லாங்க்லாய்ஸ் எனும் பெயர் உலகத் திரைப்பட ஆவணக்காப்பக வரலாற்றிலும், பிரெஞ்சு புதிய அலைத் திரைப்படங்களின் வரலாற்றிலும், 1968 மாணவர்-தொழிலாளர்களின் ஒன்றிணைந்த எழுச்சியின் அரசியல் வரலாற்றிலும் சமாந்திரமாக நிலைத்திருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது?
பிரெஞ்சு கேன் திரைப்பட விழாவும், பிரெஞ்சுத் திரைப்பட ஆவணக்காப்பக முயற்சிகளும் இடதுசாரி அரசியலும் எவ்வாறு பிரிக்கப்பட முடியாததாக இருந்தது என்பதற்கான ஆதாரமாக நாம் ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். 1968 ஆம் ஆண்டு தொழிலாளர் மாணவர் கூட்டு எழுச்சி திரைப்படத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்விலிருந்தே துவங்கியதாகவே சொல்வதுண்டு. திரைப்பட ஆவணக் காப்பாளராக 1938 ஆம் ஆண்டில் தனது சொந்த இருப்பிலிருந்த 10 திரைப்படங்களுடன் ஹென்ரி லாங்க்லாய்ஸ் துவங்கிய சினிமாதெக் பிராங்காய்ஸ் எனப்படும் பிரெஞ்சுத் திரைப்பட ஆவணக்காப்பகம் 1968 ஆம் ஆண்டு 60,000 திரைப்படங்கள் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருந்தது.
அன்றைய பிரெஞ்சுக் கலாச்சார அமைச்சரான ஆந்ரே மால்ராக்ஸ் ‘லாங்க்லாய்ஸ், திரைப்பட அழகியல் தொடர்பான தனது கடுமையான வரைமுறைகளை வைத்துக்கொண்டு, தனது நண்பர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நிர்வாகம் நடத்துகிறார்’ எனும் குற்றச்சாட்டின் பேரில், ‘வியாபார சினிமா நடைமுறையான காப்பிரைட் விதிகளைச் துச்சமாக மதித்து படங்களைச் சேர்க்கிறார்’ எனும் குற்றச்சாட்டின் பேரில், ஆவணக் காப்பகத்திற்குத் தருகிற அரசு நிதியை வெட்டினார். ஹென்ரி லாங்க்லாய்ஸை ஆவணக் காப்பகப் பொறுப்பிலிருந்தும் விலக்கினார்.
லாங்க்லாய்ஸின் மீது பெறுமதிப்புக் கொண்ட பிரெஞ்சுத் திரைக் கலைஞர்கள், லாங்க்லாய்ஸின் ஆவணக் காப்பகத்தில் இருந்த படங்களைக் கண்ணுற்று தமது படைப்பாளுமையை வளர்த்துக் கொண்ட, ‘சினிமாதெக்கின் குழந்தைகள்’ எனத் தம்மை அழைத்துக் கொண்ட த்ரூபோ மற்றும் கோதார்த் போன்ற பிரெஞ்சு புதிய அலைத் திரைக்கலைஞர்கள், சினிமாதெக்கிற்கு அடிக்கடி வந்து போன பாரிஸ் திரைப்படப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஐந்து இலட்சம் பிற மாணவர்கள், தொழிலாளர்கள் ஆந்த்ரே மால்ராக்சின் இந்த நடவடிக்கையினால் பெருங்கோபமுற்றார்கள். அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு கோரி சினிமாதெக்கின் முன் ஆரப்பாட்டம் நடத்திய மாணவர்களின் மீது பிரெஞ்சு அரசு வன்முறையை ஏவிவிட்டது. பிரெஞ்சு அரசின் இந்த வன்முறையைத் தொடர்ந்து வேறுபட்ட கோரிக்கைகளைக் கொண்டிருந்த மாணவர்களும் இணைந்த மிகப்பெரும் எழுச்சி பிரான்ஸ் நாடு முழுவதும் எழுந்தது.
பிரெஞ்சு அரசை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய அரசுகளையும் அச்சுறுத்திய இந்த எழுச்சியின் பொறி பாரிஸ் சினிமாதெக் ஆரப்பாட்டத்திலிருந்துதான் துவங்கியது எனப் பதிகிறது 1968 பாரிஸ் எழுச்சியின் வரலாறு.
1914 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்த
ஹென்ரி லாங்க்லாய்ஸ் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி தனது 62 ஆம் வயது நிறைவுற்ற இருமாதங்களில் மரணமுற்றார். உலகத் திரைப்பட வரலாற்றில் லாங்க்லாய்ஸ் பல்வேறு பரிமாணங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தார். திரைப்படங்களைத் திரட்டுவது, அதனை திரைப்படத்தில் ஆர்வம்கொண்ட தலைமுறைக்குத் திரையிடுவது, அது குறித்த காத்திரமான உரையாடல்களைத் தூண்டுவது, இத்தகைய ஆளுமைகள் கூடுவதற்கான ஒரு நிரந்தர இடத்தை உருவாக்குவது என்பதை ஒரு திட்டமாகக் கொண்டு நடைமுறையில் அதனை நிகழ்த்திக் காட்டியவர் லாங்க்லாய்ஸ்.
எந்த நிறுவன உதவியும் இல்லாமல் தனது தாயார், மனைவி மற்றும் ஆத்ம நண்பர்களுடன் தனிமனிதராக இந்த முயற்சியில் இறங்கினார் லாங்க்லாய்ஸ். இதனது தொடர்ச்சியாக மூன்று நிறுவனங்களை அவர் உருவாக்கினார். இந்தியாவில் புனே பிலிம் இன்ஸ்டிட்யூட், இங்கிலாந்தில் பிரிட்டிஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்தவர்க்கு அவர் உருவாக்கிய நிறுவனங்களின் பெருமதியைப் புரிந்துகொள்ள முடியும். சினிமாவுககெனவே அர்ப்பணித்துக் கொண்ட திரையிடல் மற்றும் உரையாடலுக்கான அமைப்பாக அவர் சினிமா தெக் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். அழிந்து கொண்டு வந்த சினிமா தொழில்நுட்பம், படைப்புகள், கருவிகள், ஆடைவடிவமைப்புகள், திரைப்படச் ஸ்டில்கள், நூல்கள், பிரசுரங்கள் போன்வற்றைப் பாதுகாக்க திரைப்பட அருங்காட்சியகத்தை அவர் உருவாக்கினார். காணாமல் போன திரைப்படச் சுருள்களைத் தேடி அலைந்து திரைப்பட ஆவணக் காப்பகத்தை அவர் உருவாக்கினார். இதனது உச்சமாக உலகத் திரைப்பட ஆவணக் காப்பகங்களின் ஒன்றியத்தை அவர் உருவாக்கினார்.
இன்றும் பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் உலகத் திரைப்பட ஆவணக் காப்பகங்களின் ஒன்றியம் உலக அளவில் திரைப்பட ஆவணக்காப்பகங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை தொழில்நுட்பப் பிரச்சினைகள் தொடர்பான காலண்டு ஆய்விதழ் ஒன்றினையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
லாங்க்லாய்ஸ் கனவுமயமமான தொலைதூர விடுதலை உணர்வினால் உந்தப்பட்ட ஒரு ஆளுமை. அப்பாலை உலகில் மட்டுமே சாத்தியமாகக் கூடியது அவரது விடுதலைத் தேட்டம் என்றும் சொல்லலாம். அழகியல் விடுதலையை மட்டுமல்ல, சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் விழைந்த ஆளுமை அவர். திரைப்படத்தை அறிதல் என்பது அதன் வடிவத்திலும் சொல்முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும், விளைவாகச் சோதனைபூர்வமான சினிமா வரவேண்டும் எனவும் அவர் நினைத்தார்.
சினிமாவை ஓவியம் போலவே லலித கலை என அவர் புரிந்துகொண்டிருந்தார். வியாபார சினிமாக்களைப் பாதுகாப்பதையும் திரையிடுவதையும் விவாதிப்பதையும் அதனினும் மேன்மையான சினிமாவை உருவாக்குவதற்கான நிபந்தனையாகவே அவர் புரிந்து கொண்டிருந்தார்.
லாங்க்லாய்ஸ் காலத்தில் திரைப்படம் என்பது பாவித்து முடிந்தவுடன் கைகழுவி விடத்தக்க அல்லது கழிவுப் பொருளாகவே படத் தயாரிப்பாளர்களாலும் விநியோகஸ்தர்களாலும் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் லாங்கலாய்ஸ் திரைப்படங்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். 1927 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மௌனப் படக்காவியமான அபல் கன்சின் ‘நெப்போலியன்’ திரைப்படம் இவ்வாறுதான் மீட்கப்பட்டது.
அமெரிக்கப் படங்களும் அங்கங்கே இயங்கிய திரைப்படச் சங்கங்களும் இரண்டாம் போர்க்காலத்தில் நாசிகளால் தடைசெய்யப்பட்டபோதும் பிற்பாடு பாரிஸ் நகரம் விடுதலை பெற்ற வேளையிலும் லாங்க்லாய்ஸ் உருவாக்கிய 60 இருக்கைகள் கொண்ட சினிமா தெக்தான் திரையிடல்களைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தது. ழான் பவுல் ஸார்த்தர், சி மோன் தி பூவா, ஆந்த்ரே ஜிடே, கோதார்த், த்ரூபோ, ரோமர், சப்ரோல் போன்றவர்கள் படம் பார்த்து விவாதிக்கும் இடமாக அப்போது சினிமா தெக் திகழ்ந்தது.
லாங்க்லாய்ஸ் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மனமும் அறமும் கொண்டவர் என அவருக்குப் பின்வந்தோர் நினைவுகூர்கிறார்கள். ஆரம்பத்தில் அவர் திரைப்படங்களைத் தனது குளியலறைத் தொட்டியில் சேமித்து வைத்தார். அவர் எவ்வளவு படங்களைச் சேகரித்தார் எந்த வழிகளில் சேகரித்தார் அல்லது அதனை எங்கே சேமித்து வைத்திருந்தார் என்பதனை எவரும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. நாசிகள் பாரிஸ் நகரத்தை ஆக்கிரமித்திருந்தபோது அவரும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு வீடு திரைப்படங்களைக் காவித்திரிந்து அழிவிலிருந்து பாதுகாத்தார்கள். திரைப்படங்களின் மீது உன்மத்த நிலையிலான காதல் கொண்டிருந்த அவர் திரைப்படங்களைப் எந்த நிலையிலும் பாதுகாப்பார், தனது மரணம் வரையிலும் பாதுகாப்பார் எனப் படைப்பாளிகளும் அவரை அறிந்தோரும் அவரை நம்பினார்கள்.
லாங்க்லாய்சுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான பிரச்சினைக்கு என்ன காரணம்?
1959 ஆம் ஆண்டு டீ கால் பிரெஞ்சு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் நாவலாசிரியரான ஆந்த்ரே மால்ராக்சை தனது கலாச்சார அமைச்சராக நியமனம் செய்தார். ஆந்த்ரே மால்ராக்ஸ் கலை வரலாற்றாசிரியர். பிரெஞ்சு ராணுவத்தில் நாசிகளுக்கு எதிராக டாங்கிப்படைத் தளபதியாகச் செயல்பட்டவர். பிரெஞ்சு மக்களுக்கு அவர் பிரெஞ்சக் கலாச்சார வீரன். அவர் செய்த முக்கியமான காரியம் 1960 களில் வெளியான பிரெஞ்சு மறுமலர்ச்சிப் படங்களுக்கு அரசு நிதி உதவி வழங்கித் தயாரிக்கச் செய்தார்.
சினிமா தெக் அமைப்பையும் அரசு நிர்வாகத்தினுள்ளும் கட்டுப்பாட்டினுள்ளும் கொணர அவர் விரும்பினார். ரகசிய வழிமுறைகளில் படங்களைச் சேகரிப்பதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டிருந்த, நாடோடி வாழ்க்கை முறை கொண்டிருந்த, முறையாகக் கணக்கு வழக்கு வைக்கத் தெரியாத லாங்க்லாய்சிடம் சினிமா தெக்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான படங்கள் விட்டுவைக்கப்பட்டிருப்பதை ஆந்தரே மால்ராக்ஸ் விரும்பவில்லை. அதிகாரவர்க்க நடைமுறைக்குள் சினிமா தெக் அமைப்பை எடுத்துக்கொள்ள முயன்றார் ஆந்த்ரே மால்ராக்ஸ்.
ஓரு இலட்சியத்துக்கான கடப்பாட்டுடன் தனிமனித அர்ப்பணிப்புணர்வு கொண்ட மனிதரான லாங்கலாய்ஸ் சினிமா தெக் அமைப்பை அதிகாவர்க்க அமைப்பின் கைகளில் ஒப்படைக்க விரும்பவில்லை. சினிமா தெக்கை இன்னும் பெரிய இடத்திற்குக் கொண்டு செல்வது என்றும், லாங்க்லாய்ஸை அதற்கான ஆலோசகராக வைத்துக் கொள்வது எனவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லாங்க்லாய்ஸ் இதனை மறுத்தார். ஆந்த்ரே மால்ராக்ஸ் அதிரடியாக லாங்க்லாய்ஸை சினிமா தெக் இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கினார். பார்பின் என்பவரை இயக்குனராக நியமித்தார். லாங்க்லாய்ஸ் சினிமா தெக்கிற்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு சினிமா தெக்கின் பூட்டுக்களை மாற்றினார்.
சினிமா தெக்கிற்கு பொருளாதார வளமும் தேசியத் தன்மையையும் அளிக்கும் இந்த நடவடிக்கையை சினிமாவை நேசிப்பவர்கள் வரவேற்பார்கள் என ஆந்தே மால்ராக்சும் அரசினரும் நம்பினார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறாக விளைவு உடனடியாக பிரெஞ்சு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக எழுந்தது.
லாங்க்லாய்ஸ் 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் கோதார்த், த்ரூபோ, கான்ஸ், ரெனுவார், பிரெஸ்ஸான் உள்ளிட்ட 40 பிரெஞ்சு இயக்குனர்கள் தமது திரைப்படங்களை பாபினோதெக் எனப் புதிதாகப் பெயரிடப்படவிருந்த அமைப்பு திரையிடக்கூடாது எனக் கூட்டறிக்கை வெளியிட்டார்கள். வெகுவிரைவில் அந்த அறிக்கையுடன் சார்லி சாப்ளின், ரோசலின்னி, பிரிட்ஸ் லாங், கார்ல் டிரையர், ரிச்சர்ட் லெஸ்ஸர், ஆர்சன் வெல்லஸ், ஜெர்ரி லூயிஸ் போன்றவர்கள் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அமெரிக்க இயக்குனர்கள் கூட்டமைப்பு தமது படங்களைத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொண்டது.
பின்வந்த புதன்கிழமை லாங்க்லாய்சுக்கு ஆதரவாக திரைப்பட நேயர்கள் 3,000 பேர் பாரிசில் திரண்டனர். காவல்துறை கண்ணீர்ப்புகை வீசி தடியடி நடத்தியது. கோதார்த்தின் கண்ணாடி உடைந்தது. த்ரூபோ, பெர்னாரட் டேவர்னியர் போன்றோர் காயமுற்றனர். 1968 பிப்ரவரி 23 ஆம் திகதி புதிய அலை சினிமாவின் இயக்கமான கேசியர் டு சினிமா 700 திரைப் படக்கலைஞர்களும் தத்துவவாதிகளும் கையொப்பமிட்ட கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டது. லூங்கட்லாய்ஸ் நீக்கப்பட்டதைக் கண்டனம் செய்திருந்தது அந்த அறிக்கை.
முழு பிரெஞ்சு சினிமாத்துறையும் லாங்க்லாய்சுடன் நின்றது.
மைக்கலேஞ்சலோ அந்தோனியோனி, பெர்க்மென், புனுவல், பீட்டர் புரூக், ஹிட்ச்காக், எலியா காஸான், அகிரா குரசோவா, பஸோலினி, சத்யஜித் ரே, ஆன்டி வெரால், ஜீன் பால் பெல்மான்டோ, பிரிஜட் போர்டெட், கேதரின் டொனேவு, மர்லின் டிரீச், ஜேன் போன்டா, குளோரியா ஸ்வென்சன், காதரின் ஹாபர்ன், பீட்டர் ஓடூல், தோசிரோ மிப்யூன் போன்ற உலகத் திரைக்கலைஞர்களும், ரோலான்ட் பார்த், சாமுவேல் பெக்கட், அலெக்சான்டர் கால்டர், ட்ருமன் கபோட், மேக்ஸ் ஏர்னஸ்ட், எவ்ஜனி அயனஸ்கோ, பிக்காஸோ, பால் ரிக்கோர், ஜூன்பால் சார்த்தர், பிரஸ்ஸான், பாலின் கீல், நார்மன் மெயிலர், ஆந்தரே சாரிஸ், சுசன் சொன்டாக், இயானிஸ் போன்ற எழுத்தாளர்களும் தத்துவாதிகளும் லாங்க்லாய்சுக்கு ஆதரவான அந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்கள்.
முழு உலகின் திரைக் கலைஞர்களும் அறிவாளிகளும் வாங்க்லாய்சின் பக்கம் நின்றார்கள். அறுதியில் பிரெஞ்சு அரசு அடிபணிந்தது.
1968 ஏப்ரல் 22 லாங்க்லாய்ஸ் மறுபடி சினிமாதெக்கின் இயக்குனராக மறுநிர்மாணம் செய்யப்பட்டார். அரசுப் பிரதிநிதிகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். வழங்கப்பட்டு வந்த நிதி பாதியாக வெட்டப்பட்டது. மே 2 ஆம் திகதி சினிமா தெக்கில் லாங்க்லாய்ஸ் திரைப்படம் திரையிடத் துவங்கியதற்கு அடுத்த நாள் மாணவர்கள் போராட்டங்கள் தெருக்களை நிறைத்தன. 1968 மே 12 ஆம் திகதி ஒரு கோடித் தொகையினரான மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து வேலை நிறுத்தத்தை அறிவித்தார்கள். பிரெஞ்சு தேசம் ஸ்தம்பிதம் அடைந்தது.
நேரடியான அர்த்தத்தில் லாங்க்லாய்ஸ் பிரச்சினை என்பது மாணவர் தொழிலாளர் எழுச்சியோடு சம்பந்தப்பட்டது இல்லைதான் என்றாலும், இந்நிகழ்வு ஒரு ஒத்திகை போல வன்முறையும் கிளர்ச்சிப் பரவசமும் கொண்டு அமைந்திருந்தது என்பதனை மறுக்கவியலாது.
ஆரம்பத்தில் அழிந்துகொண்டு வரும் திரைப்படங்களை மீட்பதும் பாதுகாப்பதும்தான் லாங்க்லாய்சின் நோக்கங்களாக இருந்தது. பிற்பாடு ஒரு இரவில் 3 படங்கள், 7 நாட்களும் காட்சிகள், உலக அளவிலான படங்களைத் திரையிடுவது என்பதையும் அவர் தேர்ந்து கொண்டார். பெர்க்மன், குரசோவா போன்றவர்களை அழைத்து அவர்களது முழுப்படங்களையும் திரையிட்டு விவாதங்களை உருவாக்கினார். பிரெஞ்சோ அல்லது ஆங்கில மொழித் துணைத் தலைப்புக்களோ கூட இல்லாமல் இப்படங்கள் வாரக்கணக்கில் திரையிடப்பட்டன. கோதார்த்தும் ட்ரூபோவும் இந்தத்திரையிடல்களிலேயே தமது பெரும்பொழுதுகளைக் கழித்தனர்.
மாடியிலும், மாடிப்படியிலும், தரையிலும் என எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் ஒரே சமயத்தில் அவர் படங்களைத் திரையிட்டுக் காட்டினார். சிலரது மூக்கு படத்திரையைத் தொடும் அளவு சிறிய அறையிலிருந்தபடி இருந்து நெருக்கியடித்துக் கொண்டு பாரிசின் கலைஞர்கள் படங்கள் பார்த்தனர். குடிகாரர் என ஒதுக்கப்பட்ட பஸ்டர் கீட்டனை அழைத்து அவரது படங்களைத் திரையிடச் செய்தார். புரிந்து கொள்ளப்படாத புனுவலின் படங்களை மிகுந்த ரசிக ஆரவாரத்துடன் திரையிட்டார். மேதைகளுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் இடையறாத பாலமாக லாங்கலாய்ஸ் விளங்கினார்.
ஒரு படத்தைத் திரையிட்டு ஓடிக்கொண்டிருக்கும்போது அப்படத்திற்கு பார்வையாளர்கள் தகுதியற்றவர்கள் என்று தோன்றினால் லாங்க்லாய்ஸ் திரைப்படத்தை இடையிலேயே நிறுத்தி விடுவார். நாசிகள் பாரிஸ் நகரத்தைக் கைப்பற்றியிருந்தபோது, சோவியத் படங்கள் திரையிடக் கூடாது எனத் தடை செய்யப்பட்டிருந்தபோது, தடையை மீறித் தனது தாயாரின் சிறிய வீட்டில் ஐஸன்ஸ்டீனின் ‘பேட்டில்ஷிப் போதம்கின்‘ படத்தைத் தனது நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டிய தீரத்தை அவரது நண்பர்கள் வாஞ்சையுடன் நினைவு கூர்கிறார்கள். லாங்க்லாய்ஸ் ஓசு, சிகா வெர்ட்டோவ், ழான் பெயின்லவ், முரான, பிரிட்ஸ் லாங்க் போன்றவர்களின் ரெடரோஸ்பெக்டிவ்களதை தொடர்ந்து நடத்தினார்.
பிரான்சின் பெரும்பட்ஜெட் படங்களைக் கடுமையாக விமர்சித்த அவர் புதிய இயக்குனர்களின் திரைப் படங்களை எப்போதுமே வரவேற்றார். திரைப்படத் தொழிலில் குளப்படி செய்பவர்களையும் கெட்ட பையன்களையும் அவர் ஆதரித்தார். கோதார்த்தின் புதியது காணும் நோக்கையும் சினிமா வடிவத்தில் அவர் நிகழத்திய விமர்சனச் சோதனைகளையும் அவர் போற்றினார். சினிமா தெக் புதிய அலை சினிமா இளைஞர்களுக்குப் பயிலுமிடமாக இருந்தது.
எந்த விலைகொடுத்தும் எந்தவொரு படத்தையும் கொள்முதல் செய்ய லாங்க்லாய்ஸ் விரும்பினார். ஓவ்வொரு படமும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சித்தரித்த பிரதிபலித்த படைப்புகள் என அவர் கருதினார். காலத்தின் சாட்சியம் என அவர் திரைப்படங்களைக் கருதினார்.
ஆசிரியர் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட லாங்க்லாய்ஸ் ஒரு திரைப்பட இயக்குனர் தனது திரைப்படத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும் என விரும்பினார். ஓவ்வொரு கலைஞனது பங்களிப்பும் அவனது வாழ்நாள் முழுமைக்கும் தனித்துவத்துடன் தொடர வேண்டும் என அவர் நினைத்தார்.
லாங்க்லாய்ஸ் மோசமான நிர்வாகி என் விமர்சிக்கப்பட்டார். திரையிடும் இடத்தை அன்பளிப்புப் பெற்று வாடகைக்கு எடுத்து எந்தக் கட்டணமும் பெறாமல் விரும்புகிற எல்லாருக்கும் அவர் படங்களைத் திரையிட்டுக் காட்டினார். அரசு நிர்வாகத்தைக் கடுமையாக எதிர்த்த அவர் தன்னளவில கணக்கு வழக்குகளைச் சரியாகப் பேண முடியாதவராக இருந்தார். அரசு நிதி வெட்டியதால் தனது பணியாளர்களை 75 இலிருந்து 15 ஆகக் குறைத்தார். நிதி திரட்டலுக்காக கனடாவுக்கு விஜயம் செய்து உரைகள் நிகழ்த்தி நிதி திரட்டினார். 1974 ஆம் ஆண்டு அவரது பணிக்காக கௌரவப்பட்டத்தினை அமெரிக்கத் திரைப்பட அகாதமி வழங்கியது.
1977 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி சில திட்டமிடல்களில் ஈடுபட்டிருந்த லாங்கலாய்ஸ் மனச்சங்கடத்துடன் இருந்தார். மனைவியைத் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்த வேளை அவர் மாரடைப்பினால் மரணமுற்றார். அவர் மரணமுற்றபோது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த சினிமா தெக் அவரது சவ அடக்கத்துக்கான தொகையைக் கூடத் திரட்ட முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பணத்தில் அவரது சவப்பெட்டியும் சல அடக்கத்திற்கான இடமும் பெறப்பட்டன.
லாங்க்லாய்ஸ் இல்லாது போயிருந்தால் திரைப்பட கலை இத்துனை வண்ணமயமாக இல்லாது போயிருக்கும் என அவரது சமகாலத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாம் முக்கியமான ஒன்றை மறந்துவிடக் கூடாது : சினிமா சேகரிப்பதில் உன்மத்தம் கொண்டிருந்த லாங்க்லாய்ஸ், அவைகளை ஒருங்கமைத்துத் திரையிடல்களை நிகழ்த்தினார். அறுதியில், திரைப்படத்தை அவர் அம்பலப்படுத்தவும் விரும்பினார்.
லாங்க்லாய்ஸ் தனது வாழ்வை திரைப்படக் கலைக்கு என அர்ப்பணித்தார். அவர் கண்டு பிடித்த ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும், அவர் ஏற்பாடு செய்த ஒவ்வொரு திரையிடலின் மூலமும், அவர் முன்னிறுத்திய ஒவ்வொரு திரைப்பட இயக்குனரின் மூலமும், அவர் காட்சிக்கு வைத்த ஒவ்வொரு திரைக்கலை சார்ந்த அரும்பொருட்களின் மூலமும், அவர் ஒரு உன்னதக் கலைப்படைப்பை உருவாக்கினார், ஒரு மரபை அவர் உருவாக்கினார். அதுதான் லாங்க்லாய்ஸ் எனும் போக்கிரியும் நடோடியுமான கலகக்காரன் எமக்கு விட்டுச் சென்ற முதுசம்..