ச்சி வடக்கிலும் பரவும் எனும் அச்சத்தில் பல்கலைக் கழகத்தை கிறித்தவ ராணுவம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டதால் பல்கலைக் கழகம் மூடப்படுகிறது. தெற்கில் அநாதையாக இருக்கும் தனது மகன் குறித்துக் கவலைப்படும் மர்வான் ஒரு நாள் அதிகாலை தரேஸ் நகரத்தைவிட்டு வெளியேறி லெபனானின் தெற்கு நோக்கிப் பயணிக்கிறாள. இதுவே இன்சென்டிஸ் படத்தின் அரசியல் பின்னணி. திரைப்படத்தில் பின்பு துவங்குகிறது மானுட உறவுகளுக்கும் மானுடம் நீங்கிய வரலாற்றுக்கும் இடையிலான உணர்ச்சிவசமான முரண்பயணம்.

இன்சென்டிஸ் படம் துவங்கும்போது ஆயுதக்குழுவொன்றின் கையில் அகப்பட்ட சிறுவர்களுக்கு துப்பாக்கி முனையில் தலைகள் மொட்டையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. துக்கம் தோய்ந்த கையறுநிலையிலான குழந்தைகள். குதிகாலுக்கு மேலாகச் செங்குத்தாக மூன்று பொட்டுப்போன்ற தழும்புகளுடன் துயர்தோய்ந்த விழிகளுடன் மர்வானின் அநாதை மகனான சிறுவன் நிகாத் இப்படித்தான் நமக்கு அறிமுகமாகிறான். கிறித்தவ-முஸ்லீம் கலப்பினச் சிறுவனான நிகாத் அபு தாரிக் எனும் பெயரில் கிறித்தவ ஆயுதக் குழுவின் சித்திரவதையாளனாகி படத்தின் இறுதியில் மகனும்-பாலியல் வல்லுறவாளனும்-கியூபெக்கில் பேருந்துத் துப்புரவு செய்பவனுமான நிகாத் ஹர்மானியாகி தனது தாயும்-வேசை எண்72 எனும் அடையாளம் கொண்டவளுமான மர்வானது கல்லறையின் முன் தலைகுனிந்து நிற்கிறான். அவனது கட்டுப்பாட்டில் இல்லாத தூய கணிதம் போன்ற அரசியல் சூத்திரங்களில் அகப்பட்ட அதே சிறுவன் நிகாத் தான் அவன்.

இன்சென்டிஸ் முழுப்படமும் பயணங்களால் ஆனது. தனது மகன் நிகாத்தைத் தேடிய அவனது அன்னை மர்வானின் பயணம். தனது அன்னை மர்வானைத் தேடித் திசைமாறிய நிகாத்தின் பயணம். தமது அன்னையான மர்வானின் வேண்டுகோளின்படி தமது இன்னொரு சகோதரனையும் தமது தந்தையையும் தேடிய அவளது மகளான ஜீனதும் மகனான சைமனதும் பயணம். இந்த மூன்று பயணங்களின் போக்கில் இடைவெட்டும் காட்சிகளால் முடிவடைகிறது நமது திரைப்பயணம். பயணங்கள் மூன்றாயினும் சந்திக்கும் புள்ளி ஒன்றுதான். மர்வான் தனது மகனைக் கண்டடைகிறாள். நிகாத் தனது தாயைக் கண்டடைகிறான். ஜீனும் சைமனும் தமது சகோதரனையும் தந்தைiயுயும் கண்டடைகிறார்கள். மூவரும் கூடவே கடவுளையும் தமக்குள் வெறுப்பைத் தாண்டிய சாந்தியையும் கண்டடைகிறார்கள்.

நிகாத்தை தேடிச்செல்லும் மர்வான் தனது மகன் இருந்ததாகக் கருதும் அநாதை இல்லம் கிறித்தவ ஆயுதக் குழுக்கள் முஸ்லீம் அகதிகளின் மீது மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லீம் ஆயுதக் குழுக்களால் சூறையாடப்பட்டதைக் காண்கிறாள். சிறுவர்கள் அங்கிருந்து பிறிதொரு முகாமுக்கு மாற்றப்பட்டிருககலாம் எனும் நம்பிக்கையில் தனது கழுத்திலுள்ள சிலுவையை அகற்றிவிட்டு வழியால் வரும் முஸ்லீம் மக்கள் நிறைந்த பேருந்தில் ஏறி பயணத்தைத் தொடர்கிறாள். கிறித்தவ ஆயுதக்குழு ஒன்றினால் பேருந்து இடையில் மறிக்கப்படுகிறது. பெரும்பாலுமான பயணிகள் சுட்டுக்கொல்லப்பட எஞ்சியவர்களை பெட்ரோல் ஊற்றி பேருந்துடன் கொழுத்துகிறார்கள். பேருந்திலிருந்து மிகச்சிரமப்பட்டுத் வெளியேறும் ஒரு முஸ்லீம் தாயும் அவளது மகளான சிறுமியும் மர்வானும் தப்ப நினைக்கிறார்கள். முஸ்லீம் அன்னை கொல்லப்படுவது நிச்சயம் எனும் நிலையில் சிறுமியைக் காப்பாற்ற நினைக்கும் மர்வான் சிறுமி தனது மகள் எனவும் தான் கிறித்தவப் பெண் எனவும் தனது சிலுவைச் சின்னத்தைக் காண்பிக்கிறாள். அன்னையை விட்டுவரமாட்டாத சிறுமி அன்னையப் பார்த்துக் கதறியழ மர்வானின் கையிலிருந்து சிறுமியை ஆயுதக் குழுவிலுள்ளவொருவன் பறிக்க சிறுமி தாயை நோக்கி ஒடும்போது சுட்டுக்கொல்லப்படுகிறாள். சிறுமி வீழ கொழுந்துவிடும் பேருந்து படபடத்து எரிகிறது.

தன் கண்முன்னால் நிகழ்ந்த பெண்களும் குழந்தைகளும் முதியோரும் கொல்லப்பட்ட லெபனானில் நிகழ்ந்து வரும் அன்றைய பேரழிவுகளுக்கு ஆதாரத்தில் காரணமான கிறித்தவ ஆயுதக் குழவின் தலைவனை தனது மகனைக் கண்டுபிடிக்க முடியாது என்கிற நம்பிக்கையிழந்த சூழலில் கொல்ல முடிவெடுக்கிறாள் மர்வான். இஸ்லாமிய ஆயுதக் குழுத்தலைவரின் உதவியோடு திட்டமிடும் மர்வான் கிறித்தவ ஆயுதக்குழு அரசியல் தலைவரின் மகனுக்கு பிரெஞ்சு மொழி படிப்பிக்கும் ஆசிரியையாக அவனது வீட்டில் நுழைகிறாள். திட்டமிட்டபடி அவனைச் சுட்டுக் கொல்கிறாள். 15 ஆண்டுகள் இதற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறை அவளது ஆன்ம உறுதியை உடைத்துவிட முடிவதில்லை. சதா சிறையறையில் பாடியபடி இருக்கிற அவள் ‘பாடும் பெண்’ என அழைக்கப்படுகிறாள். அவளது உறுதியை அழிப்பதற்காக சித்திரவதையாளன் ஒருவன் அழைக்கப்படுகிறான். அவன் அவளைத் திரும்பத் திரும்ப வல்லுறவுக்கு உட்படுத்துகிறான். கர்ப்பமடையும் அவள் கர்ப்பத்தைக் கலைக்கவும் முயல்கிறாள். முடிவதில்லை. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அதன் பின் விடுவிக்கப்படுகிறாள். கொல்லப்பட்டதாகக் கருதப்படும் ஆணும் பெண்ணுமான இரட்டைக்கு குழந்தைகளை மருத்துவத் தாதி காப்பாற்றி வளர்க்கிறாள்.

சிறையிலிருந்து மீளும் மர்வானை முஸ்லீம் ஆயுதக் குழுத்தலைவரான வாலா சம்சுதீன் சந்தித்து தமது திட்டத்துக்கு ஒத்துழைத்து கிறித்தவ ஆயுதக்குழு அரசியல் தலைவரைக் கொன்றதற்காகத் தான் அவளுக்குக் கைமாறாக வட அமெரிக்கா போக உதவுவதாகச் சொல்கிறார். அவள் தனது இரட்டைக் குழந்தைகளுடன் கனடா-கியூபெக் வந்து சேர்கிறாள். லெபனானிலிருந்து நிகாத்தைக் கண்டுபிடிக்கவே இயலாமல் கியூபெக் வந்துசேரும் அவள் நீச்சல்குளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்புக்கு ஆளாகி மரணமுறுகிறாள். மர்வானின் பயணம் அவளது மரணத்துடன் முடிகிறது. அவளது பயணத்தை பொறுப்பேற்குமாறு தமது குழந்தைகள் இருவருக்கும் உயில் ஒன்றையும் அவள் விட்டுச் செல்கிறாள். உயிலின்படி அவர்கள் தமது காணாமல்போன சகோதரனையும் தந்தைiயுயம் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்பே தனது கல்லறையின் மீது தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என எழுதிவிட்டுச் செல்கிறாள்.

ஜீன் தனது தாயின் உயிலுக்குச் செயல்வடிவம் தர லெபனானுக்குப் புறப்படுகிறாள். சைமன் தாயின் மரணத்துடன் தான் அமைதிபெற விரும்புகிறான். தான் கண்டிராத தன் வாழ்வுடன் பிணைப்புறாத பிறரைத் தேடிச்செல்வது அவனளவில் அவசியமற்றதாகத் தோன்றுகிறது. லெபனானுக்கு வரும் ஜீன் 30 ஆண்டுகளுக்கு முன்பாகத் தன் தாய் கல்விகற்ற பல்கலைக் கழகத்தில் துவங்கி அவளது தாயினது கிராமம் அவளது உறவினர்கள் அவள் 15 ஆண்டுகாலமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கிடந்த சிறையறை என அனைத்தையும் கண்டுபிடிக்கிறாள். தன் தாய் வல்லுறவு புரியப்பட்டதை அறிந்து கொள்கிறாள். அந்த வல்லுறவில் பிறந்த குழந்தையே தனது சகோதரன் நிகாத் எனவும் அவள் கருதுகிறாள்.

நிகாத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக கியூபெக்கிலிருக்கும் தனது சகோதரன் சைமனை அழைக்கிறாள். சைமன் உயிலை நடைமுறைப்படுத்தும் நோட்டரியுடன் லெபனானுக்கு வருகிறான். சிறையில் பிறந்த நிகாத்திற்கு என்ன ஆனது என மருத்துவத் தாதியைக் கண்டு கேட்க அவள் பிறந்தது ஒருவரல்ல இருவர் எனவும் அவர்களது பெயர் ஜீன் எனவும் சைமன் எனவும் சொல்கிறாள். தனது தாயின் மீதான அபு தாரிக்கின் வல்லுறவில் பிறந்தவர்கள் தாமே என ஜீனும் சைமனும் இப்போது அறிந்து கொள்கிறார்கள்

இப்போது ஜீனும் சைமனும் நோட்டரியுடன் இணைந்து அவரது லெபனான் சகா ஒருவரின் உதவியுடன் நிகாத்தைத் தேடுகிறார்கள். நிகாத் தங்கியிருந்த அனாதை விடுதி இஸ்லாமிய ஆயுதக்குழு ஒன்றினால் தாக்கப்பட்டது எனவும் அவர்கள் அங்கிருந்த சிறுவர்களைக் கொல்லாமல் தமது குழுவினருடன் இணைத்துக் கொண்டதையும் அறிந்து கொள்கிறார்கள். அந்த ஆயுதக் குழுவின் தலைவனான வாலா சம்சுதினைத் தேடிச் செல்கிறார்கள். நிகாத் குறிபார்த்துச் சுடுவதில் கெட்டிக்காரன் எனவும் கொஞ்ச காலம் அவன் தாயைத் தேடித்திரிந்தான் எனவும் கிறித்தவர்களுடனான ஒரு சமரின்போது தனியொருவனாக அவன் 9 பேரைக் கொன்றான் எனவும் பிற்பாடு அவர்களிடம் அகப்பட்டுச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவன் அவர்களுடன் இணைந்து கொண்டான் எனவும் அதன் பின் அவர்களது சிறையில் கொடூரமான சித்திரவதையாளனாக அவன் ஆனான் எனவும் நிகாத் எனும் தனது பெயரை அவன் அபு தாரிக் என மாற்றிக் கொண்டான் எனவும் தற்போது அவன் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து நிகாத் ஹர்மானி எனும் பெயரில் வாழ்கிறான் எனவும் சம்சுதினின் வழியில் சைமன் அறிந்து கொள்கிறான்.

சம்சுதினைச் சந்தித்துவிட்டுத் திரும்பி மிகுந்த மனக்கொந்தளிப்புடனும் சோர்வுடனும் இருக்கும் சைமனை ஜீன் சந்திக்கிறாள். ஓன்றும் ஒன்றும் இரண்டாகவே இருக்க வேண்டும் இங்கு ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவே இருக்கிறது என்கிறான் சைமன். கொஞ்சம் குழப்பத்துடன் யோசிக்கும் ஜீனுக்கு தாம் தேடித் திரிந்த தமது சகோதரன் நிகாத்தும் தமது தந்தை-வல்லுறவாளன் அபுதாரிக்கும் ஒருவரே என்பது புரிந்துவிடுகிறது. இவர்களது வெகுநீண்ட பயணத்தின் வழியில் தாமே தேடி அறிந்து கொண்ட இந்த உண்மையை இவர்களது தாய் அன்றொரு நாள் நீச்சல் குளத்தின் கரையில் அறிந்து கொள்கிறாள்.

நீச்சல் குளத்தில் மூழ்கி எழும் அவளது கண்களில் ஒருவனின் இடது குதிகாலுக்குக் கொஞ்சம் மேலே செங்குத்தாக மூன்று பொட்டுக்களின் வடு தெரிகிறது. அவனது முகம் பார்க்காமலே அது அவளது அன்பு மகன் நிகாத் என அவள் அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனது முகம் பார்க்க அவனது முதுகின் பின் அவள் தயங்கி நிற்கும்போது அவனுடன் பேசிக் கொண்டிருப்பவன் ‘என்ன வேண்டும் பெண்மணியே?’ எனக் கேட்கிறான். நிகாத் முகம் திருப்பும்போது அது தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய அபுதாரிக் என்பதை அவள் அறிந்து கொள்கிறாள். அவளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவமனையில் மரணமுறுகிறாள். நொடியில் அவள் அறிந்து கொண்டதை தனது குழந்தைகள் தாமே தேடி அறிந்துகொள்ள வேண்டும் என அவள் விரும்புகிறாள். அதுவே அவளது உயில்.

இன்னும் ஜீனம் சைமனும் செய்ய வேண்டியது ஒன்று மிச்சம் இருக்கிறது. அது தமது தகப்பனும் தனது தாயின் மகனும் வல்லுறவாளனும் ஆன நிகாத்துக்கும் அபுதாரிக்குக்கும் அவர்களது தாய் எழுதிய இரண்டு தனித்தனிக் கடிதங்களைக் கொண்டு சேர்ப்பது. மிகுந்த புரிதலுடனும் கனிவுடனும் இப்போது பேருந்துத் துப்புரவாளனாக இருக்கும் நிகாத் ஹர்மானியைச் சந்திக்கும் அவர்கள் அவனிடம் இரு கடிதத்தையும் சேர்ப்பித்துவிட்டு நொடியில் அங்கிருந்து மறைகிறார்கள். முதலில் வல்லுறவாளன் அபுதாரிக்குக்கான கடிதம். இரண்டாவது அன்புமகன் நிகாத்துக்கான கடிதம். நிகாத் ஹர்மானி அப்போதுதான் பெயருடன் நிர்மாணிக்கப்பட்ட நோவல் மர்வானின் கல்லறைக் கல்லின் முன் தலைகுனிந்து நிற்பதுடன் படம் முடிகிறது. கல்லறைக்கல் உள்நாட்டுப் போரொன்றினிடையில் வாழ்ந்து கடந்து புலம்பெயர் நாடொன்றில் மரித்த நோவல் மர்வான் (1949-2009) என்ற அறுபது வயது மூதாட்டியின் துயரவாழ்வினை நமக்குச் சொல்கிறது

ஆயுதக் குழுவொன்றினால் கைப்பற்றப்படும் அநாதை இல்லச் சிறுவனான நிகாத்துக்கு ஆயுதமுனையில் முடிமழிக்கப்படும் காட்சியுடன் துவங்கும் திரைப்படம் இறுதிக் காட்சியில் அவனது தாயின் கல்லறையின் முன் மகனாகவும் அவளது குழந்தைகளின் பிறப்புக்குக் காரணமான வல்லுறவாளனாகவும் தலைகுனிந்து நிற்கும் காட்சியுடன் முடிகிறது.

அறுதியில் அன்பு செலுத்துதலும் உடனிருத்தலும்தான் வாழ்வில் முக்கியம் என்று அவனுக்கான இரு கடிதங்களிலும் எழுதுகிறாள் தாயான நோவல் மர்வான்.

தான் நேசித்த காதலன் வஹாபுடன் அவளால் உடனிருக்க முடியவில்லை. அந்தக் காதலின் வித்தான மகன் நிகாபுடன் அவள் உடனிருக்கவில்லை. நிகாபுக்கு உடனிருந்து அன்பு செலுத்தவென யாருமில்லை. அப்படி உடனிருந்து அன்பு செலுத்த அவனுக்கு யாரும் இருந்திருப்பார்களானால் கருணையற்றுச் சிறுவர்களைச் சுட்டுக்கொல்பவனாக கொலை எண்ணிக்கையைச் சாகசமாகக் கொள்பவனாக சித்திரவதை தரும் குரூரத்தை அதிகாரமாக ருசிப்பவனாக அவன் ஆகியிருக்காமல் இருந்திப்பானோ?

உறவுகளில் அடிநாதமான இந்த உடனிருத்தல் என்பது போர்க்களங்களில் உள்நாட்டு யுத்தங்களில் இனப்போர்களில் சிதறடிக்கப்படுகிறது என்பதனைப் படம் தாயின் வேதனையின் வழி முன்வைக்கிறது.

சிறுவர்களை அரசியல் தெளிவோ அல்லது கருத்தியல் தேர்வோ ஆயுதமோதலுக்குள் அவர்களைக் கொண்டு சேர்ப்பதில்லை. உயிர் வாழ்தலின் தேவை உடனிருத்தலின் தேவை போன்றன அவனைக் குழுவாக இருத்தலை நாடச்செய்கின்றன. பலவேளைகளில் இது பலவந்தமாக நேர்கிறது. சிறுவர் பருவம் என்பது சாகசங்களின் பருவம். போர் என்பது சாகசம். கொல்வதும் இங்கு சாகசத்தின் பகுதியாகிறது.

தப்பிப்பிறந்த கலப்பினக்குழந்தையான நிகாத் முஸ்லீம் குழவில் இணைத்துக் கொள்ளப்படுகிறான். பிற்பாடு முன்போது எதிரிகளாக இருந்த கிறித்தவர்களின் குழவில் இணைந்து கொள்கிறான். வன்முறையின் மீதான வேட்கை சித்திரவதை தரும் அதிகாரப் பரவசம் என்பதுதான் இங்கு அவனது அறம். அவனது அறம் மட்டுமல்ல இது பலவேளைகளில் அரசியல் அணிமாற்றங்களில் ஈடுபடும் குழுக்களின் அறமாகவும் இருக்கிறது.

குறிப்பாக லெபனான் அரசியல் இப்படித்தான் இருந்தது.

ஷியாக்களுக்கு ஈரான் ஆயுத உதவி. சன்னிக்களுக்கு ஈராக் ஆயுத உதவி. கிறித்தவர்களுக்கு இஸ்ரேல் மேற்கத்திய ஆயுத உதவி. பாலஸ்தீனர்களுக்கு அரபு நாடுகள் மற்றும் சோவியத் யூனியன் ஆயுத உதவி. இந்தக் குழுக்கள் தமக்குள் மோதிக்கொண்டேயிருந்தன. பலசமயங்களில் அகதிகளான பாலஸ்தீனர்களை வேண்டாத விருந்தாளிகளாக இவர்கள் இணைந்தும் பிரிந்தும் தாக்கினார்கள்.

அணிகள் சதா மாறிக் கொண்டேயிருந்தன. விசுவாசங்களும் மாறிக்கொண்டேயிருந்தன. நிகாத் அபுதாரிக் ஆனது இதனது தர்க்கப+ர்வமான விளைவே.

போர் ஓய்ந்தபின் அவன் கனடாவுக்குப் புலம்பெயர்கிறான். இப்போது வன்முறை தந்த அதிகாரம் அற்ற பேருந்துத்துத் துப்புரவாளன் அவன். உள்நாட்டுப் போரின் காரணங்களால் புலப்பெயர்வுக்கு ஆட்பட்ட ஒரு தலைமுறை இவ்வாறான உளச்சிக்கலைக் கொண்டுதான் இருக்கிறது. குர்திஸ்தான் லெபனான் போன்ற நிலப்பரப்புகளில் வாழ்ந்த இளைஞர்கள் இத்தகைய உளச்சிக்கலைக் கொஞ்சமோ அதிகமாகவோ கொண்டுதான் இருக்க முடியும். இவர்களைப் பரிவுடன் புரிந்து கொள்ளுமாறு நிகாத்தின் அன்னையான நோவல் மர்வானும் நாடகாசிரியரும் இயக்குனரும் நம்மைக் கோருகிறார்கள்.

படமெங்கிலும் கிறித்தவ தேசிய ராணுவத்துக்கும் கிறித்தவ ஆயுதக்குழுக்களுக்கிடையிலான வித்தியாசத்தை நாம்துல்லியமாக உணரமுடியாது. எடுத்துக்காட்டாக மர்வானால் கொல்லப்படும் கிறித்தவ ஆயுதக் குழவின் அரசியல் தலைவனது படம் பேருந்தைக் கொழுத்தும் கிறித்தவ ஆயுததாரிகளின் பனியனில் பொறிக்கப்பட்ட்டிருக்கும். அதே அரசியல்வாதியின் வீட்டுக்காவலில் ஈடுபடுபடுபவர்களாக ஆலிவ் சீருடையணிந்த ராணுவத்தினர் இருப்பார்கள். ராணுவத்துக்கும் கிறித்தவ ஆயுதக்குழுக்களுக்குமான உறவை நாம் ஸ்தூலமாகக் காணமுடியாது எனினும் அது படம் முழுக்கப் பிரசன்னமாக இருக்கிறது.

படத்தில் வருகிற பல காட்சிகளின் குறிப்பான தன்மையும் குறிப்பான நிலப்பரப்புகளும் அசலான லெபனான் யதார்த்தங்கள் அல்ல. படத்தில் பேருந்தில் கொல்லப்படுபவர்கள் பொதுவாக இஸ்லாமியப் பயணிகள். வரலாற்றில் அவர்கள் பாலஸ்தீன இஸ்லாமிய அகதிகள். படத்தில் குறிப்பிடப்படும் கிராமம் மற்றும் நகரங்களின் பெயர்கள் கற்பனையானவை. வடக்கு தெற்கு எனும் பிரிவினை மூலமே லெபனானின் அரசியல் முரண் காண்பிக்கப்படுகிறது. லெபனான் என்பதை எவரும் ஈழம் எனவோ அல்லது பொஸ்னியா எனவோ அல்லது ருவாண்டோ எனவோ பெயர் மாற்றிக் கொள்ள முடியும். இனப்பகைமை கொண்ட எலலா உள்நாட்டு யுத்தங்களுக்கும் சிற்சில குறிப்பான வித்தியாசங்களுடன் நாம் இன்சென்டிஸ் பட யதார்த்தத்தை பொறுத்திப் பார்க்க முடியும்.

படத்தின் நிலப்பரப்பை குறிப்பான எந்தக் காட்சியின் வழியிலும் நாம் உணர முடியாது. இரண்டு காட்சிகளில் பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களை என்னால் குறிப்பாக உணர முடிந்தது. மர்வானின் காதலனான வஹாப் எனும் அகதி தனது கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் குபியா சால்வை. இது பாலஸ்தீன தேசிய அடையாளம். ராணுவம் நகரத்தினுள் நுழையும்போது கண்ணாடிச் சன்னலில் பெண்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தக் கண்ணாடியில் ‘ஐ பாலஸ்தீன்’ அல்லது ‘நான் பாலஸ்தீனம்’ என எழுதியிருக்கும். மர்வான் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்பில் ஈடுபாடு கொண்டவள் என்பதற்கான சாட்சியமானது இப்பிம்பம்.

படத்தின் சொல்முறை குறித்துச் சில அவதானங்கள் : படத்தை மிகுந்த சுவாரசியமாக ஆக்குவது படம் பார்வையாளனுக்கு பல்வேறு புதிர்களை அவிழ்த்துக்கொண்டே செல்லும் ஒரு பயண அனுபவமாக இருப்பதுதான். வறட்சியும் புழுதியும் கொண்ட நிலத்தைப் படம் பிடித்திருக்கும் ஸீபியா நிறப்படிவம் மர்வானின் பயணத்தின் போது பெரும்பாலும் அருகாமைக் காட்சிகளுடன் இடிபாடுகளுடன் கறுமையடைவதும் ஜீனின் பயணத்தின்போது தூரக்காட்சிகளாக பரந்த அடர்ந்த வெளிச்சமான நிலவெளிகளில் இடம்பெறுவதும் இருவேறு உணர்வு நிலைகளையும் கால உணர்வையும் நமக்கு அடுத்தடுத்துத் தருகிறது.

உயில் அதற்குரிய மரியாதையுடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனும் கனடிய நோட்டரியின் பிடிவாதமான அறவுணர்வும் லெபனானில் அவரது சகாவின் சிக்கலான நிலைமைகளிலும் சாகச மனத்துடன் தகவல் தேடும் தொழில்துறை மாண்பும் அவர்களை மிகுந்த சுவாரசியமான பாத்திரங்களாக ஆக்குகின்றன. சைமன் நிகாத்தை தேடிச்செல்கையில் ஒரு கிராமத்தில் அவர்கள் தேநீர் தந்து உபசரிக்கப்படும் காட்சி ஒரு பண்பாட்டின் அன்றாடச் சடங்குகளை ஆவணத்தன்மையுடன் பதிவு செய்திருக்கிறது. தமது சகோதரனும் தகப்பனும் ஒரே நபர்தான் என அறியும் காட்சிக்கு அடுத்த காட்சியான நீச்சல்குளக் காட்சி இரட்டையர்களுக்கிடையிலான மனக்கொந்தளிப்பையும் பிணைப்பையும் மிகுந்த ஆதுரத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.

மிகச்சிக்கலான அதிர்ச்சிதரக் கூடிய ஒரு கரு தரக்கபூர்வமான பாத்திர வளர்ச்சி புதிர் நிறைந்த சாகசப் பயணம் போன்ற சொல்நெறி சுவாரசியமாகக் கதை நகர்த்தும் உப பாத்திரங்களின் அறவுணர்வு நம்காலத்தின் ஆதாரமான உள்நாட்டுப் போரின் உளச்சிதைவைப் பரிவுடன் நோக்கக் கோரும் கலாதரிசனம் என்பனவே இப்படத்தை பிரபஞ்சமயமான கலை அனுபவமாக மாற்றுகிறது

 

Comments are closed.