I
சினிமாவின் வரலாறு 123 ஆண்டுகளின் முன்பு தமது 10 குறும்படங்ளைத் திரையிட்ட பிரெஞ்சுக்காரர் லூமியர் சகோதரர்ளுடன் ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது. உலகைப் புரட்டிய முதன்மைத் தத்துவவாதியான கார்ல் மார்க்சின் வாழ்வு 200 ஆண்டுகளின் முன்பு துவங்கியது. மேற்கின் காலக்கணக்கின் துவக்கம் 2018 ஆண்டுகளின் முன்பு இயேசு கிறிஸ்துவின் பிறப்பினின்று துவங்குகிறது. இந்த மூன்றும் மேற்குலக நிகழ்வுகள் என்றாலும் இன்றும் பரந்துபட்டு உலகெங்கிலும் மிகப் பெரும் பாதிப்பை அனைத்து வகையிலும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவை இந்த மூன்று ஐரோப்பிய நிகழ்வுகள்தான். உலகில் அதிகம் விற்ற புத்தங்கங்கள் இரண்டில் ஒன்று ‘வேதாகமம்’ மற்றது கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’.
உலக சினிமாவின் கொடிமுடுகளாகத் துலங்கி வரும் கலைஞர்களில் பெரும்பாலுமானோர் மார்க்சின் ஆதர்சத்திற்கு உட்பட்டோர். கோட்பாடு, திரைநுட்பம், திரைக்கலைப் பிரகடனங்கள், காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் என மார்க்சியர்களின் உலகளாவிய திரைக்கலை சார் பங்களிப்பு அளப்பரியது. 1917 ஆம் ஆண்ட அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த லெனினது அமைச்சரவை திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தைத் துவங்கியது. 1959 கியூபப் புரட்சி வெற்றி பெற்றவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ அமைத்த கியூப அரசு திரைப்படக் கழகத்தைத் துவங்கியது. ‘எல்லாக் கலைகளையும் விட வெகுமக்ளுக்கு மிக அருகிலான கலை திரைப்படக் கலைதான்’ என்றார் ரஸ்யப் புரட்சியாளர் லெனின்.
உலக சினிமாவுக்கு ரஸ்யா வழங்கிய ஒரு திரைப்படக் கருத்தாக்கம் ‘மொன்டேஜ்’ அல்லது படத்தொகுப்பு என்பதாகும். இரண்டு பிம்பங்களை வேறு வேறு வகைகளில் தொகுக்கும்போது வெளிப்படுவது இருவேறுபட்ட கருத்தியல்கள் என்றார் ஐசன்ஸ்டீன். பிம்பங்களின் தொகுத்தலின் மூலம் வேகத்தை, உத்வேகத்தை, கிளர்ச்சியை ஊட்ட முடிவதுபோலவே சோர்வையும், இழப்புணர்வையும் உருவாக்க முடியும் என்பது மொன்டேஜ் எனும் கருத்தாக்கம். ஐசன்ஸ்டீனும் சிகா வெர்ட்டாவும் தாம் உருவாக்கிய திரைப்;படங்களில இதனைப் பிரயோகித்தார்கள.;
பிரான்சின் ரெனுவார் சகோதரர்கள் எடுத்த ‘எக்சிட்டிங் த பேக்டரி’, ‘அரைவல் ஆப் எ டிரெயின் அட் லா சியோடாட்’ என்கிற ஒரு நிமிடத்திற்கும் குறைவான இரு ஆவணப்படங்களும் வெறுமனே தகவலைப் பதிவு செய்யும் முயற்சிகள்தான். சோவியத் பட இயக்குனரான சிகோ வேர்ட்டோவின் ‘எ மேன் வித் எ மூவி காமெரா’ திரைப்படம் காமெரா எவ்வாறாக ஒரு மனிதனின் அவஸ்தைகளுக்கும், அவதானங்களுக்கும் ஒப்ப உணர்ச்சிகரமாகத் தன்னைச் சுற்றிலுமான உலகினதும் மனிதர்களதும் அசைவுகளைப் பார்க்கிறது என்பதைப் பதிவு செய்கிறது. அமெரிக்க மார்க்சியரான ஜான் ரீடின் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்கிற ரஸ்யப் புரட்சி புத்தகம் செர்ஜி ஐஸன்ஸ்டீனால் 1927 ஆம் ஆண்டு, புரட்சியின் பத்து ஆண்டுகளின் பின் ‘அக்டோபர்’ எனும் ஆவணப்படமாக ஆனது. அந்தப் பத்து ஆண்டுகளில் புரட்சி நடைபெற்ற தெருக்களும் கட்டிடங்களும் மாறாததாக இருந்ததாலும், அதில் நிஜத்தில் பங்குபற்றிய பலர் அக்டோபர் ஆவணப்படத்தில் பங்கு பெற்றதாலும் அப்படம் கூடுதலாக யதார்த்தத்தின் அருகில் வந்திருக்கிறது என்பதை ஆவணப்பட வரலாறு பதிவு செய்கிறது.
‘எ மேன் வித் எ மூவி காமரா’வைக் கொடுத்த சிகா வோர்ட்டாவும்,’ அக்டோபரை’க் கொடுத்த ஐஸன்ஸ்டீனும்தான் என்றென்றும் ஆவணப்பட வரலாற்றின் முன்னோடிகளாகின பாய்ச்சல்களை நிகழ்த்தினார்கள். பார்வையாளரிடம் விமர்சனபூர்வமான சிந்தனையைத் தூண்டியதிலும், உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தும், இதயத் துடிப்பின் வேகத்தை அதீதிப்படுத்துவதுமான ‘மோன்டேஜ்’ என்கிற படத்தொகுப்பை அவர்களே தமது படங்களில் முன்வைத்தார்கள். சிகா வேர்ட்டோவின் ‘எ மூவி வித் காமெரா’, காலத்தின் சுழற்சியை, மனித வாழ்வின் இடையறாத இயக்கத்தை வாகனங்களின் எதிரெதிர்திசை இயக்கமாக, குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து செல்லும் மனிதர்களின் வேகத்திலும் தத்துவார்த்தமாகத் தன்னெழுச்சியாகப் பதிவு செய்ததாக இருக்க, ஐஸன்ஸ்டீனின் படத் தொகுப்பு, யதார்த்த வாழ்வின் நாடகீயமான தருணங்களையும் கொண்;டதாக இருந்தது.
தொழிலாளர்களையும் மாஸ்க்கோ நகரத்தையும் துண்டிப்பதற்காக எழும் பாலத்தில் சிக்கித் தலை தொங்கி வீழும் குதிரையின் பிம்பம், செங்குத்தாக எழும் பாலத்தில் கீழ்நோக்கி நழுவும் நான்கு சக்கரத் தள்ளுவண்டி அதள பாதாளத்தில் வீழும் பதட்டம், மென்சுவிக்குகளின் கோரிக்கையைத் திரும்பத்; திரும்பத் தலையசைத்து மறுக்கும் போல்சுவிக் வீரன் என காவியப்பாங்கிலான ஐஸன்டீனின் படத்தொகுப்பைக் கொண்டிருந்தது ‘அக்டோபர்’ ஆவணப்படம். வேகமாகச் சுழலும் சைக்கிள் சக்கரங்கள், தொடர்ந்து நிகழும் அதிரடியான மனித நகர்வுகள், கப்பல் இயக்க இயந்திரத்தின் சுழற்சி என இந்த இரண்டு ஆவணப்படங்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்கு நம்மை ஏற்றி வைத்தன
‘தி மேன் வித் எ மூவி கேமரா’ தனிமனிதர்கள் எனும் மக்கள் கூட்டத்தின் செயல்பாடுகளை, சுழல்வட்டம் போல் துவக்கம், மெதுவான செயல், வேகம் அல்லது முடிவு எனச் செயல்படும் அவர்களது அன்றாடத்தை, ஜனனம், காதல் வாழ்வு, பிரிவு, மரணம் என்கிற காட்சிப்படுத்தலுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது. காமெரா இங்கு பிற மனிதரைக் கண்காணித்துச் சொல்லுகிறது. அவர்களது நடத்தைக்கு ஏற்ப உணர்ச்சிவசத்தை வெளியிடுகிறது. மனிதனது கண்களின் பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது. இதே விதமான உணர்ச்சியேற்றும் காமெராதான் ‘அக்டோபரி’லும் செயல்படுகிறது. கூட்டுப் பெருமிதம், இலட்சியம், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிப் பெருக்கு, போன்றவற்றையும் பிரம்மாண்டமான நகரச் சதுக்கங்களையும், வெளிச்சமும் நிழலும் படிய கிலியூட்டும் கற்சிலைகளையும் இப்படங்கள் காட்டுகின்றன. தலைமையேற்கும் தனிநபர்களின் உணர்ச்சியேற்றும் உரைகள் ‘அக்டோபரில்’ இருந்தாலும் அப்படத்தில் மாபெரும் மக்கள் சக்தியே தீர்மானமானதாகக் காட்சிகளில் இடம்பெறுகிறது.
இலாத்தீனமெரிக்காவில் இருந்து ஆக்டேவியோ ஜெட்டினோவும் பெர்னான்டோ சொலானாசும் ‘தி ஹவர் ஆப் த பர்னசஸ’ ஆவணப்படத்தை 1968 ஆம் ஆண்டு வெளியிடுகிறார்கள். சே குவேரா கொல்லப்பட்டுவிட்ட, அர்ஜன்டீனாவில் பெரோனிஸ்ட்டுகள் அமெரிக்க ஏகாதிபத்திய ஏவலாட்களால் தோற்கடிக்கப்பட்ட காலம். நவகாலனியம் இலத்தீனமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தையும் வெகுமக்களின் உளவியலையும் ஆட்சி செலுத்திய காலம். மக்களிடமிருந்து விலகிய நவகாலனிய அறிவுஜீகள் ஆட்சி செலுத்திய காலம். வறுமையும் சாவுமே நிரந்தர உண்மையாகிய காலம். போராடி மடிதலும் அந்த மரணத்தின் மூலம் வாழ்தலும் எனும் தேர்வு மட்டுமே அவர்களுக்கு மிஞ்சியிருக்கிறது, இலத்தீனமெரிக்க மக்கள் அனைவரும் ஆயுதமேந்த வேண்டும் என்பதை ‘தி ஹவர் ஆப் த பர்னசஸ்’ படம் சொல்லி முடிக்கிறது.
பத்திரிக்கைச் செய்திகள், கடைத் தெருக் காட்சிகள், அரசியல்வாதிகளின் உரைகள், போராளிகளின் மறம், வெகுமக்களின் சாவுகள் என அமெரிக்காவினாலும் ஐரோப்பிய நவகாலனிய ஆதிக்கத்தினாலும் சுரண்டப்படும் முழு இலத்தீனமெரிக்கக் கண்டம் பற்றி ஒரு இருண்ட சித்திரத்தைத்தரும் இப்படம், அறுதியில் ஆயுதமேந்திய புரட்சிகரப் போராட்டத்தைத் தவிர இலத்தினமெரிக்க மக்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை என்பதனை முன்வைக்கிறது. மரணத்தைத் தேர்ந்து கொள்வதன் மூலமே வாழ்வைத் தேர்ந்துகொள்ள முடியும் எனச் சொல்லும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் ஐந்து நிமிடங்களுக்கு பொலிவியாவில் சுட்டுக்கால்லப்பட்ட சே குவேராவின் உறைந்த, கண்கள் வெறித்த, முகத்தின் அருகாமைப் பிம்பம் நிலைத்திருக்கிறது.
II
இலத்தீனமெரிக்க இயக்குனர்களான ஆகஸ்டேர் ஜெட்டினொவும் ஃபெர்னான்டோ சொலானாசும் புரட்சிகர சினிமாவை கோட்பாட்டு வடிவுக்குள் கொணர்ந்து ‘மூன்றாவது சினிமா’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார்கள். ஆர்ஜன்டீன இயக்குனரான ஃபெர்னான்டோ சொலானஸ் மூன்றாவது சினிமாவைப் பின்வருமாறு வரையறுக்கிறார்.
முதல் சினிமா ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவக் கருத்துக்களை வெளியிடுகிறது. அதிமிகு ஏகபோக மூலதனம் பிரம்மாண்டமான சினிமாவுக்கு முதலீடு செய்கிறது. அது படைப்பாளி சினிமாவானாலும் சரி, செய்தி சொல்லும் சினிமாவானாலும் சரி. இந்த வர்க்கத்தின் நலன்களுக்காக சினிமாக் காட்சிரூபத்தை வெளியிடும், இந்த வர்க்கத்தின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதையும் முதல் சினிமா என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இரண்டாவது சினிமாவானது சமூகத்தின் மத்திய தரப் பகுதியினரின் அல்லது குட்டி முதலாளித்துவவாதிகளின் அபிலாசைகளை வெளியிடும் சினிமா என வரையறைப்படுத்துகிறோம். இரண்டாவது சினிமா அவநம்பிக்கை தருவதாகவும் பூடகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். படைப்பாளி சினிமா என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் இரண்டாவது சினிமா சார்ந்தவைதான். ஆனால் இரண்டாவது சினிமாவில் மோசமான சினிமாப் படைப்பாளிகளும் நல்ல சினிமாப் படைப்பாளிகளும் உண்டு மூன்றாவது சினிமாவிலும் மோசமான சினிமாப் படைப்பாளிகளும் நல்ல சினிமாப் படைப்பாளிகளு உண்டு.
மூன்றாவது சினிமா என்பது நம்மைப் பொறுத்து புதிய கலாச்சார மதிப்பீடுகளையும சமூக மாற்றத்தையும் வெளியிடும் சினிமாவாகும். பொதுவாகச் சொல்வதானால் மூன்றாவது சினிமா வரலாற்றையும் வரலாற்று யதார்த்தத்தையும் வெளியிடும் சினிமா ஆகும். மூன்றாவது சினிமா தேசீயக் கலாச்சாரத்தோடு பிணைப்புக் கொண்டது. உலகத்தை கருத்துருவமயப்படுத்துவது பற்றியதே மூன்றாவது சினிமா. குறிப்பிட்ட சினிமா வகைமாதிரியோ அல்லது விஸ்திரமான அரசியல் குணாம்சப்படுத்தல் மட்டுமோ மூன்hறவது சினிமா ஆகாது. மூன்றாவது சினிமா ஒரு சுதந்திரமான சிறந்தவகை சினிமா முடிவுறாதது. முழுமை பெறாதது, முடிந்து போகாதது. அது ஒரு ஆய்வு வகை. ஜனநாயகத் தன்மை கொண்டட தேசீயப்பண்பு கொண்ட வெகுஜனங்களின் சினிமா. மூன்றாவது சினிமா சோதனைபூர்வமான சினிமா. அது தனிமையிலிருந்து ஒருவரது இருப்பிடத்திலோ அல்லது ஒரு சினிமா லாபரட்டரியில் இருந்தோ உருவாக்கப்படுவதில்லை. மூன்றாவது சினிமா தொடப்பு கொள்வதன் மூலம் ஆய்வை மேற்கொள்கிறது. இப்போதைய தேவை யாதெனின்: மூன்றாவது சினிமா அதற்கென செயல்படும் வெளியைப் பெற வேண்டும். எங்கெங்கும் சாத்யமான அதன் எல்லா வடிவங்களிலும் செயல்படும் இடம் உருவாக்கப் பட வேண்டும். இங்கு நான் ஒன்றை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் ஒரு வகையில் 36 வகையான மூன்றாவது சினிமாக்கள் இருக்கின்றன என்பதுதான் அது.
இந்த வகையிலான புரட்சிகர சினிமாக்களை உலகெங்கிலும் மார்க்சியத்தினால் ஆதர்ஷம் பெற்ற திரைப்பட இயக்குனர்கள் உருவாக்கினார்கள். பிரான்சில் ழான் லுக் கோதார்த், இங்கிலாந்தில் கென்லொச், இத்தாலியில் ஜில்லோ பொன்டே கார்வோ, ஸ்பெயினில் பெர்னார்டோ பெர்ட்லுலாசி, ஜெர்மனியில் மார்கரட் வாக் ட்ரோட்டா, ஆப்ரிக்காவில் செம்பேன் ஒஸ்மான், ஹெய்லே கெரீமா, இலத்தீனமெரிக்காவில் கியூபரான தோமஸ் கித்தராஸ் அலியா, அர்ஜன்டீனரான ஃபெர்னான்டோ சொலானஸ், கிரேக்கத்தில் தியோ ஆஞ்ஜலபெலோஸ், துருக்கியில் இல்மஸ் குணே, இந்தியாவில் மேற்குவங்கத்தில் ரித்விக் கடக், நிமாய் கோஷ், மிருணாள் சென், கேரளத்தில் பி.ஏ.பேக்கர் போன்றவர்கள் இவ்வாறான கடப்பாடுள்ள மார்க்சிய இயக்குனர்கள். இதுவன்றி மார்க்சியத்தின் உலகப் பார்வையினால் உந்துதல் பெற்ற திரைக்கலைஞர்களும் தோன்றினர். இந்தியாவில் கோவிந்த் நிஹ்;லானி, சியாம் பெனிகல், அமெரிக்காவில் ஆலிவர் ஸ்டோன், கேரளத்தில் அடூர் கோபால கிருஷ்ணன், மகாராட்டிரத்தில் எம்.எஸ். சத்யூ, டென்மார்க்சில் லார்ஸ் வான் ட்ரையர் போன்ற இயக்குனர்கள் இவ்வாறு தோன்றினர்.
துருக்கியின் இல்மஸ் குணே தனது படங்களில் தானே நடித்து இயக்கினார். அவர் தனது வெகுமக்கள் படங்களில் ‘தோல்வியுறும் கதாநாயகனை’ முன்வைத்து மக்களைச் சிந்திக்கச் செய்தார். கலையும் பிரச்சாரமும் கலையின் மொழியும்; குறித்த திட்டவட்டமான பார்வையை இல்மஸ் குணே கொண்டிருந்தார். அவர் தனது கலை சார்ந்த கடப்பாட்டை பின்வருமாறு முன்வைக்கிறார் :
கலை அதனளவில் புரட்சி செய்யாது. உலகு பற்றி சரியான அரசியல் நிலைபாடுள்ள கலைஞன் தனது படைப்பு மூலம் பரந்துப்பட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும். அந்தக் கண்ணி அரசியல்தன்மை வாய்ந்ததாகலாம். அந்த அர்த்தத்தில் அரசியல் பிரச்சாரத்துக்கு அரசியல் எழுச்சிக்கு கலை உபயோகமாகும். அதன் வறட்டு அர்த்தத்தில் பிரச்சாரத்திற்கும் போராட்டத்துக்கும் பயன்படவேண்டுவது கலை என்று சொல்வதை நான் மறுதலிக்கிறேன். குலை தனக்கேயுரிய தனிமொழி கொண்டது. கலைக்கே உரிய மொழி. முழுமையாக முற்ற முழுதாக, அந்த மொழியை எவரும் மதிக்க வேண்டும். இதை நீங்கள் மதிக்கவில்லையானால் பிறகு அந்த ஆயுதம் உங்களைக் கொல்லும்படி அது திருப்பித்தாக்கும் வலுக்கொண்டது.
புரட்சிகர இயக்கத்தில் உங்கள் கலையின் பங்கு என்ன என்பது ஒரு கேள்வி. எனது நோக்கம் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது இதற்கு 1. அரசியல் .2.பொருளாதாரம். 3. கருத்துருவ கலாச்சார களம் என்று மூன்று உண்டு. கலாச்சார போராட்டம் என்பது கருத்துருவப் போராட்டமும்தான். ஒரு வகையில் அரசியல் போராட்டமும்தான். ஆனால் அரசியலின் எல்லாக் கூறுகளையும் அது கொண்டிருக்க வேண்டுமென பாசாங்கு செய்ய முடியாது. கலையின் பங்களிப்பை அரசியல் போராட்டம் நிறைவு செய்யவேண்டும். கலையின் வீச்சை, அதோடு சேர்ந்த அரசியல் வேலை நிறைவு செய்யவேண்டும். கலைப்படைப்புக்குள் அரசியல் போராட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் அனைத்து இலட்சியங்களையும் தேடிக் கொண்டிருப்பது சரியல்ல, கலைப்படைப்பு அரசியல் இயக்கத்தை எளிமையானதாக்கும். அரசியலின் முழு வேலையையும் கலைப்படைப்பின் மீது ஒருவர் சுமத்த முடியாது. கலைப்படைப்பு சில ஸ்தூலமான அரசியல் நடவடிக்கைகள் எழுத்துக்கள், விளக்கங்பளை வியாக்கியானங்கள் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்.
III
உலகப் புரட்சிகர சினிமாவின் கொடுமுடிகள் எனச் சில படங்கள் உண்டு. இதிலிருந்து ஒரு தேர்ந்தேடுத்த பட்டியலை நான் இங்கு தருகிறேன்.
ரஸ்யாவிலிருந்து ஐசன்ஸ்டீனின் ‘பேட்டல் ஷிப் போதம்கின்’ மற்றும் ‘அக்டோபர்’. சிகா வெர்ட்டேவின் ‘எ மேன் வித் எ மூவி காமெரா’, இத்தாலியின் பொன்டோ கார்வோ உருவாக்கிய ‘த பாட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’, பெர்னார்டோ பெர்ட்டுலூசி உருவாக்கிய ‘1900’, கிரேக்கத்திலிருந்து தியோ ஆஞ்ஜல பெலோஸ் உருவாக்கிய ‘த டிராவலிங் பிளேயர்ஸ்’, பிரான்சிலிருந்து கோதார்த்த உருவாக்கிய ‘லா சைனீஸ்’, ஜெர்மனியிலிருந்து மார்க்ரட் வான் ட்ரோட்டா உருவாக்கிய ‘ரோஸா லுக்சம்பர்க்’, கியூபாவிலிருந்து தோமஸ் கிதராஸ் உருவாக்கிய ‘த மெமரீஸ் ஆப் அன்டர் டெவலப்மென்ட்’, லத்தீனமெரிக்காவிலிருந்து ஜெட்டினோ மற்றும் சொலானஸ் உருவக்கிய ‘த ஹவர் ஆப் த பர்னசஸ்’, ஆப்ரிக்காவிலிருந்து செம்பென் ஒஸ்மான் உருவாக்கிய ‘க்சாலா’, ராவுல் பெக் உருவாக்கிய ‘லுமும்பா’ மற்றும் ‘யங் கார்ல் மார்க்ஸ்’, துருக்கியிலிருந்து இல்மஸ் குணே உருவாக்கிய ‘த வால்’ மற்றும் ‘யோல்’. இங்கிலாந்திலிருந்து கென்லோச் உருவாக்கிய ‘த லேன்ட் அன்ட் பிரீடம்’ மற்றும் ‘த வின்ட் தெட் ஷேக்கிங் பார்லி’. இந்தியாவில் ரித்விக் கடக் உருவாக்கிய ‘ஜூக்தி அவுர் கப்போ’, சீனாவிலிருந்து ஷாங் இமுவின் ‘ரெட் சொர்கம்’ மற்றும் ‘டு லிவ்’, மிருணாள் சென்னின் ‘பதாதிக்’, கௌதம் கோஷின் ‘மாபூமி’, நிஹ்லானியின் ‘மதர் ஆப் 1984’,; பி.ஏ பேக்கரின் ‘கபினி நதி சுவன்னப்போல்’, ஜான் ஆப்ரஹாமின் ‘அம்ம அறியான்’, சியாம் பெனிகலின் ‘நிஷாந்த்’ மற்றும் ‘ஆங்கூர்’, தமிழகத்திலிருந்து கோமல் சவாமிநாதனின ‘அனல்காற்று’ என இந்தப் பட்டியில் மிக விரிந்தது.
இதுவன்றி மார்க்சிய ஆசான்களான கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்க்கி, மாவோ, ஸ்டாலின் ,ரோஸா லுக்சம்பர்க் மற்றும் மாரக்சியக் கலைஞர்களான பிக்காசோ, நெருதா, ஃபிரைடா கலோ என இவர்கள் அனைவரும் குறித்த வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்கள் ஆகியிருக்கினறன.
மகத்தான அக்டோபர் புரட்சியில் வெளிப்பட்ட உழகை;கும் மக்களின் ஆற்றல்கள்,சீனாவின் கலாச்சாரப் புரட்சி அனுபவங்கள், பாசிசத்திற்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளின் வீரஞ்செறிந்த தியாகப் போராட்டங்கள், தொழிலாளி-விவசாயி-மாணவர்களின் ஒற்றுமை கட்டவிழத்துவிட்ட புதிய ஆற்றல்கள், புரட்சியின் பெண்களின் பங்களிப்புகள், காலனியாதிக்கத்திற்க எதிரான மூன்றாமுலக மக்களின் விரஞ்செறிந்த போராட்டங்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சிகள், மார்க்சிய ஆசான்களின், கலைஞர்களின் உன்னதமான மகோன்னத வாழ்வு என அத்தனையையும் சித்தரித்ததாக இந்தப் படங்கள் இருந்தன.
மார்க்சியத் திரைப்பட அழகியலின் இந்த வரலாற்றில் தொழிற்பட்ட இந்த நுண்ணுணர்வை பிரானசின் ழான் லுக் கோதார்த் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
லெனின் அல்லது சேகுவேராவின் ஒரு புகைப்படத்தையும் அவர்களது ஒரு வாக்கியத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். வாக்கியத்தை பத்துப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு பிம்பத்திற்கு ஒரு வார்த்தை. பிற்பாடு அதற்குப் பொருந்தும் மாதிரி அல்லது மாறுபடுகிற மாதிரி அர்த்தப் படுமாறு அந்தப் புகைப்படத்தைப் போடுங்கள். திரைப்படம் என்பது யதார்த்தம் அல்ல. அது வெறுமனே ஒரு பிரதிபலிப்பு. முதலாளித்துவத் திரைப்பட இயக்குனர்கள் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில் கவனம் கொள்கிறார்கள். நாம் அந்தப் பிரதிபலிப்பின் யதார்த்தம் குறித்துக் கவனம் குவிக்கிறோம்.
இன்று தொகையான படங்களை உருவாக்கி உலகின் புரட்சிகர சினிமாவின் கொடுமுடிகள் என நிலைத்த சில ஆளுமைகள் உண்டு. ஐசன்ஸ்டீன், தியோ ஆஞ்ஜல பெலோஸ், ழான் லுக் கோதார்த், கிதராஸ் அலியா, செம்பேன் ஒஸ்மான் போன்றவர்கள் இத்தகைய கலைஞர்கள். இந்தியாவில் அத்தகைய ஒரு ஆளுமை வங்கத்தின் புதல்வன் ரிதிவிக் கடக். தான் வாழ்ந்த சமூகத்தினோடு இடையறாது முரண்பட்டு, குடும்பத்தையும் உறவுகளையும் இழந்து, அசலான மூன்றாமுலக வெகுமக்கள் திரைக்கலை வடிவத்தைத் தேடி, அதில் சாதனைகளும் புரிந்து, தன் கலை வாழ்வு முழுவதிலும் குடித்துக் குடித்து மரணத்தைத் தழுவிய அந்தக் கலைஞனை இந்தியப் பிரிவினையும், இந்தியாவை அன்று எதிர்கொண்ட பாசிசமும் அவரது வாழ்நாள் முழுவதும் அவரையும் அவரது படைப்புக்களையும் அலைக்கழித்தன. 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் திகதி மரணமுற்ற மாபெரும் மார்க்சியக் கலைஞன் ரித்விக் கடக் சொல்லிச் சென்றது இன்றையை இந்திய நிலைமைக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறது. இது அவரது தீர்க்கதரிசனமான சொற்கள் :
எது சரியான பாதை? சமூகம் என்பது மிகவும் சிக்கலான ஒரு நிகழ்வு. அதை கூர்த்தமதியுடன் முன்கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். பல்வேறு அடுக்குகளிலான நிகழ்வுப் போக்குகள், அணுகுமுறைகள் தொடர்ந்து ஒன்றை ஒன்று ஊடாடிப் போகிறது. பிரச்சினை என்னவெனில் : எந்த ஒன்றை நாம் தேர்ந்து கொள்வது, எப்படி அதனுடன் நாம் தொடர்ந்து செல்வது என்பதுதான். இன்றைய தினத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான அடிப்படை வேர்கள், அந்த மாபெரும் துரோகத்தில் – தேச சுதந்திரம் என்று சொல்லப்படுவதில் – தான் இருக்கிறது. சமகாலத்தை நான் புதிய காலனியம் என்று மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன். என்னால் இரண்டு மாற்றுவழிகளைத்தான் காட்சிப்படுத்திப் பார்க்க முடிகிறது. நேரடியான பாசிசம் அல்லது அதனின்று எப்படியேனும் விலகி லெனினியக் கருத்தியலுக்குப் போவது. 1923-33 ஆம் ஆண்டுகளில் ஜெர்மானிய இளைஞர்களுக்கிடையில் இருந்த பதட்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியுமானால், இன்றைய நாளின் இளைஞர்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் வேகவேகமாக லும்பன்களாகி வருகிறார்கள். முழு அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. கடுமையான மாற்றமொன்று சீக்கிரமே வரப்போகிறதென்று நான் நம்புகிறேன்.