தீவிர மாற்றுக்கான தேவை : இஸ்த்வான் மெஸாரஸ் நேர்முகம்
1 அக்டோபர் 2017 ஆம் திகதி தனது 87 ஆம் வயதில் மரணமுற்ற ஹங்கேரிய மார்க்சியரான இஸ்துவான் மெஸாரஸ் புகழ்பெற்ற பிறிதொரு ஹங்கேரிய மார்க்சியரான ஜியார்ஜ் லுகாக்சின் மாணவர். அந்நியமாதல் குறித்து இவர் எழுதிய நூல் அதுகுறித்த முன்னோடிப் படைப்பு எனலாம். இங்கிலாந்தின் யோர்க் மற்றும் சஸ்சக்ஸ் பல்கலைக் கழகங்களில் தத்துவத்துறைப் பேராசிரியாகப் பணியாற்றிய மெஸாரஸ் 1956 ஆம் ஆண்டு ஹங்கேரியின் மீது சோவியத் யூனியன் படையெடுப்பைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார். தனது இறுதிக்காலம் வரை தனது மார்க்சிய நம்பிக்கைளை வெளிப்படுத்தியவராக வாழ்ந்த மெஸராஸின் இந்த நேர்காணல் சோவியத் யூனியன் விழ்ச்சியின் பின்னான மார்க்சியத்தின் எதிர்காலம் குறித்துப் பேசுகிறது. பிரான்சிலிருந்து வெளியாகிய, அசோக் யோகன் தொகுத்த ‘அசை’ கோட்பாட்டிதழில் வெளியான இந்த நேர்காணலை காலஞ்சென்ற அன்புத்தோழர் சிங்கராயர் மொழிபெயர்த்திருந்தார். இதனை எனது வலைத்தளத்தில் வெளியிட எனது அன்பு நண்பன் எஸ்.வி.உதயகுமார் தட்டச்சு செய்து தந்தார். இதுவரையிலும் ஆங்கில ஊடகம் எதிலும் மெஸாரஸ் குறித்த அஞ்சலிக் கட்டுரைகள் எதுவுமே வெளியாகவில்லை. மெஸாரஸ் பற்றித் தமிழ் மொழியில் நானறிந்து வெளியாகியிருக்கும் படைப்பு இந்த நேர்காணல் மட்டும்தான். இதனைச் சாத்தியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. தோழர் இஸ்துவான் மெஸாரசுக்கு எனது தலை தாழ்ந்த செவ்வஞ்சலி..
*
எலியாஸ் கனலிஸ்
மன்த்லி ரெவ்யூ
தொகுதி 51, எண் 8, சனவரி 2000
*
தமிழாக்கம்: சிங்கராயர்
நன்றி : ‘அசை’ கோட்பாட்டிதழ், பிரான்ஸ்
*
நவீன லட்சியப் பார்வை, மாபெரும் புரட்சிகள், நாஸி எதிர்ப்புப் போர், கிழக்கு ஐரோப்பாவில் சமூக உடைமை (சோசலிச) முறையின் தகர்வு, மீண்டும் சந்தை முறையின் முழு ஆதிக்கம் – இவையெல்லாம் நடந்தது இந்த இருபதாம் நூற்றாண்டில்தான். இந்த நூற்றாண்டை ‘அதீதங்களின் நூற்றாண்டு’ என அழைக்கிறார் ஹாப்ஸ்பாம். நீங்கள் இந்த நூற்றாண்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இந்தக் கேள்வியில் எழுப்பப்பட்டுள்ள செய்திகள் அவற்றினும் கூடிய உட்பொருள் கொண்டவை. முதலில் புரட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். பாரிய நிலநடுக்கங்களுடன் அவற்றை ஒப்பிடுவது மிகச் சரியாக இருக்கும். அவை மேல்மட்டத்திற்குக் கொண்டுவரும் மலைத்தொடர்களை அப்படியே பெயர்த்தெடுத்து மறுபடியும் பாதாளத்துக்குள் தள்ளிவிட முடியாது. காட்டாக, அதிபர் கென்னடியின் ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினரான வால்ட் ரோஸ்டோவின் பழமைவாத விருப்பக் கருத்தை எடுத்துக் கொள்வோம். ‘முதல் உலகப் போர் நடந்திருக்காவிட்டால் அல்லது ஒரு பத்தாண்டு தள்ளி அது நடந்திருந்தால்கூட நிச்சயமாக ருசியா வெற்றிகரமாக நவீனமயத்துக்கு நிலைமாறியிருக்கும்; பொதுவுடைமைத் தத்துவம் அங்கு புக முடியாதவாறு ஆகியிருக்கும்’ என்று சொன்னதன் மூலமே ருசியப் புரட்சியை இல்லாமல் செய்துவிட ஆசைப்பட்டவர் அவர்.
மெய்நடப்புக்கு மாறான விருப்பங்களால்’ ஆன இத்தகைய வாதம், அடிப்படை மெய்யியலின் பாலபாடத்தில்கூட நல்ல மதிப்பெண் வாங்கித் தேறாது. ஆனால் மாபெரும் பிரச்சாரக் கண்ணோட்டமோ அதை ஆழ்ந்த ஞானமெனத் தூக்கிப் பிடிக்கிறது. ஆனால் உண்மையைச் சொன்னால், மாபெரும் புரட்சிகள் யாவும் அவற்றின் அடிப்படைக் காரணங்கள் தீர்க்கப்படும் வரைக்கும் பல நூற்றாண்டுகளுக்கு எதிர்முழக்கம் செய்துகொண்டேதான் இருக்கின்றன. முதல் நிலநடுக்கத்துக்கு ஏறக்குறைய இணையான ஆற்றல் உடையனவாகவே தொடர் அதிர்வுகளும் இருக்க முடியும். மேலும் அவற்றின் பொருத்தமுடைமை, முதலில் அவை குமுறிய வட்டாரத்தோடு மட்டும் அடங்குவதல்ல. அப்படித்தான் 1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியானது வட அமெரிக்காவையும் ஐரோப்பா முழுவதையுமே உலுக்கியது. அதன்பின் 210 ஆண்டுகள் கழித்து இன்னும்கூட அது எழுப்பிய கோரிக்கைகள் நிறைவேறாமலே உள்ளன என்னும் முறையில் அதன் வரலாற்றுப் பொருத்தப்பாடு பல வழிகளிலும் தக்கவைக்கப்பட்டே இருக்கிறது. விடுதலை – உடன்பிறப்புக் கொள்கை – சமத்துவம் ஆகியவற்றிற்கு என்னதான் நேர்ந்தது. ஒன்றா, அவை வெகுசன உணர்விலிருந்து அறவே அகற்றப்பட்டிருக்கின்றன் அல்லது ஒரு அதிகாரம்சார் ஃ முறைசார் வெற்றுச் சட்டகமாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையைச் சொன்னால் பாரீசில் கூடிய பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாம் ஆண்டு விழாவில் பேசிய மார்கரெட் தாட்சர் தன் தரப்பின் வெல்லரிய தன்மையை ஆதரிப்பதற்காக பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிராக வசைமாரி பொழிந்ததை, கூட்டத்தில் கலந்துகொண்ட உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் வெட்கம் கெட்ட முறையில் மரியாதையுடன் செவிமடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
நிறைவேற்றி முடிக்கப்படாமலே பிரெஞ்சுப் புரட்சி புதைக்கப்பட்டமை, அச்செயலில் ஈடுபட்டவர்களின் மடத்தனத்தையும் அரசியல் ஒருசார்பையும் தெளிவாகக் காட்டுகிறது. அப்படியேதான் 1917ல் அக்டோபர் புரட்சி நடந்த இடத்திலும் பத்தாண்டுகளுக்குப் பின் நடந்துவிட்ட நிகழ்ச்சிக்காகவே அப்புரட்சியைக் குழிதோண்டிப் புதைக்க முயல்வதும், அதே விதமான மடத்தனமும் அரசியல் ஓரவஞ்சனையுமே ஆகும். சமூக உடைமையை லட்சிய ஆர்வமாகக் கொண்டிருந்த புரட்சி அது. வரலாற்றிலிருந்து அதைத் துடைத்து அழித்துவிட முடியாது. 1919 ஹங்கேரிய மன்ற (கவுன்சில்) குடியரசு, முதல் உலகப் போரை அடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஜெர்மானிய எழுச்சிகள், 1927 முதல் 1949 வரை நடைபெற்ற சீனப் புரட்சி, 1957ல் நடந்த கியூபப் புரட்சி, அந்நிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டி ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் நடந்த போராட்டங்கள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் பெரும் வல்லமையை வெற்றிகரமாக முறியடித்த வியட்நாம் மக்களின் வீரப் போராட்டம் ஆகிய அனைத்தும், 1917 அக்டோபர் புரட்சியின் எதிரொலிப்புகளே ஆகும். இந்நாட்களில் சீனாவில் அதன் மக்கள் நீண்டகால அந்நிய ஆதிக்கத்திலிருந்து தம் நாட்டை விடுவித்த தம் புரட்சியின் வெற்றியின் ஐம்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் நாம் நினைத்துப் பார்க்கலாம். இந்தப் பகுதிகளிலெல்லாம் எந்தவிதமான சிக்கல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், 1917 அக்டோபர் புரட்சிக்குத் தூண்டுதலாக இருந்த சம உடைமை லட்சிய ஆர்வங்கள் மற்றும் அவற்றுக்கான தேவைகள் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றிலிருந்து இன்னும் மறையவில்லை.
உலகையே உலுக்கிய எழுச்சிகளை இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து நாம் பார்த்தால், இருபதாம் நூற்றாண்டின் சித்திரம், பலரும் – குறிப்பாக இத்தாலியரால் வீ ஜீமீஸீவவீவவீ என அழைக்கப்படுவோர் பலரும் – இப்போது அதைச் சித்தரிப்பதை விடவும் எவ்வளவோ உடன்பாட்டுத் தன்மையதாகவே உள்ளது. இதே ஆட்கள்தான் கடந்த காலத்தில் இதே நிகழ்ச்சிகளைப் பற்றிய – நம்ப முடியாத அளவுக்கு – ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டுவதில் முனைப்பாக ஈடுபட்டவர்கள்.
மொத்தத்தில் நாம் நினைவில் நிறுத்த வேண்டியது: ஒரு சமூக ஏற்பாட்டில் (அதாவது இந்த இடத்தில், சமுதாயத்தில் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தும் மூலதனத்தின் மறுஆக்க முறையிலிருந்து) ஒரு தீவிரமான மாற்று ஏற்பாட்டை நோக்கி (நம் வரலாற்று வானில் சுமார் பத்து ஆண்டுகளுக்குச் சற்று முன்னதாகத் தோன்ற நடந்தேறிய மாற்றத்தை நோக்கி) இயங்குவது என்பது, அளவுகடந்த சிக்கலும் அலைக்கழிப்பும் உடைய சமூக நிகழ்முறையாகவே இருக்கிறது. முன்னோக்கி மட்டுமல்ல, மீண்டும் பெரிய பின்னடைவுகளை நோக்கியும் அந்த இயக்கம் நிகழ்கிறது. ஆனால் மனித லட்சிய ஆர்வங்களும் ஆற்றல்களும் ஒரு அடிப்படையான பண்பு மாற்றத்தை நோக்கி முனைந்து நிற்பதை, அந்தப் பின்னடைவுகளை (அவை எவ்வளவு பெரியதாயினும் மோசமானதாயினும்) முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது.
‘உலகமய சந்தைகளின் முற்றுரிமையை’ப் பொருத்தவரை, அதற்குப் பல முகாமையான தகுதிகள் தேவைப்படுகின்றன:
1) அவற்றில் எல்லாம் அடிப்படையானது – என்னதான் முதலாளித்துவத்தின் வெற்றிப் பெருமை உலகளாவியதாக இருந்தாலும் – உலக மக்கள் தொகையில் பாதி தம் வாழ்க்கை நிலைமைகளை மறுஆக்கம் செய்து கொள்வது ‘உலகமய சந்தைகளின் முற்றுரிமை’ விதிகளுக்கு ஏற்ப அல்ல. பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பெரும்பான்மை மக்களை நினைத்துப் பாருங்கள். அல்லது 125 கோடிச் சீனர்களில் 100 கோடிக்கும் மேலானோரை நினைத்துப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சீனாவின் சிறிய முதலாளிய ஆட்சிப் பகுதியையும், முதலாளியமல்லாத சீன அரசின் ஒட்டுமொத்த அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியையும் பற்றி நாம் பேச முடியும். இத்துடன் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியையும் நாம் சேர்த்தாக வேண்டும். (எ.கா.: இந்தோனேசியாவில் பல கோடிக்கணக்கான மக்கள் தன்னிறைவுச் சாகுபடி செய்து வருகிறார்கள். எனவே ‘சந்தை முறையின் முழு ஆதிக்கம்’ பற்றி அவர்கள் முன் பேசும் பேச்செல்லாம் தரங்கெட்ட நக்கல் பேச்சாகவே தோன்றும்.) இவற்றுடன் லத்தீன் அமெரிக்காவின் புறக்கணித்துவிட முடியாத ஒரு பரப்பையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ருசியாவிலும்கூட, கோர்ப்பச்சேவின் தீவினைப்பட்ட பதினைந்தாண்டு முயற்சிகளுக்குப் பிறகும்கூட, குற்றக் கும்பல்கள் மலிந்த பெருநகரங்களைத் தவிர பிற இடங்களில் முதலாளியத்தை மீண்டும் கொணர்வதில் தோல்வியே ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். கோடிக்கணக்கான ருசியத் தொழிலாளிகள் மாதக் கணக்கில் ஊதியம் பெறாது இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு ஒன்றரை ஆண்டுகளாகக்கூட சம்பளம் தரவில்லை. இப்படிக் கூலி தராமலே ‘சந்தைப் பொருளியலை’ நடத்திப் பாருங்கள், பார்ப்போம்!
இந்தக் காட்டுகளில் எல்லாம், ஒரு உலகளாவிய அமைப்பு என்னும் முறையில் தன் முழுமையான முதலாளிய வடிவை நிறைவு செய்வதில் முதலாளிய அமைப்பு மாபெரும் வரலாற்றுத் தோல்வி கண்டிருப்பதையே நாம் சந்திக்கக்கூடியதாய் உள்ளது. மேலும் முதலாளிய வளர்ச்சி முறையின் உள்ளார்ந்த, தாங்க முடியாத – தடுக்க முடியாத சூழலியல் நட்டம் ஃ நாசம் உட்பட ஏராளமான கடுமையான காரணங்களுக்காக வருங்காலத்தில் ‘முன்னேறிய முதலாளியம்’ அதன் ‘முற்றுரிமைச் சந்தை’யுடன் உலகளவில் முழுமை அடைவதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாதிருக்கிறது.
2) முதலாளிய மேற்கிலும்கூட ‘சந்தை முறையின் முற்றான ஆதிக்கம்’ என்பதை விமரிசன வரம்புகளோடு-திருத்தங்களோடுதான் அணுக வேண்டும். கிழக்கில் பல அரசியல் கிண்டல்கள் வழங்கி வருகின்றன. அவை எரவான் வானொலியிடம் கேட்கப்படும் கேள்விகளின் வடிவில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இப்படிப் போகிறது: ‘சனிக்கிழமை அன்று மாஸ்கோ சதுக்கத்தில் வைத்து அமெரிக்க சொகுசுக் கார்கள் கொடுக்கப்படும் – உண்மையா?’ பதில் வருகிறது: ‘ஆம் தோழர், அது முற்றிலும் உண்மைதான். ஆனால் அதில் மூன்று திருத்தங்கள்: (1) அவை அமெரிக்காவுடையதல்ல, ருசியாவுடையது; (2) அவை கார்கள் அல்ல, சைக்கிள்கள்; (3) அவை கொடுக்கப்படுவதில்லை, எடுக்கப்படும்.’
நமது ‘முற்றுரிமைச் சந்தைகள்’ மற்றும் அவற்றின் ‘முழுவீச்சான போட்டி’ என்பது பற்றியும் ஏறக்குறைய இதே விதமான திருத்தங்களைச் சொல்லியாக வேண்டும். மூன்று முக்கிய வரம்புகள்:
அ) ஒவ்வொரு முதலாளிய நாட்டிலும் ஒன்றை ஒன்று மீறும் முற்றுரிமையை நோக்கிய வளர்ச்சிகளையே நாம் காண்கிறோம். (இப்போக்கு சந்தையின் முழு ஆதிக்கத்துக்கு உதவுவதாக இல்லை, மாறாக அதன் மீது குறுக்கு ஆதிக்கம் செய்வதாகவே உள்ளது என்பது தெளிவு. இந்தப் போக்கு சந்தை முறையை எல்லா விதத்திலும் கீழறுக்கவும் இறுதியாக அதற்குக் கேடு சூழவுமே ஆகும்.)
ஆ) நமது ‘முற்றுரிமைச் சந்தைகள்’ அரசின் பேரளவான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சார்ந்தே நிலவுகிறது. (இதற்கு ‘சாதாரண விவசாயக் கொள்கைகளில்’ இருந்து ‘ஏற்றுமதி உத்தரவாதங்கள்’ வரை, முதலாளியத் தொழில் நிறுவனங்கள் தம் விருப்பப்படி பயன்படுத்த பெருமளவான ஆய்வு நிதிகளை இலவசமாக அனுமதிப்பது முதல் ‘ராணுவத் தொழில்துறையில்’ பெருமளவான தொகைகளைக் கொட்டுவது வரை எடுத்துக்காட்டலாம்.)
இ) தற்போது நிலவும் அதிகாரமய உறவுகளுக்குத் தக்க ‘நாடுகடந்த உலகமயமானது’ பொருளியல் சந்தை உறவுகளை மேலாதிக்க வல்லரசாகிய அமெரிக்க அய்க்கிய நாடுகளுக்கு ஆதரவாக பிரமாண்டமாகத் திரிக்கிறது. அய்க்கிய அமெரிக்கா தன்னிடமுள்ள எல்லாக் கருவிகளைக் கொண்டும் அதன் ‘நேரடிப் பொருளியல் தேசியத்தை’ நடைமுறைப்படுத்தும் என்பதை மிகத் தெளிவான சொற்களில் வெளியிட அதிபர் கிளின்டனின் முன்னாள் தொழிற்துறைச் செயலர் ராபர்ட் ரீக் தயங்கவில்லை.
அய்க்கிய அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியும், தானுமே ஒரு ஆதிக்கத் தொழில்துறை ஆற்றலுமாகிய பிரிட்டனே கூட, வெளிப்படையாகவே அநீதியான இந்த அதிகார உறவுகளின் தர்க்கத்தால் துன்புற நேர்கிறது. இதற்கு மார்கரெட் தாட்சரின் அரசாங்கத்திலுள்ள மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகிய மைக்கிள் கெசலட்டைன் – அவரது பதவி விலகல் உரையில்தான் என்றாலும் – குறிப்பிட்டுச் சொல்லும் முறையில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டி வந்தது: யு.எஸ்.இன் ‘தொழில்நுட்பப் பரிமாற்ற ஒழுங்குமுறைகள், அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டங்கள், பென்டகன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பேராயத்தால் பாதுகாக்கப்படும் ஆட்சி எல்லைக்கு அப்பால்பட்ட கட்டுப்பாடுகள்’ ஆகியவற்றில் பிரிட்டனுக்கு ஏற்படும் எதிரான விளைவுகளுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டி வந்தது. மேலும் ‘உலகிலுள்ள மிகப் பெரிய மிகப் பணக்காரக் குழுமங்களுக்குள் (யு.எஸ்.இன்) நிதிகள் பெருமளவில் குவிக்கப்படுகின்றன. இந்தப் போக்கு தடையின்றித் தொடர்ந்தால் உலகின் முன்னேறிய தொழில்துறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக அது விலைபேசி வாங்கிக் கொண்டே போய்விடும்’. இந்த நடப்புக்கு எதிராகவும் அவர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. அப்படியானால் நமது தொழில்துறை மற்றும் அரசியல் ஆண்டைகள்தான் – குறிப்பாக, அமெரிக்கர்கள்தான் – ‘சந்தை முறையின் முழு அதிகாரத்துக்கு’ வரம்பிடுவது எவ்வாறு என்பதற்கான எரவான் வானொலி ஞானத்தின் பிறவிச் சீடர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
வரும் ஆண்டுகளில் மெய்யியலுக்கும் மெய்யியலார்க்கும் இடமுண்டா? அவர்களின் தற்காலப் பாத்திரத்தை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்? மெய்யியலுக்கும் அரசியலுக்கும் தொடர்பு உள்ளதா?
உள்ளது; சொல்லப்போனால் முன்னெப்போதையும்விட அதிகமாகவே. ஏனென்றால் அறிவு உற்பத்தியானது – முதலின் அதிகார ஆணைகள் மற்றும் உறுதியான முடிவுகளின் அழுத்தத்தின் கீழ் – எண்ணற்ற சிறப்புத் துறைகளாகப் பிரிவுபடும் போக்கில் உள்ளது. இதனால் முழுமையான – அனைத்தளாவிய பரிமாற்றத்துக்கு பெரும் தீங்கு நேர்கிறது. ஆனால் முழுமையான – அனைத்துத் தழுவிய துறைகளில் ஈடுபடாமல் மெய்யியல் ஒதுங்கியிருக்க முடியாது. இப்போது மேலோங்கி நிற்கும் பாணிகளில் புறக்கணிக்கப்படுவதாலேயே அத்தகைய துறைகள் தாமே மறைந்துவிடுவதில்லை. இந்தப் புறக்கணிப்பில் ஒரு வலுவான கருத்தியல் தீர்மானமும் இருக்கிறது. ஆளும் அமைப்பு தன்னை முற்றிலும் கேள்விக்கு இடமற்ற அதிகாரமாகக் கருதிக் கொள்கிறது. பெயரளவு திருத்தப்பாடுகளுக்கான வாய்ப்பை (மற்றும் நியாயப்பாட்டை) மட்டுமே அது ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முழுமையான – அனைத்துத் தழுவிய மாற்றுகளின் உயிர்ப்பாற்றலுக்கு ஒருபோதும் அது ஒப்புதல் தருவதில்லை. இந்த நிலைப்பாட்டை மட்டும் மெய்யியல் ஏற்றுக் கொண்டுவிட்டால் அது மெய்யியலின் தற்கொலைக்கு ஒப்பாகும்.
மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு தேவையான ஒன்றே. ஒவ்வொருவர் வாழ்வையும் அரசியல் பாதிக்கிறது. யாரும் அதற்கு அப்பால்பட்டு நிற்க முடியாது. இதனால்தான் ‘அரசியல் மிக மிக முக்கியமானது. எனவே அரசியல்வாதிகளிடமே அதை விட்டுவிட முடியாது – அவர்கள் எவ்வளவு தொலைநோக்கு உடையவர்களானாலும்’ என்றே என் மாணவர்களிடம் எப்போதும் நான் கூறுகிறேன். வரலாற்றின் போக்கில் முழுமையான – அனைத்துத் தழுவிய முடிவெடுக்கும் அதிகாரம் சமூகத் தனிமனிதர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு தொழில்முறை அரசியல்வாதிகளால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலை, மட்டுமீறிய அநீதியும் கண்டிப்பாக ஆதரிக்க முடியாததும் ஆகும். மெய்யியலாளர் – தொல் கிரேக்கரிலிருந்து இன்றுவரை – நிலைமையை சீர்திருத்தும் நிகழ்முறையில் செயலூக்கத்துடன் தலையிட முயன்றார்கள். எனவே மெய்யியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. இந்தக் கருத்துக்கு விளக்கமாக பிளாட்டோ, கேம்பனெல்லா, ஜியார்த்தனோ, புரூனோ, மாக்கியவல்லி, ஹோப்ஸ், ஸ்பினோசா, மார்க்ஸ், கிராம்ஸி, லூகாக்ஸ் ஆகிய பெயர்களை இங்கு குறிப்பிட்டாலே போதுமானது. இவர்கள் அனைவரும் அரசியலில் செயலூக்கத்துடன் தலையிட்டதற்காகக் கடுமையாகத் துன்புறவே வேண்டியிருந்தது.
இவ்வகையில் இன்றுள்ள சவால் மிகவும் பெரியது – அதுவும் அரசிலுக்கே நேரிட்டுள்ள ஆழமான நெருக்கடிச் சூழலில் அது மிகவும் பெரியது. அரசியல் என்பது ‘சாத்தியமாவதன் கலை’ என்ற பழைய இலக்கணத்தை நாம் அறிவோம். ஆனால் அரசாங்க ஞானத்தின் எல்லா மட்டத்திலும் ‘மாற்று என்பது கிடையாது’ என்று கூறப்படுவதையும் அதைவிட நாம் அடிக்கடி அறிய வருகிறோம். முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அதை திரும்பத் திரும்ப மார்கரெட் தாட்சர் கூறுவது வழக்கம். அவர் அடிச்சுவட்டில் மிக்கேல் கோர்ப்பச்சேவும் அப்படியே கூறினார். மாற்று ஒன்று இருக்க முடியும், இருந்தாக வேண்டும் என்பதை அவர்கள் இருவரும் கண்டுபிடிக்க வேண்டி வந்தவரை அதையே அவர்கள் திரும்பத் திரும்பக் கூறினார்கள். எப்படியும் ‘மாற்று என்பது கிடையாது’ என்ற ஞானம் (இது ‘சாத்தியமாவதன் கலை’ என்றால் ‘சாந்தியமாவது அசாத்தியம்’ என்று பொருள் என வலியுறுத்துகிறது) நம் காலத்தில் முடிவெடுக்கும் நிகழ்முறைகளை குற்றம் சாட்டுவதாகும். மனித ஈடேற்றம் என்ற இலக்கிலேயே மெய்யியல் கருத்துச் செலுத்துகிறது. எனவே அதைவிடக் குறைவான முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான ஒதுக்கீடுகளைக்கூட முதல் குறுக்கி வருவதிலிருந்து எழுகிற – நடைமுறையில் பெருவழக்காக உள்ள – ஞானத்தை அது எதிர்த்தே ஆக வேண்டும். உண்மையில் கடந்தகால வளர்ச்சித் திட்டங்களைக்கூட முதல் இன்று திரும்பப் பெறும் போக்கிலேயே உள்ளது. நல அரசின் மீதான அதன் தாக்குதல்கள் இதையே கண்கூடாகக் காட்டுகின்றன. இதனால்தான் இன்று மெய்யியலின் பங்கு முன் எப்போதைக் காட்டிலும் கூடுதலாகவே உள்ளது எனலாம்.
அதிக முனைப்பான ஒரு காலகட்டத்தில் செய்ததைப் போல நீங்களும் )சம உடைமை முறையா அல்லது அநாகரிக நிலையா) பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உலகமய காலகட்டத்தில் சமூக சனநாயக ஐரோப்பாவில் அதன் ‘மூன்றாம் பாதையில்’ மாபெரும் வெகுசன இயக்கங்கள் மீண்டும் மலர வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஒரு காலத்தில் காஸ்ட்ராய்ட்ஸ் மற்றும் லியடார்ட் ஆகியோர் இணைந்து ‘சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா?’ (Socialism or Barabarism?) என்ற ஏட்டை நடத்தியது உண்மைதான். இருந்தாலும் அந்தப் பணியை அவர்கள் கைவிட்டது வருத்தத்துக்குரியது. மேலும் நிறுவன அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண்ட அவர்கள், அந்த அமைப்பிலிருந்து வெளியேற, அந்த அமைப்புக்கு வேறு வழியிருக்க முடியாது என்று மெய்ப்பிப்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கித் தள்ளுவதில் போய் முடிந்தார்கள். ரோசா லக்சம்பர் கையாண்ட கருத்தைக் கவரும் சொல் தொடரை நான் கையாளும் விதம் முற்றிலும் வேறு விதமானது. என் ஆய்வுக் கட்டுரையில் அதை நான் காட்டியிருக்கிறேன். லக்சம்பரின் காலத்தில் அவரது எச்சரிக்கை இன்னும் தெளிவாக உருப்பெறாத தற்காலிகத் தன்மையையே கொண்டிருந்தது. இதற்கு நேர்மாறாக நம் நாட்களில் மாற்றுக்கு (இது முதல் முறையாக 1845இல் மார்க்சால் முறைப்படி வகுத்துக் காட்டப்பட்டது) நிசமாகவே உடனடித் தேவையான அவசரம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடக்கும் உலகளாவிய வளர்ச்சியின் போக்குகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் (தெளிவாக இனம் காணத்தக்க) விதத்தைப் பார்க்கும்போது, அவற்றின் அழிவுப் போக்கைத் தடுத்து நிறுத்த நமக்கு சில பத்தாண்டுகள் தேவைப்படலாம். ஆனால் உறுதியாக பல நூற்றாண்டுகள் ஆகாது. மாபெரும் தாராளவாத பொருளியல் அறிவரான ஸ்கம்பீட்டர் (ஷிநீலீரனீஜீமீவமீக்ஷீ) ‘உற்பத்தியை அழிவு செய்யும்’ ஒரு அமைப்பே முதலாளியம் என்று குறிப்பிட்டார். இதை ஒரு கருத்தியலாகவே அவர் ஆக்கினார். முதல் ஏற்றம் பெற்றுவந்த வளர்ச்சிக் கட்டத்தில் இந்தச் சித்தரிப்பு முழுக்கவும் உண்மையாகவே இருந்தது. இன்றோ, முதலானது ‘உற்பத்தியை அழிவு செய்யும்’ கட்டத்துக்குப் பதிலாக ‘அழிவை உற்பத்தி செய்யும்’ கட்டத்தை (நாள் தோறும் அதிகரித்துச் செல்லும் அளவில்) நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்தப் போக்கு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்துச் செல்கிறது.
உலகமய காலத்தில் ஐரோப்பிய சமூக சனநாயகத்தின் ‘மூன்றாம் பாதையின்’ கீழ் மாபெரும் வெகுசன இயக்கங்கள் மீண்டும் மலர வாய்ப்பு இருக்கிறதா என நீங்கள் கேட்கிறீர்கள். என்னைப் பொருத்தவரையில் ‘மூன்றாம் பாதை’ என்பது ஒரு கற்பனையான விருப்பத்துக்கும் மேல் ஒன்றுமில்லை. நிறுவப்பட்ட, ஆனால் ஆதரிக்கத் தகாத ஒரு அமைப்பை ஆதரிக்கும் விருப்பம் அது. பலவித வகுப்புகளையும் சேர்த்து வரு ‘நடுத்தர வகுப்பாக’ ஒன்றிணைத்தால் சிக்கல் தீர்ந்துவிடும் என்று ஒரு நூற்றாண்டாகவே மாக்ஸ் ஸ்கெலர் போன்ற சமூகவியலாளர் ஆரூடம் கூறி வந்திருக்கிறார்கள். எதன் நடுத்தரம் என நாம் வியக்கத்தான் முடியும். நடப்பில் சமூக வகுப்புமயமாக்கம் முன் எப்போதையும்விட நம் காலத்தில்தான் அதிகமாக நடக்கிறது. இது ‘முற்போக்கான வரிவிதிப்பின்’ மூலமே ஏற்றத்தாழ்வை ஒழித்துவிடலாம் என்ற பழைய சமூக சனநாயகத்தின் எள்ளி நகையாடுவதாகவே உள்ளது. நிகழ்ச்சிகள் பிற்பாடு விளக்கமுற்ற வகையில், நேர் எதிரான நிலவரத்தையே நாம் கண்டோம்.
மிக அண்மைக்காலக் காட்சிகள் இரண்டை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்:
யு.எஸ். பேராயத்தின் வரவுசெலவுத் திட்ட அலுவலப் புள்ளிவிவரமே (‘மிகைப்படுத்தும் இடதுகளின்’ புள்ளிவிவரம் அல்ல) உச்சியில் உள்ள 1மூ பேரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 100 மில்லியன் பேரின் வருமானத்துக்குச் சமமாக உள்ளது, அதாவது மக்கள் தொகையில் சுமார் 40மூ பேரின் வருமானத்துக்குச் சமமாக உள்ளது என்று உறுதியாகக் கூறுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இது 1மூக்கு 49 மில்லியன் என்ற அளவில் ‘மட்டுமே’, அதாவது யு.எஸ். மக்கள் தொகையின் 20மூக்கும் என்ற அளவில் ‘மட்டுமே’ இருந்தது. அப்படியானால், இடைப்பட்ட காலத்தில் ‘சமன்படுத்தி நிரவுவதும்’ ‘வகுப்புகளை ஒன்றிணைப்பதும்’ ஓரளவுக்கு நடைபெற்றுத்தான் இருக்கிறது போலும்!
2) இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் வறுமைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளின் அளவு மும்மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் ‘புதிய தொழிலாளர்’ அரசாங்கத்தின் கீழ் இந்நிலை தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது. ‘புதிய தொழிலாளர்’ அரசாங்கம், வாயால் உள்ளீடற்ற ‘மூன்றாம் பாதையைப்’ போதிக்கிறது; நடப்பில் தொழிலாளர் எதிர்ப்பான நடவடிக்கைகளைக் கொண்ட அரசியலை முன்னிலும் கடுமையாக நடைமுறைப்படுத்துகிறது. திருமதி தாட்சர்கூட அறிமுகப்படுத்தத் தயங்கிய விதமான கொள்கைகளைக்கூட நடைமுறைப்படுத்துகிறது. வாய்ப்பான எல்லா வழியிலும் நல அரசின் பயன்களைத் துண்டித்து வருகிறது. உடல் ஊனர்களுக்கான நிலையற்ற பிழைப்புதவியைக்கூட நிறுத்திவிட்டது. இப்படியே இது என்றென்றும் தொடரும் என்று ஒரு மூடன் மட்டுமே நினைத்துக்கொள்ள முடியும்.
ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலாக நான் கூறவது இதுதான்: ஒரு தீவிரமான வெகுசன இயக்கத்துக்கு வருங்காலம் இருக்கிறது – இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகின் எல்லாப் பகுதிகளிலும் – என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அல்லது இதையே இன்னொரு விதமாகக் கூறுவதானால், அத்தகைய ஒரு இயக்கத்துக்கு எதிர்காலம் அமையாவிட்டால் மனிதகுலத்துக்கே எதிர்காலம் இருக்க முடியாது. ரோசா லக்சம்பரின் மணிமொழியை இன்று நாம் சந்திக்கும் அபாயங்களின் அடிப்படையில் நான் மாற்றியமைக்க வேண்டி வந்தால் – ‘சம உடைமை முறையா அல்லது அநாகரிக நிலையா’ என்பதுடன் ‘அந்த அநாகரிக நிலையிலாவது உயிரோடிருக்கும் நல்வாய்ப்பு நமக்கும் கிடைக்குமானால்’ என்ற தொடரைச் சேர்ப்பேன். ஏனென்றால் மனிதகுலத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதே முதலின் அழிவுகரமான வளர்ச்சிப்போக்கின் உடன்பிறந்த பிறவிக்குணமாக இருக்கிறது. மேலும் ‘சம உடைமை முறை அல்லது அநாகரிக நிலை’ என்ற தேர்வுகளுக்கு அப்பாலுள்ள அந்த மூன்றாவது வாய்ப்புள்ள உலகம், கரப்பான்பூச்சிகள் மட்டுமே உயிர்பிழைக்கத் தக்கதாகவே இருக்கும். ஏனென்றால் அவைதான், சாகடிக்குமளவு அதிகப்படியான அணுக்கதிர் வீச்சையும் தாங்கிப் பிழைக்க முடியும் என்று சொல்கிறார்கள். முதலின் ‘மூன்றாம் பாதையின்’ ஒரே பகுத்தறிவுரீதியான முடிவு ஃ பொருள் இதுதான்.
பண்பாட்டு உலகமயம் பற்றி உங்கள் கருத்து என்ன?
சமூக – பொருளியல் – அரசியல் உலகமயத்துடன் தவிர்க்க முடியாமல் சேர்ந்து நடப்பது பண்பாட்டு உலகமயம். இதுவும் அதே முரண்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முதலின் அமைப்பு முற்ற முழுக்க கோபுர வடிவுடையதாகவே இருக்கிறது. பலவீனமானவர்கள் அதில் எப்போதும் கையேந்தும் நிலையிலேயே இருக்கிறார்கள். இந்த ‘தகுதி வரிசை அமைப்பானது’, நிலவும் சமூக-பொருளியல்-அரசியல் அதிகார உறவுகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் பொருளில் ‘பண்பாட்டு உலகமயம்’ என்னும் சிக்கல், சமகால வல்லரசியத்தின் முரண்பாடுகளில் இருந்து பிரிக்க முடியாமல் உள்ளது. அதன்படி, ஆதிக்கமான வல்லரசாட்சியாகிய அய்க்கிய அமெரிக்கா, உலகின் பிற பகுதிகள் மீது தன் பண்பாட்டு மேலாதிக்கத்தை திணிப்பதற்காக திண்ணமாக செய்ய முடியும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது. ‘சனநாயகம்’ என்ற பெயராலும் ‘சுதந்திரமான பண்பாட்டுப் பரிமாற்றம் ‘ என்ற பெயராலும்தான் இதை அது செய்கிறது என்பதும் இயல்பே. ‘சுதந்திரமான பண்பாட்டுப் பரிமாற்றம்’ என்னும் பொருள்வகை வாகனமேறி வரும் அதிகார உறவுகள் அதன் அடியாழத்தில் மறைந்துள்ளன. அவை பலதரமாக உள்ளன: (ஆலிவுட்டின் கழிசடைத் தயாரிப்புகளைக்கூட அனைவர் மீதும் வலியத் திணிக்கும்) திரைப்பட விநியோகப் பின்னல் முதல் மாபெரும் ஊடகப் பேரரசுகள் வரை, தொலைத்தொடர்பு மற்றும் துணைக்கோள் நிலையங்கள் வரை அவை உள்ளன் அமெரிக்க ‘அறிவுச் சொத்துரிமைகளின்’ பண்பாட்டுக் காவல் நாய்களாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் வரை அவை உள்ளன.
முன்னாள் காலனி நாடுகளின் ஆட்சிகளைப் பற்றி 1957லேயே பால் பேரன், அவை ‘அமெரிக்க வல்லரசியத்தின் இளைய பங்காளிகள்’ என வருணித்தார். ‘பண்பாட்டு உலகமய’ அரங்கிலும் அந்த வருணனையே பொருத்தமாக இருக்கிறது. ‘இளைய பங்காளிகள்’ தம்மிலும் சிறிய நாடுகள் மீது தம் பண்பாட்டு நலன்களை சுமத்தவும் முயல்கின்றன. அய்க்கிய அமெரிக்காவின் விசுவாசமான இளைய பங்காளிகள் என்னும் தம் துணைநிலை பாத்திரத்துக்கு ஒத்துப்போகும் அளவுக்கே இந்த முயற்சிகளில் அவை ஈடுபடுகின்றன.
கையேந்தும் நிலையிலுள்ள அனைவரின் நடுவிலும் இதெல்லாம் பெருத்த மனக்கசப்பை உருவாக்குவது இயல்பே. இந்த முறையில் வருங்காலம் கண்டிப்பாக குறிப்பிடுமளவுக்கு மோதல்களைக் கொண்டே வரும். வரம்பு மீறும் ஆதிக்கங்களுக்கு எதிரான நியாயமான தேசிப் பண்பாட்டு நலன்கள் தம் தற்காப்புக்கு முயலவே செய்யும். ஆனால் பெரும்பாலும் இது மிகவும் வேதனையான ஒரு நிகழ்முறையாகவே இருக்கப் போகிறது. ஏனெனில் வெற்றி வாய்ப்புகள் பொருளியல்-அரசியல் ஆதிக்க சக்திகளுக்கு சார்பாகவே மிக வலுவாக உள்ளன.
உலகமயமாக்கத்தை எதிர்ப்ப ‘தேசியமயம்’ என்னும் தீர்வு போதிய ஏற்புடையதாக உள்ளதா? கொசோவாவில் செர்பியரிடையே நடந்த ‘இனத் துப்புரவாக்கம்’ என்ற கருத்தை நீங்கள் ஏற்பீர்களா?
இல்லை. உலகமயம் என்னும் குழம்பிய குட்டையிலிருந்து வெளிப்பட்டு தேசியமயத்தில் தஞ்சம் புகுவதும் கண்டிப்பாக போதிய ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் முரண்பாடுகள் அடர்ந்த ஒரு நிகழ்முறையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ‘தேசிய அரசுகள்’ என்பவை உலகமயத்துக்கு வெளியில் உள்ளவை அல்ல. அதன் ஒருங்கிணைந்த பகுதியே அவை. எப்படி நாம் அரசியலில் இருந்து வெளியே(றி) இருக்க முடியாதோ, அப்படியே ‘தேசிய அரசுகளும்’ பன்னாட்டு உலகமயத்திலிருந்து வெளிப்பட்டு நிலவ முடியாது. தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதில் அவை செயலூக்கமான பங்கு பெறவே செய்கின்றன. முதலின் உலகளாவிய படிவரிசையமைப்பில் அவற்றின் ஒப்பீட்டு தராதரத்துக்கு ஏற்ப இது நடக்கிறது.
இங்கு நாம் மனங்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், உண்மையில் தேசிய அரசே முதலின் மிக முழுமையான – அனைத்தளாவிய அரசியல் ஆணை அமைப்பாக இருக்கிறது என்பதுதான். ஏனெனில் முதலாளிய அமைப்புக்கான உலகளாவிய அரசு என்று ஒன்று உண்மையில் இல்லை. மாறாக பலம் மிகுந்த ஃ பலம் குறைந்த தனித்தனி (தேச) அரசுகள் மட்டுமே உள்ளன. இது ஒரு மிகப்பெரிய முரணாகும். நாம் வாழும் காலத்தில் இந்த முரண் குறிப்பிடத்தக்க கூர்மை அடைந்து வருகிறது. மேலும் இதை வெல்லுவதற்கான வழியும் இருக்க முடியாது. பன்னாட்டு உலகமயமே முதலின் தவிர்க்க முடியாத தர்க்கத்தின் விளைவாக எழுவதுதான். எனவே அது தானே முழுவதும் ஆடி அடங்கும் வரை அதை முடிவுக்கு கொண்டு வருதல் என்பது முடியாது. இந்த நிலவரத்தின் விளைவுகள் பெரும் துன்பம் தருவனவாகவே உள்ளன. பெரும் தேசிய அரசுகளில் ஒன்று தன் சொந்த அரசு அமைவை மற்றவற்றின் மேல் ஓங்கச் செய்ய முயன்றதன் விளைவாகவே நடந்த இரண்டு பேரழிவான உலகப் போர்களை நாம் கண்டிருக்கிறோம். இன்று உலகமயம் அதன் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பேராற்றல் பெற்றுள்ள அரசானது பிற அனைத்து அரசுகளைக் காட்டிலும் தானே ‘உலகளவில் ஒப்புயர்வற்ற’ அரசு என (யு.எஸ். அரசு துணைச் செயலர் ஸ்ட்ரோபே தால்போர்ட்டின் கூற்று) தன்னைத் தானே அவற்றின் மீது ஏற்றிக்கொள்ளும் முனைப்பு அந்த அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இதனால் விளையும் ஆபத்துகளும் அதே அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே இங்கு நாம் ஒரு முரணை எதிர்கொள்கிறோம் – அது உலகமயமாக்கும் பன்னாட்டு முதல்களுக்கும் தேச அரசுகளுக்கும் இடையிலான முரண் ஆகும். ஒரு மெய்யான சம உடைமை மாற்றத்தால் மட்டுமே இந்த முரணை தீர்க்க முடியும். அதுவரை இந்த முரண் மென்மேலும் கடுமையுடையதாக மட்டுமே முடியும். இது கூடிய விரைவில் ஒரு பேரழிவான மோதலுக்கான வாய்ப்பை முன்னிறுத்தும்.
‘இனத் தூய்மைப்படுத்தல்’ என்ற கருத்து ஒரு கொடுமையான கருத்தாகும். முதலின் ஆட்சியின் கீழ் இருக்கும் வரை இனங்களுக்கிடையிலான மற்றும் அரசுகளுக்கிடையிலான மோதல்கள், எவ்வளவு காலமானாலும் தீர்க்கப்படவே முடியாது என்பதையே அது பிரதிபலிக்கிறது. ஆனால் இது கொசோவாவுடன் மட்டும் அடங்குவது அல்ல. அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் க்ரஜினாவில் இருந்து 2,70,000 செர்பியர் ‘இனரீதியாக துப்புரவு’ செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொண்டாக வேண்டும். இப்போது செர்பியர் கொசோவாவில் இருந்தே மிகப் பெருமளவில் துப்புரவுபடுத்தப்படுகிறார்கள்; அவர்கள் இன்னுமொரு 2,00,000 பேராக இருக்கலாம்.
தனிமனிதர்களுக்கிடையிலும் சமூகக் குழுக்களுக்கிடையிலும் உண்மையான – நிலையான சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு உயிர்ப்பாற்றலோடு கூடிய தீர்வு வேண்டும் என்பதையே இந்தச் சிக்கல்கள் எல்லாம் உரத்துக் கூவுகின்றன. ஆனால் உண்மையான – நிலையான சமத்துவம் என்பதோ, முதலின் சமூகக் கட்டுப்பாட்டு முறையுடன் கட்டமைப்புரீதியாகவே ஒத்துவராத நிலைப்பாடாகும்.
மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.வின் செயல்பாடுகள் வருந்தத்தக்க அளவுக்கு மோசமாகவே உள்ளன. இன்னும் சரியாகப் புரிந்து கொண்டால் அவை அப்படித்தான் இருக்க முடியும். (இருந்தாக வேண்டும் என்பதில்லை.) ஏனெனில் ஐ.நா.வை (யு.என்.) ஐ.அ.வே (யு.எஸ்.) இதுவரை (இப்பவும்) கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால் அந்த அய்க்கிய அமெரிக்காதான் உலகம் முழுவதிலும் கணக்கற்ற மனித உரிமை மீறல்களை நடத்தி வரும் நாடு ஆகும். அதன் அளவற்ற மனித உரிமை மீறல்களின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்தாலே போதுமானது: இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸில் போருக்குப் பிறகு மார்க்கோசைப் பதவியில் அமர்த்தி இழைத்த கொடுமைகள்; குவாட்டமாலா தொமினிக்கன் குடியரசு, கிரனெடா ஆகியவற்றை ஆக்கிரமித்தது; வியத்நாம் போர்; இந்தோனேசியாவில் சுகர்த்தோவை அமர்த்தியது (சுகர்த்தோவின் அமெரிக்க ஆதரவு எதிர்ப்புரட்சியின் போக்கில் 5,00,000 சீன இன மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்); லத்தீன் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் சர்வாதிகார ஆட்சிகளைத் திணித்து நிலைநிறுத்தி வருவது; மற்றும் மத்திய கிழக்கையும் கிரீசில் படைத் தலைவர்களின் சர்வாதிகாரத்தையும்தான் மறந்துவிட முடியுமா? இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை. இருந்தாலும், ஐ.நா.வும் மனித உரிமைகளின் பெயரால் பால்கன் பகுதிகளில் தாம் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதிலேயே மிகவும் குறியாக இருக்கும் மேலை அரசுகளும் அத்தகைய அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது இருக்கட்டும், அவற்றைக் கட்டுப்படுத்த தம் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.
மனித உரிமைகள் பற்றிய எல்சிங்கி உடன்படிக்கைகளை சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான வசதியான ஆயுதமாக தாம் பயன்படுத்திக் கொண்டிருந்ததை இந்நாட்களில் அமெரிக்க அரசியலில் உள்ள முக்கியப் புள்ளிகள் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஒத்துக் கொள்கிறார்கள். இப்படித்தான் முன்பு நிக்சன் மற்றும் கிசிங்கரின் கீழ் சோவியத்துகளுக்கு எதிராக ‘சீன’ துருப்புச்சீட்டைப் பயன்படுத்தினார்கள். வியத்நாம் போரில் சீனருக்கு எதிராக ‘ருசிய’ துருப்புச்சீட்டைப் பயன்படுத்தினார்கள். வல்லரசு அரசியலின் இயல்பான மனிதநேய வெறுப்புத் தன்மை, இவ்வாறு பொய்யாகப் புனையப்பட்ட – மிகவும் தேர்ந்த – மனித உரிமை அக்கறை என்னும் ஆடைகளால் மூடி மறைக்கப்படுகிறது. காட்டாக, கொசோவாவில் நடந்த போர் மனித உரிமைகளின் பெயரால் ஆரவாரமாக நியாயப்படுத்தப்பட்டபோது, ‘மேலை சனநாயகங்கள்’ எனத் தம்மை அழைத்துக்கொள்ள விரும்பும் நாடுகள், குர்தியருக்கு எதிராக சமயங்களில் மனித இனப்படுகொலையின் எல்லையையும் தொட்ட – துருக்கியர் இழைத்த மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்களை எதிர்க்க எதுவும் செய்யவில்லை. அல்லது ருவாண்டாவில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் பூண்டோடு அழித்தொழிக்கப்பட்டபோதும் எதுவும் செய்யவில்லை. மனித உரிமைகள் அப்பட்டமாக அத்துமீறப்பட்ட இன்னுமொரு வடிவம் உள்ளது: ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடித்த தடைகளின் விளைவாக, அவற்றுக்கு ஐ.நா. கண்ணை மூடிக்கொண்டு ஒப்புதல் அளித்ததன் விளைவாக, ஐ.நா.வின் நட்பு நாடுகளின் முற்றான அடிவருடித்தனத்தின் விளைவாக, ஈராக்கில் ஒரு மில்லியன் குழந்தைகள் சாகடிக்கப்பட்டன. மனித உரிமை குறித்த அக்கறையை உலக அரசியலின் நிசமான அதிகார உறவுகள் கேலிக்கூத்தாக்கி வரும்வரை, ஐ.நா.வை மனித உரிமைகளின் காவலன் என்று யாரும் மனதார எடுத்துக்கொள்ள முடியாது.
புதிய நிலைமைகளில் யு.எஸ்.இன் பாத்திரம் என்ன? ஐரோப்பாவின் வருங்காலம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
சோவியத் அமைப்பு உள்ளூர நொறுங்கிப் போனபின் மீதமிருந்த ஒரே ராணுவ மேல்நிலை வல்லரசான ஐக்கிய அமெரிக்காவே உலகளாவிய மேலாண்மை பெற்றது. 69 நாடுகளில் தன் ராணுவ தளங்களைப் பேணி வருகிறது. நேட்டோவை முழுமையாக ஆதிக்கம் செய்கிறது. (கடைசியாக நடைபெற்ற நேட்டோ உச்சிக்கூட்டத்தில் தனக்குத்தானே சட்டரீதி உரிமை வழங்கிக் கொள்ளும் ஆக்கிரமிப்புப் படை என நேட்டோ தன்னை மறுவரையறை செய்து கொண்டது.) தூரக் கிழக்கின் ராணுவக் கூட்டணி நாடுகளையும், குறிப்பாக ‘யு.எஸ்.-ஜப்பான் ராணுவ ஒப்பந்தத்தையும்’ முழுமையாக ஆதிக்கம் செய்கிறது: இதுவும் இப்போது அவ்வாறே ‘சட்டரீதியான வலுத்தூக்கல் படை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. போரை மறுக்கும் ஜப்பானிய அரசியல் சட்டத்தை முழுமையாக மீறுவதாகும் இது. இருந்தாலும் இதெல்லாம் ஒரு தாக்குப்பிடிக்கும் தீர்வாக கருதப்பட முடியாது. ஏனெனில், ‘யு.எஸ்.இன் உலக ஆதிக்கம்’ என்பது – அல்லது இதையே ஸ்ட்ரோபே தால்போட்டின் இதைவிட நயமான வார்த்தைகளில் சொன்னால், ‘உலக அளவில் யு.எஸ்.இன் ஒப்புயர்வற்ற நிலை’ என்பது – உள்ளார்ந்த வெடிப்புத்தன்மையுள்ள பகைநிலைகள் அடர்ந்தது ஆகும்.
இந்த புறநிலையான பகைநிலைகளின் மிக கவனிக்கப்பட வேண்டிய அம்சம், சீனாவுடன் ஏற்பட இருக்கும் நேரடி மோதலாகும். ஏனெனில் 2020 வாக்கில் இனப் பொருளியலானது யு.எஸ்.இன் பொருளியலைப் போல மும்மடங்கு பெரிதாக இருக்கும் என்று தாராளவாத பொருளியலாளர் இப்போதே அறிவித்துள்ளார்கள். அத்தகைய வாய்ப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் வாசிங்டனில் உள்ள பழைய ‘சீன சார்புக் குழு’ முன் எப்போதையும்விட இன்று அதிக செயலூக்கத்துடன் உள்ளது. இந்நிலை, கடற்படையின் இரண்டாம் துணைத்தலைவரும் பாதுகாப்புத் தகவல் மையத்தின் தலைவரும் ஒரு தனிப்பட்ட கருத்து வெளியீட்டாளருமான யுஜேன் கெரோலை பின்வருமாறு கருத்துக்கூறத் தூண்டியுள்ளது: ‘சீனாவை ஒரு மஞ்சள் அபாயம், தீய ஆற்றல் என்று காட்ட இங்கு ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது’. சீனாவுக்கு எதிரான ‘வருமுன் தடுக்கும் தாக்குதல்’ ஒன்றை நடத்துவதன் தேவை பற்றியும் நிறைய பேச்சு நடக்கிறது.
அதே நேரத்தில் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான புறநிலையான பகைமைகளையும் கடுமையான நல முரண்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. அண்மைக் காலத்தில் ஐரோப்பாவின் மீது அய்க்கிய அமெரிக்கா தன் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்ட முடிந்தாலும், மேற்சொன்ன முரண் இனி வரும் காலத்தில் கூடுதல் கடுமை பெறவே போகிறது. ஐரோப்பாவே தனக்குள் இருக்கும் முரண்களால் சீரழிந்து கொண்டுள்ளது. தற்போது அது, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அரசியல் அமைப்பாக இருக்கும் நிலையை தகர்த்து அதை வெறும் பொது வணிக பகுதியாக மட்டும் (தக்க) வைத்துக் கொள்ளும் ஆங்கிலேய பழமைவாதக் கட்சியின் முயற்சியில் பளிச்சென வெளிப்படுத்துகிறது: இந்தக் கொள்கையே இங்கிலாந்தின் பெரும்பான்மையரின் நிலைபாடாக உள்ளது. அண்மைக்கால ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களில் பழமைக் கட்சி பெற்றுள்ள வெற்றி இதைத்தான் காட்டுகிறது. இந்த நெருக்கடி இங்கிலாந்தில் மட்டுமின்றி பரவலாக வளரவே செய்யும். இருந்தாலும் ஐரோப்பிய சமூகத்தை உடைக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது. இங்கும், அமைப்பின் உடன்பிறந்த ஒரு முரணை நான் எதிர்கொள்கிறோம். அதாவது தேசிய உறுப்பினர்களின் சிக்கலற்ற ஒருமைப்பாட்டு ஒத்துழைப்பு அல்லது கூட்டமைப்பு என்பதற்கும் வாய்ப்பில்லை, அதாவது எதிர்பார்க்கப்படும் உடைவிற்குப் பிறகு அவர்கள் தனியாகவே செயல்படுவது என்பதும் முடியாது. இந்த முரணைத் தீர்க்க தொடர்ச்சியான – தவர்க்க முடியாத இக்கட்டுகளை ஏற்படுத்தும் முதல் அமைப்புமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, தனித்தனி தேசிய சமூகங்கள் தமக்கிடையில் உறவு கொள்ளும் மிகவும் புதுவிதமான ஒரு அமைப்புமுறை தேவைப்படுகிறது.
இறுதியாக, இது ‘பெருங்கதையாடல்களின்’ முடிவுகாலம் என்கிறாரே லியோடார்டு. ஒரு சிறந்த உலகுக்கான மிகப்பெரிய இலட்சியப் பார்வைகளின் காலம் முடிந்தே விட்டதா?
‘பெருங்கதையாடல்களையும்’ ‘குறுங்கதைகளையும்’ பற்றிய லியோடார்டின் சொல்லாடல் பழமைவாத சிந்தனையாளர்களின் அடியற்றியே எழுகிறது. ‘சிறுகச் சிறுக’ நிலைமாற்றுவதே இயலக்கூடியதும் சட்டரீதியானதுமான ஒரே நடைமுறை என நீண்டகாலமாகவே இவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இது, ஆதிக்க அமைப்புடன் அவர்கள் சமாதானம் செய்து கொள்ளும் வழியாகும். சம உடைமை முறையா அநாகரிக நிலையா என்ற தன் கடந்தகால நிலைபாட்டுக்கு தானே புறமுதுகு காட்டுவதாகும். ஒரு விமர்சன கண்ணோட்டத்திலிருந்து இந்த கூற்றுகளை நாம் மதிப்பிடுவோமானால், அவை தமக்குத் தாமே குழிபறிப்பனவாக இருப்பதை நாம் காண்போம். ஏனெனில், ‘குறுங்கதைகளை’ பொருத்துவதற்கான முழுமையான – அனைத்து தழுவிய போர்த்தந்திர சட்டகம் ஏதும் இல்லாமல், சிறுக சிறுக எதைத் திரட்டினாலும் அவை சிறிதளவு பயனையாகிலும் விளைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இருக்க முடியாது. சிறிய பிரெஞ்சு நகரமான எவர்தோனில் வட்டார நிர்வாக கணினியில் இருந்து ஒரு வாய்ப்பாட்டை – அதைவிட ஒரு புனைவை என்றே சொல்லலாம் – உருவாக்க முயன்று கொண்டிருந்தார் லியோடார்டு. அந்த கணினி, வட்டார மக்களின் கருத்துகளையும் விருப்பங்களையும் கணக்கில் கொள்வதாக கருதப்பட்டது. அந்த வாய்ப்பாட்டு கணினியால் பிரான்சு நாட்டு மக்கள் இருக்கட்டும், எவர்தோன் நகர மக்களுக்கே கூட துளி நன்மையும் செய்யவில்லை என்பதை கூறத் தேவையில்லை. ஏனெனில் ஒரு வட்டாரத்தின் கருத்துகளை பதிவு செய்வதற்கு ஏற்ற லட்சிய வழியை நீங்கள் உருவாக்கினாலும், அதைக் கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த முடிவெடுக்கும் நடைமுறைகளைக் கூட உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது பிரான்சின் பிற பகுதிகளுடன் அதற்குள்ள தேவையான தொடர்புகள் பற்றியோ, அந்த பிரான்சையுமே உட்கொண்ட அதைவிட பெரிய முடிவெடுக்கும் நடைமுறைகளை அது என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியோ சொல்லவே தேவையில்லை. முன் எப்போதையும்விட ‘உலகமய காலகட்டமாகிய’ இன்று அது இன்னும் சிக்கலானது ஆகும்.
ஆக, சமூக மறுஆக்கத்தின் ‘நுண்’ மட்டங்கள் முதல், தேச ஃ தேசங்கடந்த பரிமாற்றத்தின் உயர்மட்டங்கள் வரையான எல்லா மட்டங்களிலும் குறிப்பிட்ட செயல்முறைகளின் வாய்ப்பான இடையுறவுகளோடு கூடிய முழுமையான – ஒருங்கிணைந்த போர்த்தந்திரங்களுக்கான தேவையை அதிகப்படி என்று கூற முடியாது. இன்னும் ஒரு செய்தியையும் இங்கு வலியுறுத்துவது தேவை: நம்பார்வைக்குள் அகப்படும் அளவற்ற ஆபத்துகளைப் பற்றிய விழிப்போடு நாம் இருந்தாக வேண்டிய அதேபோது, நம் கைவசமுள்ள அனைத்து வழிகளாலும் அவற்றை எதிர்த்தாக வேண்டிய அதேபோது, எதிர்மறையான செயல்கள் மட்டுமே போதுமானதாகாது; அதற்கிணையாக உடன்பாடான மாற்றை முடிந்தவரை விரிவாக வெளியிடுவதும் தேவை. ஏனெனில் சமூக செயல்பாட்டுக்காக தேர்ந்தெடுத்த இலக்கானது உடன்பாடான முறையில் வரையறுக்கப்பட்டால் அது அதன் வெற்றிக்கு உயிருள்ள வழிகாட்டுதலாக இருக்கும். தன் வாழ்நாள் முழுவதும் எதிர்மறையான லட்சிய முடிவுகளின் கைதியாகவே இருந்துவிட்ட ‘யதார்த்தத்தில் நிலவிய சம உடைமை அமைப்பு’ எனப்பட்டதன் வீழ்ச்சியிலிருந்து கிடைத்த வேதனையான பாடங்களில் இந்த ஒரு பாடத்தையாவது தெளிவாகத் தெரிந்தாக வேண்டும். மேலும் ஒரு ‘சிறந்த உலகுக்கான லட்சியப் பார்வைகள்’ நிறைவுபெற இன்னும் நீண்டகாலம் இருந்தும்கூட இன்று வரலாற்று நிலையிலேயே அவை நீடிப்பதும் இதே காரணத்துக்காகத்தான்.
இன்றும் இனியும் ‘இடது’ என்பதன் பொருள் என்ன?
இடது என்ற பெயர் வந்த விதம் வரலாற்றில் ஒரு தற்செயல் நிகழ்ச்சியாகவே அமைந்தது. இடது புறமே செல்க என்பதற்குப் பதில் இங்கிலாந்தின் சாலையின் வலது புறமாகவே வாகனங்கள் செல்வதை ஏறக்குறைய ஒத்ததே இது. இருந்தாலும், தாறுமாறான வாகன நெரிசலில் இருந்து தப்ப முடியாதவாறு சிக்கும் நிலை ஏற்படாமல் போக்குவரத்து எளிதாக நடக்க வேண்டுமானால் சாலையின் இரு திசையிலும் எந்த பக்கமாக நீங்கள் செல்ல வேண்டும் என்பது அலட்சியத்துக்குரிய விசயமாக இருக்க முடியாது.
‘இடது’, ‘வலது’ என்பவற்றுக்குக்கிடையில் இனிமேல் எந்த குறிப்பிடத்தக்க வேறுபாடும் இருக்க முடியாது என்று சிலர் வாதிட்டார்கள். (இன்றும் வாதிடுகிறார்கள்.) இத்தகையவர்கள் (ஏறக்குறைய நகரவே முடியாத அளவுக்கு நெரிசல் மிகுந்த ஏதென்சிலும் கூட) போக்குவரத்து சீராக இயங்குவதற்கும், அர்த்தமில்லாமல் வலிய ஏற்படுத்திக் கொள்கிற முழுமையான போக்குவரத்து முடக்கத்துக்கும் இடையில் உண்மையில் எந்த வேறுபாடும் என நம்மை நம்பச் சொல்வார்கள்.
அளவுக்கு மிஞ்சிய தன்னல வேட்கைகளாலேயே எல்லாவிதமான மருட்டல் வாதங்களும் உருவெடுக்கின்றன. ‘இடது’ என்பது வரலாற்றில் ஏற்பட்டுவிட்ட ஒரு பிழை மட்டுமே, ஆனால் புதிய தாராளவாதத்தின் ‘தீவிர வலதோ’ முற்றிலும் ஒத்திசைவான ஒரு பார்வை என தன்முரணாக நிறுவ அந்த தன்னலக்காரர்கள் விரும்புகிறார்கள். இந்த மருட்டல்கள் எல்லாமிருந்தும் இடதினர் (மேலும் சரியாக சொன்னால் பலவித இடதுகள்) இன்றும் நிலவவே செய்கிறார்கள். அண்மைக் காலத்தில் அவர்கள் குறிப்பிடத்தக்க சில பின்னடைவுகளை அனுபவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஆதிக்க அமைப்புக்கு தொடர்ந்தும் ஒரு உறுத்தலாகவே அவர்கள் இருக்கிறார்கள். ‘புதிய தொழிலாளர்’ அமைப்பின் கடந்த ஆண்டு மாநாட்டில் ‘வலது – இடது பழமைவாதத்துக்கு எதிராக’ தான் போரிடப் போவதாக டோனி பிளேர் அறிவித்தார். இதன் பொருள் இடதுக்கு எதிராக மட்டுமே என்பது வெளிப்படை. பின்னது இடதுசாரியில் இருப்பதற்காக யாரும் அதை குற்றம் சாட்ட முடியாது – அதனு உறுப்பினர்கள் பலரும் இப்போது முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டாலும், தற்போதைய தலைமையால் அதை எளிதாக ஒழித்துவிட முடியவில்லை. இந்நிலையில் அரசியலில் இடதுகள், முன்னாள் சமூக சனநாயகக் கட்சிகளில் நாம் காண்பதைவிட மிக அதிக பரவலாக காணப்படுவது இயல்பே. இன்றும்கூட ‘இடது’ என்றால் ‘இருக்கிற நிலைக்கு மாற்றுகளை முன்வைப்போர்’ என்றே பொருளாகிறது. அதன் இன்றைய பிரிவுகளும் பிளவுகளும், அரசியல் நிகழ்முறையில் அதன் வெற்றிகரமான குறுக்கீட்டுக்கு ஒரு முகாமையான தடையாகவே உள்ளது.
முதல் அமைப்பின் நெருக்கடி ஆழமடைந்து வருவதானது, எதிர்காலத்தில் ஒரு பெரும் வரலாற்று அறைகூவலுடன் இடதுகளை எதிர்கொள்ளவே போகிறது: நமது சமூக அமைப்பின் அழிவுகரமான வளர்ச்சிப்போக்கிலிருந்து வெளியேறும் வழியை காட்ட முடிகிற ஒருங்கிணைந்த – முழுமையான ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவதே அந்த அறைகூவல். ஆனால் தான் இப்போதுள்ள அல்லது இனி அமைய வாய்ப்புள்ள எந்த ஒரு வடிவிலும் வலதுகள் அத்தகைய ஒரு திட்டத்தை ஒருபோதும் வழங்கப் போவதில்லை என்பதை மட்டும் முழு உறுதியுடன் சொல்ல முடியும்.