வாழ்வும் நடைமுறையும்

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பலருக்குப் பற்பல மனவிசாரங்கள் உண்டு. அவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். லௌகீக வாழ்வில் தோற்றுப் போனார்கள். பிறரால் அங்கீரிக்கப்படவில்லை. தேர்ந்து கொண்ட கோட்பாட்டுக்கு ஒப்ப வாழவில்லை. பொதுச்சமூகத்திலிருந்து மறக்கப்பட்டவர்களாக ஆனவர்கள் அவர்கள். இந்த அவதானங்களையும் கழிவிரக்கங்களையும் அவர்களிடம் போய்ச் சொல்லிப் பார்த்திருந்தால் சொன்னவரைப் பரிவுடனும் கழிவிரக்கத்துடனும் பார்ப்பதோடு மனதுக்குள் அவர்கள் மெலிதாகப் புன்னகைத்துக் கொள்ளவும் செய்வார்கள்.

மார்க்ஸ் இறந்தபோது பெருங்கூட்டம் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அவரது காலத்தில் அவர் பெற்றிருக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவர் பெறவில்லை. அவர் வறுமையில் வாழ்ந்து மரணமுற்றார்;. அவர் வாழ்ந்த விதமும் அவரது கனவுகளும் குறித்து அவரிடம் எந்த முறைப்பாடுகளும் இல்லை. எதிர்கால மானுடனின் வாழ்வு குறித்த கனவுகளை எழுதுவதிலேயே தம் காலத்தின் முழுமையை எய்தியவர் அவர். இத்தகைய வாழ்வு குறித்த முழுமையான பிரக்ஞை அவரிடம் இருந்தது.

வால்ட்டர் பெஞ்ஜமினின் எதிர்முறை இயங்கியலைப் பாருங்கள். நம்பிக்கைகள் முற்றிலும் அழிந்த காலத்தில் அவர் வாழ்ந்தார். சதா நம்பிக்கையீனம் குறித்துப் பேசியவர் எதிர்மறையில் நம்பிக்கையான தமதல்லாத எதிர்காலத்தைத் தானே அவாவினர்? மனிதனது ஆற்றலை, அவனது சுதந்திர உணர்வை இன்னின்ன வரையறைகளில் குறுக்க வேண்டாம் என்றுதானே எதிர்மனிதம் பேசியவர்கள் கருதிக்
கொண்டிருந்தார்கள்?

புரட்சியாளர்கள் குறித்து இன்னொரு அபத்தமான பார்வை உண்டு. கோட்பாட்டுக்கு அச்சரசுத்தமாக நேர்மையாக அவர்கள் வாழவில்லை. அதாவது கோட்பாடு சமம் நடைமுறை. இது மனிதனும் அவன் வாழ நேர்ந்த சூழலும் குறித்த கோட்பாட்டுப் பார்வையே அல்ல. மார்க்சியம் நடைமுறைத் தத்துவம் என்றால் என்ன? நடைமுறைக்கு உகந்த, சாத்தியமான, தர்க்கபூர்வமான ஒரு கனவை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த அது முயல்கிறது. எனில் தவறுகள் நேர்கிறதே? அவர்கள் தோற்றுப் போகிறார்களே? அநியாயமாகக் கொல்லப்படுகிறார்களே ஏன்?

கோட்பாடும் நடைமுறையும் ஒரு போதும் சமமாக இருப்பதில்லை. எப்போதும் இரண்டையும் சமனாக்கும் செயல்போக்கு என்பது இருக்கிறது. ஓருவர் அதற்குள் வாழ்ந்துதான் அதனைக் கடக்க வேண்டும். புரட்சியாளர்கள் குறித்து மதிப்பிடுவதற்கான பார்வை இந்தச் செயல்போக்கில் அவர்கள் இயேசுவைப் போல சிராய்த்துக் கொண்டார்களா, கலவியில் ஈடுபட்டார்களா, சிறுமையைக் கடந்தார்களா, துரோகத்தை இகழ்ந்தார்களா, தம்மைத்தாமே கருணையற்று மறுதளித்தார்களா, தாம் வாழ விரும்பிய வாழ்வைத் தம்மால் வாழ முடியவில்லையே எனும் குற்றவுணர்வுக்கு அவர்கள் ஆட்பட்டார்களா என்றெல்லாம் பார்ப்பதுதான் இவர்களை அணுகுவதற்கான சரியான பார்வையாக இருக்கும்.

இதுவன்றி மிகப் பாதுகாப்பாக ஆச்சாரமாக வாழ்ந்துகொண்டு தமது தனிவாழ்வை எப்போதும் புறமிருத்தி பிறர் வாழ்வுக்கும் கோட்பாட்டுக்கும் நூற்றியோரு சதம் சமன்பாட்டைக் காண்பது தூய புரட்சியாளர்களாக தமக்குத்தானே – தாம் ஒருவர் மட்டுமே புரட்சியாளர் என – ஒளிவட்டம் கட்டிக்கொள்கிற குறுஞ்சிந்தனையாகவே இருக்கும்..

தமது மனைவியைக் கொலை செய்ததாக பகாசுர வெகுஜன ஊடகங்களால் வசைபாடப்பட்ட லூயி அல்தூசர் வாழ்க்கை வரலாறு வெளியாகியிருக்கிறது. வாழ்நாளெல்லாம் வறுமையிலேயே கழிந்த கார்ல் மார்க்ஸ்-ஜென்னி-ஹெலன் டமூத் வாழ்வு குறித்து பற்பல வரலாற்று நூல்கள் இருக்கின்றன. தமது தலைமறைவு வாழ்வில் நேர்ந்த தமது உறவுக்கான பொறுப்பை மறந்தவர் என்று கருதப்படக் கூடிய ஜீவாவின் வாழ்வு எழுதப்பட்டிருக்கிறது. வெறித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இவர்களது வாழ்வைக் கொச்சைப்படுத்துபவர்கள் சுயசிந்தனை உள்ளவர்களானால் இதனைப் படித்துவிட்டு தரவுகளுடன் இப்பிரச்சினை பற்றிப் பேசவேண்டும். இதுவே அறிவொழுக்கம்

Comments are closed.