தோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த வரிகளை, தான் ஒரு மார்க்சியப் பகுத்தறிவாளன் என்பதால் “சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” எனக் கொள்வதே சரி என்கிறார். மத வழியிலான ஒழுக்க நெறிகளை விட, கம்யுனிச ஒழுக்க நெறிகளே மேலானவை என்று அழுத்திச் சொல்கிறார்.
கோவையில் அவரது வீட்டில் தோழர் ஞானையாவும் தோழர் தியாகுவும் உரையாடிக்கொண்டிருந்த போது, ஒரு அரசியல் மாணவனாக வியப்புடனும் ஆர்வத்துடனும் கவனித்துக்கொண்டிருந்தேன். நூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த பழுத்த கம்யுனிஸ்ட், தனது அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார். அதை அவர் ஒரு சுய தம்பட்டமாகவே செய்ய வேண்டியிருந்தது. எனக்கு எப்பொழுதும் இப்படித்தான் (I am blowing my own trumpet) என்று பின்னாட்களில் என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். தோழர்கள் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தாலும் அறிந்திருக்கவில்லை. கட்சிக்குள்ளும் பரவலாக இதே நிலைதான்.
வயதானவரை தொந்தரவாக ஏதும் கேட்டுவிடுவோமோ என்ற தயக்கத்துடன் பேசாமலே இருந்தேன். சந்திப்பு முடிந்து கிளம்பும் போது தயங்கித் தயங்கி “சுயசாதித் திருமணங்களை சட்டப்படி தடைசெய்ய வேண்டும்” என்ற கருத்து இன்றும் உங்களுக்கு உள்ளதா? என்று கேட்டுவிட்டேன். அவரது முகம் மலர்ந்தது. ஆனால் விடைபெறும் நேரம். அனைவரும் கலைந்துகொண்டிருக்கும் போது நான் மட்டும் அழுத்தி நிறைய பேச முயவில்லை . முதுமை காரணமாக நேரத்தை கண்டிப்புடன் கடைபிடித்துவந்தார். விடைபெற்றுக்கொண்டோம். என் கேள்வி அவரை உற்சாகப்படுத்தியிருந்ததை உணர்ந்தேன். மகிழ்ச்சி.
தோழர் ஞானையாவின் “அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்” நூலை, நானும் தோழர் நீலவேந்தனும் எங்களுக்குள் மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடியிருக்கிறோம். விவாதித்திருக்கிறோம். ஒடுக்குண்ட தலித் மக்களின் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசித்தறிய வேண்டிய அரிய நூல். பின்னாளில் தோழர் ஞானையா இந்நூலின் ஆங்கில மூலத்தை என் இணையர் இரம்யாவிற்கு அவரே கையெழுத்திட்டு அன்பளித்தார். இந்த நூலில் தான் “சுய சாதித் திருமணத்தைத் தடைசெய்ய வேண்டும்” என்ற அவரது கருத்தை அறிந்தேன். அதிர்ந்தேன். இது போன்ற அதிரடிக் கருத்துக்களும் கோரிக்கைகளும் தோழர் ஞானையாவின் தனித்த அடையாளங்கள். தனது வாழ்க்கை அனுபவங்களைத் திறனாய்வு நோக்கில் எழுதிய நூலுக்காக கட்சியிலிருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டவர். பின்னர் , முதுமை காரணமாக பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த காலத்திலும் “நான் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) உறுப்பினர்” என்று வாஞ்சையுடன் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வார். கட்சியை உயிரென நேசித்த தோழர் அவர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில், கத்தியால் விரலில் அறுத்துக்கொண்டு, ஒரு டப்பாவில் சொட்டவிட்ட இரத்தத்தின் சாட்சியாக “இந்திய விடுதலைக்காவும் மக்கள் நல் வாழ்விற்காகவும் போராடுவேன்” என்று சக தோழர்களுடன் எடுத்துகொண்ட உறுதிமொழிக்கு கடைசிவரை உண்மையாக இருந்தவர் தோழர் ஞானையா.
படிப்பை முடித்த கையுடன், கரூர் தபால் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட போது, தான் குடிக்கும் தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிக்க கூடாது என்று, ஒரு பார்ப்பன அஞ்சல் அதிகாரியால் மிரட்டப்பட்டார். தோழர் ஞானையா தன்னை ஒரு டார்ஜானாக உருவகப்படுத்திக்கொண்டு, அந்தப் பானையை அடித்து உடைத்துவிட்டு அந்தப் பார்ப்பனரையும் முறைத்த போது அலுவலகத்தில் நிலவிய அமைதி தான், உழைப்பாளர் உரிமைப் போராட்டக் களத்தில் அந்த இளம் கம்யுனிஸ்ட்டுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
தேசிய தபால் தந்தி ஊழியர்கள் சங்கத்தில் (N.F.P.T.E), விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் கம்யுனிஸ்ட் தோழர்களை வைத்துக்கொண்டு, வலதுசாரித் தலைமையின் பழிவாங்கல்களுக்கும், அரசின் கம்யுனிஸ்ட் வேட்டைகளுக்கும் நடுவே பணியாற்றத் தொடங்கியவர். கடைநிலை ஊழியனாக இருந்து, செயலாளர், பொதுச் செயலாளர் என முன்னேறி, அகில இந்திய அளவிலான சங்கத்தை இடதுசாரிகளின் தலைமைக்குக் கொண்டுவரப் பெரும்பணியாற்றியவர். பல கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய சங்கத்தில், சனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடித்து சங்கத்தை வழி நடத்தியவர். இது கட்சிக்குள் தான் அனுபவிக்காத (சனநாயகக்) கலாச்சாரம் என்கிறார். மூன்று முறை சிறை, ஐந்து முறை பழிவாங்கும் மாற்றல்கள், மூன்று முறை வேலை இடைநீக்கம், ஒரு முறை வேலை நீக்கம், ஒரு முறை கட்டாய ஓய்வு என அரசினால் பந்தாடப்பட்டவர். ஒவ்வொரு முறையும் போராடி வேலையைத் திரும்பப் பெற்றவர். சோவியத் யூனியனுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதியாகச் சென்றுவந்தவர் (பின்னாட்களில் கட்சித் தோழராகவும் சென்றுவந்தவர்). தோழர் ஞானையாவின் 40 ஆண்டுகால தொழிற்சங்க அனுபவங்கள், ஒரு பட்டப்படிப்பாகவே அறிந்துகொள்ளக் கூடிய அளவிலான விடயங்களை உள்ளடக்கியவை.
தோழர் ஞானையாவின் அனுபவங்கள் கட்டுரை எழுத்துக்களால் விவரிக்க முடியாதவை என்பது தெளிவு. “ஒரு கம்யுனிஸ்டின் அரிய அனுபவங்கள்” என்ற அவரது நூலின் அடிப்படையிலும், நான் அவரோடு பழகிய நாட்களில் விவாதித்து அறிந்துகொண்ட விடயங்களின் அடிப்படையிலும், அந்தக் கருப்புக் கம்யுனிஸ்டின் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் திறனாய்வுகளையும் மிகச் சுருக்கமாக பதிவுசெய்ய முயல்கிறேன்.
அவரே சொல்வது போல “பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி, பிரபலமடைந்த இயக்கங்களுக்குத் தலைமை தாங்கி, பெரும் தியாகங்கள் புரிந்து, பல்லாண்டுகள் சிறைப்பட்டு, பரந்த அங்கிகாரமுடையது அல்ல” தோழர் ஞானையாவின் வாழ்க்கை. இருந்த போதிலும், தனது 97 வயது வரை ஒரு கம்யூனிஸ்டாக, தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சியில் அவருக்குக் கிடைத்த உள்நாட்டு வெளிநாட்டு அனுபவங்களும், கடந்து வந்த பாதையை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நுண்மான் நுழைப் புலமும், தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்தி நடைபோடத் துணியும் நெஞ்சுரமும் அவரைத் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தோழராக நம் முன் நிறுத்துகின்றன.
இன்னும் ஆறு மாதங்களில் புரட்சி வெடித்து இந்தியா சோசலிச நாடாகிவிடும் என்ற கனவுடன், 1940 ல் தனது இருபதாவது வயதில், தடை செய்யப்பட்டிருந்த கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, கம்யூனிஸ்ட் குழு (communist cell) அமைத்து செயல்படத் தொடங்கியவர் தான் தோழர் ஞானையா. புரட்சி நடைபெறவில்லை என்றாலும், சீனப் புரட்சியும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சோசலிச கட்சிகளின் அரசுகளும், இந்திய விடுதலையும், புதிதாக விடுதலையடைந்த காலனி நாடுகளில் ஏற்பட்ட சோசலிசத் தாக்கமும், இந்திய சோவியத் நட்புறவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் குலைநடுங்க வைத்த சோவியத் யூனியனின் வளர்ச்சியும் எல்லாப் பொதுவுடமைவாதிகளைப் போலவும் தோழர் ஞானையாவிற்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தன.
இறுதிவரை தான் ஒரு உறுதியான கம்யூனிஸ்டாக, ஏற்றத் தாழ்வுகளில் மேடு பள்ளங்களில் கரடு முரடுகளில் காடு மேடுகளில் தொடர்ந்து பயணித்து சித்தாந்தப் பிடிப்புடன் வாழ்ந்தது, தனது வாழ்கையின் மாலைக்கட்டத்தில் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருவதாகச் சொல்கிறார் தோழர் ஞானையா. அதோடு கூடவே, கடந்துவந்த பாதையில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீதும், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீதும் கூர்மையான சுயவிமர்சனங்களையும் முன் வைக்கிறார். செய்தக்க அல்ல செய்யக் கெட்டதையும், செய்தக்க செய்யாமையால் கெட்டதையும் தோழர் ஞானையா பதிவுசெய்கிறார். குறிப்பாக சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவைக் குறிப்பிடுகிறார். இப் பிளவே இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பிளவு வரை இட்டுவந்ததாகவும் கூறுகிறார். இனி, இந்திய கம்யுனிச இயக்கங்களின் செயல்பாடுகளைப்பற்றிய அவரது கருத்துக்களை சற்றே நெருங்கிப் பார்க்கலாம்.
1930 களின் ஆரம்பத்தில், கம்யுனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரி நேச சக்திகளை எதிரிகளாகப் பார்த்தது கம்யுனிஸ்ட்களின் வளர்ச்சியை பெருமளவில் பாதித்ததைக் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம், இந்தியாவில் தேச விடுதலை இயக்கங்களுக்கு மக்களிடம் இருந்த ஆதரவு நிலைமைகளை சரிவர விளங்கிக்கொள்ளாமல், காங்கிரசையும் அதன் இடதுசாரிப் பிரிவையும் எதிரிகளாக வழிகாட்டி, 1930 டிசம்பர் Imprecor ல் எழுதிய கம்யுனிஸ்ட் அகிலத்தைக் குற்றம் சாட்டுகிறார் (Imprecor – International Press Correspondence). இதனால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் போன்ற சோசலிஸ்ட்டுகளை மட்டுமல்லாமல், அம்பேத்கர் போன்ற தலைவர்களிடமிருந்தும் கம்யுனிஸ்ட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டதைத் தவறு என்கிறார். இதைத் தவிர்த்திருந்தால் ஒரு கோசிமின்னோ, நெல்சன் மண்டேலாவோ இந்தியாவில் உருவாகியிருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்.
1920ல் கம்யுனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டிலேயே எம்.என்.ராய் முன்வைத்த “காங்கிரசு அழுகிக்கொண்டிருக்கிறது. …தேச விடுதலை இயக்கங்களுக்கு மாற்றாக சோசலிசத்திற்கான நேரடிப் போராட்டங்களை முன்னெடுத்து ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும்” என்ற கருத்தை லெனின் மறுத்தார். “தேச விடுதலை இயக்கங்களுடன் கம்யுனிஸ்ட் அகிலமும், காலனி நாட்டு கம்யுனிஸ்ட்டுகளும் நெருங்கிய உறவு வைத்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்” என்ற கருத்தினை லெனின் முன்வைத்து எம்.என்.ராயின் தவறான போக்கைத் திருத்தியதைக் குறிப்பிடுகிறார்.
1930 டிசம்பர் Imprecor ல் தவறாக வழிகாட்டிய கம்யுனிஸ்ட் அகிலம், 1935 ல் நடைபெற்ற ஏழாவது மாநாட்டில் “இந்தியத் தோழர்கள் ஐக்கிய முன்னணியைக் கட்டிவிடாத உத்திகளை எப்படிக் கையாளுவது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்” என்று அறிக்கையிட்டது. இது வருத்தத்திற்குரியது என்கிறார். தன் மீதான சுய விமர்சனத்தை முன் வைத்திருக்க வேண்டிய அகிலம் இந்தியத் தோழர்கள் மீது முழுப் பொறுப்பையும் தூக்கிப்போட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் தோழர் ஞானையா.
இப்படியாக, குறுங்குழுவாதத் தவறுகளில் இருந்து விடுபட்டு செயல்படத் தொடங்கிய கம்யுனிஸ்ட்கள், இம் முறை கம்யூனிஸ்ட் அகிலத்தின் சரியான வழிகாட்டுதலில், தங்கள் செல்வாக்கில் இருந்த வெகுமக்களை காங்கிரசில் செயல்பட வைத்தனர். காங்கிரசிற்குள் இடதுசாரிப் போக்கு வலுப்பெற்றது. காங்கிரசிற்குள் ஒரு புரட்சிகர அணியாக காங்கிரஸ் சோஷலிச கட்சி உருவானது. கட்சிக்குள் மார்க்சியத் தத்துவம் பரவத் தொடங்கியது. இ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி, ஜீவா, சுந்தரய்யா போன்ற மாணிக்கங்கள் கம்யுனிஸ்ட் கட்சிக்கு வந்தார்கள். கம்யுனிஸ்ட் கட்சியின் பரவலுக்கும் வளர்ச்சிக்கும் சாதகமான சூழல் உருவானது என்று குறிப்பிடுகிறார் தோழர் ஞானையா.
முறையான திட்டவரைவு இல்லாத காரணத்தால், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி 1934 வரை கம்யுனிஸ்ட் அகிலத்தில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்படவில்லை. 1920 ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யுனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில், சிறப்பு அழைப்பின் நிமித்தமே எம்.என் ராய் கலந்துகொண்டார். காலனி நாடுகள் விடுதலை பற்றிய லெனின் அறிக்கைக்கு துணை அறிக்கையாக தனது அறிக்கையை சமர்பித்தார் எம்.என் ராய். லெனின் மற்றும் எம்.என்.ராய் இடையிலான மேலது விவாதம், இந்த அறிக்கை தொடர்பானது தான். 1924 ல் எம்.என்.ராய் கம்யுனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிலும் இடம்பெற்றார்.
நிற்க.
தேச விடுதலை சக்திகளோடு கம்யுனிஸ்ட் இயக்கம் நெருக்கமாக செயல்படவில்லை என்பதை, தேச விடுதலையை கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தார்கள் என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மௌலானா ஹஜ்ரத் மொஹானி என்ற கம்யுனிஸ்ட் தான், 1921 ல் நடந்த காங்கிரஸ் பொதுக்குழுவிலேயே முழு விடுதலை தீர்மானத்தை முன்மொழிந்தார். காந்தியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே, இத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. கம்யுனிஸ்ட்கள் தொடர்ந்து ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் முழு விடுதலைத் தீர்மானத்தை முன் மொழிந்தே வந்தனர். இங்கே நாம், தோழர் ஞானையாவின் பார்வையில் குறிப்பாக “கம்யுனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளை” மட்டுமே பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்க.
இரண்டாம் உலகபோரில்
1942 ல் சோவியத் உள்ளிட்ட நேச நாடுகளின் அணிக்கு கம்யுனிஸ்ட் கட்சி உதவியது சரியான முடிவே என்ற போதும், வேலை நிறுத்தங்களுக்கு எதிரான நிலை எடுத்ததும், போராட்டங்களில் ஈடுபட்ட தேச பக்தர்களை ஐந்தாம் படை என்றும், சுபாஷ் சந்திர போஷ் போன்ற மரியாதைக்குரிய தேச விடுதலை இயக்கத் தலைவர்களை Quisling (படையணியைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள்) என்று வசைபாடியதும், கம்யுனிஸ்ட்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. ஸ்டாலின்கிராட் வெற்றிக்குப் பிறகாவது, கம்யுனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்ட பிறகாவது நமது முடிவினை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார் தோழர் ஞானையா. *
இந்திய விடுதலைக்குப் பிறகு மீண்டும் கட்சிக்குள் தலையெடுத்த தீவிர இடதுசாரிப் போக்கு, கட்சிக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. இதன் கொள்கை விளக்கம் 1949 ல் “இந்திய சுதந்திரம் ஒரு போலியானது. ஏமாற்று. பரஸ்பர இணைப்பும் முறுக்கும் பிணைப்பும் பின்னலும் கொண்ட மக்கள் சனநாயக புரட்சியையும், சோசலிசப் புரட்சியையும் சேர்த்தே நடத்த வேண்டும். பூர்ஷ்வா ஆட்சியை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்” என்பதாக இருந்தது. ஆனால் நாடு விடுதலை பெற்று, மக்கள் செல்வாக்குடன் நின்றிருந்த நேரு அரசாங்கத்தை எதிர்க்கும் இந்தத் தற்கொலைப் பாதை, கம்யுனிஸ்ட்களைப் படுகுழியில் தள்ளியதாகச் சொல்கிறார் தோழர் ஞானையா.
1950 மார்ச் மாதத்திற்குள் இந்தக் குறுங்குழுப் பாதையைக் கட்சி கைவிட்டது. பி.டி.ரணதிவே பதிவி நீக்கம் செய்யப்பட்டார். சி.ராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளர் ஆனார். ஆனாலும் ரஷ்யப் பாதையா சீனப் பாதையா என்ற குழப்பம் நீடிக்கவே செய்தது. தலைவர்கள் சி.ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ், எஸ்.ஏ.டாங்கே, பஸவபுன்னையா ஆகியோர் சோவியத் தலைவர்களின் கருத்தைக் கேட்டறிய, தலைமறைவாகவே மாஸ்கோ சென்றனர்.
ஸ்டாலின் உரையாடலைத் தொடங்கும் போதே “இந்திய நிலைமைகளைப் பற்றிய எங்களது புரிதல் மிகக் குறைவு. பொதுவான அறிவின் அடிப்படையிலும், மார்க்சிய லெனினிய இயக்கவியல் அடிப்படையிலும் உதவுகிறோம். ஏற்புடையதையும் நிராகரிக்க வேண்டியதையும் இனங்கண்டு செயல்பட வேண்டியது உங்கள் முடிவே” என்று சொல்லியிருக்கிறார். மேலும், ஆயுதம் தாங்கிய தெலங்கானா போராட்டம் கைவிடப்பட வேண்டும். நேரு அரசாங்கம் ஒன்றும் பொம்மை அரசாங்கம் அல்ல. அவ்வளவு எளிமையாக வீழ்த்திவிட முடியாது என்றும் தேர்தலில் பங்கேற்கவும் வலியுறுத்தியிருக்கிறார். (இவ் விவரங்கள், மாஸ்கோ ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று, உருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பெயர்த்து, விஜய் சிங் என்ற பேராசிரியர் revolutionary democracy என்ற இதழில் 2006 செப்டம்பரில் வெளியிட்டுள்ளார்). இப்படியாக “இந்தியா இறைமையுள்ள சுதந்திரக் குடியரசு” என்று ஏற்றுக்கொள்ள 1956 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. 1948 -56 வரையிலான எட்டு ஆண்டுகள் விரையமாகிவிட்டன என்கிறார் தோழர் ஞானையா.
கட்சிப் பிளவு
இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள் மிதவாத தீவிரவாத போக்குகளுக்கிடையிலான கருத்து மோதல்கள் உள்ளுக்குள் கணன்றுகொண்டே தான் இருந்தன. இந்த நிலைமை தான் பிளவிற்கு அடித்தளமிட்டது என்றாலும், சீன கம்யுனிஸ்ட் கட்சியின் சோவியத் எதிர்ப்பும், “பிளவுபடுத்துதல் புரட்சிகரமானது” என்ற மாவோவின் பொன்மொழியும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பிளவை ஊக்குவித்ததாகக் குறிப்பிடுகிறார் தோழர் ஞானையா. மேலும், சீனக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் ஊடுருவி சோவியத் எதிர்ப்புத் தீவிரவாதத்திற்குத் தூபம் போட்டது அமெரிக்க சி.ஐ.எ தான் என்றும் குறிப்பிடுகிறார். எல்லைத் தகராறில் சீண்டிவிடப்பட்ட சீனக் கம்யுனிஸ்ட் கட்சி, நேரு அரசாங்கத்திற்கு ஆதரவு நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்ததும் “இந்தியாவில் (கம்யூனிஸ்ட்கள்) டாங்கே கோஷ்யில் இருந்து முறித்துக்கொண்டு உண்மையான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை அமைப்பது அவசியமாகும்” என்று வெளிப்படையான அறிக்கையும்விட்டது.
மும்பையிலிருந்து வெளியாகும், அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுகொண்ட, கரண்ட் (Current) என்ற வார இதழ், கான்பூர் சதி வழக்கில் சிறையிலிருந்த டாங்கே, 1924 ல் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாகக் கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அவர் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் என்றும் குறிப்பிட்டு, ஒரு கடிதத்தையும் வெளியிட்டது. கட்சிக்குள் பிளவிற்குக் காத்துக்கொண்டிருந்த, தீவிர இடதுசாரிப் பிரிவு இக் கடிதத்திற்கு விளக்கம் கோரினர். அந்தக் கையெழுத்து, புரட்சியாளர்களுக்கிடையே பிளவை உண்டாக்க உளவாளிகள் இட்ட போலிக் கையெழுத்தே என்றும், தான் எப்பொழுதும் Sripat Amrit Dange என்றே கையெழுத்திட்டிருப்பதையும் டாங்கே சுட்டிக்காட்டினார். கட்சியிலிருந்த தீவிர இடதுசாரிப் பிரிவு, விசராணைக் குழு அமைக்கக் கோரியது. கோரிக்கையை தேசியக் குழு ஏற்கவும் செய்தது. அனாலும்1964 ஏப்ரல்11 அன்று நடந்த தேசியக்குழு கூட்டத்திலிருந்து நம்பூதிரிபாட், ஜோதிபாசு உள்ளிட்ட 32 உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாற்றுத் திட்டத்தையும் கட்சியையும் அறிவித்தனர். பிளவு உறுதிசெய்யப்பட்டது. இப்படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி –மார்க்சிஸ்ட் (சி.பி.எம்) உதயமானது. நக்சலைட்டுகள் வரை, தொடர்ந்து பிரிந்து சென்றவர்கள், தங்களது புதிய பாதை புரட்சிக்கு வழி வகுக்கும் என்று உற்சாகமாகப் பணியாற்றி, நாளாவட்டத்தில் நம்பிக்கை இழந்து, சிறு சிறு குழுக்களாகச் சிதறினர். இது தீவிர இடதுசாரிப் போக்கின் பக்கவிளைவுகளே என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் தோழர் ஞானையா.
பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், கேரளாவின் ஆட்சியைப் பிடித்த கம்யுனிஸ்ட் கட்சி, தொடர்ந்து முன்னேறி ஆந்திரா, உத்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், தமிழ்நாடு, ஒரிசா ஆகிய மாநிலங்களிலும் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும். இதில் பல மாநிலங்களில் ஆட்சியைக் கூடப் பிடித்திருக்க முடியும் என்று கருதுகிறார்.
கம்யுனிஸ்ட் கட்சி 1957 ல் கேரளாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே, 1955 ல் ஆந்திராவில் பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பை தாதாக்களின் அரசியல் அடியாளான எஸ்.கே.பாட்டீல் என்ற வலதுசாரி பிற்போக்காளரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்த நேரு அரசாங்கம், தரங்கெட்ட வழிமுறைகளைக் கையாண்டு ஆந்திராவில் கம்யுனிஸ்ட்களின் வெற்றியைப் பறித்தது. அந்த சூழலிலும் கம்யுனிஸ்ட் கட்சி 32% வாக்குகளைப் பெற்றது என்பது, எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் நடந்திராத சாதனை என்கிறார் தோழர் ஞானையா. கம்யுனிஸ்ட் கட்சி 1957 ல் ஆட்சியைப் பிடித்த கேரளாவிலும் “(கம்யுனிஸ்ட்களிடமிருந்து) விடுதலைப் போராட்டம்” என்ற பெயரில் சாதிய, மதவாத, வகுப்புவாத சக்திகளை ஊக்குவித்து மோதல்களைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தின் செயல்பாட்டை முடக்கி, 1959 ல் நேரு அரசாங்கம் கம்யுனிஸ்ட் அமைச்சரவையைக் கலைத்தது.
இப்படியாக கம்யுனிஸ்ட் எதிர்ப்பின் அடிப்படையில், நாட்டைப் பாழாக்கிய காங்கிரசின் பாவ மூட்டை மிகப் பளுவானது என்கிறார் தோழர் ஞானையா. இந்திய சீன எல்லைப் பிரச்சனையைக் கூட, கம்யுனிஸ்ட் எதிர்ப்பிற்குப் பயன்படுத்தினார் நேரு. மக்கள் மத்தியில் சீனாவிற்கு எதிரான மன நிலையை வளர்த்துவிட்டார். சீன இராணுவத்தை முதலில் தாக்கியது இந்தியா தான். சீனாவிடம் அப்படியொரு மனப்போக்கு இல்லை. சீனாவில் வட மேற்குக் கடைக் கோடியில் இந்திப் பாடல் ஒலித்த ஒரு கடைக்குள் சென்று பார்த்த போது, ஷாருக் கான் படம் வைக்கப்பட்டிருந்ததாக, பூனம் பூரி என்ற எழுத்தாளர் கூறுகிறார். சம்ஸ்கிருத நூல்களும், இந்திய இலக்கியங்களும் சீன நூலகங்களில் ஏராளமாக இன்றும் பார்க்கலாம் என்கிறார் தோழர் ஞானையா.
கம்யுனிஸ்ட்கள் வலுவடைவதைத் தடுக்க, வடக்கே ஜெயபிரகாஷ் அசோக்மேத்ரா தலைமையிலான சோசலிஸ்ட்களையும், தெற்கே தி.மு.க போன்ற கட்சிகளையும் (buffer forces) இடைவெளி ஆற்றல்களாக உருவாக்கும் உத்திகளையும் கையாண்டது காங்கிரஸ் கட்சி. இருந்த போதிலும் கம்யுனிஸ்ட் எதிர்ப்பைத் தீவிரமாகக் கையாண்ட சோசலிஸ்ட் கட்சி 1952 தேர்தலில் பலத்த அடி வாங்கியது. கம்யுனிஸ்ட் கட்சியே நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியாக வளர்ந்து நின்றது. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் சோஷலிஸ்ட் தலைவர்கள், வி.பி.சிங் போல் கம்யுனிஸ்ட்களுடன் தோழமை கொண்டிருந்தால், ஆ.எஸ்.எஸ். ஆதரவு என்று செல்லாமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவில் இடதுசாரிகள் மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்க முடியும் என்கிறார் தோழர் ஞானையா. இன்று சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலர் சோசலிசத்தையே கைவிட்டு சிதறிக்கிடக்கின்றனர். கம்யுனிஸ்ட் கட்சிகளும்பிளவுபட்டு பலமிழந்திருக்கின்றன. குறிப்பாக சி.பி.ஐ வலுவிழந்துள்ளது.
கூடா நட்பு
சி.பி.ஐ வலுவிழந்ததற்கு ஓர் முக்கியக் காரணமாக, 1968 தொடங்கி 1977 வரையிலான பத்து வருட காலம், ஆளும் காங்கிரசுடன் அது கையாண்ட அணுகுமுறையையே சுட்டுகிறார் தோழர் ஞானையா. இந்த ஆண்டுகளில் கட்சி தீவிர காங்கிரஸ் சார்பு நிலையை எடுத்தது. இந்த நிலைப்பாடு அவரசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரிக்க வைத்தது. முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்திராகாந்தி தலைமையில் சோசலிசத் திசையில் நேச சக்தியாகிவிட்டது என்ற தவறான நிலைப்பாட்டை சி.பி.ஐ எடுத்தது. பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தக் கருத்து நிலை, சாதாரண கட்சி உறுப்பினர்களின் புரட்சிகர உணர்வை மழுங்கடித்து, தொண்டர்களின் செயலூக்கத்தை வெகுவாகப் பாதித்தது. சோசலிசத்தை அடைய காங்கிரஸ் கம்யுனிஸ்ட் ஒற்றுமை அவசியம் என்ற அளவிற்கு கட்சியின் செயல்பாடு சென்றது. இது ஒரு திருத்தல்வாத போக்காகத் தெரிந்ததாக தோழர் ஞானையா துணிந்து சொல்கிறார். சி.பி.எம் இந்தத் தவறை இழைக்காமல், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது அன்றைய அரசியல் நிலைமைகளில் சரியான நிலைப்பாடு என்பதையும் பதிவுசெய்கிறார். சி.பி.எம் அவசரநிலையை எதிர்த்தது அக் கட்சியின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியது. அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திரா காந்தியும், ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார். சி.பி.எம் மேற்குவங்கத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. 1977 ல் நடந்த அந்தத் தேர்தலில், பிரமோத்தாஸ் குப்தா, ஜோதி பாசு, ஹரே கிருஷ்ண கோனார் ஆகிய சி.பி.எம் தலைவர்கள், மேற்குவங்க சி.பி.ஐ அலுவலகத்திற்கே சென்று கூட்டணி பேசிய போது கூட, சி.பி.ஐ தனது காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைத் தொடரப் போவதாகக் கூறி, இடது முன்னணிக்கு அரசியல் அடி கொடுத்தது.
தமிழ்நாட்டில் சி.பி.ஐ. கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் ஆதரவு நிலையைத் துணிச்சலாக மேற்கொண்டது. எம்.கல்யாணசுந்தரமும் எம்.ஜி.ஆரும் தி.மு.க. எதிர்ப்பு கூட்டணித் தலைவர்களாகவும், துடிப்பு மிக்க சி.பி.ஐ தோழர் பாலதண்டாயுதம் எம்.ஜி.ஆருக்கு அரணாகவிருந்தும் செயல்பட்டனர். சி.பி.எம் எம்.ஜி.ஆரையும் எதிர்த்தே வந்தது. தேர்தலில் எம்.ஜி.ஆர் 25 சட்டமன்ற தொகுதிகளை சி.பி.ஐ க்கு ஒதுக்கினார். தோழர் எம்.கல்யாணசுந்தரம் காங்கிரசையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரை வலியுறுத்தினார். கூடுதலாக தொகுதிகள் கூட பெற்றுகொள்ளுங்கள், காங்கிரசை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று எம்.ஜிஆர் மறுத்தார். சி.பி.ஐ எம்.ஜி.ஆரை நிராகரித்ததுவிட்டது. பெரும் திருப்பமாக, சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆரைச் சந்தித்து தொகுதி உடன்பாடு செய்துகொண்டார். தேர்தலில் வெற்றியையும் ஈட்டினார். இப்படியாக காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில் சி.பி.ஐ பெரும் இழப்புகளைச் சந்தித்தது. சி.பி.எம் சரியான நிலைபாடுகளை எடுத்து முன்னுக்கு வந்தது. சர்வதேச அங்கீகாரமும் பெற்றது.
தடம்புரண்டு கொண்டிருந்த சி.பி.ஐ, 1977-80 படிண்டா மாநாட்டிற்குப் பிறகு, காங்கிரசைக் கழட்டிவிட்டு இடதுசாரி ஒற்றுமை மேடைக்கு வந்து சேர்ந்தது. ஆனாலும் மொகித்சென், எம்.கல்யாணசுந்தரம் போன்ற தோழர்கள் பழைய பாதையைக் கைவிடவில்லை. 1984 இந்திராகாந்தி கொலைக்குப் பிறகு, இராஜிவ்காந்தி வெற்றி பெற்ற போது “சனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி” “தன்னம்பிக்கை, துணிச்சல், சாதனை இவை இளைய இந்தியாவின் சிந்தனைப் போக்கிற்கு எடுத்துக்காட்டு” என பிரமை கொண்டனர். ஐந்தே ஆண்டுகளில் ராஜீவ் காந்தியின் ஆட்சியும் நிலை குலைந்தது. பிரிவினைப் போக்குடையவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்ததால், இம் முறை சி.பி.ஐ தன்னைத் தற்காத்துக்கொண்டது என்கிறார் தோழர் ஞானையா.
இருந்த போதிலும் ஒரு சிறு பிளவாக,1986 ல் எம்.கல்யாணசுந்தரம் தலைமையில் தா.பாண்டியன் மற்றும் சில தோழர்கள் தனிக் கட்சி தொடங்கி காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டனர். தா.பாண்டியன் கைச்சின்னதில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கும் சென்றார். பத்து ஆண்டுகள் கழித்து, மக்கள் மத்தியில் தளம் கிடைக்காமல் தனிமைப்பட்டு, தவறை உணர்ந்து தாய்க் கட்சியில் வந்து இணைந்தார் தா.பாண்டியன். இந்தத் தனிக் கட்சியை “மஞ்சள் கம்யுனிஸ்ட் கட்சி” என்று, தான் விமர்சித்ததாக தோழர் ஞானையா நினைவு கூறுகிறார்.
தோழர் தா.பாண்டியன் பின்னாளில் மாநிலச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட போது, தனது நெருங்கிய நண்பர் எஸ்.எஸ்.தியாகராஜனை எதிர்த்து, தா.பாண்டியனுக்கே வாக்களித்தேன் என்கிறார் தோழர் ஞானையா. காரணம், கம்யுனிஸ்ட் கட்சியை வளரவிடாமல் தடுக்க, கட்சிக்குள் ஆட்களை வலை விரித்துப் பிடிப்பதில் கலைஞர் வல்லவர். மணலி கந்தசாமியையே தன் பக்கம் இழுத்தவர். தா.பாண்டியனின் பேச்சாற்றல், கலைஞரின் செல்வாக்கு கட்சிக்குள் நுழையவிடாமல் தடுக்க வல்லது. மேலும், தனது நண்பர் எஸ்.எஸ்.தியாகராஜன், கட்சிக்குள் கலைஞர் துதிபாடும் திருப்பூர் சுப்புராயன் அணி ஆதரித்த வேட்பாளர் ஆவார். சி.பி.ஐ கட்சிக்குள் தி.மு.க பக்கம் சாயும் தலைமை உருவாகிவிடக் கூடாது. தனிநபர் உறவை விட, அரசியல் சித்தாந்த அம்சங்களை முக்கியமாக கருதுவதே, ஒரு கம்யுனிஸ்ட் தோழனுக்கு அழகு. எனவே தா.பாண்டியனுக்கு வாக்களித்தேன் என்கிறார் தோழர் ஞானையா.
தலைமை அமைச்சர் வாய்ப்பு
சி.பி.எம் செய்த மிக முக்கியமான அரசியல் பிழையாக தோழர் ஞானையா கருதுவது, ஜோதிபாசுவிற்குக் கிடைத்த தலைமை அமைச்சர் (Prime Minister) வாயப்பினைத் தடுத்தது. 1996 ஆம் ஆண்டு, சி.பி.ஐ உட்பட பதினோரு ஐக்கிய முன்னணி கட்சிகளும் தோழர் ஜோதிபாசு தலைமை அமைச்சராவதற்கு ஒத்துழைப்பு அளித்த போதும் சி.பி.எம் மறுத்துவிட்டது. இது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசுவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 2001 ல், நேரு நினைவு நூலக அருங்காட்சியகத்தின் சார்பில், வாய்மொழி வரலாறு பதிவுத் திட்டத்தில் ஜோதிபாசுவின் வரலாறும் பதிவு செய்யப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது “கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு (கட்சிக்குள்) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எங்கள் பொதுச் செயலாளரும் நானும் சிறுபான்மையில் இருந்தோம் …நான் யாரென்றும், எனது மார்க்சிய நம்பிக்கையை அறிந்திருந்தும் கட்சிகள் என்னை தலைமை அமைச்சராக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதை நாம் ஏற்றிருக்க வேண்டும் ….தலைமை அமைச்சருக்கு அதீத செல்வாக்கும் அதிகாரமும் உண்டு. எல்லைக்குட்பட்டே கூட பல நன்மைகளைச் செய்திருக்க முடியும் ….நாம் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும், மக்கள் புதிய அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்“. தோழர் ஜோதிபாசுவின் கருத்தை தோழர் ஞானையா ஏற்றுகொள்கிறார். உலகம் முழுவதும் கம்யுனிஸ்ட் இயக்கங்கள் சோர்வடைந்துள்ள கட்டத்தில், நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகையுள்ள ஒரு நாட்டில் ‘கம்யுனிஸ்ட் தலைமை அமைச்சர்’ என்பது மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கும் என்கிறார் தோழர் ஞானையா. இந்தி பேசும் மக்களில் பெரும்பகுதியினர் செங்கொடியைப் பார்த்தது கூட கிடையாது. அமைச்சரவை குறுகிய காலமே நீடித்திருந்தாலும், கம்யுனிஸ்ட் தலைமையை, அமைச்சர்களை, தலைவர்களை, செங்கொடியை மக்களிடம் கொண்டுசேர்த்திருக்க முடியும். மக்களிடம் கம்யுனிஸ்ட்களுக்கு கிடைக்கவிருந்த நாடுதழுவிய அறிமுகம், சி.பி.எம்மின் குறுங்குழுவாதப் போக்கினால் தவறவிடப்பட்டது என்கிறார் தோழர் ஞானையா.
ஒற்றுமை தேவை
கட்சிப் பிளவிற்குப் பிறகு சி.பி.எம்மை விட சி.பி.ஐ தான் பெரும் பின்னடைவைச் சந்தித்தது என்றாலும் மொத்தத்தில் 1962 ல் 9.92% என்று இருந்த கம்யுனிஸ்ட்களின் வாக்கு விழுக்காடு, பிளவிற்குப் பிறகு படிப்படியாகச் சரிந்து 2009 ல் கூட்டணியிருந்தும் 6.86% (2014 ல் 4.08 தான்) என்று சரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். 2011 மேற்குவங்கத் தோல்வி சி.பி.எம்மையும் கடுமையாகப் பாதித்துள்ளது. 34 ஆண்டுகள் தொடர்ந்த ஆட்சி, இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். எதார்த்தம் அப்படியில்லை. தலித் மக்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் என்று நலிந்த பிரிவினர் கம்யுனிஸ்ட் எதிர்ப்பு அணியை ஆதரித்ததற்கு முழுப் பொறுப்பையும் சி.பி.எம் தான் ஏற்க வேண்டும் என்கிறார் தோழர் ஞானையா.
இந்நிலைமைகளை திறனாய்வு செய்வது, தனித் தனியே அல்லாமல், இருகட்சிகள் இணைந்தும், கட்சி சாராத இடதுசாரிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆகிய அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கூட்டு ஆய்வாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆய்வுகள் புதிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள பயனளிக்கலாம் என்கிறார் தோழர் ஞானையா.
சி.பி.ஐ , சி.பி.எம் ஒன்றுபட்டு ஒரு கம்யுனிஸ்ட் பேரியக்கம் உருவாக வேண்டும் என்பது தோழர் ஞானையாவின் பெரு விருப்பம். முதலாளித்துவ கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மரியாதை இல்லை. அதிகாரத்தின் மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். கம்யுனிஸ்ட்களுக்கு வாக்கு வங்கி செல்வாக்கு இல்லை என்ற போதிலும், நேர்மையானவர்கள் என்ற முறையில் மக்கள் மத்தியில் மரியாதை உண்டு. கம்யுனிஸ்ட் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தால், ஒரு வலுவான கம்யுனிஸ்ட் பேரியக்கத்தை அமைத்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டி, சனநாயக ஆற்றல்களைத் திரட்டி, நாட்டிற்கே மாற்று வழி காட்ட முடியும் என்று நம்புகிறார். விரும்புகிறார். சி.பி.ஐ இந்த நிலையை உணர்ந்துள்ளதாகவும், சி.பி.எம் ஒன்றிணைவு தேவை என்பதை அதிகாரப் பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். சி.பி.ஐ தேய்ந்துவிட்டதால் இணைப்பை விரும்புவதாக சி.பி.எம் கொச்சைப்படுத்திப் பார்க்கிறது என்கிறார்.
சோவியத் சிதறல் மற்றும் சீன மாற்றங்களுக்குப் பிறகு, அமெரிக்கா ஒற்றை வல்லரசாக, ஒரு பாசிச ஏகாதிபத்தியமாக உருவெடுத்துள்ள இந்தக் கட்டத்தில், இரு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலும் அநேகமாக சித்தாந்த வேறுபாடுகள் விலகிவிட்டன என்கிறார் தோழர் ஞானையா. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற பாசிச சக்திகளை எதிர்ப்பதிலும், காங்கிரசுடனான அணுகுமுறையிலும், தேர்தல் கூட்டணிகளிலும் இரு கட்சிகளும் ஒத்த நிலையையே எடுக்கின்றன. சி.பி.எம் தனது வறட்டுவாதத்தை கைவிட்டு ஒன்றிணைவுக்கு முன்வர வேண்டும். இதனால் தொழிலாளர் விவசாயி – உழைக்கும் பாட்டாளி வர்க்க அமைப்புகள் வலுப்பெறும் என்றும், இளைஞர், மாதர், கலை இலக்கிய வெகுமக்கள் இயக்கங்களின் தளங்கள் விரிவுபடும் என்று வலியுறுத்துகிறார் தோழர் ஞானையா.
( 2015 ஏப்ரல், விசாகபட்டினத்தில் நடைபெற்ற சி.பி.எம்மின் 21வது மாநாட்டில் “இடது சனநாயக அணி” என்ற திட்டம் இடம்பெற்றுள்ளது. இது வெவ்வேறு மாநிலங்களில் வெவேறு விதமாகக் கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இடது சனநாயக அணிக்குள் ஈர்க்கப்பட முடிகிற ஆற்றல்களாக, இடதுசாரி கட்சிகள், குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள், சோசலிஸ்ட்கள், பழங்குடி, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள், மதசார்பற்ற முதாளித்துவ கட்சிகளுக்குள் இயங்கும் சனநாய ஆற்றல்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பட்டியலில் சி.பி.ஐ யும் உள்ளதா? இடது சனநாயக அணி இரு கட்சிகளின் இணைவிற்கு வழிவகுக்குமா? இந்த மாநாடு முடிந்த கையோடு, தமிழ்நாட்டில் “மக்கள் நலக் கூட்டணி” கட்டப்பட்டதும் இடது சனநாயக அணித் திட்டம் தானா? தெரியவில்லை. )
*
தோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள்
சாதியொழிப்பு
“அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று நகைத்த போதிலும், தனது கருத்தில் உறுதியாகவே இருந்தார் தோழர் ஞானையா. சாதிக்குள் காதல் என்றால் என்ன செய்வீர்கள் என்று குரல் எழுந்த போது, விதிவிலக்குகளைப் பரிசீலனை செய்யலாம் என்று கூறியுள்ளார். எதிர்ப்பு அதிகமானதால் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. 110 உறுப்பினர்களில் அவரது கருத்திற்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இருந்த போதிலும் மன நிறைவுற்றார். சுயசாதித் திருமணங்களை தடை செய்ய வேண்டுமென்ற தனது கருத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இருக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.
இக் கருத்து ஆர்வமூட்டக் கூடியதாக இருந்த போதிலும், நமது விருப்பத்திற்கும் சமூக வளர்சிக் கட்டத்திற்கும் இருக்கும் இடைவெளியைச் சுட்டிக்காட்டி, இக் கருத்தை மறுத்து தோழர் ஞானையாவுடன் நானும் பல முறை வாதிட்டுள்ளேன். இக் கோரிக்கைக்குள் இருக்கும் சனநாயக மறுப்பையும் சுட்டிக்காட்டியுள்ளேன். சுய சாதிக்குள் திருமணம் செய்வதை இழிவாகக் கருதும் ஒரு சமூகத்தை, அரசியல் பண்பாட்டுப் போராட்டங்களின் வழி உருவாக்க இயலும். அதற்காக உழைக்கலாம், போராடலாம். ஆனால் தற்பொழுது இக் கோரிக்கை சனநாயக வழியில் ஏற்புடையதாக இருக்காது என்ற கருத்தை முன் வைத்தேன். நான் அவரது கருத்தை நெருங்கிவிட்டதாகக் கூறி, விழிப்பூட்டினார்.
இது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதையும் விவாதங்கள் நடை பெறுவதையும் புதிய கருத்தாக்கங்களுக்கான ஊற்றுக்கண்களாகப் பார்க்க வேண்டும் என்கிறார் தோழர் ஞானையா. சுயசாதித் திருமணத்தை, பாலிய விவாகம் போல கருதும் ஒரு சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள “தீண்டாமை ஒழிக்கபடுகிறது” என்னும் பதத்தை “சாதி ஒழிக்கப்படுகிறது” எனத் திருத்த வேண்டுமெனக் கோரிய பெரியாரின் கருத்தையே “சுயசாதி திருமணத்திற்குத் தடை” என்ற கோரிக்கையிலிருந்து பிரதிபலிக்கிறேன் என்கிறார் தோழர் ஞானையா. நமது நாட்டில், இக் கோரிக்கையானது கலாசாரப் புரட்சியில் ஒரு அங்கம் என்கிறார். கம்யுனிஸ்ட் கட்சிகள் ‘சாதியொழிப்பு’ (Anihilation of Caste) என்ற அம்பேத்கரின் அறைகூவலை, இந்திய சனநாயகப் புரட்சியின் அங்கமாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சாதியொழிப்பை தங்களது செயல் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து, இயக்கங்கள் நடத்துவதில்லை என்று கம்யுனிஸ்ட் கட்சிகள் மீது குறைபட்டுக்கொள்கிறார். இவ் விடயத்தில், “சாதியை உடைப்போம், சமுதாயத்தை இணைப்போம்” (ஜாத் தோடா, சமாஜ் ஜோடா) என்ற கன்சிராமின் முழக்கம் தன்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார். கம்யுனிஸ்ட்கள் ஆரம்பகாலத்திலேயே முன் வைத்திருக்க வேண்டிய முழக்கங்கள் இவை என்கிறார் தோழர் ஞானையா.
அம்பேத்கரையும் பெரியாரையும் கம்யுனிஸ்ட்கள் நெருக்கமான உறவுகொண்டு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார். பெரியவர் சிங்காரவேலர் தான் சாதியொழிப்புக் கருத்துக்களை நேரடியாக உணர்திருந்த ஒரே கம்யுனிஸ்ட் என்கிறார். தோழர் சிங்காரவேலர் மீனவ குளத்தில் பிறந்ததும், கம்யுனிஸ்ட் கருத்துக்களை உள்வாங்கிய போது அவர் 60 வயதினை எட்டியிருந்ததும், அவரது இந்த சீரிய பார்வைக்கு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என்கிறார். மேலும் பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் ஏற்றிருக்கக் கூடாது என்ற கருத்தை சிங்காரவேலர் வெளியிட்டதாகவும் சொல்கிறார். இதனால் தீண்டப்படாத மக்கள் அரசியல் ரீதியில் சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்குள் தொடரும் அவலம் இருக்கிறது. உண்ணா நோம்பினால் காந்திக்கு ஆபத்து நேர்த்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆதரவாளர்களான முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உயர்சாதி இந்துக்களும் காந்தியை எப்படியும் காப்பாற்றியிருப்பார்கள் என்று சிங்காரவேலர் கருத்து வெளியிட்டதாகக் கூறுகிறார் தோழர் ஞானையா.
சமூக நீதி
மண்டல் குழு அறிக்கையை முழுமையாக ஆதரித்து, கட்சியின் தேசிய கவுன்சிலில் வலியுறுத்தியவர்களில் முன்னணியில் இருந்தவர் தோழர் ஞானையா. இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை சாதி மட்டும் தான். வாழையடி வாழையாக இருந்துவந்த அநியாய, அடாவடியான ஒதுக்கீட்டை ஒழிப்பதே இன்றைய ஒதுக்கீட்டின் அடிப்படை. வரலாற்றில் ஒதுக்கீடு தெய்வீகமாக்கப்பட்ட மோசடியை ஒழிக்கவே இந்த எதிர்வகை ஒதுக்கீடு (Counter reservation against divinized reservation in history) போன்ற கருத்துக்களை சமரசமின்றி ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளார். மண்டல் குழு அறிக்கையைப் பற்றி தோழர் ஞானையா எழுதிய குறு நூலினை கலைஞர், அன்பழகன், கி.வீரமணி ஆகியோர் தன்னிடம் கேட்டுவாங்கிப் படித்ததாகக் கூறுகிறார். தோழர் ஞானையா இந்திய கலாசாரப் புரட்சிக்கான திட்டங்களாக தோராயமான 11 அம்சத் திட்டங்களை முன்வைக்கிறார். அத் திட்டங்களில் “அகமண முறைத் தடை” போலவே தனியார் நிறுவங்களில் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் மிக முக்கியமான ஒன்றாகும்.
தோழர் ஞானையாவின் தமிழ்த் தேசிய உணர்வு
சைப்ரசில் உள்ள கம்யுனிஸ்ட் கட்சி அகேல் (AKEL). இன்றளவும் இந்த அகேல் கட்சிதான் சைப்ரசில் தனிப் பெரும் கட்சி. அகேல் கட்சித் தோழர்கள் வழியாக, அங்குள்ள ஆர்மீனிய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார் தோழர் ஞானையா. சைப்ரஸ் ஒரு தீவு நாடு. இங்கிலாந்தின் காலனி. 1920-22 துருக்கியில் 2000 ஆர்மீனியர்கள் இனக்கொலை செய்யப்பட்டனர். இங்கிலாந்தியர்களால் காப்பாற்றப்பட்ட ஆர்மீனியர்கள் சைப்ரசில் குடியேற்றப்பட்டு குடியுரிமையும் கொடுக்கப்பட்டனர். இதனால் ஆர்மீனியர்களுக்கு இங்கிலாந்தின் மீது அபார நன்றியுணர்வு இருந்தது. இங்கிலாந்தின் சோவியத் எதிர்ப்பு ஆர்மீனியர்களின் சோவியத் எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. இதை உணர்ந்த தோழர் ஞானையா, அந்த ஆர்மீனிய நண்பர்களுக்கு சோவியத் யூனியனில் உள்ள ஆர்மீனியாவை நேரில் சென்று பார்த்துவர வழிகாட்டினார். சைப்ரசில் உள்ள சோவியத் தூதரகமும் மகிழ்ச்சியுடன் அவர்களை அழைத்துச் சென்றது. ஆர்மீனியா சோவியத் யூனியனில் இணைக்கப்பட்ட ஒரு குடியரசு, ஆர்மீனியாவிற்கென தனி தேசியக் கொடி, தனித் தேசிய கீதம் என்பதையெல்லாம் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்ட சைப்ரஸ் வாழ் ஆர்மீனியர்கள் புளங்காகிதம் அடைந்தனர். அவர்களுக்கு சோவியத் மீதிருந்த எதிர்ப்புணர்வு நீங்கி, தோழமை உணர்வு மேலோங்கியது. ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். தோழர் ஞானையா அந்த ஆர்மீனியர்களின் உள்ளங்களில் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார். இந்த ஆர்மீனியர்கள் தான் தோழரை ‘கருப்புக் கம்யுனிஸ்ட்’ என்று செல்லமாக அழைத்தவர்கள். இந்த நிகழ்வினை மகிழ்ச்சி பொங்கப் பதிவு செய்யும் தோழர் ஞானையா, அம் மக்களிடம் வெளிப்பட்ட தேசிய இன உணர்வின் ஆழ்ந்த தாக்கம் தனக்கு வியப்பளித்ததாகச் செல்கிறார். மேலும் தனக்கு “தமிழர் தேசிய இன உணர்வு, இன்று போல் அன்று (1944) ஏற்பட்டிருக்கவில்லை!” என்றும் குறிபிடுகிறார்.
1992 ல் ஹைதராபாத் கட்சி மாநாட்டில் “மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலும், வெவ்வேறு மாநில அரசுகளுக்கிடையிலும் இந்தி இணைப்பு மொழியாக இருக்கும்” என்ற வாக்கியம், தேசியக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்ற வரைவுத் திட்ட அறிக்கையில், இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருந்ததை தோழர் ஞானையா கடுமையாக எதிர்த்தார். இது ஒரு ஹிந்தியனுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். தமிழனான எனக்கு ஏற்புடையதல்ல என்கிறார். (இங்கே இந்தியன் என்றில்லாமல் “ஹிந்தியன்” என்று அவரே பயன்படுத்துகிறார்). இணைப்பு மொழியாக எந்த மொழியை வலியுறுத்துகிறீர்கள் என்று, ஒரு வட இந்திய உறுப்பினர் கேட்ட போது “இப்போது நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடிக் கொண்டிருகிறோமோ அந்த மொழியில்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்திருக்கின்றார். ஆங்கிலம் இல்லை என்றால் இந்தியா ஒற்றை நாடாக உருவாகியிருக்க முடியாது என்றும் வாதிட்டுள்ளார். அந்நிய மொழிக்கு ஆதரவளிக்கிறீர்களா என்ற பழி அவரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியும் எனக்கு அந்நிய மொழிதான் என்று தோழர் ஞானையா பதிலளித்திருக்கிறார். “இன்றும் நான் டெல்லிக்கு வந்திறங்கியதும், வெளிநாட்டிற்குள் நுழைந்ததாகவே உணர்கிறேன்” என்கிறார். மொழி மட்டுமல்ல, நடை, உடை, உணவு, நிறம், கலாசாரம், மனிதத் தோற்றம் எல்லாமே மாறுபட்டது தான் என்கிறார். இடைச் செருகலாக சேர்க்கப்பட்ட வாக்கியத்தை நீக்கவில்லை என்றால் “ தேசிய இனங்களின் உரிமை மறுக்கப்படுவதால் வெளிநடப்புச் செய்வேன் என்று ஆணித்தரமாக வாதிட்டுள்ளார்”. திட்ட அறிக்கையிலிருந்து அந்த வாக்கியம் நீக்கப்பட்டது. தோழர் ஞானையா வென்றார். மொழிச் சிக்கல் தனி விவாதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் நடைபெறவில்லை. இதில் தோழர் ஞானைவின் ஏக்கம் என்னவென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசியக் குழு உறுப்பினர்களிடம், இந்த இடைச் செருகலைச் சுட்டிக்காட்டிய பிறகும், ஒருவர் கூட அவருக்கு ஆதரவாக குரலெழுப்பவில்லையாம். 1942 ல் டாக்டர் ஜி.அதிகாரி முன்வைத்து நிறைவேற்றப்பட்ட, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமைத் தீர்மானம் மிகச் சரியானது என்று, டெல்லியில் வாழ்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றியுள்ள தனக்கு உணர்த்திவிட்டதாக கூறுகிறார்.
பிரிந்துபோகும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது மார்க்சிய லெனினிய வழி. கம்யுனிஸ்ட்களுக்கு குழப்பம் ஏன் என்று வினவுகிறார் தோழர் ஞானையா. கம்யுனிஸ்ட்கள் (இந்திய) தேசபக்த மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கிறார். இந்திய தேசியம் செயற்கையானது. தமிழ்த் தேசியமே இயற்கையாக அமைத்த ஒன்று. எனவே இந்திய தேசியம் தேய்ந்துகொண்டும் தமிழ்த் தேசியம் வளர்ந்துகொண்டும் செல்லும் தன்மையுடையது என்கிறார்.
இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் ஒன்றியமாக இருந்தால் தவிர, இந்தியாவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தோழர் ஞானையாவின் கருத்து. மாநிலங்களவை ஒரு மோசடியான அவை. அது தேசிய இனங்களின் அவையாக இருப்பதே சரியானது என்கிறார். ஒரு தேசிய இனத்தின் மக்கட்தொகை என்னவாக இருப்பினும், ஒவ்வொரு தேசிய இனமும் அவையில் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
தமிழர்களின் தனித்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இலக்கியம், தனித் தத்துவ இயல் ஆகியவற்றை இந்தியத்துவமாகவும் இந்திய வரலாறாகவும் பொதுமைப்படுத்த முடியாது என்கிறார். தோழர் ஞானையா தனது இறுதிக் காலங்களில் தமிழர் தத்துவ மரபில் பேரவா கொண்டிருந்தார். “தக்கானதிற்குள் நுழைந்த இந்துக்கள், நாகரிகமடைந்திருந்த பல தேசிய இனங்களைக் கண்டார்கள்” …“அவற்றில் மிகவும் தொன்மையானது தமிழ் பேசுகின்ற தமிழர்களின் ராஜ்யங்கள்” என்ற மார்க்சின் வரிகளை சிலாகித்துக்கொண்டே இருப்பார்.
தற்போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு சமஸ்கிருத மற்றும் இந்தித் திணிப்பு, இந்துமயமாக்கல் எனும் பாசிசக் கொள்கை, வளங்களை கட்டற்ற முறையில் தாரைவார்க்கும் போக்கு, அப்பட்டமான முதலாளியச் சார்புக் கொள்கைகள், சனநாயக அமைப்பு முறையைச் சீர்குலைப்பதாக உள்ளது என்கிறார். இந்த அதீத அடக்குமுறைப் போக்கு இந்தியாவில் வெவ்வேறு விதாமான பொருளாதாரத் தேவைகளும், கலாச்சாரங்களும், மனப்போக்குகளும் இருப்பதை அனிச்சையாக நினைவூட்டி, அதன் இடைவெளிகளைக் கிளறிவிடுவதாகக் கூறுகிறார். பல மட்டங்களிலும் தாக்குண்டுள்ள மக்களின் வெறுப்பு, இடதுசாரிகள் அடித்து முன்னேறும் வாய்ப்பையும் தேவையையும் உருவாக்கி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் சர்வாதிகாரி போல் மோடி அறிவிக்கும், அடாவடி அறிவிக்கைகளை யாரும் திடமாக எதிர்த்து சவாலாக நிற்கவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்.
இறுதிவரை வாசித்துக்கொண்டும், வளர்ந்துகொண்டும், கருத்துக்களை வளர்தெடுத்துக்கொண்டும் இருந்த தோழர் டி.ஞானையா எனும் அந்த மாபெரும் அரசியல் ஆளுமை இன்று நம்மோடு இல்லை. மாமனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டாலும், சிந்தித்தவை நிற்பதில்லை. தோழரின் கருத்துக்கள், அதன் தேவையை நிறைவு செய்யும் வரை நம்மோடும் நமக்கு அடுத்த தலைமுறைகளோடும் பற்றிப் பயணிக்கவே போகிறது. அவரது கருத்துக்களால் நிரம்பிவழியும் நினைவுகளோடு, முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன். தோழர் ஞானையா கடைசியாக எழுதிக்கொண்டிருந்த “கம்யுனிஸ்ட் இயக்கங்கள் – ஓர் விமர்சன மதிப்பீடு” என்ற ஆய்வு நூல் முற்றுப்பெறாமல் நிற்கிறது. அந்நூலை, அதே நிலையில் வெளியிடுவதற்குத் தோழர்கள் முயற்சி எடுப்போம்.
இறுதிவரை தோழரை குழந்தை போல் பார்த்துக்கொண்ட மூர்த்தி அண்ணனையும், மாலை நேரங்களில் பேச்சுத் துணையாக இருந்து, விகடகவி என்று தோழரால் பகடியாக அழைக்கப்பட்ட அண்ணன் சுவாமிநாதனையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.