நீண்ட பயணம் : ஸபான் இலியாஸ்/மெஸடோனியா

எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும்
என்றறியாமலே
இருளில் நாங்கள்
ஒரு பாதையைத் தேர்ந்தோம்

மாபெரும் நிலப்பிரப்பை எமக்குப் பின்விட்டு
எமது துயர யாத்திரையை
நாம் துவங்கினோம்
எமது கனத்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு
பல்வேறு பக்கப் பாதைகளில்
பயணம் செய்தோம்

எமது தந்தையர்கள் மரணமெய்திய
அடர்ந்த கானகங்களில்
வழியில்
எமது மரணமுற்றுவர்களைப் புதைத்தோம்
இருளின் மத்தியில்
நாங்கள் இளைப்பாறினோம்

எமது ஆன்மாவைப் புதுப்பித்துக் கொள்ள
நாம் கொஞ்சமாக அமர்ந்தோம்
அப்போது கொஞ்சம் உறங்கியும் போனோம்

துண்டு ரொட்டியும் இல்லை
துளி நீரும் அருந்தவில்லை
அப்பத்தின் துணுக்கும் கூட
எம் உதட்டில் படவில்லை

அதிகாலை வந்ததும் நாம் விழித்தோம்
மறுபடி எமது
பயணம் தொடர்ந்தோம்

Comments are closed.