பின்நவீனத்துவம் : வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கம் : பிரெடரிக் ஜேம்ஸன்

பிரெடரிக் ஜேம்ஸனுடன்
ஸ்டூவர்ட் ஹால்

*

ஸ்டூவர்ட் ஹால்: 1984 ஆம் ஆண்டு வெளியான ஜூலை – ஆகஸ்ட் 146 ஆம் இதழ் ‘நியூ லெப்ட் ரிவியூ’வில் இப்போது பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று குறிக்கபடுகிற விஷயம் குறித்து நீங்கள் குணரூபப்படுத்தினீர்கள். முதலாளித்துவத்திற்கும் கலாச்சாரத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினீர்கள். முதலாளித்துவத்துடன் சேர்ந்தது முதலாளித்துவக் கலாச்சாரம். லெனின் இதனை ஏகாதிபத்தியம் என்று குறிப்பிட்டார். நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறோம் என நீங்கள் சொன்னீர்கள். அதாவது, பிற்கால முதலாளித்துவ தர்க்கம்தான் இன்று மக்கள் பரவலாக உருவகப்படுத்திப் பார்க்கிற பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று நீங்கள் கருதினீர்கள். இப்போதும் அதுதான் உங்களது நிலைப்பாடாக இருக்கிறதா?

பிரெடரிக் ஜேம்ஸன்: முதலாளித்துவக் கலாச்சாரம் என்று பேசும்போது ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை யாதெனில், சகாப்த மாற்றம் யாதெனில், தான் உருவாக்கிய கலாச்சாரத்தை முதலாளித்துவம் தானே அழித்துவிட்டது என்பதுதான். ஒப்பீட்டளவில் நாம் இப்போது கொண்டிருப்பது அடையாளமற்ற, ஆனால் அமைப்புரீதியான கலாச்சாரமாகும். அதாவது, முன்னை நாளில் செய்தது போல ஆளும் வர்க்கங்களோடு தொடர்புபடுத்திப் பேசுவதென்பது மிகவும் பிரச்சினைக்குரியதாகி வருகிறது என்பதைச் சார்ந்து பிற கேள்விகளை எதிர்கொள்ளும்போது இந்தப் பிரச்சினைகள் வருகின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து இப்போதும் பேசுவது பயனுள்ளதாகும். ஆனால் நமது மறுப்புக்களையும் மனதில் வைத்துக் கொண்டுதான் இவைகள் பற்றிப் பேச வேண்டும்.

பின்நவீனத்துவம் குறித்துப் பேசும்போது, செவ்வியல் நவீனத்துவம் என்றால் என்ன, உயர் நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியிலும் பின்பாதியிலும் தொடங்கி இரண்டாம் உலக யுத்தக் காலகட்டம் வரை நிகழ்ந்த மேற்கத்திய நவீனமயமாக்கலுக்கான எதிர்வினையாகத்தான் நவீனத்துவம் தோன்றியது என்று ஆழச் சொல்ல விழைகிறேன்.

முழுமையடையாத நவீனமயமாக்கலுக்கு எதிராகத்தான் இந்த எதிர்வினை எழுந்தது. அதனுள் நவீனமயத்துக்கு உள்ளாகிய பகுதிகள், அதன் சக்திகள் போன்றன அப்போதும் பழைய வர்க்க நிலைமைகளின் பின்னணிக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தது. பழைய விவசாய உற்பத்தி முறையோடு ஐரோப்பாவில் சில பகுதிகளில் முடியாட்சிப் பகுதிகளும் இருந்து கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போர்தான் இறுதியாக இந்த விஷயத்தைத் தீர்த்தது.

நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால், செயல்போக்கில் நவீனத்துவத்தை முற்றுப்பெற வைத்த ஒரு நிலைமையாகும் அது. அதாவது, பழைய மிச்சசொச்சங்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்ட நிலைமையாகும்.

ஹால்: இவ்வாறு செயல்போக்கில் நவீனத்துவத்தை முழுமை பெறச் செய்ததன் ஒரு குறியீட்டு வடிவமாக, நவீனத்துவம் என்பதோடு முன்பு சேர்த்துப் பார்க்கப்பட்ட உயர்நவீனத்துவம், சிறப்புரிமை கொண்ட உயர்நவீனத்துவம் என்பனவெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கும் வெகுஜனக் கலாச்சாரத்துக்கும் நுகர்வுக்கும் உரியதாக இன்றைக்கு ஆகியிருப்பதைச் சொல்லலாமா?

ஜேம்ஸன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். கலாச்சாரத்தைக் கீழ்மட்ட மக்களுக்குக் கொணர்தல் என்று இதைச் சொல்வேன். முன்பு சாத்தியமில்லாதிருந்த கலாச்சாரத்தை அன்றாட வாழ்வில் தொடர்ந்த நிலையில் பரந்துபட்ட மக்கள் நுகர்தல் என்பது இப்போது சாத்தியமானது. பின்நவீனத்துவத்தின் மிக முக்கியமான பகுதி இதுதான். அதன் கூடார்த்த தன்மையில் புதைந்திருக்கும் அம்சம் இது. கலாச்சாரம் ஜனநாயகமயப்படுதலை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிற அம்சங்களை ஒருவர் மறுக்கவே, ஆட்சேபிக்கவே வேண்டும். பின்நவீன நிலை பற்றிப் பேசும்போது இந்த இரட்டை மனநிலையுடன்தான் நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

ஹால்: பின்நவீனத்துவம் அதிகரித்த அளவில் அமைப்புரீதியானது என்று நீங்கள் பார்க்கிறீர்கள். பழைய அர்த்தத்தில் இனியும் நாம் வர்க்கக் கலாச்சாரம் என்ற வரையறைக்குள் பார்க்க முடியுமா?

ஜேம்ஸன்: வெளியிலிருந்து பார்க்கும்போது இது பழைய அர்த்தத்தில் வர்க்கக் கலாச்சாரம் மட்டும்தான். மேற்கு அல்லாதவர்களின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது அப்படித்தான் அர்த்தம் பெறும். அப்புறம் வழக்கமாக நாம் உபயோகப்படுத்துகிற கலாச்சார ஏகாதிபத்தியம் போன்றவற்றையும் நினைத்துப் பார்க்கிறேன். இவை அச்சொட்டாக அங்கு பொருத்தமானது. செயலளவில் பின்நவீனத்துவம் என்பது இதற்குப் பொருத்தமான அர்த்தம் கொண்டதுதான். சாராம்சமாக வட அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்றுமதி செய்து பரப்பப்பட்டு விதைக்கப்பட்டதுதான் இந்நிலை. அடுத்த கண்ணோட்டத்திலிருந்து இதை நீங்கள் பார்த்தீர்களானால், உடனடியாக வர்க்கப் பிரச்சினையாக இல்லாவிட்டாலும் கூட நேரடியாக இது மேலாதிக்கம்தான்.

உள்ளிருந்து பார்க்கும்போது இந்த மேலாதிக்கம் பார்வைக்குத் தெரியாது. ஏனெனில், இதன் அமைப்பு அர்த்தம் என்னவெனில் இது எவர் ஒருவரது பிரதிநிதியாகவும் இல்லை. ஆதிக்கம் செலுத்தும் சக்தியன்று. நமக்கு மேல் இருந்து கொண்டு இதைத் திட்டமிட்டு நமக்கு எதிராகச் செய்கிறது என நாம் இனிச் சொல்ல முடியாது. இது அவர்களுக்கும் – ஆதிக்கவாதிகளுக்கும் – சேர்த்துத்தான் இப்படிச் செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு மனிதர்களுக்கு பின்நவீனத்துவம் ஏற்படுத்தியிருக்கும் சந்தோஷம் நடைமுறையில் இல்லாமல் இல்லை. இது ஒரு மிகப் பெரிய சமாச்சாரம். பழைய நாட்கள் போல கருத்தியல் கடப்பாடு எனும் வகையிலிருந்து இதைப் பார்க்க முடியாது.

ஹால்: நவீனத்துவம் என்பது குறிப்பிட்ட மறுசீரமைப்புக்கான எதிர்வினை என்று நீங்கள் சொன்னீர்கள். இரண்டாம் உலகப் போர் வரையிலான ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் மறுஉருவாக்கம் என்று சொன்னீர்கள். ஆனால் பின்நவீனத்துவத்தை ஒரு எதிர்வினை என்று பார்க்க முடியாதிருக்கிறது. ஏனெனில் விமர்சனரீதியில் அது தன்னை தூரப்படுத்திக் கொள்கிறது. எதிரொளி செய்து எதிர்த்து நிற்பதிலிருந்து சவாலாக இருப்பதிலிருந்து தூரப்படுத்திக் கொள்கிறது. நவீனத்துவம் போட்டியிட்டது. அதிர்ச்சி கொடுத்தது. கலகம் செய்தது. விக்டோரியன் சாம்ராஜ்ய மதிப்பீடுகள் மற்றும் எட்வர்டியன் முதலாளித்துவ ரசனைகளை சவாலுக்குள்ளாக்கியது. இப்போது பின்நவீனத்துவம் அதைச் செய்வதில்லை. அரசியல் பொருளாதார அமைப்பில் இது எதிரொளி செய்வதில்லை. இதிலிருந்து விமர்சன தூரத்தையும் கொண்டிருப்பதில்லை.

ஜேம்ஸன்: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நவீனத்துவம் கலையின் சுயாதீனத்தைக் கோரியது. மேதமை கோரிய கருத்தியலை முன்வைத்தது. இப்போதும் அது எதிரொளி செய்தபடி இருக்கிறது. அதன் செயலுக்கான சாத்தியமும் இருக்கிறது. பொருளாதாரம் நிலைப்படுத்தப்படாத போது விமர்சனக் கலாச்சார வடிவங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கே இன்னும் தனிநபர் தொழில்முனைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே அளவிலான பிரதிநிதித்துவ வாய்ப்பு கலாச்சார தளத்திலும் இருக்கிறது.

இப்போது அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. சமூக வகையிலும் பொருளாதார வகையிலும் நிஜமானதொரு கூட்டமைப்பு மக்களது வாழ்வில் இன்று உருவாகி வருகிற காலம் இது. பகாசுர பன்னாட்டு மூலதனக் கம்பெனிகள் ஒரு புறம்; அனைத்து எதிர்க்குழுக்களும் கூட்டமைப்பாகிற மறுபுறம். தனித்த கலகக்காரன் வட அமெரிக்க சமூகத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறான் என நீங்கள் பார்க்கத் தேவையில்லை. தனிமைப்படுத்தப்பட்ட கலகக்காரர்கள் என்பது இனி இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அமைப்பாக்கப்பட்டிருக்கிறோம். அவர்களிடம் தபால் முகவரிகள் இருக்கின்றன. தனிமையான கலகக்காரர்களின் சமூகம் அவர்களுக்கிடையே இருக்கிறது. கலாச்சார உற்பத்தி உணரப்படுவதில் இது வித்தியாசமானதாகும். அதோடு பொருளாதாரத்தினால் ரகசியமாக உருவாக்கப்படுகிற அமைப்புதான் அமைப்புரீதியிலான இந்த ஒப்பீட்டளவிலான அடையாளமின்மையை உருவாக்குகிறது. அதற்கு எதிராகச் செயல்படுவதையும் உருவாக்குகிறது.

ஹால்: இங்கே அமெரிக்கர், அமெரிக்கர் அல்லாதவர் என்கிற வித்தியாசம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. கூட்டாக்கப்படுவது மற்றும் பகுதியாக ஆகிவிடுதல் குறித்து நீங்கள் சொன்னீர்கள். அதாவது, துணைப்பகுதியாக ஆகிவிடுகிறதான பின்நவீனத்துவத்தின் குணம் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் பிரிட்டனைப் பொறுத்து நாங்கள் ஓரத்தில் இருப்பதால் எங்கள் மாற்றத்தை உணர்தல் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. நடைமுறையில் நாங்கள் ஒன்றை மறுக்க முடியாது. முழு பொருளாதார கலாச்சார அமைப்பும் அதிக அளவில் அமைப்புமயமாகி இருக்கிறது. நிர்வாகமயமாகி இருக்கிறது. அதிக அளவில் அறிவுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. நான் அனைவருமே ஏதோ ஒரு அளவில் இதனுடன் பொருத்தபட்டிருக்கிறோம். இந்த வடிவங்களில்தான் பிற்கால முதலாளித்துவத்தின் பன்னாட்டு நிறுவனக் கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது.

எதிர்வினையாக இந்த உற்பத்தி ஒரு புதிய வகையிலான தனிமனிதவாதத்தை உருவாக்குகிறது. வித்தியாசம் எனும் அளவில் ஒரு சாதாரண வகையிலான தொழில்முனைபவர் முதன்முதலாக உருவாகிறார். நிறுவனம் அவரை வெகு அருகாமையிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் அவர்கள் அதிக அளவில் மேலிருப்பவர்கள் மற்றது நவீன நுகர் வடிவங்களின் லயங்களை சீக்கிரமே பிடித்து விடுவார்கள். உடனடியாக தெருவில் என்ன போகிறதோ அதற்கு அவர்கள் எதிர்வினை செய்யத் தொடங்கி விடுவார்கள்.

ஜேம்ஸன்: நீங்கள் இசை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஹால்: இசை, மோஸ்தர், உடைகள் – ஆம். நிச்சயமாக இங்குதான் சாதாரண மக்கள் என்ன பெயர் என்று அறியாமலே பின்நவீனத்துவத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படித் திறந்த வெளிகளை உற்பத்தி செய்திருக்கிற இந்த அமைப்பு பற்றியோ அதில் எவ்வாறு தாங்கள் மாட்டப்பட்டிருக்கிறோம் என்பதையோ இவர்கள் அறிவதில்லை. இவர்கள் அனுபவிப்பது என்பது – கருத்தியல் பாஷையில் சொல்ல வேண்டுமானால் – சுதந்திரம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையில் சுதந்திரம் அல்ல. ஆனால், வித்தியாசமாய் இருக்கிறோம் என்கிற உணர்வை இது தருகிறது. இப்படித்தான் இந்த யுகத்தில் அதியுற்பத்தியும் வெகுஜனக் கலாச்சாரமும் தரப்படுத்துதலின் மூலம் அல்ல, மாறாக வித்தியாசங்களை, மற்றதாக இருப்பதை காட்டிக் கொள்வதன் மூலம் தன்னை நிலைநாட்டிக் கொள்கிறது. பரந்துபட்ட மக்களை நோக்கி இனி நிறுவனங்கள் விளம்பரம் செய்யப் போவதில்லை. புத்திசாலித்தனமாக விளம்பரம் இப்போது எவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்திடமிருந்து இன்னொரு மக்கள் கூட்டத்தை வித்தியாசப்படுத்துகிறோம் என்பதுதான் நுகர்கலாச்சார விளம்பரமாக இருக்கும். இவ்வகையில் கலாச்சாரப் பிளவை அது சுரண்டும்.

இதைச் சாதிப்பதற்கு முதலில் ஒரு மட்டத்திலான கும்பல் உருவாக்கத்தைச் செய்ய வேண்டும். அதாவது, கும்பலை உருவாக்கி வித்தியாசப்படுத்தலாகும். பத்தொன்பதாவது நூற்றாண்டு தனிமனிதவாதத்திலிருந்து இது வித்தியாசமானது. இவ்வகையில் எந்த அளவு தனிமனிதவாதத்திற்கு, வித்தியாசத்திற்குத் திரும்புகிறீர்களோ அந்த அளவு பின்நவீனத்துவத்தைத் தழுவுகிறீர்கள்; அதன் கூட்டுமயமாக்கலை, அடையாளமற்ற தன்மையை அமைப்பாக்கக் குணத்தைப் பெறுகிறீர்கள்.

ஜேம்ஸன்: நிச்சயமாக இது மாற்றத்தின் பகுதி. ஆனால் நாம் இந்த கும்பலாக்கத்தை ஞாபகம் கொள்ள வேண்டும். போர்டிஸமும் தரப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களும் தனிமனிதக் கலகத்துடன் சேர்ந்து நடந்தது. அதுதான் கலகத்தை உருவாக்கியது. அதுதான் பிற கருத்தியல்களுக்கும் வழிகோலியது. அதாவது, அசல்தன்மை போன்ற கருத்தியல்கள். நவீனத்துவத்தோடு நாம் நேர்மறையாக ஒப்புமைப்படுத்திக் கொண்டோம். நீங்கள் விளக்கியபடி பின்போர்டிஸ உற்பத்தி முறையானது வித்தியாசங்களுக்கான உற்பத்தி யந்திரமாக ஆகியிருக்கிறது. ஒரு வகையில் வட அமெரிக்காதான் இப்போது இந்த இயக்கத்துக்கான தூய இடமாக இருக்கிறது. ஏனெனில், அங்கு மரபு கொஞ்சமே இருக்கிறது. எதிர்ப்பும் கொஞ்சமே இருக்கிறது. அது போல அழிக்கப்பட்ட கடந்த காலமும் கொஞ்சமே இருக்கிறது. 1992க்குப் பிறகு நீங்கள் அதற்குள் இழுத்துக் கொள்ளப்படுவீர்கள்.

இந்த வித்தியாசம் எனும் கருத்தாக்கத்தில் ஒரு மொழியியல் பிரச்சினை இருக்கிறது. நிஜமான வித்தியாசங்கள் இருக்கிறபோது, இந்த வித்தியாசங்களை கருத்தாக்கமாக ஆக்குவது சாத்தியமில்லை. ஏகாதிபத்திய அமைப்பில் காலனியமயமாக்கப்பட்ட மக்கள் நிஜத்தில் நகர்ப்புற பிரபுக்களோடு ஒப்பிட புரட்சிகரமாக வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசங்களை நிலைநாட்டுவதில் எந்தவிதமான அரசியல் முக்கியத்துவம் பொதிந்த அர்த்தமும் இல்லை. வித்தியாசம் என்பது குறித்த அரசியல் கலாச்சாரக் கருத்தாக்கம் என்பது ஒரு மட்டத்தில் சமூக துணைக்குழுக்களுக்கிடையில் சமத்துவத்தையும் அடையாளத்தையும் வெற்றி கொள்வதில் அடிப்படை கொண்டதாகும். குறைந்த வித்தியாசங்கள் நிலவாத வரையிலும் இந்த நிலைமை என்பது சாத்தியமில்லை.

ஹால்: நாம் ஒரே தளத்தில் செயல்பட்டாலும் கூட இந்த வித்தியாசம் தொடர்பான மொழிப் பிரயோகம் அதிகரித்தபடி பொதுவாகப் புழங்குவதால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா, அதாவது, நாம் அதை சமமான அர்த்தத்தில் அல்லாது சமமான நிலையில் இல்லாமலிருந்து கொண்டு பாவிக்கிறோம் என்கிறீர்களா? சக்திகளின் சமநிலை என்பது ஒரே மாதிரி இல்லை. மூன்றாம் உலக நாடுகளிலும் லண்டன் அல்லது பாரிஸ் அல்லது பான் இவற்றுக்கிடையில் உறவு சமநிலை கொண்டதாக இல்லை. இனிமேல், அது எப்படியாவது இருந்திருந்தாலும் கூட, வேறு வேறு உலகத்தில் இல்லை. அதிகரித்தபடியில் உருவாகி வருகிற உலகக் கலாச்சாரத்தில் அங்கம்தான் அவைகளும்.

ஜேம்ஸன்: ஆமாம். ஆனால் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டாக உலக அளவிலான வித்தியாசங்களையும் ஒரு குறிப்பிட்ட தனித்த அமைப்புக்குள் குறிப்பாக தேசிய அரசு என்பதனுள் இருக்கும் வித்தியாசங்களையும் தனிமைப்படுத்திப் பார்க்க வேண்டும். கலாச்சார வாழ்க்கையிலும் சரி, பல்கலைக்கழக படிப்புகளிலும் சரி, அந்த பின்நவீனத்துவம் என்பது சமகாலத்தில் எழுகிறது என்ற பார்க்க எனக்கு உற்சாகமாக இருக்கிறது. நடைமுறையில் பின்நவீனத்துவம் என்பது ஒரே நேரத்தில் மேலெழுகிறது. அதாவது, பின்காலனித்துவ இலக்கியம் மற்றும் மூன்றாமுலக இலக்கியம் என்று நாம் சொல்கிற இந்த ஆய்வுகளுடன் சேர்ந்து எழுகிறது. மறுபடியும் இவை இரண்டும் உலகமயமான தரப்படுத்துதல் எனும் அடிப்படையில் பொருந்துகிறது. அந்த உலகமயமான தரப்படுத்துதல் என்பது நல்ல பக்கங்களையும் கெட்ட பக்கங்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருக்கிறது. என்னுடைய ஆச்சரியமெல்லாம், இந்த வித்தியாசப்படுத்தல் என்பதன் பெயரில் எத்தனை எத்தனை விதமான பிரமைகள் முன்வைக்கப்படுகின்றன என்பதுதான். இந்த அமைப்பின் தர்க்கமே வித்தியாசப்படுத்தலாக இருக்கும்போது அப்படி வித்தியாசப்படுத்துவதன் மூலம் அது தரப்படுத்துதலைத்தான் செய்கிறது. இப்படிப் பார்க்கிறபோது, பின்நவீனத்துவத்தின் முழு அளவிலான தர்க்கமும் இதுதான்: அடையாளத்தை வித்தியாசம் வகையில் பார்ப்பதற்கான ஒரு புதியவழி கிடைத்திருக்கிறது. பழைய முறைகளில் இவ்வாறாகச் சிந்திக்கவோ வெளிப்படுத்தவோ ஆன நிலைமை இல்லாது இருந்திருக்கிறோம்.

ஹால்: பின்நவீனத்துவத்தோடு இணைந்த கலாச்சார ஜனநாயகமயமாக்கல் என்பது நல்லதுடனும் கெட்டதுடனும் இணைந்திருக்கிறது என்று நீங்கள் முன்பு சொன்னீர்கள். இப்போது அதையே உலகமயமான தரப்படுத்தலுக்கும் பொருத்திச் சொல்கிறீர்கள். ஆனால் இதுதான் பின்நவீனத்துவ அரசியலின் பிரச்சினையாக இருக்கிறது, இல்லையா? அதாவது, கெட்டதுகள் நல்ல அம்சங்களை ஓரங்கட்டி விடுகின்றன, இல்லையா? இங்கே நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், பிற்கால முதலாளித்துவமானது தனது தர்க்கத்தின்படி தரப்படுத்தப்பட்ட வித்தியாசங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இது அதனது மேலாதிக்கத்தின் ஓர் அம்சமாக இருக்கிறது. அல்லது நீங்கள் முன்னே சொன்னபடி ஒரு நிஜமான வித்தியாசத்தை முன்வைத்திருக்கிறது எனும் அளவில், விளிம்புநிலை மக்கள் மற்றும் கீழ்நிலையிலுள்ளவர்களது கலாச்சாரத்துக்கு அதிகாரப் பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறதா? இந்த அமைப்பானது தனது தர்க்கத்தின்படி இந்த வித்தியாசங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது எனில், இப்போது வரலாற்றின் தர்க்கம் என்கிற மார்க்சிய அணுகுமுறை அதன் பல்வேறு வரலாற்று மாற்றங்களையும் தாண்டி ஒரு கட்டமாக இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆனால் உங்களுக்குத் தெரியும், இது வரலாற்றின் தர்க்கத்தை நிராகரித்த போக்கு என்று மறுபக்கம் பலர் சொல்கிறார்கள்; செவ்வியல் மார்க்சியம் என்கிற பெருங்கதையாடலின் முடிவு என்று சொல்கிறார்கள். இன்னும் நாம் இதே விளையாட்டுக் களத்தில்தான் இருக்கிறோமா?

ஜேம்ஸன்: நான் பேசுவதில் வருகிற பிரச்சினைகள் நான் கொண்டிருக்கும் படிநிலைகள் என்கிற அம்சத்திலிருந்து வருகின்றன என நினைக்கிறேன். அந்தப் படிநிலைகளை நான் ஆர்வத்துடன் பற்றியிருக்க விரும்புகிறேன். பிரச்சினையின் இன்னொரு அம்சம், கார்ல் மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கை முதற்கொண்டு சொல்லி வருகிற இயங்கியல் பற்றியதாகும். இது முழுமையாக எதிர்மறையானது. அதே அளவு முழுமையாக நேர்மறையானது. இதைப் புரிந்து கொள்வதற்கு இவை இரண்டையும் இணைத்துப் பார்த்துச் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது இரண்டையும் ஒரே வாக்கியத்தில் முன்வைத்துப் பேச வேண்டும். ஆனால் நம்மால் அப்படி முடியாது. ஆகவேதான் நல்ல தன்மைகளை விளக்க முன்போகிறோம்; கெட்ட தன்மைகளை நினைவுகூர பின்வருகிறோம். அரசியலில் நேர்மறையான அம்சம் என்னவென்றால், நீங்கள் சொன்னபடி, பல்வேறு கீழ்நிலைக் குழுக்கள் ஒரு மட்டம் வரையிலான ஒன்றிணைந்த இருத்தலை அடைந்திருக்கிறார்கள். இது முன் எப்போதும் இல்லாத ஒரு புதிய நிலையாகும். இந்த நிலை தொழிற்சாலைகளின் கலாச்சார பண்டமாக்கலுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. இந்நிலை ஒரு புதிய இணைச்சந்தையையும், அதற்காகப் புதிய பண்டங்களையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால் இதிலிருக்கிற முக்கியமான அம்சம் அந்தக் கலாச்சார மாத்திரைகள் அல்ல, மாறாக அவர்களது ஒன்றிணைவு என்பதுதான்.

ஹால்: ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் – கலாச்சார வித்தியாசம், சமூக இணைவு போன்றன – ஒன்றுக்கு எதிராக மற்றது என இயங்காதா? பெண்நிலைவாதம் என்பதைப் பாருங்கள், பெண்களின் இணைவாக்கம் என்ற ரீதியில் அது வெளிப்போந்தது. அவர்களது கூட்டான அனுபவம் அவர்களது விளிம்பநிலைத் தன்மை மற்றும் அவர்கள் சமூகத்தில் இரண்டாம்பட்சமாக இருந்தது போன்றவற்றிலிருந்துதான் அது வெளிப்போந்தது. ஆனால் மிகச் சீக்கிரமே பல்வேறு பிரச்சினைகளால் பெண்நிலைவாதம் ஊடறுத்துச் செல்லப்பட்டது. பெண்ணெனும் அனுபவம் ஒன்று மற்றதாக அவர்களுக்கிடையிலிருந்த பல்வேறு வித்தியாசங்கள் ஊடறுத்துச் சென்றன. இது அவர்களை ஒருவர் பிறிதொருவர் என்றாக்கியது.

இதே மாதிரித்தான் பிரதேசங்களிலும் உறவுகளை வைத்துப் பார்க்கிறபோது நிச்சயமாக உருவாகும். பிரித்தானியாவில் ஒரு காலத்தில் கறுப்பு என்கிற அம்சம் கலாச்சார வித்தியாசங்களையும் தாண்டி அவர்களை இணைக்கிற அம்சமாக இருந்தது. இப்போது கலாச்சார வித்தியாசங்கள் மறுபடியும் மேலெழுந்து கறுப்பு அரசியல் என்பதை மிகுந்த சிக்கலாக்கியிருக்கிறது. இடதுசாரிகளின் பிரதிநிதித்துவம் பற்றிய நமது உணர்தலானது எப்போதும் ஒன்றுபடுதல் என்கிறதன் மூலம்தான் அடிப்படை கொள்கிறது. ஒன்றுபடுதல் – தனித்த வகையில் கலகம் செய்தல் அல்ல, ஆனால் வெகு நிச்சயமாக மொத்தத்துவம் என்கிற அர்த்தத்தில்தான், ஒன்றுபட்ட இயக்கம் என்கிற அர்த்தத்தில்தான் – இந்த அம்சம் வித்தியாசம் என்கிற புதிய தர்க்கத்தின் மூலம் கீழ்மைப்படுத்தப்படுகிறது. இந்த வித்தியாசம்தான் இந்தப் பின்நவீனத்துவ உலகில் மேலாதிக்கம் பெற்றிருக்கிறது.

ஜேம்ஸன்: அரசியல் பற்றிய எனது உணர்தலானது பழைய மாதிரியைக் கொண்டிருப்பதாகத் தோன்றும். குழுக்களுக்கிடையில் அடிப்படையான ஒன்றுபடலுக்கான மறுஆக்கம் நிகழாமல் இறுதியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனது சொந்த உணர்தல் மிகுந்த அவநம்பிக்கை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியில் ஒன்றுபடுதல் எனும் அம்சத்தை வைத்துப் பார்க்கிறபோது, கலாச்சாரம் என்பது அரசியலுக்கான மாற்றுவழி அல்ல. மாறாக, கலாச்சாரம் அரசியலில் குறுக்கீடு செய்ய வேண்டும். பல்வேறு சிறு குழுக்கள் தமது தனிப்பட்ட வித்தியாசங்களுக்காக அதிகாரம் வாய்ந்த கலாச்சார பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்களானால், அப்புறம் பின்னால் ஒன்றுபடுதல் என்பதற்கான சாத்தியமே இல்லாது போய்விடும். அதிகமாக கலாச்சார அரசியல் பேசுவதை அவநம்பிக்கையுடன்தான் நான் பார்க்கிறேன்.

ஹால்: அவர்களது இணைவால் உருவாக்கபடுகிற அடிப்படைகளை வைத்துக் கொண்டு ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்குவது இன்றைய தினத்தில் சாத்தியமென்று நினைக்கிறீர்களா? நாம் விளக்குகிற இந்த சமூக வெளியில் அதிகரித்தபடியிலான செயல்வேகம் மிக்க அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் பழைய கட்சிகளது திட்டங்களில் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அந்தத் திட்டங்கள் முன்னாளைய அரசியல் கலாச்சார வெளியிலிருந்து நிரப்பப்பட்டவையாக இருக்கின்றன. அந்தத் திட்டங்கள் இன்று எழுந்து வருகிற பகை முரண்பாடுகள், கலாச்சாரங்கள், அவர்களது அனுபவங்கள் போன்றவற்றை எதிரொளிப்பவையாக இல்லை. இந்த சமூக சக்திகள் மிகவும் பிளவுண்டு இருக்கின்றன. அந்தப் பிளவுகளில் இருந்தும் இன்னும் சிறிய சிறிய பிளவுகள் உருவாகி இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடைவதற்கென பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இச்சூழலில் இவர்கள் அனைவரையும் எப்படியும் ஒன்றிணைக்கிற மாதிரியான ஒரு திட்டம் என்பது சாத்தியமில்லை. இந்தப் பின்நவீனத்துவ யுகத்தில் நாம் எதிர்கொள்கிற மேலாதிக்கம் பற்றிய பிரச்சினை இதுதான். அதே மாதிரி இந்தப் பிளவுண்ட அகச் சக்திகளுக்கிடையில் பரஸ்பரம் சந்தேகம் நிலவுகிறது. அவர்களை ஒன்றிணைக்கவும் இயங்க வைக்கவும் பயன்பட்ட அவர்களது பிரச்சினைகளை ஒரு பரந்துபட்ட திட்டத்துக்குள் கொண்டு வருவதற்கு அவர்கள் விரும்பவில்லை. இப்படிச் செய்தால் அவர்களை அந்த இயக்கம் உள்வாங்கிவிடும். அவர்களது பிரச்சினையை மறந்துவிடச் செய்துவிடும் என அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

ஜேம்ஸன்: இன்று எவரும் ஒரு முழுமையான திட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டு ஆரம்பிக்க முடியாது. ஆனால் அதுதான் குழுக்களுக்கு இடையிலான ஒன்றுபடுதலுக்கான முதல் படியாகும். அவர்கள் எவ்வளவுதான் வித்தியாசங்களைக் கொண்டிருப்பார்களாயினும், எவ்வளவுதான் சுரண்டலுக்கும் அநியாயத்திற்கும் ஆளாகி இருப்பார்களாயினும், அவர்கள் அனைவருமே ஒரு பொதுவான நிலையை எதிர்கொள்கிறார்கள். நாம் வழக்கமாச் சொல்கிற ஆளும் வர்க்கத்தினால் ஆதிக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லும் இந்த ஆளும் வர்க்கம் என்பதை அரசு என்று சொல்லாமல் இருப்பது நல்லது. இனி இதை கார்ப்பரேட் என்று சொல்வது – பன்னாட்டு மூலதனம் மற்றும் அதன் வியாபாரம் எனும் அர்த்தத்தில் – பொருத்தமான வார்த்தையாக இருக்கும். ஆனால் இந்த கார்ப்பரேட் என்பது பழைய அர்த்தத்தில் ஆளும் வர்க்கம் என்று சொல்ல முடியாது. இதன் காரணம் தனிநபர் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இவ்வாறுதான் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை என்பதை உருவாக்கத் தொடங்க வேண்டும்.

ஹால்: ஒடுக்குமுறையினை எதிர்த்துப் போராடத் தக்கதான கருவி என்னும் அளவில், ஆளும் வர்க்கம் அல்லது அரசு போன்ற ஒன்றிணைக்கும் பிரதிநிதித்துவ சக்தி இல்லாத நிலை சிக்கலைத் தோற்றுவிக்கிறது. இந்த கார்ப்பரேட் சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன எனக் காட்டுகிற இன்னும் காத்திரமான சித்திரத்தைத் தருமாறு இந்நிலை நம்மைக் கோருகிறது. இந்தக் கூடார்த்தம் மேன்மேலும் அதிகரித்தபடி மக்களைப் பலிகடா ஆக்கி வருகிறது. ஒரு குறிப்பிட்ட எதிரி இல்லாதது, ஒரு குறிப்பிட்ட அதிகார ஆதாரம் இல்லாதது, அதிகாரங்கள் பல வகைகளில் உருவாகிவிட்டது, எதிரி என்று நாம் வழக்கமாகச் சொல்கிற விஷயம் இந்தச் சமூக அமைப்பெங்கும் சிதறிக் கிடப்பது போன்ற நிலை எவ்வகையான ஒன்றுபட்ட எதிர்ப்பு அரசியலையும் கொண்டு வர முடியாத சிக்கலைத் தந்திருக்கிறது.

ஜேம்ஸன்: இதைப் போலவே மிகப் பெரும் தடைக்கல்லாக இருக்கிற விஷயம் என்னவென்றால், இந்த கார்ப்பரேட் என்பது இப்போது கலாச்சாரத்தில் ஒன்றுகலந்து இருக்கிறது. ஆனால், அங்கு இல்லாமல் இருந்து கொண்டிருக்கிற இந்தப் பிரதிநிதியைக் கண்டுபிடிப்பது கலாச்சாரத்தின் இடையிலேயே சென்று கண்டுபிடிப்பதுதான் என்று நம்மைக் கோருகிறது. இந்தப் பிரச்சினைதான் பின்நவீனத்துவம் மற்றும் அதன் விமர்சனப் பகுப்பாய்வு குறித்த பிரச்சினையில் நிஜமாக நாடகமாக்கித் தடையாக நிற்கிறது. இந்த பிரதிநிதித்துவ நிலையை அறிவதற்காக பின்நவீனத்துவத்தை ஒரு ஒன்றிணைந்த தர்க்கமாகக் கண்டறிய வேண்டும். இது கார்ப்பரேட் சக்திக்குள் மறைந்திருப்பதாக, சிதறுண்டு கிடப்பதாக இருக்கிறது. கார்ப்பரேட்டை எடுத்துக் கொண்டு ஒரு அரசியல் உருவாக்கப்பட வேண்டுமானால், பின்நவீனத்துவத்தையும் அதன் கார்ப்பரேட் கலாச்சாரத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதென்பது மிக மிகச் சிக்கலான விஷயம். ஆனால் பல பேருக்கு இது பரிசுத்தமாகவும் அதி எளிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றுகிறது. இப்படிப் பார்க்கும்போது பின்நவீனத்துவம் என்பது ஒரு பிற்போக்கான வடிவமாகவும் முதலாளித்துவக் கலாச்சாரமாகவும் தோன்றும். ஆனால் இது மேஜிக் போன்றது. மிகச் சிக்கலான இருமனப்போக்குள்ள பிரச்சினை ஆகும். இதற்குள் முற்றிலும் வேறான புதிய பிரச்சினைகள் இருக்கின்றன.

ஹால்: நாம் பேசிவந்த அனைத்தையும் இன்றைய கிழக்கு ஐரோப்பியப் பின்னணியில் பொருத்திப் பார்க்கிறேன். நீங்கள் விளக்க முனைகிற அமைப்பின் நிறைவாக்கமாக 1992க்குப் பின் நடந்த விஷயங்களை நீங்கள் பார்க்கலாம். 1989க்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் அந்தரப் பின்னலில் கொண்டு சேர்த்தது. இரண்டாம் உலகம் அந்தப் பின்னலில் சிக்கியது. மூன்றாம் உலகம் ஏற்கனவே அந்தப் பின்னலில் இருந்தது. பின்நவீனத்துவக் கலாச்சாரம் எங்கெங்கும் இருக்கிறது. மூலதனத்தின் புதிய வகையிலான கலாச்சார உலகமயமாக்கல் இவ்வாறாக உருவாகியது.

அது கிழக்கு ஐரோப்பாவுக்கும் வர வேண்டும். ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் அந்த அமைப்புகளுக்கு உள்ளேயே உருவான உடைப்பை எப்படி விளக்க முடியும்? அது அந்த எல்லைகளுக்குள்ளான தனித்த, குறிப்பான வரலாற்றுத் தேவைகளைக் கொண்டிருக்கும் அல்லவா? அதன் வரலாற்றில் இருந்தே அதன் ஆதாரங்கள் இருக்கும். அதாவது, அதிகரித்தபடியிலான முரண்பாடான ஒரு அம்சம் ஜனநாயகமயமாக்கல் நோக்கிய மாற்றத்தை உந்தித் தள்ளியதாக இருக்க வேண்டும். அதாவது, அதிகரித்தபடியிலான ஜனநாயக அவா, மேற்கில் இழந்துபட்ட அவா என்று அதைச் சொல்லலாம். ஜனநாயகம் என்பது மேற்கில் தாராளவாதத்தோடும், தாராளவாத முதலாளித்துவத்தோடும் இரண்டறக் கலக்கப்பட்டுவிட்டது. இது குறித்து நாம் மிகவும் சந்தோஷம் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். மேற்கில் இந்த நிலைமை மாற்றம் என்பதை விடவும், அப்படி அப்படியே பிரச்சினைகளை இருத்திக் கொள்தல் எனும் அளவிலேயே இருக்கிறது. ஆனால், கிழக்கில் அந்த மக்கள் ஜனநாயகம் என்பதற்காக நிஜத்தில் உற்சாகமாகச் செயல்பட்டார்கள்.

1989க்குப் பின் கிழக்கு ஐரோப்பாவில் நடந்த மாற்றங்களை சிவில் சமூகத்தை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் எனும் அவாவால் எழுந்தது என்று இன்றைய நிலையில் சொல்லலாம். அல்லது இந்த அவாவுக்கு இணையான வேறு வார்த்தைகளிலும் சொல்லலாம். இந்தப் பின்நவீனத்துவத்திலும், கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சமூகத்தை ஜனநாயகமயப்படுத்துதல் எனும் அம்சம் உள்ளுறைந்திருப்பதாக இருக்கிறது. இவ்வாறு 1989க்குப் பின் நடந்த மாற்றங்கள் தொடர்பாக உங்களது அவதானங்கள் ஏதேனும் உண்டா?

ஜேம்ஸன்: நான் இந்த ஜனநாயகமயமாதல் என்கிற வார்த்தையை உபயோகிப்பதற்குத் தயக்கம் காட்டுகிறேன். ஏனெனில், ஒரு வெற்றிகொள்ளல் இன்னும் நடைபெறவில்லை என்கிற மாதிரியான அர்த்தம் இதில் தொனிக்கிறது. இந்த ஜனநாயகமயமாதல் மேற்கிலும் நடக்கவில்லை. ஜனநாயகம் என்பது அதிகமும் அரசியலோடு சம்பந்தப்பட்டது. பொருளாதார ஜனநாயகமயமாக்கல், வெகுஜனக் கட்டுப்பாடு என்கிற வடிவங்கள் இந்த ஜனநாயகமயமாக்கலில் இருக்கிறது. இப்பிரச்சினைகளில் சில அம்சங்கள் மிகுந்த பிரச்சினைக்குரியன. உதாரணமாக, தொழிலாளர்களின் நிர்வாக அமைப்பை உருவாக்குவது என்கிற விஷயம். இது மேற்கில் சாதிக்கப்படவில்லை. ஆகவே, கலாச்சார ஜனநாயகமயமாக்கலையும் வெகுஜனக் கட்டுப்பாட்டையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. மேற்பரப்பிலான மாற்றங்களால் தீர்க்க முடியாத சில நிரந்தரமான அரசியல் சம்சயமுள்ள பிரச்சினைகள் இருக்கின்றன. 1984ல் நடந்த புரட்சிகளுடன் இதை ஒப்புநோக்க முடியாது. அவை பொருளாதார நோக்கம் இருந்த தேசியப் புரட்சிகளாக இருக்க, இவை தேசியப் புரட்சிகளாக மட்டுமே இருக்கின்றன.

என்னுடைய இன்னொரு அவதானம் என்னவென்றால், சமீபகாலத்தில் வெளிப்படையாகத் தோன்றத் துவங்கிய, கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக உருவாகி வந்த ஒரு புதிய உலக முறைமையின் வழித்தடத்திலான நிகழ்வுகள்தான் கிழக்கு ஐரோப்பிய நிகழ்வுகள். சோசலிசம் ஒரு தோல்வி என்று சொல்வது சரியல்ல. அந்த நாடுகளில் அது ஒரு வெற்றிதான். லெனினியத்தின் இறுதிக் குறிக்கோளாக இருந்த நவீனமயமாக்கல் இறுதிக் கட்டத்தை அது சாதிக்க முனையாதிருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. ஆனால், பொதுவான மார்க்சியக் கண்ணோட்டத்தில் அந்த லெனினிய நவீனமயமாக்கல் ஒரு கட்டமா என்ற கேள்வியில் வேண்டுமானால் ஒருவர் வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டிருக்கலாம். ஆனால், சோசலிசம் வெற்றிகரமாக இல்லாது போயிருந்தால் ஒரு புதிய கட்டம் உருவாகியிருக்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு குழுவான நாடுகள் சாராம்சத்தில் உலகப் பொருளாதாரச் சந்தைக்கு எதிராக அமர்த்தப்பட்டிருந்தன. தகுதி என்பது எப்போதுமே ஒரு அரசியல் பிரச்சினையாகும். ஆனால், உலக முதலாளித்துவம் தனது பழைய தோலை உதிர்த்துவிட்டுப் புதிய மேலதிகமான அதிகாரத்துடன் உலகமயமான அமைப்பாகத் தொடங்கிய உடனேயே இந்த நாடுகளின் தேசியத் திட்டங்களும் வாழ்க்கை முறைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பழைய முறைமைகளுக்கு மாற்றாக புதிய வகையில் மாற்றமடைகின்றன. இப்போதிருக்கிற உலகச் சந்தையில் அவர்கள் இடம்பெறுவதற்கு அவர்களது பணமும் தொழிற்சாலைகளும் இப்போது மதிப்பிழந்தவை. இதன் இயங்கியல் யாதெனில், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்தார்கள். ஏனெனில், அவர்கள் தங்களது அமைப்பில் சொந்தமாக வெற்றி பெற்றிருந்தார்கள். இன்னொரு பக்கம், அவர்கள் இன்னும் பரந்துபட்ட ஒரு பகுதியின் அங்கமாக ஆகவிருந்தார்கள். இந்த வகையில், பழைய வகையிலான சோசலிச, கம்யூனிச மாதிரிகளும் வடிவங்களும் பொருத்தமற்றவை ஆகிவிட்டன.

ஹால்: நீங்கள் இங்கு முன்வைத்த பகுப்பாய்வுகள் பிற்கால முதலாளித்துவம் என்று நீங்கள் விளக்குகிற மேற்கு ஐரோப்பிய மாற்றங்கள் மற்றும் முரண்பாடு மிக்க கிழக்கு ஐரோப்பிய மாற்றங்கள் பற்றியவை. மிகுந்த சர்ச்சைக்கு உரியவை. பல்வேறு குழப்பமான விஷயங்களை ஒரு புதிய முறையில் பகுப்பாய்வு செய்திருப்பவை. பின்நவீனத்துவத்திற்குப் பொருத்தமான சிக்கலான ஓர் எதிர்வினையை நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள். இதனடியில் சந்தேகமில்லாமல் செவ்வியல் மார்க்சிய தர்க்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வெளிப்படுகிறது. எவ்வாறு இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே சமயத்தில் கொண்டிருக்க முடியும்? அதாவது, வரலாறு குறித்த ஒரு குறிப்பிட்ட பெருங்கதையாடல் சந்தேகத்துக்கிடமின்றி – நாம் இதுவரையிலும் விளக்கிய எல்லாவற்றிலிருந்தும் பார்க்கையில் – பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு பக்கம். நாம் முன்பு விளக்கிய மாதிரி, விஷயங்களை விளக்க முடியாத அளவு சகல விஷயங்களும் முற்றிலும் மாறிப்போய்விட்டன் ஆகவே, இதை இனியும் நாம் காவிக் கொண்டிருக்க முடியாது என்று பலர் சொல்கின்ற நிலைமை மறுபக்கம்.

இந்தப் புதிய நிலைமைகளை இவ்வாறு அற்புதமான முறையிலும் காத்திரமான முறையிலும் எப்படி உங்களால் சமநிலையுடன் விளக்கிச் சொல்ல முடிகிறது? அதாவது, கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் கிரண்ட்ரிஸிலும் வைத்த அதே சொற்களினால் – முதலாளித்துவத்தின் புரட்சிகர இயல்பு, அதனை நிராகரிக்கிற தகைமையை அதனது தர்க்கமே கொண்டிருப்பது, தொழிலாளி வர்க்கம் போன்ற சொற்களினால் – அதே தர்க்க முறையை உபயோகப்படுத்தி, இந்த முற்றிலும் புதியதான விஷயத்தை விளக்க எவ்வாறு உங்களால் சமநிலையுடன் சாத்தியமாகிறது?

ஜேம்ஸன்: சொந்த நம்பிக்கை அல்லது கட்டுப்பாடு என்ற அளவில் ஒரு மதத்தின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை மாதிரி இதனை விளக்க முடியாது. ஆனால், இதில் உள்ளுறைந்திருக்கிற கூறுகள் எவையெனில், முழுமையான கட்டுப்பாட்டுடன் அதன் செவ்வியல் அர்த்தத்தில் நிச்சயமாக இன்னும் இது முதலாளித்துவம் என்பதுதான் முக்கியம். பின்நவீனத்துவம் என்பது இந்தக் கடுமையான இரட்டை நிலையைக் கொண்டிருக்கிறது. நீங்கள் முதலாளித்துவம் வெற்றி பெற்றிருக்கிறது என்று நம்புவீர்கள். சந்தை ஒரு புறத்தில் இருக்கிறது. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள். எல்லோரும் தத்தமது வித்தியாசமான இசையை இசைக்கிறார்கள். ஆனால் மறுபுறத்தில், அதே அளவில் இந்த சமூகம் சொல்லொணாத துயரங்களை உருவாக்கியிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஆவதற்கு மாறாக, கெட்டழிந்து போய்க் கொண்டிருக்கிறது. வெகுஜனங்கள் சுபிட்சமடையவில்லை. ஆனால், நாம் அறிவோம், இவை இரண்டுமே உண்மை. ஆனால், இவை ஒன்றுக்கொன்று பொருந்தி வருபவை அல்ல என்பதை நாம் அறிவோம்.

ஹால்: சமூக உறவுகள் நிலைகுலைந்து போய்விட்டன.

ஜேம்ஸன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். உலகச் சொத்துடைமையும், உலக அளவிலான குடியேற்றங்களும் சமவேளையில் உண்மையாய் இருக்கிறது. ஆனால், நாம் இவை இரண்டையும் ஒரே இடத்தில் வைக்க முடியாது. பெருங்கதையாடல் எனும் அளவில் மார்க்சியம் இடைவெளியை நிரப்புகிறது. உயிரியல் தனிமனிதர்கள் எனும் அளவில் நம்முடைய சொந்த வாழ்க்கை வரலாற்றின் லயத்துக்கு இணைவாக இருப்பதில்லை. விசாலமான வரலாற்று இயக்கங்கள் எதிர்பாராமல் வருகின்றன. ஆனால் நிகழ்ந்த பிறகு, அது பரந்துபட்ட ஒரு அமைவினது விளைவு என்பது மறுபடியும் நமக்குப் புரிகிறது. முதலாளித்துவம் தொழிற்படுகிற வழியை அறியும்போது இது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

முதலாளித்துவத்தின் இந்தப் புதிய பின்நவீனத்துவ வடிவமானது தன்னப் பற்றிய புதிய வர்க்கத் தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், அது முழுமையாக இன்னும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில், உழைப்பு தன்னை உலகு தழுவிய அளவில் மறுகட்டமைப்பைச் செய்து கொள்ளவில்லை. ஆகவே வர்க்கம் என்ன என்பதிலும், வர்க்க உணர்வு என்ன என்பதிலும் ஒரு நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. பழைய அர்த்தத்தின்படி இடதுசாரிப் பிரதிநிதித்துவம் என்பது இங்கு இல்லை. ஆனால், மார்க்சியச் சொல்நெறி நமக்கு உறுதிப்படுத்துகிறது ஒரு வகைப் பிரதிநிதித்துவம் தன்னைத் தானே மறுகட்டமைத்துக் கொள்ளும் என்று. இந்த அர்த்தத்தில்தான் நான் என்னை மார்க்சிய தர்க்கத்துக்குள் கடப்பாட்டுடன் இனங்கண்டு கொள்கிறேன்.

Comments are closed.