முன்னறைச் சாளரத்தில் நின்று இலையுதிர்காலம் குளிர்காலத்தினுள் நுழைவதை மெல்லிய தூற்றலினாடே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் துயருற்றிருக்கிறது. மேசையில் இன்று காலை வந்த ‘ரேடிகல் பிலாசபி’யின் 200 ஆவது இதழ் இருக்கிறது. அச்சிதழாக இவ்விதழ் ‘ரேடிகல் பிலாசபி’யின் கடைசி இதழ். துக்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. சுஜாதா பட்டின் கவிதையொன்று இருக்கிறது. ஏ.கே.ராமனுஜனின் மரணத்தை நினைவுகூறும் கவிதை அது. மரணத்தைக் கேளவிப்படும் சுஜாதா தேநீர்க்கோப்பை ஒன்றுடன் புத்தக அலமாரியில் அவருடைய கவிதைகளைத் தேடிச் சென்று வாசிப்பது தொடர்பானது அக்கவிதை.
‘ரேடிகல் பிலாசபி’ எனது முப்பதாண்டுகால வாழ்வுடன் தொடர்பு கொண்டது. முதல் இதழ் துவக்கம்; இந்த இதழ் வரை அதனது சந்தாதாரராக இருக்கிறேன். எனது முப்பதாண்டு கால வாசிப்பை மீளப்பார்க்கிறபோது எத்தனையோ இடதுசாரி-பெண்ணிய-மார்க்சிய இதழ்கள் தம்மை நிறுத்திக் கொண்டுவிட்டன. ‘ஸ்பேர் ரிப்’, ‘லிவிங் மார்க்சிசம்’, ‘மார்க்சிசம் டுடே’ போன்றன இவ்வாறான இதழ்கள். சமகாலத்தில் புதிய இதழ்களும் தோன்றின. ‘ஹிஸ்ட்டாரிகல் மெட்டீரியலிசம்’, ‘சால்வேஜ்’, ‘ரோர்’, ‘ரீ திங்கிங் மார்க்சிசம்’ போன்றன இத்தகைய இதழ்கள். இதுவன்றி அநேகமாக ஐம்பது வரையிலான மார்க்சியக் கோட்பாட்டிதழ்கள் இணையவெளியில் தோன்றியிருக்கின்றன. ‘நியூலெப்ட ரிவியூ’, ‘ரெட் பெப்பர்’, ‘இன்டர்நேசனல் சோசலிசம்’ போன்ற இதழ்கள் எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன.
பிற எந்தப் பெண்ணிய-இடதுசாரி இதழ்களுகளுக்கும் இல்லாத சிறப்பு ‘நியூலெப்ட் ரிவியூ’, ‘ரேடிகல் பிலாசபி’ என இரு இதழ்களுக்கு உண்டு. ஆளுமைகளுடனான விரிவான நேர்காணல்களை முக்கால தரிசனங்களையும் முன்வைத்து இந்த இதழ்கள் மேற்கொண்டன. இரண்டு இதழ்களும் தமது தேர்ந்தெடுத்த நேர்காணல்களை தொகுப்புக்களாகவும் வெளியிட்டிருக்கின்றன. வேறுபட்ட கோட்பாட்டுப் பார்வைகளில் மார்க்சிய நோக்குடன் இடையீடு செய்தவை இந்த இதழ்கள்.
‘ரேடிகல் பிலாசபி’ அச்சிதழை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தாலும் வேறொரு வடிவில் இதழின் செயல்பாடுகள் தொடரும் என அறிவித்திருக்கிறது. அதனது வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை அதன் ஆசிரியர் குழுவினர் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இறுதி இதிழின் அறிவிப்பைப் பார்க்கும்போது ‘த லோகோஸ்’ அல்லது ‘கல்ச்சர் அன்ட் பாலிடிக்ஸ்’ இணைய இடதுசாரி இதழ்களின் பண்பைக் கொண்டிருக்கும் என யூகிக்க இடமிருக்கிறது.
புதிதாகவும் மார்க்சிய அச்சு இதழ்கள் தோன்றி அவை வெற்றிகரமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில் ‘ரேடிகல் பிலாசபி’ இந்த அச்சிதழ் வடிவத்தை நிறுத்திக் கொள்ள என்ன காரணம்? பிரித்தானியாவுக்கே உள்ள ஒரு குறிப்பான காரணத்தைச் சொல்லலாம் என நினைக்கிறேன். ‘ரேடிகல் பிலாசபி’ இதழின் பெரும்பாலுமான ஆசிரியர் குழுவினரும் எழுத்தாளர்களும் ‘மிடில்செக்ஸ்’ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ‘மிடில்செக்ஸ்’ பல்கலைக் கழகம் இலாபகரமாக நடக்கவேண்டும் எனும் காரணத்தினால் மனிதவியல் சாரந்த துறைகளை மூடுவதாக அறிவித்தது. இதனை எதிர்த்து கல்வித்துறை அறிஞர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து இப்பல்கலைக் கழகத்தின் தத்துவ உயர்படிப்பு மையம் ‘கிங்க்ஸ்ட்ன்’ பல்கலைக் கழத்திற்கு மாற்றப்பட்டது.
இருநூறாவது இதழில் ‘ரேடிகல் பிலாசபி’ மேற்கொண்டு வந்த இரு நடவடிக்கைகள் இல்லாது போனதை பீட்டர் ஓஸ்போர்ன் குறிப்பிடுகிறார். ஓன்று, ‘ரேடிகல் பிலாசபி’ நிகழ்த்தி வந்த கருத்தரங்குகள் மெல்ல மெல்ல இல்லாது போனது. இரண்டவதாக, ‘ரேடிகல் பிலாசபி’யின் சிறப்பம்சங்களில் ஒன்றான நேர்காணல்கள் என்பதும் மெல்ல மெல்ல இல்லாமல் போனது. இதற்கான காரணங்கள் என ஓஸ்போர்ன் நேடியாக எதனையும் குறிப்பிடவில்லை. எனினும் ஆசிரியர் குழுவை ஒருங்கிணைப்பதில், அனைவரும் சமமாகச் செயலாற்றுவதில் சிரமங்கள் நேர்ந்திருக்கிறது. கல்வித்துறையாளர்களின் வாழ்வும் முன்போல இல்லை. புத்தகங்களின் அச்சிதழ்களின் மின்வடிவம் என்பது அச்சிதழ்களுக்கு சவாலாக இருக்கிறது எனப் பல காரணங்களை அவர் பூடகமாகச் சொல்லிச் செல்கிறார்.
‘ரேடிகல் பிலாசபி’ என்னளவில் கோட்பாட்டுக்கான ஒரு ரெபரன்ஸ் இதழாக எனக்கு இருந்திருக்கிறது. அதனது நூல் விமர்சனப் பகுதியும் மரண அஞ்சலிப் பகுதியும் புதிய தரிசனங்களை எனக்குத் தந்திருக்கிறது. கண்ணாடித் தபால் உறையைப் பிரித்ததும் ஒரு குழந்தையைப் போலத்தான் அதனது புதிய இதழ்களை நான் ஏந்திப் புரட்டுவேன். அதன் மெலிதான பெட்ரோல் மணம் எனக்குச் சுகந்தம். பிரியமான ஒன்றின் ஸ்தூல வடிவை இழந்துவிட்ட உணர்வு என்னை துக்கத்துடன் அமைதியுறச் செய்கிறது..