டோக்மே திரைப்பட இயக்கம்

அறிமுகமும் ஆவண மொழியாக்கமும் :
லிங்கராஜா வெங்கடேஷ்

1995 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி டேனிஷ் திரைப்பட இயக்குனர்களான லார்ஸ் வான் ட்ரையரும், தோமஸ் வின்டர் பெர்க்கும் என இருவரும் இணைந்து பாரிஸ் நகரில் டோக்மே எனும் திரைப்பட இயக்கத்தினை அறிவித்தார்கள். பின்னாளில் 25 இற்கும் மேற்பட்ட டேனிஷ் இயக்குனர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். டோக்மே என டேனிஷ் மொழியிலும் டாக்மா என ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்படும் இச்சொல் மதம் சார் நம்பிக்கை அல்லது புனிதமான விதிகளை ஒருவர் உறுதியுடன் ஏற்பதனைக் குறிக்கிறது. இந்த இயக்கம் ஒரு பிரகடனத்தையும் ஒரு தூய்மையின் (கற்பொழுக்கத்தின்) மீதான ஏற்கவேண்டிய சூளுரையையும் முன்வைத்தது.

மிகப்பெரிய பட்ஜெட்டில், பூச்சுக்களுடன் எடுக்கப்படும், பிரம்மாண்டமான, மாயையை விதைக்கும் ஹாலிவுட் படங்களுக்கு எதிராக, சிறிய பட்ஜெட்டில், தொலைக்காட்சிகளின் நிதி உதவியுடன் அல்லது ஐரோப்பாவின் சிறு நிறுவன உதவிகளுடன் எடுக்கப்படும் எளிமையான படங்களைத் தயாரிப்பது எனும் நோக்கத்துடனேயே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட, லார்ஸ் வான் டிரையரின் இடியட், தோமஸ் வின்டர் பெர்க்கின் செலிபிரேசன் என இரு படங்களை இந்த இயக்கச் சூளுரையின்படி எடுக்கப்பட்ட மாதிரிப் படங்கள் எனலாம். இவர்களது சூளுரையை இந்த இரு படங்களில் கூட முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதைப் பின்னாளில் இவர்கள் ஒப்புக் கொண்டார்கள். என்றாலும் இந்த முன்னோடியான, சோதனைச் சினிமா இயக்கம் லார்ஸ் வான் டிரையர் எனும் உலகின் உன்னதமான திரைப்பட இயக்குனரை உலக சினிமாவிற்குத் தந்தது. உலக சினிமா வரலாற்றின் பகுதியாகிவிட்ட டோக்மே திரைப்பட இயக்கத்தின் அடிப்படையான இரு ஆவணங்களை இங்கு மொழியாக்கித் தந்திருக்கிறோம்.

 

டோக்மே இயக்கத்தின் ஆவணம் ஒன்று :
டோக்மே95 இயக்கத்தின் பிரகடனம்

டோக்மே95 இயக்கம் என்பது 1995ம் ஆண்டின் வசந்தகாலத்தில் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நிறுவப்பட்ட திரைப்பட இயக்குநர்களின் கூட்டமைப்பு. டோக்மே95 இயக்கம் இன்றைய சினிமாவின் சில போக்குகளை மறுதலிப்பதற்கான தெளிவான இலக்குகளை கொண்டிருக்கிறது.

டோக்மே95 என்பது ஓர் மீட்பு இயக்கம்!

1960 இல் எல்லாம் முடிந்திருந்தது. சினிமா இறந்து போயிருந்தது கூடவே அது புத்தெழுச்சியையும் வேண்டியது. இலக்கு சரியானதாக இருந்தது, அதற்கான வழிமுறைகள் அவ்வாறில்லை. புதிய அலையானது கரையை நனைத்து சேறாய் மாறிய சிற்றலையென தன்னை மெய்ப்பித்தது. தனிமனிதத்துவமூப்பு மற்றும் சுதந்திரத்தின் முழக்கங்கள் இடைப்பட்ட காலத்தில் படைப்புகளை உருவாக்கியது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த இயக்குனர்களைப் போலவே அலையானது எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தது. அதன் பின்னிருந்தவர்கள் தவிர அந்த அலை ஒருபோதும் வலுவானதாக இருக்கவில்லை. முதலாளித்துவ எதிர்ப்பு சினிமா கூட முதலாளித்துவமாய் மாறிப்போனது. ஏனென்றால் அதன் கோட்பாடுகள் நிலைகொண்டிருந்த அடித்தளமானது கலையைப் பற்றிய முதலாளித்துவப் புரிதலில் வேர்கொண்டிருந்தது.

படைப்பாளி சினிமா (ஆச்சூர்) கருத்தாக்கமானது அது தொடங்கிய பொழுதினின்றும் அதற்கு பிறகும் முதலாளித்துவ மனோரதியாகமாகவேயிருந்தது. ஆகவே அது தவறாகியது.

டோக்மே95 இயக்கத்தைப் பொறுத்து, சினிமாவானது தனிநபர் மூப்புக் கொண்டதல்ல. இன்று தொழில்நுட்ப புயல் கொந்தளித்து எழுந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவானது சினிமாவின் அதிகபட்ச சனநாயகப்படுத்தலாக இருக்கும். முதன்முறையாக எவரொருவரும் திரைப்படமெடுக்க முடிகிறது. ஊடகம் மிகவும் அணுகத்தக்கதாக ஆகும்போது முன்னோடுதல் – அவான்ட் கார்ட்- என்பதும் முக்கியமாக ஆகும். இயக்கத்தின் தோற்றம். முன்னோடி – அவான்ட் கார்ட்- என்ற வார்த்தையானது போர்க்குணத்தைக் கொண்டிருப்பது தற்செயலானதல்ல. ஒழுங்கமைவுதான் தீர்வு. நாம் நமது திரைப்படங்களை ஒருபடித்தானவையாக இருக்குமாறு வைக்கவேண்டும், ஏனென்றால் தனிநபர்மூப்புச் சினிமாவானது நமது மதிப்பீட்டின்படி இழிவானதாகும்!

டோக்மே95 இயக்கம், மறுக்கப்படவே முடியாத தூய்மையின் மீதான சூளுரை விதிகளை முன்வைத்து தனிநபர்மூப்புச் சினிமாவை எதிர்க்கிறது .

1960 இல் எல்லாம் போதும் போதும் என்றாகிவிட்டது!. திரைப்படமானது அலங்காரப் பூச்சுக்குள்ளாகி மரணித்துப்போனது, அவர்கள் சொன்னார்கள் : அப்போதிருந்து அலங்காரப் பூச்சின் பயன்பாடு தகர்ந்திருந்தது.

இழிந்த சினிமா படைப்பாளியின் மேலதிக பணியானது பார்வையாளர்களை முட்டாள்களாக்குவது. இதைப்பற்றித்தானா நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்? இதைத்தானா நூற்றாண்டு திரைப்பட வரலாறு நமக்குக் கொண்டு தந்திருக்கிறது? மாயைகளின் வழி உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்திருப்பது? தனிமனித மூப்புக் கொண்ட கலைஞனின் மோசடியின் வரம்பில்லா தேர்வின் மூலமாக?

முன் அனுமானத்தை (நாடகீயத்தைக்) கடவுளாக்கி அதனைச் சுற்றிச் சன்னதமாடிக் கொண்டிருக்கிறோம். கதைமாந்தர்களின் உளப்பாங்கு கதையைத் தீர்மனிப்பதாக இருப்பது மிகவும் சிக்கலானது. மேலும் அது கலையின் உயர்ந்த வடிவமுமன்று. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆழமற்ற, மேம்போக்கான செயல்முறைகளும் திரைப்படங்களும் இங்கு போற்றப்படுகின்றன. இதன் விளைவு மலட்டுத்தனம். இரக்கவுணர்வு மற்றும் அன்பின் மாயத்தோற்றம்.

டோக்மே95 இயக்கத்துக்கு திரைப்படம் என்பது காட்சிப் பிழையன்று. இன்று தொழில்நுட்ப புயல் கொந்தளித்தெழுந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக வெறும் தோற்றப்பொலிவு தெய்வீகத்தன்மைக்கு உயர்த்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவரொருவரும் எந்நேரத்திலும் கொடிய உணர்ச்சிக்களிப்பின் பற்றுதலில் இறுதியாக எஞ்சியிருக்கும் உண்மையைக்கூட துடைத்தெடுத்துவிட முடியும். எல்லாவிதமான மாயத்தோற்றங்களின் பின்னால்தான் ஒரு திரைப்படத்தால் ஒளிந்துகொள்ள முடிகிறது.

டோக்மே95 இயக்கத்தைப் பொறுத்து திரைப்படம் என்பது மாயை அல்ல!

டோக்மே95 இயக்கம், மறுக்கப்படவே முடியாத தூய்மையின் மீதான சூளுரை எனும் விதிகளை முன்வைத்து தனிநபர்மூப்புச் சினிமாவை எதிர்க்கிறது.

டோக்மே இயக்கத்தின் ஆவணம் இரண்டு :
தூய்மையின் மீதான சூளுரை

‘டோக்மே95 இயக்கத்தினால் வரைவு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்வரும் விதிகளின் தொகுதிக்கு இணங்கி நடக்க நான் உறுதியேற்கிறேன்’

1. படப்பிடிப்பு வெளியிடங்களில்தான் நடத்தப்பட வேண்டும். செயற்கைச் சூழல் மற்றும் அரங்குகள் பயன்படுத்தப்படக்கூடாது. (குறித்த சூழல் கதைக்கு தேவையெனில் அச்சூழல் காணக்கிடைக்கும் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்).

2. ஒலி ஒருபோதும் காட்சிப் பதிவினின்று தனியாக உருவாக்கப்படக்கூடாது. காட்சிப்பதிவும் அவ்வாறே இயற்கையான ஒலியின்றி செய்யப்படக்கூடாது. இசை கட்டாயமாக பயன்படுத்தலாகாது (காட்சி படமாக்கப்படும் இடத்தில் இசையைத் தோன்றச் செய்யலாமேயொழிய தனியே பயன்படுத்தலாகாது).

3. காமிரா கட்டாயமாக கைகளால் தாங்கி இயக்கப்பட வேண்டும். காமிராவின் எந்தவொரு அசைவோ அல்லது அசைவற்ற நிலையோ கைகளால் எட்டப்படுவது மட்டுமே அனுமதிக்கப்படும். (காமிரா எங்கே நிற்கிறதோ அங்கேயல்லாது திரைப்படம் எங்கே நிகழவேண்டுமோ அங்கே படப்பிடிப்பு செய்யப்படவேண்டும்).

4.திரைப்படம் நிச்சயமாக வண்ணத்தில் எடுக்கப்படவேண்டும். கூடுதல் ஒளியமைப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஒளிப்படர்வுக்கு போதுமான ஒளி மிகக் குறைவாகயிருப்பின் அந்தக் காட்சி நீக்கப்படவேண்டும் அல்லது காமிராவோடு ஒரு சிறிய விளக்கை இணைத்துக் கொள்ளலாம்).

5.ஒளியியல் சார்ந்த வேலைப்பாடுகள் மற்றும் ஒளி வடிகட்டிகள் தவிர்க்கப்படவேண்டும்.

6.திரைப்படம் இயல்கடந்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கக் கூடாது.(கொலைகள், ஆயுதங்கள், போன்றன தோன்றக்கூடாது).

7.காலம் மற்றும் வெளி சார்ந்த அந்நியமாதல் தவிர்க்கப்பட வேண்டும்.

8.பாணிவகை (ஜானர்) திரைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

9.படச்சுருள் அளவு கட்டாயமாக அகாதமி 35எம்எம் ஆக இருக்கவேண்டும்

10. இயக்குநர் உரிமை கொண்டாடக் கூடாது

இதற்கு மேலும் ஒரு இயக்குநராக எனது தனிப்பட்ட விருப்புகளிலிருந்து விலகியிருக்க உறுதியேற்கிறேன். நான் இப்போது கலைஞனில்லை. முழுமையான படைப்பை உருவாக்குவதிலிருந்து விலகியிருக்க உறுதியேற்கிறேன். ஏனெனில் முழுமையை விட உடனடியான(பகுதியான) நிகழ்வுகளை மிக முக்கியமானதாக நான் பொருட்படுத்துகிறேன். எனது கதை மாந்தர்கள் மற்றும் காட்சியமைவுகளிலிருந்து மெய்மையை வெளிக்கொணர்வதே முதன்மையான இலக்காக இருக்கிறது. எந்தவொரு நல்ல கலையுணர்வுக்கும், அழகியல் முக்கியத்துவங்களுக்கும் என்ன நேரிடினும் எனக்கு வாய்த்திருக்கிற எல்லா வழிமுறைகளினாலும் இதைச் செய்துமுடிப்பதற்கு உறுதியேற்கிறேன்.

ஆக, நான் எனது தூய்மையின் மீதான சூளுரையை மேற்கொள்கிறேன்.

Comments are closed.