சில்வியா
அழகியதொரு மரத்தைக் கனவு கண்டாள்
மரம் அவளது வாழ்வு
மரத்தின் ஒரு கிளை அவளது காதல்
அந்தக் கிளையின் இலைகள் குழந்தைகள்
பிறிதொரு கிளை எழுதுபவளாக அவளது வாழ்வு
அதனது ஒவ்வாரு இலையும் அவளது கவிதைகள்
ஆர அமர்ந்து இவைகளைத் தேர்வதற்கு
அவள் முயற்சிக்கும் போது
மரம் முற்றாக வெறுமையாகிப் போகும் வரை
இலைகள் பழுப்பாகி உதிர்ந்தன
கலை மரணித்தது
‘தெருச் சமர் புரிவோர்க்கு இங்கு இடமில்லை’
காற்றில் தண்ணீரில் நிலத்திலுமிருந்து
விரட்டப்படுதலும் வெளியேற்றப்படுதலுமான
வரலாறு நெடிது
‘இந்தியா நிரம்பி வழிகிறது
உங்களுக்கு இடமில்லை’ என்றான் அரசன்
‘பாலில் சக்கரையென
இந்திய மக்களில் கரைவோம்’ என்ற பார்சிகள்
பாபா சாகேப்பை விடுதியிலிருந்து விரட்டினர்
பரோடா காமதி பூங்காவின் காற்றில்
அண்ணலின் கண்ணீரின் வெம்மை
இன்றும் பரவிக் கொண்டிருக்கிறது
‘பிரபஞ்சம் கனிவானதோ விரோதமானதோ இல்லை
என்றாலும் அது பாரபட்சமானது’
பூமி அதனிலும் பாரபட்சமானது
பூமி பிரபஞ்சத் துகள் மனிதன் நட்சத்திரத்தூசு
வால்ட்டர் பெஞ்;ஜமினுக்கு
குதிரையைக் கொல்லும் அளவான மார்பைன்
ரோஹித்துக்கு 10 மில்லிகிராம் சோடியம் அசைடு
‘செயல் பிரக்ஞையைக் கொண்டிருக்கிறது
எமது பெயர் கலகம்
யாம் வீறிட்டுக் கத்துவோம்’ என்றனர்
ஜான் பெலாச்சும் ஸ்டீவ் பிக்கோவும்
விலாஸ் கோக்ரேவினது தலைக்கட்டும்
ரோஹித்தின் தூக்குக்கயிறும் அடர்நீலம்
இறுதியின் இறுதியில் இருவரும் இணைந்து
‘ஜெய் பீம்’என்றபடி பிரிந்தனர்
‘வெளியேற்றத்துக்கான வழி இல்லாதபோது
வாழ்வை முடித்துக் கொள்வேன்’ என்றார் பெஞ்ஜமின்
ரோஹத் தனது அன்னையின் அன்றாட வாழ்வை
விடுதலை செய்ய முயன்றான்
ரோஹித்
அழகியதொரு பிரபஞ்சத்தைக் கனவு காண்கிறான்
*
நான் பயங்கரவாதி இல்லை
உமிழ்நீர் சுரக்கும் எனக்கு
இதயமும் துடிக்கும்
உடலை முறுக்கினால் சிறுநீர் பிரியும்
மலமும் கசிந்து முட்டும்
அடித்தால் எலும்புகளும் உடையும்
கடவாயில் எச்சிலும் வடியும்
இரத்தமும் சதையும் நோவும்
அன்பும்
விடுதலை வேட்கையும் சுமந்து
பீகாரின் தொலைதூரக் கிராமத்தின் மேல்
எல்லையிலா நேசத்துடன்
ஏழைக் குடியிருப்பில் நான் பிறந்தேன்
நான் தேசத்துரோகி இல்லை
என் பெயர் கன்னய்ய குமார்
ஹைதராபாத் நகருக்கு அப்பால்
தலித் அன்னையின் வயிற்றினூடு
பால்வீதியில் பயணித்தபடி
இறுதி நாளில் நட்சத்திரங்களை நோக்கி
கயிற்றில் தொற்றும் ஆசையுடன்
இருள் வீதியொன்றில் நான் ஜனித்தேன்
என்றும் மரணம் எனக்கு இல்லை
என்பெயர் ரோஹித் வெமுலா
என்னிடம் கடவுச்சீட்டு இல்லை
நான் ஓடிப்போவதும் இல்லை
உலகின் மீது பறந்து திரிகிறேன்
லென்னானைத் தொடரும் எனது கனவு
எல்லைகள் இல்லா உலகு
என் பெயர் உமர் காலித்
நான் பயங்கரவாதி இல்லை