ஆங்கில மொழியின் மேன்மை, அங்கீகாரம் அல்லது அதிகாரம் குறித்து ஒரிரு மாதங்களில் மூன்று தருணங்களில் எதிர்கொள்ள முடிந்தது. ஆங்கில மொழியில் தமிழ் எழுத்துக்கள் வருவதிலும் ஆங்கிலம் பேசுவதால் வரும் அதிகாரம் குறித்ததுமான ஒரு பேராசை இவற்றில் தொனித்ததாக எனக்குத் தோன்றியதால் இக்குறிப்புகள். வேறுபட்ட பிரதேசங்களில் நிகழ்ந்து வரும் சமூக அதிகாரங்களை எதிர்த்துப் போராடுவதான தோரணையில் தமது மேன்மையை நிறுவிக் கொள்வதற்கு இந்த ஆங்கிலமோக வாதம் சமூகத்தின் ஒப்பீட்டளவிலான மேல்தட்டினருக்கு பயன்படுகிறது என்பதே எனது அவதானம்.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடர்பான பதிவுகளில் இதே விதமான ஆங்கில மேட்டிமை உணர்வு விரவியிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. பாண்டியன் திராவிட இயக்கமும் பார்ப்பனீயமும் தமிழக அரசியலும் பற்றி ஆங்கிலத்தில் குறிப்பாக தமிழரல்லாத கல்வித்துறைசார் படிப்பாளிகளுக்கு என எழுதியவர். அவர் தமிழில் எதும் எழுதியவரல்ல. அவரது மிக முக்கியமான நூலாகத் திரும்பத்திரும்பச் சொல்லப்படும் எம்.ஜி.ஆர்.குறித்த அவரது நூலைத் தமிழகத்தில் வாசித்தவர்கள் என மீறிமீறிப்போனால் 50 பேரை வேண்டுமானால் குறிப்பிடலாம்.
காலச்சுவடு இதழால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ச்சினிமா குறித்த அவரது கட்டுரை பார்வையனுபவத்தில் விளையாத வாசிப்பனுவத்தில் விளைந்த மிகமிகச் சாதாரணமானதொரு கட்டுரை. இருவர் படம் குறித்து வெங்கடேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து அவர் எகானமிக் அன்ட் பொலிடிகல் வீக்லியில் எழுதிய கட்டுரையும் வெளிப்படையான கலைஞர்.கருணாநிதி ஆதரவுக் கட்டுரை என்பதற்கு மேல் செல்லவில்லை.
எம்.ஜி.ஆர். பற்றிய அவரது நூலும் திமுக சார்புநிலையில் நின்று எழுதப்பட்ட நூல்தான். அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியிடப்படுவதன் மூலம் எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களால் கட்டப்படும் கறுப்புக் கண்ணாடி அரசியலுக்கு(எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இருவரும் கறுப்புக் கண்ணாடி போட்டவர்கள்தான்) எதிரான நூல் அது என்கிற பிரமைகளும் கலைந்து போகும்.
2009 மே முள்ளிவாய்க்கால் ஊழி வரையிலும் பாண்டியனைக் கொண்டுசெலுத்திய அரசியல் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு அரசியல்தான். தனது எழுத்துப் பணிக்காலம் முழுவதிலும் திமுகவுக்கு வழங்கிய இந்தச் சலுகையை அவர் தமிழகத்தில் மார்க்சிய இயக்கங்களுக்கு வழங்கவேயில்லை. பார்ப்பனியமும் பெரியாரியமும் குறித்த அவரது ஆங்கில எழுத்துக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த நிலையிலேயே இதனை எழுதுகிறேன்.
அவரது முக்கியமானதெனக் கருதப்படுகிற இரு நூல்களையாவது தமிழில் மொழிபெயர்த்துவிட்டு தமிழகத்தில் அவரது எழுத்துக்கள் குறித்த மதிப்பீடுகளை முன்வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும்.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குறித்த உயிர்எழுத்து இதழ் அஞ்சலிக் கட்டுரையில் ‘கல்விசார் அறிவாளிகள் வட்டத்தை விட்டால் விரிவான நண்பர் வட்டம் அவருக்கு இருந்ததில்லை’ என பாண்டியன் குறித்துக் குறிப்பிடும் எஸ்..வி.ராஜதுரை அதே கட்டுரையில் சொல்கிறார் : “பேராசிரியர் சி.டி.குரியனுக்குப் பிறகு தமிழகத்தில் மார்க்சியப் பொருளாதாரம் கற்பிக்க யாரும் இல்லாது போய்விட்டது. பாண்டியனோ வித்யாவோ இந்தக் குறையினைப் போக்க வேண்டும் என விரும்பினேன். இருவருமே இந்தக் கடமையினைச் செய்யவில்லை. எனது வளர்ப்பு மகன் ம.விஜயபாஸ்கர் இந்தத்திசையில் செல்லத் தொடங்கியுள்ளது ஓரளவு ஆறுதல் தருகின்றது“.
எஸ்.வி.ஆரின் சொற்களில் இங்கு தென்படுவதும் கல்வித்துறைசார் மேட்டிமை உணர்வும் ஆங்கில மேட்டிமை உணர்வும்தான். மூலதனத்தை மொழிபெயர்த்த தோழர் தியாகு, மார்க்சியப் பொருளாதாரம் பற்றி தமிழில் நூல் கொணர்ந்திருக்கிற வெங்கடேஷ் ஆர்த்ரேயா போன்றவர்கள் மார்க்சியப் பொருளாதாரம் கற்பிக்கத் தகுதியற்றவர்கள் என நான் நம்பவில்லை. கல்வித்துறைசார் வட்டாரத்திற்கு அப்பால் இருக்கிற இவர்கள் குறித்தும் தனது வளர்ப்பு மகனுக்கு அப்பால் சென்று எஸ்.வி.ராஜதுரை ஓரிரு சொல்லாவது தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்க முடியும்.
இறுதியாக, எம்.எஸ்.பாண்டியன் குறித்து அஞ்சலிக் கருத்தரங்கில் பேச ஆங்கிலத்தைத் தேர்ந்துகொள்ள கலையரசன் சொன்ன காரணம் பெரும்பாலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்யும் கருத்தரங்கிற்குப் பொருத்தமாக இருந்திருக்கலாம். சுப.குணராஜன் போன்ற திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கிற்கு வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த 500 பேருக்கும் முன்னால் அவர் பேசுவதற்கு ஆங்கிலத்தையே தேர்ந்து கொண்டதை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்?
ஆங்கில மொழி என்பது அதிகாரத்தைக் கவிழ்ப்பதற்கு பாவிக்கப்படுவதற்கு மாற்றாக அதன் பெயரில் இங்கு புதியதொரு அதிகாரவர்க்கம் உருவாகிவருவதற்குப் பாவிக்கப்படுவது போலத்தான் தோன்றுகிறது
புகலிட எழுத்தாளரொருவரது சிறுகதைகள் பிரபல ஆங்கிலப் பதிப்பகத்தின் வழி கின்டில் எடிசனில் வெளியானதையொட்டி அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டமான ஒரு வாதத்தை முன்னெடுத்தார்கள். குறிப்பிட்ட எழுத்தாளரது விமர்சகர்களை எல்லாம் அவரது இந்த முன்னேற்றம் வாயடைத்துவிட்டது, அவர்கள் நாணித் தலைகுனிய வேண்டும் என்பது ஈழத்து வாதம். இதைவிடவும் சிறுபிள்ளைத்தனமான அவமானகரமான வாதம் என எதுவும் இருக்க முடியாது.
குறிப்பிட்ட பதிப்பகம் அந்த எழுத்துக்களை வெளியிடத் தேர்ந்து கொண்டதற்கும், குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளர் அந்தத் தொகுதியை மொழிபெயர்க்கத் தேர்ந்து கொண்டதற்குமான அழகியல் அரசியல் மதிப்பீடுகள் இருக்கின்றன. இதுவன்றி அரசியல் இலக்கியமாக அறியப்பட்ட இந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் உலகில் எந்த மொழியில் வெளியானாலும் அதன் மீதான அசலான அழகியல் அரசியல் விமர்சன மதிப்பீடுகள் எவருக்கும் மாறப்போவதில்லை. மாற வேண்டிய அவசிமும் இல்லை.
ஏன் குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்துக்கள் மீது விமர்சனம் வைத்தவர்கள் நாண வேண்டும்?
ஆங்கிலத்தில் அவரது எழுத்துக்கள் அங்கீகாரம் பெற்று வந்துவிட்டதால் நாண வேண்டும். ஓரு நிலம்சார் மதிப்பீட்டுக்காக என எடுத்துக் கொண்டால பிரித்தானியாவில் அதிகம் விற்கும் ஆங்கில நாளேடு ஸன். தமிழகத்தில் தினந்தந்தி எனில் பிரித்தானியாவில் ஸன். இதனை நான் கொண்டாடுவதை விடவும் கார்டியன் பத்திரிக்கையைத்தான் கொண்டாடுவேன். இந்தியாவிலிருந்து வருகிற செமினார் இதழையும் பாப்லியோ இதழையும் தான் நான் கொண்டாடுவேன். சார்பு நிலைகளும் உள்ளடக்கமும் கருத்துலகமும் தான் ஒரு எழுத்தை மதிப்பிடுவதற்கான அளவு கோலேயல்லாது அது எந்த மொழியில் இருக்கிறது. வெளியாகிறது. அது எந்த மொழியில் பேசப்படுகிறது என்பது அல்ல.
ஈழம் மட்டுமல்ல காஷ்மிர், குர்திஸ், பாலஸ்தீனப் போராட்டங்கள் பயங்கரவாதம் என்றும் அதனை நடத்துபவர்கள் காட்டுமிராண்டிகள் எனவும் ஆங்கில இதழ்களான டெய்லி டெலிகிராப், டைம்ஸ் போன்றன எழுதுகின்றன. அமெரிக்க இஸ்ரேலியப் பதிப்பகங்கள் இவ்வாறான தொனியில் சிறுகதைத் தொகுப்புகளும் நாவல்களும் வெளியிடுகின்றன. எவ்வளவுதான் புகழ்வாய்ந்த பதிப்பகங்கள் வெளியிட்டாலும் உள்ளடக்கத்தைக் கவனம் கொண்டு அழகியல் அரசியல் அடிப்படைகளில் வாசித்தலும் அதன் மீதான அடிப்படையில் குறிப்பிட்ட படைப்பைப் பொறுத்து மதிப்பீடு மேற்கொள்ளுதலும்தான் சாத்தியம்.
பிரித்தானிய வலதுசாரி எழுத்தாளர் மார்டின் அமிசின் எழுத்துக்களை மதிப்பிடும்போதும், பிஜேபி ஆதரவாளரான வி.எஸ்.நைபாலை மதிப்பிடும்போதும், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்தபடியிருக்கும் எழுத்து மீதான மதிப்பீடும் இவை ஆங்கிலத்தில் வந்தாலும் எந்த மொழியில் வந்தாலும் ஒன்றுதான். ஓரு நாளும் இதனை எவரும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
சென்ற ஆண்டின் இறுதியில் தமிழ் சிங்கள மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மிரர்ட் இமேஜ் எனும் பெயரில் மகிந்த ராஜபக்சேவின் மனித உரிமை ஆலோசகரால் தொகுக்கப்பட்டது. இந்தத் தொகுப்பில் ஈழத்தமிழ்க் கவிதைகளைக் கணிசமாக மொழிபெயர்த்து வெளியிட்டவரான காலஞ்சென்ற செல்வா கனகநாயகம் ஏன் தான் இத்தொகுப்பில் ஈடுபாட்டுடன் செயல்பட்டேன் என்பதற்கான காரணமான ஒன்றைச் சொன்னார். சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் எடுத்துச் சொல்லப்படவில்லை என்பதும் அம்மக்களிடம் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்த புரிதலின்மைக்கான ஒரு காரணம் எனவும் சொன்னார்.
சிங்கள அரசியலும் அறிவுலகும் இனவாதத்தினால் பீடிக்கப்படுள்ளது. அதனது படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது மிக எளிய உண்மை. சிங்கள வெகுமக்களிடம் தமிழ் உணர்வுகளை எடுத்துச் செல்ல வேண்டுமானால் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து கொஞ்சநஞ்ச மனச்சாட்சியுள்ள சிங்களக் கலைஞர்களின் வழியில் அதனைச் சிங்கள வெகுமக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதற்காக இந்திய அரசு நிறுவனமான என்பிடியையோ அல்லது புத்தக வெளியீட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கை இந்திய தூதரகங்களையோ தேடிச் சென்றிருக்க வேண்டிய அவசியமேயில்லை. நடந்தது என்னவெனில் கொலையுண்டவர்களின் நியாயங்களை உலகின் முன் சொல்லக் கொலையாளிகளின் கைகளையே நம்பியிருந்ததுதான்.
அந்நத் தொகுப்பில் இடம்பெறக் கவிதைகள் கொடுத்தவர்களிடம் தமது கவிதைகள் ஆங்கிலத்தில் வருகிறது எனும் மேட்டிமை உணர்வு அல்லாமல் அவர்களைக் கொண்டு செலுத்திய உணர்வு வேறு எதுவாக இருக்க முடியும்?