டாடாயிசம் எனும் கலைக்கொள்கையை அதுவரை நிலவிய கலை ஒருமை-கலை உன்னதம் என்பதற்கு எதிரான எதிர்கலை இயக்கம் எனக் கொள்வோமாயின், தர்க்கத்தை மறுத்தல், நிலவும் அனைத்தையும் கவிழ்த்தல் என அவநம்பிக்கையின் கலையாகவும் அது இருந்தது என்பதையும்அவதானிக்கவியலும். தர்க்க மறுப்பை, நிலவும் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை அங்கீகரித்துக் கொண்டு அறுபது எழுபதுகளில் மேற்கில் ஒரு எதிர்கலாச்சார இயக்கம்-வாழ்முறை தோன்றியது. ஸர்ரியலிசம் எனும் கலைக் கொள்கை அது. அடிமனப் பிரக்ஞை, பிறழ்ந்த பிரக்ஞை என பிராய்டோ மார்க்சிசத்தை ஏற்ற அவர்கள் நனவோடை என்பதை வெளிப்பாட்டு முறையாகவும் அடிமனப் பிரக்ஞை என்பதை நோக்கி போதையையும் போதைப் பொருள் பாவனையையும் கைக் கொண்டனர். ஸர்ரியலிசத்தை புரட்சிகரக் கலை என்றனர்.
ஆப்ரிக்க கியூபிசத்தை மேற்கத்திய அழகியல் நேர்த்திக்கு எதிராக உருவச் சிதைப்பாக பிகாசோ முன்வைத்தார். போர் எதிர்ப்பு, இயந்திரவயமான ஐரோப்பிய வாழ்முறை, பொருள்வய சமூகத்தின் உயிர்ப்புநிலையற்ற வெற்றிடம் போன்றவற்றுக்கு எதிரான கலை முயற்சிகள் இவை. இந்தக் கலைகளின் லிபரல் வடிவ வாழ்முறையாக அறுபதுகளில் ஹிப்பிக் கலாச்சாரம் தோன்றுகிறது. அரசியலிலும் தோன்றுகிது. புதிய இடதுசாரி அரசியல் இத்தகையது. பீட்டில்ஸ் பாடல் குழு இத்தகையது. போர் எதிர்ப்பு, சுதந்திரக் காதல், மட்டற்ற நுகர்வு போன்றவற்றை இது கட்டவிழ்த்துவிட்டது. ஹிப்பிகளில் ஒரு பகுதியினர் தமது உயிர்ப்புநிலை வெற்றிடத்திற்கு கீழைத் தேய மதங்களை நாடினர். ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கம், ரஜ்னீஷ் இயக்கத்தின் பாலான மேற்கத்தியர்களின் ஈடுபாட்டிற்கு இதுவே காரணம்.
பீட்டில்ஸ் பாடகர் ஜார்ஜ் ஹாரிசன் ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கத்திற்குத் தனது சொத்தை எழுதி வைத்தார். வட்போர்ட் நகரிலுள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் பஞ்சகச்சம் கட்டிய உச்சிக் குடுமி வெள்ளைப் பிராமணர்கள் பகவான் கிருஷ்ணனை மறிக்கும் தடுப்புகளுக்கு அப்பால் பூஜை செய்வதை இன்றும் நாம் காணலாம். சாதிய இழிவு பற்றிய எந்தக் குற்ற உணர்வும் இவர்களிடம் இல்லை. சாதி ஒதுக்கம் இங்கு மறைமுகமாக உண்டு. இதே மண்ணில்தான் இன்று இனவாதச் சட்டத்தினுள் தீண்டாமையைக் கொணரப் போராடுபவர்களும் இருக்கிறார்கள்.
போதை,நனவோடை,சுதந்திரக் காதல், மட்டற்ற குடி, நுகர்வு, கீழை மதங்கள் என்பன வாழ்முறை-கலைக் கொள்கை எனும் அளவில் தமிழகத்திலும் நுழைகிறது. ஐரோப்பிய கலைக் கொள்கைகள், வாழ்முறைகள், தத்துவப் போக்குகள் தமிழிலும் வருகின்றன. ஏக்சிஸ்டெ;ன்ஷியலிசம், சர்ரியலிசம் என நூல்கள், கஞ்சா, பங்க்முடி, சுதந்திரக் காதல், கட்டற்ற பாலுறவு என்பன இங்கு வருகின்றன. ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்றவர்களை, பாரிசுக்குப் போ, ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், நாளை மற்றுமொரு நாளே நாவல்களை இந்தப் பின்னணியில் வைத்துப் பாருங்கள்.இன்னொரு புறம் காட் தட் பெய்ல்ட் நூலை வைத்துப் பேசிய சுந்தர ராமசாமி, தர்மு ஜீவராமு போன்றோரை அரசியல் ரீதியில் வைத்துப் புரிந்துகொள்வோம். இதே காலத்தில் எழுபதுகளில் உருவான இடதுசாரி விமர்சன மரபான நக்சலிச அரசியல் எழுச்சியையும். இந்த தமிழக கலை விமர்சனப் போக்குகளில் தலித்தியப் பார்வை உருவாகும் வரை சொற்களுக்குள் வராத ஒன்று சாதியம்.
மேற்கில் மாற்றுக் கலாச்சாரப் போக்காக உணரப்பட்ட ஹிப்பிகளின் கீழைத்தேய ‘கலகம்’ போன்றதுதான் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் போன்றவர்களின் கலைக் கொள்கையும் வாழ்முறையும். ஜெயகாந்தன் போதையைக் கொண்டாடினார். நிர்வாணமாயிருத்தலைக் கொண்டாடினார். பங்க்முடி வைத்துக் கொண்டார். நீண்டமுடியும் கஞ்சா சிலும்பியும் எடுத்தெறிந்து பேசுதலும் அவரது அடையாளம். தனிமனித சுதந்திரத்தை அவரும் சுராவும் கொண்டாடினார்கள். ஜி.நாகராஜன் கட்டற்ற காமத்தைக் கொண்டாடினார். போதையைக் கொண்டாடினார்.
எந்தத் தனிமனிதரும் வாழ்வும் மரணமும் பற்றிப் பேசித் தீரவேண்டிய தற்கொலைக்கான சமூகப் பின்னணியை ஆத்மாநாமை முன்வைத்துப் பேசியது உண்டா? அரசியல் கவிதைக்கு முன்னோடி ஆத்மாநாம் எனில் எவ்வாறு,எதற்காக,எதை நோக்கி? அவர் செய்த ‘கலகம்’ என்ன? ஆத்மாநாமின் கோபிகிருஷ்ணனின் குமரகுரபரனின் அகால மரணத்திற்கான காரணங்கள் யாது? எழுத்தாளனும் ஒரு மனிதனே. எந்த மனிதனின் தற்கொலைக்கும் மனச்சிதைவுக்குமான காரணங்கள் போலவே அவனது மனச்சிதைவுக்கும் தற்கொலைக்குமான காரணங்கள் யாது? தனிநபர் வாழ்வு எனும் அளவில் அல்ல, ஒரு சமூகவியல் ஆய்வு எனும் அளவிலாவது தமிழில் இதுபற்றிப் பேசப்பட்டிருக்கிறதா?
தனது தாய் தன்னைக் கைவிட்டார் என்பதால் தனக்கு முன் தனது தாயைப் பற்றிப் பிரஸ்தாபிப்பதையே வெறுத்தான் ழான் ஜெனே. அந்த அநாதைதான் உலகின் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களின் ஆதரவாளனாக இருந்தான். பிளாக் பாந்தர், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ரெட் பிரிகேட் என அனைத்தையும் ஆதரித்தான்.
மாறாகத் தமிழில் என்ன நடந்தது? ஆத்மாநாமை பிரம்மராஜன் கடவுள் ஆக்கினார். ஜி.நாகராஜனின் வாழ்வைக் கொண்டாட்டத்திற்கு உரியதாக சி.மோகன் மாற்றினார். அவரது விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரத்தில் தமிழக ஓவிய எஸ்டாப்ளிஷ்மென்ட் சம்பந்தமான உக்கிரமான விமர்சனத்துக்கான வாய்ப்பை கலைஞனது மரணத்தை தெய்வீக நிலைக்கு உயர்த்துவதன் மூலமும் அவனைக் கடவுளாக ஆக்குவதன் மூலமும் தவிர்த்தார். கலைஞனின் வாழ்வம் மரணமும் பற்றி மது,கோழிக்கறி வறுவல், போதை போன்றவற்றுடன் நாவலில் சதா அலப்பிக் கொண்டிருப்பவர்கள் சி.மோகனும் அவரையொத்த தமிழக மத்தியதரவர்க்கப் படைப்பாளிகளும்தான்.
வறுமை, நிலவும் அமைப்பின் கொடூரம், போதை தரும் பிரதிநிலை, நிராகரணம் எது பற்றியும் அலசாமல் கலைஞனின் வீழ்ச்சியை, மனச் சிதைவை ஆன்மீகத்துடன் இணைத்துவிடுவது ஒரு தந்திரம். உடல்நலக் குறையுடன் இணைத்துவிடுவது இன்னொரு தந்திரம்.ஜெயமோகனின் பெற்றோரின் மரணம் குறித்த. மனுஷ்ய புத்திரனின் உடல்தனிமை குறித்த ஜெயமோகனின் விவரணைகள் ஒரு வகையான திசைதிருப்பல், அவலத்தை அழகியலாக்கம் செய்வதும் அழகியலாக்கத்தை ஆன்மீகம் நோக்கி நகர்த்துவதும் அவரது கலைப் பார்வை. நான் கடவுள் அகோரி ஒரு பாசிஸ்ட். போலவே ஜெயமோகனின் கலைக் கொள்கையும் பிறர் வெறுப்பு பாசிசம்தான்.