நாடோடிக் கலைஞனின் முடிவுறாத பயணம்

வரலாறு இப்போது மௌனித்துவிட்டது. நம்மை நாமே அகழ்ந்துகொள்வதன் வழி விடைகாண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மௌனத்தில் வாழ்வென்பது சகிக்கவொணாதபடி அவ்வளவு கொடுமையானது.

தியோ ஆஞ்ஜலபெலோஸ் /சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போது

*

தியோ ஆஞ்ஜலபொலோசின் தி டிராவலிங் பிளேயர்ஸ் படத்தினைப் பார்த்தபோது அவர் மார்க்சியத்தினால் ஆதர்ஷம் பெற்ற இடதுசாரித் திரைப்படக் கலைஞன் என்பது எனக்குத் தெரியாது. அந்தத் திரைப்படத்தில் ஆஞ்ஜலபெலொஸ் நிலைநிறுத்திக் காட்டிய திரைப் பிம்பங்கள், அவரது திரைப்படச் சொல்நெறி, நீங்காத நினைவுத் தடங்களை, பதட்டங்களை என் மீது விட்டுச் சென்றது. இடையறாத ஓரு பத்துநிமிடத் தொடர்காட்சியில் காலத்தையும் வரலாற்றையும் நிலப்பரப்புக்களையும் இணைத்தபடி, அவைகளை நொடியில் தாண்டிச் செல்கிற, பிறிதொரு தருணத்தினுள் பிரவேசிக்கிற அற்புதத்தை பெலோஸ் அந்தத் திரைப்படத்தில் நிகழ்த்தியிருப்பார்.

இரண்டாவதாக எனக்குக் கிடைத்த அவருடைய படம் தி லேன்ட்ஸ்கேப் அன்ட் த மிஸ்ட். இப்போது நினைக்கும் தோறும் விம்மலும் வெடிப்புமாக என்னில் கண்ணீர் கரையுடைத்துப் பெருக்கும் தன்மைகொண்டது திரைப்படம் அது. அதற்கு இணையான காவிய சோகம் கொண்ட ஒரு உலகத் திரைப்படத்தை என்னால் சொல்ல முடியமானால், இந்திய மாகலைஞன் ரித்விக் கடக்கின் மேகா தாரா தாக்தான் அது. பனிமூட்டம் இரண்டு படங்களுடையதும் இறுதிக் காட்சியின் பின்னணி.

இந்த இரண்டு படங்களும் என்னளவில் ஒரு ஆத்மப் பயணத்தைத் தூண்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வரலாற்றின் மீது, தன்னைச் சுற்றிலுமான சூழலின் மீது தனிமனிதனது பாத்திரம் என்பது அற்பமானது எனச் சொன்ன அதே தியோ ஆஞ்ஜலபொலேஸ்தான், தனது எல்லாத் திரைப்படங்களிலும் வரலாற்றுக்கு எதிராகவும், சூழலை மீறியும் செயல்பட்ட மார்க்சீயர்களையும், மக்கள் திரளையும், குழந்தைகளையும், கலைஞர்களையும், அகதிகளையும் சித்தரித்துக் காட்டினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ பெலோசின் நான் சுட்டிய இரண்டு படங்களைக் கூட எளிதில் பெறுவதென்பது சாத்தியமில்லை. அவரது அனைத்துப் படங்களையும் தேடிய எனது பயணம் தொடர்ந்தது. ஜப்பானில் அவரது எடர்னிடி அன்ட டே கிடைத்தது. இங்கிலாந்தின் ஒரு பழைய வீடியோ கடையில் அவருடைய யுலிசிஸ் கேஸ்ஜ் கிடைத்தது. அப்படம் கிடைத்தபோது அநேகமாக இங்கிலாந்தில் வீடியோ பிளேயர் என்பது வழக்கொழிந்துபோய்விட்டிருந்தது. இதனைப் பார்ப்பதற்காகவே வீயோவைத் தூக்கிக் கொண்டு, இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரரி ஆர்ஸ் பிலிம் கிளப்புக்கு ஓடினேன்.

அவருடைய பிற படங்கள் எதுவுமே, அவருடைய டிரிலாஜியின் முதல் படமான த வீப்பிங் மெடோ(2004) டிவிடியாக வெளியாகும் வரை உலகில் எங்கும் கிடைக்கவில்லை.

இதற்காக காரணம் என்ன? தியோ ஆஞ்ஜலபெலோஸ் தன்னுடைய திரைப்படங்களை வீடியோவிலோ அல்லது டிவிடியிலோ வெளியாவதற்கான உரிமையை எவருக்கும் வழங்கவிரும்பவில்லை. தன்னுடைய படங்களின் திருத்தமான, துல்லியமான பதிப்புக்கள் திரைப்பட அரங்குகளில் மட்டுமே பார்க்கப்படுவதனை மட்டுமே அவர் விரும்பினார். சப்-டைட்டில்கள் என்பதும் அவருக்கு ஒப்புதலில்லாமல் இருந்தது. எதிர்பாராத விதமாக அவருடைய லேன்ட்ஸ்கேப் அன்ட மிஸ்ட் படமும், தி டிராவலிங் பிளேயர்சும் உலகின் தேர்ந்த திரைப்பட ரசிகர்களிடம் ஏற்படுத்திய அனுபவமானது அவரது திரைப்படங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் திரையிடப்பட வேண்டும் எனும் உத்வேகத்தை அவர்களுக்கு உருவாக்கியது.

இலண்டனில் கிரீக் கல்சுரல் சென்டரும் தொடர்ந்து பிரிட்டிஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டும் சப் டைட்டில்களுடன் அவரது ரெட்ர்ரோஸ் பெக்டிவ்வை ஏற்பாடு செய்தன. அவரது பெரும்பாலுமான திரைப்படங்கள் அப்போது ஐரோப்பாவை எட்டின. 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் அளித்துக் கௌரவித்தது.

புதிய தொழில்நுட்பம் கோரிய அழுத்தத்துக்கும் தனது ரசிகர்களின் அன்புக்கும் பணிந்து தனது படங்களை, தனது மேற்பார்வையின் கீழ் டிவிடியாக வெளியிடவும், அந்த வடிவம் தனக்குத் திருப்தியளித்தால் அதனைப் பரவலாக விநியோகிக்கவும் தியோ ஆஞ்ஜலபெலோஸ் உறுதியளித்தார். இங்கிலாந்தின் ஆர்டிபிசியல் ஐ நிறுவனம் ஐரோப்பாவில் அதற்கான ஒப்புதலைப் பெற்றது. அவருடைய முழுநீளப் படமான  த கன்ஸ்ட்ரக்ஸன் முதல் அவரது மரணமுறும் வரையிலான த டஸ்ட் ஆப் டைம் வரையிலான அவருடைய முழுமையான முழுநீளப் படங்கள் அனைத்தும், 13 படங்கள் கொண்ட மூன்று தொகுதிகளாக ஆரட்டிபிசியல் ஐ வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவில் கிடைக்கிற பிரதிகளைவிடவும் திருத்தமான சப் டைட்டில்கள் கொண்ட பிரதிகளாக ஆரட்டிபிசியல் ஐ பதிப்பு இருக்கிறது. இன்னும் தொகுக்கப்படாதவை அவருடைய ஆவணப்படங்கள் மட்டும்தான்.

அவர் தனது 76 ஆவது வயதில், 24 ஜனவரி 2012 இல் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் சாலை விபத்தில் மரணமுறுவதற்கு முன்னால், அவரது முழுமையான தொகுதி உலகெங்கிலும் வெளியாவதற்கு ஒப்புதளித்தது, அவரது முடிவறாத பயணம் குறித்த அவருடைய முன்னுணர்தலோ என்று கூடத் தோன்றுகிறது. அவரது திரைப்படங்களின் ஆத்மார்த்த ரசிகனாக இந்த நினைவு எனது நெஞ்சை அடைக்கிறது.

தியோ ஆஞ்ஜலபொலேஸ் ஏதென்ஸ் நகரத்தில் அவருடைய தி அதர் சீ எனும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ஐரோப்பிய நாடுகளில் இம்மாதிரி வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அணிய வேண்டிய பிரதிபலிக்கக் கூடிய அடர்ந்த மஞ்சள்நிற அங்கி அணியாமல், அனிச்சையாக அடர்சாலையொன்றினைக் கடந்து கொண்டிருந்த தியோ ஆஞ்ஜலபெலோசின் மீது, பணியில் இல்லாத ஒரு காவலரது மோட்டார் சைக்கிள் மோதியதன் விளைவாக, தலையில் பலத்த காயத்துக்கு உள்ளாகித் தூக்கிவீசப்பட்ட தியோ ஆஞ்ஜலபெலோஸ், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடுமையான காயங்களால் சிகிச்சை பயனளிக்காத நிலையில், இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார்.

தியோ ஆஞ்ஜலபெலோசின் திரைப்படங்களைப் பாரத்தவர்கள், அதுதான் அவரது அடையாளம் என உணரந்தவர்கள் அவர் மரணமுற்றார் என்று சொல்வது கூட ஒரு லௌகீகமான, நிரந்தரத்திற்குப் பொருத்தமற்ற ஒரு சொல் என்பதனை அறிவார்கள்.

27 ஏப்ரல் 1935 ஆம் ஆண்டு ஏதன்ஸ் நகரத்தில் பிறந்தார் தியோ ஆங்ஜலபொலோஸ்.  தந்தையான ஸ்பைரோஸ் ஒரு வணிகர். அதிகம் பேசாத அமைதியான அந்த மனிதரே தனது பாத்திரப் படைப்புக்களின் அமைதியான அதிகம் பேசாத தன்மைக்கு ஆதரஷ்மானது என்கிறார் ஆஞ்சலபெலோஸ். 1944 ஆம் ஆண்டு, அவருக்கு 9 வயதாக இருக்கும்போது, பாசிஸ்ட் ஜெர்மன் படை கிரீஸைக் கைப்பற்றியபோது அதனை எதிர்த்துப் போராடிய கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமது கட்சியை ஆதரிக்காத பெலொசின் தந்தையைக் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். கொல்லப்பட்டு சிதறிக் கிடந்த உடல்களின் மத்தியில் தானும் தனது தாயும் தனது தந்தையின் உடலைத் தேடித்திரிந்ததை, தனது தந்தை அதிர்ஷ்டவசமாகக் கொல்லப்படவில்லை என்பதனைப் பிற்பாடு நினைவுகூர்கிறார் பெலோஸ். இந்த நினைவுகளும், தன்னை விடவும் 13 வயது இளையவளான தனது தங்கை வவுலா மரணமுற்ற நினைவுகளும் தன்னை என்றென்றும் மாற்றியமைத்ததாக பெலோஸ் குறிப்பிடுகிறார்.

அனைவரையும் விடவும் குடும்பத்தைக் கட்டிக் காத்த, தம் அனைவரையும் பாதுகாத்த, தனது அன்னையான காத்ரினாவே தன் மீது அதிகம் பாதிப்புச் செலுத்தியவர் எனவும் அவர் சொல்கிறார்.

கிரீஸில் சட்டம் பயின்ற பெலொஸ், பாரிசுக்கு நகர்ந்து அமைப்பியல் மானுடவியலாளரான கிளாட் லெவி ஸ்ராசுடன் பயின்று, பிரெஞ்சு திரைப்படக் கல்லூரியில் சேர்கிறார். திரைப்படக் கல்லூரியில் நேர்ந்த ஆசிரியருடனான வாக்குவாதத்தையடுத்து திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட பெலோஸ், பிற்பாடு லாங்க்லாய்சினால் வழிநடத்தப்பட்ட பாரிஸ் சினிமாதெக்கில் உதவியாளராகப் பணிபுரியத் துவங்குகிறார். அங்குதான் அவர் ட்ரூபோ, கோதார்த் போன்றவர்களுடன் சேர்ந்து உலகின் உன்னதமான திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்துப் பயிலும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

ஆஞ்ஜலபெலோசின் அரசியல் பரிமாணம் என்பது, 1964 ஆம் ஆண்டு இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி பாணி பாசிஸ்ட் ஆட்சிக்கு எதிரான ஒரு இடதுசாரி ஊர்வலத்தில் காவல்துறையினரால் அவருக்குக் கைவிலங்கு பூட்டப்பட்டதிலிருந்து துவங்குகிறது. அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் ஜனநாயக சக்தி எனும் இடதுசாரி இதழில் சினிமா விமர்சகராகப் பணியாற்றுகிறார். அவரது முதல் சோதனைக் குறும்படமான த பிராட்காஸ்ட் 1968 இல் வெளியாகிறது. அவரது முதல் முழுநீளப்படமான த ரீ கன்ஸ்ஸ்ட்ரக்சன் 1970 ஆம் ஆண்டு வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் அன்றைய பாசிச காலகட்டத்ததைச் சித்தரித்த அரசியல் திரைப்படங்களாகவே உருவாகிறது. அவருடைய மூன்றாவது திரைப்படமான த 36 டேஸ், 1972 ஆம் அண்டு வெளியாகிறது. உலக சினிமா ரசிகர்களால் வாரியெடுத்துக் கொள்ளப்பட்ட அவரது அமரசிருஷ்டியான, அவரது நான்காவது படமான த டிராவலிங் பிளேயர்ஸ் 1975 ஆம் ஆண்டு வெளியானது.

உலகின் கொண்டாடப்படும் அமெரிக்க இடதுசாரித் திரை இதழ்களான த ஜம்ப் கட், தி சினி ஈஸ்ட்டே போன்ற இரு இதழ்களும் தி டிராவலிங் பிளேயர்ஸ் படத்தினைப் பற்றி மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது. ஆஞ்ஜல பெலோசின்  பதாகை உலகத் திரைவானில் எழுந்தது.

1966 துவக்கம் 2012 ஜனவரி 26 ஆம் திகதி அவர் மரணமுறும் வரையிலும் ஆஞ்சலபெலோஸ் உருவாக்கி நமக்குக் கிடைக்கும் படங்கள், அவரது குறும்படங்கள் 3, ஆவணப்படங்கள் இரண்டு, அவரது முழு நீளப் படங்கள் 14.  இதில் இறுதிப்படமான தி அதர் சீ படமும் அடங்குகிறது. அந்தப்படம் குறித்த செய்திகள் வேறு வேறு விதமாக வருகிறது.  அவர் நவீன கிரேக்கம் குறித்து உருவாக்க விரும்பிய டிராலிஜியின் மூன்றாவது படமாக தி அதர் சீயைக் குறிப்பிடுவாரும் உண்டு. அதற்கு மாறாக சோசலிசத்தின் வீழ்ச்சியின் பின் இருபதாம் நூற்றாண்டு குறித்ததாக அவர் உருவாக்க விரும்பியதுதான், த வீப்பிங் மெடோவில் துவங்கிய அவரது டிரிலாஜி என்றும், த டஸ்ட் ஆப் டைமை அடுத்து அவர் உருவாக்க விரும்பியிருந்தது அமெரிக்கக் கண்டம் பற்றிய ஒரு படம் என்றும் சொல்வாருமுண்டு. 2010-11 ஆம் ஆண்டுகளில் கிரேக்கத்தில் தோன்றிய மிகப்பெரும் தொழிலாளர் எழுச்சியை அடுத்து, கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடி பற்றிய படமெடுப்பதற்காக அமெரிக்கப் படத்திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, த அதர் சீ படமெடுப்பதாக பெலொஸ் அறிவித்தார் என்ற பதிவுகளும் உண்டு.

எவ்வாறாயினும், த அதர் சீ படம் பெலொஸ் மரணத்தின்போது என்ன நிலையில் இருந்தது, முடிக்கப் பெறாத நிலையில் இருந்ததா, முடிவுறும் நிலையில் இருந்ததா, முடிவு பெற்றதா என்பதை எவராலும் சொல்ல முடியவில்லை. ஓரு வகையில் இந்த முடிவுறா நிலை என்பது பெலோசின் வாழக்கைப் பார்வையாகவும், அவரது திரைப்படங்களின் முடிவுறாத தன்மையைக் கொண்டிருக்கிறது என அவதானிப்போரும் உண்டு.

இந்தப் பட்டியல் தவிர அவருடைய பார்மிங்க்ஸ் கிரேக்க ராக் பாடற்குழுவான பார்மிங்க்ஸ் பற்றிய 1965 ஆம் ஆண்டு  திரைப்படம் பணப்பாற்றாக் குறையினால் நிறைவடையாக படமாக இருக்கிறது. இதுவன்றி அறுபதுகளில் பாரிஸ் லாங்க்லாய்சின் சினிமாதெக்கில் பணியாற்றிய காலத்தில் 40-50 களின் ஹாலிவுட் கிரைம் படங்களை அடியொற்றி, பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு தான் எடுத்த கறுப்பு வெள்ளைக் குறும்படம் பணப்பற்றாக்குறையினால் லேப்பிலிருந்து எடுக்குமுடியாமலே போய், தொலைந்த போனது என்பதனை திரைப்பட விமர்சகர் ஆந்த்ரே ஹார்ட்டனுடனான ஒரு உரையாடலில் பதிவு செய்திருக்கிறார் பெலோஸ்.

காணாமல் போனவை, முடிவுறாதவை, தொகுக்கப்படாதவை என அனைத்தையும் விட்டுவிட்டாலும் கூட, இப்போது நமக்கு அவருடைய போற்றப்பட்ட படங்கள் உள்பட அவருடைய முழுநீளக் கதைப் படங்கள், அவரது இறுதிப் படமான த அதர் சீ தவிர, 13 திரைப்படங்கள் முழுமையாகக் கிடைக்கிறது.

இந்த 13 படங்களிலும் ஆஞ்சலபெலோசின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிற மனிதர்கள் யார்?

வேலை தேடி, வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்குள் நாடு விட்டு நாடு செல்லும் பொருளாதார அகதிகள், பாசிஸ்ட்டுகளால் கொல்லப்படும் இடதுசாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் உற்பவங்களின் இடையில் ஒரு புராதனக் கதையைக் காவிக் கொண்டு நாடெங்கும் அலையும் இடதுசாரி நாடோடிக் கலைஞர்கள், தகப்பன்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், கடத்தி விற்கப்படும் கிழக்கு ஐரோப்பியக் குழந்தைகள், சோசலிசக் கனவையும் தனது காணாது போன திரைப்படச் சுருளையும்தேடி அலையும் திரைப்படக் கலைஞன், கணவன்களால் கைவிடப்பட்ட மனைவியர், கணவனுக்குத் துரோகமிழைக்கும் மனைவியர், தனது கடந்த காலத்தில் வாழ்ந்து, தன்னை அழித்துக் கொள்ளும் இடதுசாரி எழுத்தாளன் என இடப்பெயர்வு, அகதி வாழ்வு, பாசிச ஒடுக்குமுறை, அதனை எதிர்த்த இடதுசாரிகளின் வீரஞ்செறிந்த போராட்டம், சோசலிசத்தின் வீழச்சியின் பின்னான விரக்தி, நம்பிக்கையீனம் போன்றனதான் தியோ ஆஞ்ஜலபெலோஸ் சஞ்சரிக்கும் படைப்புலகம்.

ஓரு வகையில் கடந்த நூற்றாண்டின் ஆரம்பமும் அடுத்த நாற்றாண்டின் ஆரம்பமும் என கம்யூனிசக் கனவின் தோற்றமும் தேய்வும் விரக்தியுமான மீள்நினைவுகள்தான் தியோ ஆஞ்ஜலபெலோசின் திரைப்படங்கள்.

அவருடைய தி யுலிசிஸ் கேஸ்ஜ் ஒரு உக்கிரமான காட்சியமைப்பைக் கொண்டிருக்கும். சோவியத் யூனியனது வீழச்சியின் பின், பெயர்க்கப்பட்ட லெனினது படுக்கை நிலையிலான கான்கிரீட் சிலையொன்று, விற்பனைச் சரக்காகி, ஒரு வணிகனுக்காக டான்யூப் நதியில் மிதந்து சென்று கொண்டிருக்கும். லேன்ட்ஸ்கேப் அன்ட் த மிஸ்ட்டில் ஜெர்மனிக்குள் தமது தகப்பனைத் தேடித்திரியும் குழந்தைகள்  பனிப்படலத்தைக் கடந்து ஓடி முதலில் தெரியும் மரத்தைக் கட்டிக் கொள்ளும், தன்னை விட்டுப்பிரிய விரும்பாத ஒரு அல்பேனிய அகதிச் சிறுவனுடன் முகம்குனிந்தபடி நடந்து வருவார் கனிவான மத்தியதர வயது மனிதன். இவையெல்லாம் பார்வையாளனை அசைத்து நெக்குருக்குவிடும் திரைப் பிம்பங்கள்.

மக்கள் திரளின் மீது காதல் கொண்ட கலைஞன் என்றால் அவன் தியோ ஆஞ்சிலபெலோஸ்தான். நீள் சட்டகத்தில், தொலைதூரக் காட்சியில், பனித்திரையில் நம்மை நோக்கி வரும் மக்கள் திரள் இல்லாத அவரது படங்களே இல்லை எனலாம். அவரது இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒரேயொரு பிம்பத்தையே திரும்பத் திரும்ப எனக்கு ஞாபகமூட்டுகிறது. காக்கையொன்று மின்கம்பத்திலோ அல்லது ஏதோ ஒரு மரத்திலோ ஏது காரணத்தாலோ சிக்கி மரணமுற்றுவிடும். பிரபஞ்சத்தையே மரணவீடாக்கிவிடும் துக்கத்துடன அழுதுகரைந்து அங்குமிங்கும் அலைந்து வானில் வட்டமிடும், தனது சொந்தத்துக்காகக் கரையும் காக்கைக்கூட்டத்தின் மானுடமே அந்தப்பிம்பம். அந்த கரைதல் தோழமையின் குறியீடு. கூட்டு ஒப்பாரியின் குறியீடு. கூட்டுக் கோபத்தின் குறியிடு. பிரபஞ்சத்தையே வெஞ்சினத்தில் குதறும், நிலைகுலைக்கும் எதிர்ப்பின் குறியீடு. த டிராவலிங் பிளேயர்ஸ், த வீப்பிங் மெடோ, ரீ கன்ஸ்ட்ரக்சன், த டஸ்ட் ஆப் டைம் என அவரது முதல் படம் முதல் நமக்குக் கிடைக்கும் இறுதிப்படம் வரையிலும் இந்த வகைக் காட்சிகளை பெலோசின் படங்களில் நாம் திரும்பத் திரும்பப் பார்க்க முடியும்.

பெலோஸ் எப்போதுமே காமெராவுக்கும் நமக்கும் இடையில் உணர்ச்சி விளையாட்டை நடத்துபவர் இல்லை. நிகழ்வின் வெறும் பார்வையாளர் நாம். நிகழ்வுக்குப் பிரக்ஞைநிலையிலுள்ள  அந்நியர் நாம். நிலைத்த சட்டகத்தின் ஒரு சின்ன அசைவு, காமெராவின் ஒரு சின்ன நகர்வு நமது உயிரையே எடுத்துவிடும். அவரது நெடுநேரம் நீளும் காட்சிகள் இத்தன்மை கொண்டன. இந்த அந்நியமாதலையும் துக்கத்தையும் கோபத்தையும் மௌனத்தில் எழுப்புகிறவர் தியோ ஆஞ்ஜல பெலோஸ். லேன்ஸ்ட் கேப் அன்ட் த மிஸ்ட் படத்தில் டிரக் டிரைவரால் வல்லுறவுக்குட்படுத்தப்படும் சிறுமி குறித்த காட்சி, எமது இரத்த நாளம் உறையும் கொடுங்குளிர் தரும் காட்சி. கள்ளமற்ற குழந்தமை என்பதனை இந்தக்கலைஞன் போல் எமக்குள் வலிதந்து படைத்துக் காட்டிய மேதை இனிதான் உலக சினிமாவில் பிறக்க வேண்டும். அவன் இனி தியோ ஆஞ்ஜலபெலோஸை மீறிப் பிறக்கப் போவதும் இல்லை.

தியோ ஆஞ்ஜலபெலோஸ் தமது மனைவி பெபோவையும் அவர்களது மூன்று புதல்வியரான  அனா, கேத்ரினா, எலினி போன்றோரை விட்டுச் சென்றிருக்கிறார். இந்த மூன்று புதல்வியரும் ஆஞ்ஜல பெலோசின் யுலிசிஸ் கேஸ்ஜ் திரைப்படத்தின் புத்தாண்டு விழாக் கொண்லீட்டக் காட்சியில் பங்கு பெறுகிறார்கள்.

தியோ ஆஞ்ஜலபெலோசின் எந்தத் தனித்த படக்காட்சியும்,  எதுவும் முடிவுற வேண்டிய இடத்தில் முடிவுறுவதில்லை. அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அவரது எந்தப்படமும் அதனது மரபார்ந்த அர்த்தத்தில் முடிவு பெறுவதில்லை. அவரது படங்கள் மனித வாழ்வின் முடிவுறாத பயணங்கள் பற்றியவை. அவரது வாழ்வும் முடிவுறாத பயணம்தான். பாதை கடக்கும்போது, திரைப்படப் படிப்பிடிப்பின் இடையில் இருக்கும்போது, அவரிடம் மரணம் வந்தது. அவர் மரணத்தின் இறுதித் தருவாயிலும், அவரது இறுதி நினைவாக பாதை கடத்தலும், அவரது இறுதித் திரைப்படத்தினைக் கடப்பதாகவும்தான் இருந்திருக்கும். தனது முடிவுறாத திரைப்படங்களுக்காக, அவர் தேடித் திரிந்த திரைப்படங்களுக்காக, நாடு நாடாக அலைந்த நாடோடிக் கலைஞன் அவன். அவனது மரணமும் கூட அவனது முடிவுறாத பயணத்தின் தொடர்சியாகவே இருந்துகொண்டிருக்கும்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.