உடைபடும் மாஸ் கதாநாயக பிம்பமும், உத்தம வில்லனின் அரசியலும் :   லெட்சுமி நாராயணன் பி.

                

தமிழ் சினிமாவின்  கதாநாயகர்கள் மிகவும் விவரமானவர்கள் அதைவிட ஆபத்தானவர்கள். அதிலும் இந்த மாஸ் கதாநாயகர்கள் எனப்படும் வகையறாக்கள் மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் தொடர்ந்து தங்களை வழிபடும் பிம்பமாக எப்படி தகவமைத்துக் கொள்வது, மக்களை அவர்களை நோக்கி எவ்வாறு திசை மாற்றுவது, வீரியமான ஒரு பிரச்சனையோ, இல்லை வாழ்வாதாரப் போராட்டமோ நடந்து கொண்டிருக்கும் சூழலில் தனது பொய்பிம்ப சினிமா மூலம் அதை எப்படி மடைமாற்றி விடுவது என்ற வித்தையை சரிவர கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்களின் சினிமா பிம்பமும், நிஜ பிம்பமும் ஒன்றுக்கொன்று முரணானது. எதிரெதிர் திசையில் செல்லக்கூடியது.  மக்களின் நியாயத்திற்கும் குறிப்பாக நிஜத்திற்கும், அறத்திற்கும் அது எதிரானது.

மக்களின் உண்மையான தேவைகளை அறியாமல், அவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைப்பாடுகள், விவசாயிகளின் அன்றாட பிரச்சினை, தண்ணீர் தட்டுப்பாடு, சமூகத்தின் மீதான அக்கறைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், மத ரீதியிலான, சாதி ரீதியிலான அடக்குமுறைகள், அதனை முன்வைத்து நம் கண்முன்னே நடந்து போன ஆணவப் படுகொலைகள், இரத்தக்கறை படிந்த இனப்படுகொலைகள், அரசபயங்கவாதம், ஒற்றை பிம்பத்தை முன்னெடுத்து நாட்டின் பன்முகத்தை முற்றிலுமாய் சிதைக்க முயலும் இந்துத்துவா, அதனால் நிகழ்ந்து போன வன்முறைகள், பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான தொடர் பாலியல் வல்லுறவுகள், மக்களின் நியாயமான வாழ்வாதார சூழலியல் சார்ந்த போராட்டங்கள், அதிகாரவர்க்கம் மற்றும் கார்ப்பரேட் கூட்டம் மக்களுக்கு எதிராக செயல்படும் விதங்கள், ஓட்டரசியல் மூலம் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள் போன்றவைகளும் மறுபுறமாக இன்னொரு பக்கமாக தனிமனித அகம் சார்ந்த உளவியல் சிக்கல்கள், தனிமனிதன் பொதுமையான  சமூகத்தில் ஊடாடும் போது விளையும் நிகழ்வுகள் அவனது தனிமனித இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழல் உருவாகும் விதம், குடும்பத்திற்குள் நடக்கும் சிக்கலான அடக்குமுறைகள், வன்முறைகள், உறவுச் சிக்கல்கள், பெண்களுக்கு எதிரான உடலியல் சார்ந்த வன்முறைகள் அதற்கான காரணங்களை தீர்க்கமாக வெளிப்படையாக ஆராய்தல் போன்றவைகள் என எது குறித்தும் எந்தவித சரியான புரிதலும் இல்லாமல், இருந்தாலும் அதனை மையமாக வைத்து இவர்கள் படமெடுக்க மாட்டார்கள். அப்படியே பேசினாலும் அது தீர்க்கமாக, சமரசமற்று, இருபக்க சமநிலையுடன், விசாரணை ரீதியில் இருக்காது. கண் முன்னே நிகழ்ந்த நிகழ்வை மீட்டுருவாக்கம் செய்வார்கள் அவ்வளவே. அப்படி யதார்த்த தீவிரமான படங்களை இவர்கள் தந்திருந்தால் அது நல்ல கலைப்படைப்பாக மாறியிருக்கும். செய்யவில்லை. இங்கு பேசுவதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே அல்ல. உலகெங்கிலும் உருவான அதிஉன்னத கலைப்படைப்புகள் மக்களுக்காக பேசியிருக்கின்றன.  ஆனால் தமிழ் சினிமாவின் மாஸ் கதாநாயகர்கள் வணிக நோக்கத்தை மட்டுமே குறியாய் கொண்டவர்கள்.

நல்ல இயக்குநர்களிடம் இவர்கள் நல்ல படங்களை தந்ததே இல்லையா? என்ற கேள்வி எழுவது நியாயமே. தந்திருக்கிறார்கள். “பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா” போன்ற சினிமாக் கலையின் தீவிர இயக்குநர்கள் இங்கு இருந்திருக்கின்றனர். ஆனால் இயக்குநர் மைய சினிமாக்கள் தமிழில் விதிவிலக்குகள். அவைகளை தவிர்த்து பெரும்பாலான இவர்களின் சினிமாக்கள் நாயக, ஒற்றை மையத்தை தூக்கிப்பிடிக்கும் சினிமாக்களே! எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன் என இவர்களின் பட்டியல் இன்னும் நீளூம். அறிமுக காட்சியில் முகத்துக்கு நேரே பூட்ஸ் காலை திரை முழுக்க காட்டுவது, அதிரடியான சண்டைக்காட்சி, அதிரிபுதிரியான கலர் கலரான தனிப்பாடல், இவர்களுக்கென தனியே தீம் மீயூசிக்குகள், மற்ற உப நடிகர்களை விட தானே திரையை ஆக்கிரமித்துக் கொள்ளும் நரித்தந்திரம், பெண்களுக்கு கலாச்சார காவல் வகுப்பு எடுத்தல், கதாநாயகியுடன் பூங்காவில், வெளிநாடுகளில் ஆடிப்பாடுதல், குடும்ப சென்டிமெண்ட், வில்லன்களை போட்டு துவைத்து எடுப்பது, பஞ்ச் டயலாக்குகள், நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் என்கிற வழக்கமான டெம்ப்ளேட், கவர்ச்சி நடிகைகளை வைத்து அவருடன் ஒரு மசாலா குத்துப் பாடல், காதல் செய்கிறேன் என்ற பெயரில் பிடிக்கவில்லை என்று சொன்ன பெண்ணை துரத்தி, மிரட்டி, உருட்டி அடிபணிய வைத்து காதலில் விழவைத்து மரத்தினை சுத்திசுத்தி டூயட், நகைச்சுவை என்கிற பெயரில் அருவருப்பான கேடுகெட்ட வசனங்கள், காதுகள் தீயும் அளவுக்கு கதாநாயகனை வழிபடும் போற்றும் வசனங்கள், க்ராபிக்ஸ் வகையறாக்களை கொண்டு அற்புதத்தையும், அதிசயத்தையும் காட்டுவது, துப்பாக்கிகளால் சரவெடியாய் சுடுவது, அழகியல் மயக்கம், விண்ணை மிஞ்சும் செட்டுகள்,  வயித்துக்கு கலர் பெயின்ட்,  ராட்சத ரோபோ,  அதிநவீன தொழில்நுட்ப வித்தைகள், தீவிரவாதிகள் என்றாலே அது இஸ்லாமியர்கள், அவர்களை ஒழித்துக்கட்டும் நாயகனின் ஒரே பிரதான பணி, லஞ்சம், ஊழலை ஒழிக்க புறப்படும் நாயகன், ஏழைப்பங்காளன், ஒற்றை சாதிமைய சினிமாக்கள், சாதிய புராணம் பாடும் சினிமாக்கள், கறுப்பு பணத்தை ஒழிக்க சபதம் என துளியும் நம்பகத்தன்மை இல்லாத இவர்கள் செய்யும், செய்து வரும் விஷயங்களை எழுதவே பெரும் அயர்ச்சியாக இருக்கிறது.

சினிமா என்பது ஒப்பற்ற அரிய கலை. எளிதில் மக்களால், மக்களை அணுகக் கூடியது. இருள்வெளியில் திரையில் திரைப்படத்தினை பார்ப்பவனின் மனதும், உடலும் ஒன்றிப் போய் அது ஏற்படுத்தும் எதிர்வினை உடனடியானது. பொது மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்தக் கூடியது.  எனவே இந்த கலை எதனை நோக்கியதாக பயன்படுத்தியிருக்க வேண்டும்? இந்த மாஸ் கதாநாயகர்களின் சினிமாக்கள் தமிழ் சினிமாவுக்கு செய்தது என்ன? மக்களிடம் பேசியது என்ன? ஒரே பதில், அவர்களை பொறுத்தவரை சினிமா என்பது பெருத்த வணிக வியாபாரம்.  அது தனக்கு ஒரு பிரச்சார ஊடகம். அதன் மூலம் பணம் கொழிக்க வேண்டும் என்று தன் பிம்பத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவை ‘கலை’ என்ற சினிமா வகைமையில் இருந்து பிரித்து அதை வணிக சூழலில், கார்ப்பரேட்காரனின்  கைகளில் கொடுத்து வெறுமனே லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் அரசியலை வளர்த்துவிட்ட பெருமை இவர்களை மட்டுமே சாரும். தனக்கு கட் அவுட், பாலாபிஷேகம், ஆயிரத்தில் முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் இன்னபிற இத்யாதி, இத்யாதி. இன்னொன்று தமிழ் சினிமா ரசிகனின் ரசனை மாற்றத்தினை வளரவிடாமல் முற்றிலுமாய் மழுங்கடிக்கச் செய்ததும் இவர்களே. அதனால் தான் வெகுகாலமாய் சினிமாவும், அதனில் ஊடாக இயங்கும் அரசியலும் அவர்களுக்கு எளிதாகப் போகிறது. நாயக வழிபாட்டு படங்களின் வழியாலும், பெரும் பண முதலீடு செய்யும் ஆட்களாலும், அந்த பிம்பத்தை நம்பி வழிபடும் ரசிக கூட்டத்தாலும் அதை சாதித்துக் கொண்டு தன் முகமூடியை, பொய்யை, தன் உண்மையான சார்புநிலை என்ன? அது எதை நோக்கியது? என்பதையெல்லாம் தனது சினிமாவில் மறைத்தும், மறைமுகமாக அதற்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிருப்பதாக தனது படத்தின் மூலமாக மக்களை ஏமாற்றி வருவதும் தான் இவர்களின் பிரதான வேலை. திரையில் இருளில் இவர்கள் நடத்திக் காட்டிய, நடத்திக் காட்டும் ஜகதலபிரதாப வேலைகள், விட்டலாச்சார்யா செப்படி வித்தைகள் உண்மைக்கு முற்றிலும் புறம்பாகத்தான் இருக்கிறது.

இன்று தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஒவ்வொரு மனிதனின் கையிலும் விலையுயர்ந்த அலைபேசியும், உலக அளவில் இணையத்தின் வழியே தகவல்களை கொண்டு வந்து கொட்டும் நிலையும் சாத்தியமாகியிருக்கிறது. திரையரங்குகளில் தான் திரைப்படத்தினை பார்க்க முடியும் என்ன நிலை மாறியிருக்கிறது. திரையரங்குகள் பெரும்பாலும் கார்ப்பரேட் கைகளில் தான் உள்ளது. கிராமம் சார்ந்த நகரங்களில் கூட தனித்திரையரங்குகள் சகாப்தம் வேகமாக முடிவடைந்து புதிதாய் முளைக்கும் மல்டிப்ளக்ஸ் அரங்குகள் சமானிய திரைப்பட ரசிகனை திரையரங்கம் நோக்கி வருவதை யோசிக்க வைக்கிறது. இப்படியிருக்கும் போது ஒரு திரைப்படம் திரையரங்குக்கு வருவதுவரை இந்த மாஸ் நாயகர்களின் செல்வாக்கு இருக்கிறது. இவர்களுக்கு கோடிகளில் சம்பளம், படத்தின் பட்ஜெட்டுகள் கோடிகளில் தான். எத்தனையோ சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்கு வெளியீட்டு சிக்கல்களால் முடங்கியிருக்கிறது. வருகின்ற படங்கள் கூட சந்தித்த இடர்பாடுகள் அதிகம். இன்று திரைப்படப் பார்வையாளன்  மாறியிருக்கிறான், அவன் இவர்களின் படங்களை மட்டுமல்ல அனைத்து திரைப்படங்களையும் விசாரணை செய்கிறான். இது வளர வேண்டியது அவசியம். பெரிய நாயகர்களின் பெரிய பட்ஜெட் அரைவேக்காட்டு படங்கள் அதனாலே தோல்வி அடைகின்றன. அப்படி இவர்களின் படங்கள் தோற்கடிக்கப்படும் போது இவர்கள் அடுத்து தேர்ந்து கொள்ளும் இயக்குநர்கள் மாறத்துவங்கியிருக்கிறார்கள். தனது உண்மை நிலைபாட்டுக்கு எதிராக, தொடர்ந்து தன் மக்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் இன்று தீர்க்கமாய் ஒலிக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கை திரையில் முழுதுமாய் பேசப்பட வேண்டும் என ஒரு இயக்கமாக வீரியத்துடன் பேசிவரும் இயக்குநர்களை தேர்வு செய்துகொள்வதன் மூலம் தனது பகடைக்காயை அற்புதமாய் நகர்த்தி விளையாடியும் வருகின்றனர். இதிலும் அவர்களின் வணிக தந்திரமே ஒளிந்திருக்கிறதே தவிர அந்தத் திரைப்படங்கள் பேசும் அரசியலில், கருத்தாக்கத்தில் இவர்களுக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட அப்பட்டமான உண்மை.

கமல்ஹாசன் மிகமுக்கியமான தமிழ் சினிமாவின் ஆளுமையான நடிகர், பன்முகத் திரையாளுமை மிக்கவர், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர், அர்பணிப்பு மிக்கவர், பரிட்சார்த்த திரைப்பட உருவாக்கலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர், ரசிகர்களுக்கு ஆண்டவர், உலகநாயகன். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், பெரியாரிஸ்ட், முற்போக்குவாதி, இலக்கியவாதி, இடதும் இல்லை, வலதும் இல்லை மய்யம் என்று ஆனவர்,  தமிழகத்தின் நிரந்தர “பிக்பாஸ்” கூட அவர்தான் என்றெல்லாம் அடையாளப் படுத்தப்படுகிறார். கமல்ஹாசன் என்கிற நாயக பிம்பம் எப்படியானது? எதனாலானது? ‘பேசாமொழி’ பதிப்பகத்தின் வெளியீடாக “யமுனா ராஜேந்திரன்” எழுதிய “உத்தம வில்லன்” என்கிற புத்தகம் கமல்ஹாசன் என்கின்ற பிம்பம் தன் திரைவெளியில் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்பதை விரிவாய் அவரது நான்கு படங்களின் வழியே அலசுகிறது.

இங்கு அவர் குறிப்பிடும் கதாநாயக வில்லன்கள் என்னும் மாஸ் ஹூரோ ஆனவர் ஒரே சமயத்தில் வில்லனாகவும், நாயகனாகவும் இருக்கக் கூடியவர். இவர்கள் ரசிகனுக்கு வியப்பும், ஆச்சரியமும் தரக்கூடியவர்கள். அந்த வகையில் கமல்ஹாசன் ஒரு கதாநாயக வில்லன் (Anti-Hero) என அவரது படங்களை விசாரணை செய்வதின் மூலம் நிறுவுகிறார் யமுனா. கமல்ஹாசனின் இந்துத்துவ சார்பு நிலை, இந்துக்கள் முஸ்லிம்கள் மீதான சமநிலையற்ற, பொறுப்பற்ற பார்வை, இந்துக்கள் முஸ்லிம்கள் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் குறித்த தவறான மறைக்கப்பட்ட சிந்தனையோட்டம், அவரின் ஹாலிவுட் சினிமா கனவுகள், அமெரிக்கா மீதான அதீத பாசம், அணுஆயுத பரவல்-தீவிரவாதம் என உலக அரசியலை பேசுகிறேன் என்கிற பார்வையில் ஈராக்கில் அணு ஆயுதங்களை கண்டுபிடித்து ஒழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி பொதுமக்களை கொன்றுபுதைத்த உலக அணு பயங்கரவாதத்தை ஒழிக்கும் காவலாளியான  நாயகனான  ஜார்ஜ் புஷ்ஷை உலக நாயகனாக்கியது, கூடவே பத்துவேட பராக்கிரமங்கள், பட்டாம் பூச்சி விளைவு, பேரழிவுக் கோட்பாடு என அறிவியல் விளக்கங்கள், நம்மின மக்கள் இலங்கையில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட போது அதைபற்றியெல்லாம் பேசாமல், படமெடுக்காமல் அப்படியே எடுத்தாலும் மும்பை, தில்லி, கோவை, குஜராத், மீனம்பாக்கம், ஶ்ரீபெரும்பூதூர், மலாகான் என அனைத்தையும் ஒரே பயங்கரவாத தாக்குதல்கள் எனும் புள்ளியில் இணைத்தல், தீவிரவாதத்திற்கு பதிலடியாக தனித்தீவிரவாதியாக அவர்களை கொல்லுதல், மும்பை குண்டுவெடிப்பு பற்றி தமிழர்களுக்கு அக்கறையின்மை எனப்பேசுவது, தலிபான்கள் பிரச்சனையை பேசுகிறேன் என்ற பெயரில் தமிழக முஸ்லிம்களை தலிபான்களுடன் தொடர்பு படுத்தியது, விஸ்வரூப தணிக்கை சர்ச்சைகள், படம் வெளியீடு பிரச்சனைகளின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னது, விஸ்வரூபம் தமிழகத்தில் படம் தடைசெய்யப்பட்ட போது இங்கு அது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், இஸ்லாமிய அமைப்பினர்கள், எழுத்தாளர்கள் பேசிய கருத்துகள்,  இங்கே எனக்கு எதிராக நடப்பது ‘கலாச்சார பயங்கரவாதம்’ என்னும் அநீதி என்றெல்லாம் பேசியிருக்கும் அவரின் நிஜ பிம்பங்கள் குறித்து அவரின் ‘ஹே ராம் (2000), தசாவதாரம் (2008), உன்னைப்போல் ஒருவன் (2009), விஸ்வரூபம் (2013)’ என்ற நான்கு படங்களை பற்றிய விரிவான அலசல்கள் இந்த புத்தகத்தில் நான்கு கட்டுரைகளாய் (“ஆர்.எஸ்.எஸ். ஊழியனின் உளவியல் – ஹேராம், உயிர்க்கொல்லி நாயகனின் தமிழ் அவதாரம் – தசாவாதாரம், பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம் – உன்னைப்போல் ஒருவன், அமெரிக்க பைத்தியநிலை தரும் சந்தோஷம் – விஸ்வரூபம்”) இருக்கின்றது.

“ஆர். எஸ். எஸ் ஊழியனின் உளவியல்” எனும் கட்டுரையில் கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ எந்த மாதிரியான சூழலில் மையம் கொண்டு உருவானது என வினவுகையில் இந்திய பாகிஸ்தான் பிரிவின் காரணமாய் நிகழ்ந்த இந்து முஸ்லிம் கலவரத்தினை ஆதாரமாய் எடுத்துக்கொண்டு அது பேசியிருக்கிறது. 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முகமது அலி ஜின்னா கேட்டுக் கொண்டபடி இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்காக கடையடைப்பு பந்த் நாளாக வங்க முதல்வர் அறிவிக்க கல்கத்தா நகர வீதிகளில் பதட்டம் சூழ முஸ்லிம்கள் கலவரத்தை துவக்க, பின்னர் இந்துக்கள், சீக்கியர்கள் என பதில்வினையாற்ற பெரும் கலவரமாகி இருபுறமும் பாலியல் வன்கொடுமைகளும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட துயரமும் அழியா ரத்தக்கறையாய் இந்திய வரலாற்றில் படிந்து போனது. (பிற்பாடு நடந்த இந்து-முஸ்லிம் பிரச்சனைகளுக்கும், கலவரங்களுக்கும் இந்தச் சம்பவமே துவக்கப்புள்ளி.  பின்பு அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் 1996 இல் பாபர் மசூதி இடிப்பில் அது மீண்டும் வேர் விட்டது எனலாம்) ஏழை எளிய மக்கள் இருபுறமும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தச் சூழலில் காந்தியை கொல்வதற்கான சூழலை அந்த நிகழ்வு வழங்கியதா? காந்தி பிரிவினையை  ஆதரித்தாரா? இல்லையா? என வினவிய படம் தான் “ஹே ராம்” என்கிறார் யமுனா. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து வந்த சில யதார்த்த படங்களையும் பட்டியலிட்டு ஹேராமை அவர் விசாரணை செய்கின்றார். ஹேராமில் நடப்பது என்ன? தமிழகத்து தென்கலை அய்யங்கார் சாகேதராமன் கல்கத்தாவில் இருக்கிறான். அன்று நடந்த கலவரத்தில் அவனது மனைவி கொடூரமாய் பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளப்படுகிறாள் இஸ்லாமியர்களால். இக்காட்சி படத்தில் வன்முறையின் உச்சகட்ட சாட்சியாக காட்டப்படுகிறது. இதன் தாக்கத்தால் இந்துத்துவா அமைப்புகளின் வழிகாட்டுதலில் காந்தியை கொல்ல புறப்படும் சாகேதராமன், இறுதியில் காந்தியை கொல்லாமல் திருந்துகிறான். அதற்குள் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொல்கிறான். படத்தில் காந்தியை கொல்வதற்கான சூழலை தெளிவுற கட்டமைத்த கமல்ஹாசன் அவரை கொலை செய்யாமல் திரும்புவதற்கான தீர்க்கமற்ற காரணத்தால் திரைப்படம் முழுமை பெறவில்லை என்கிறார். அதாவது இந்துத்துவத்தின் வேரை அலசுவதில் இருந்த தயக்கம்தான் அது என்கிறார்.  காந்தியை கொல்வதற்காக சாகேதராமன் சுழற்காற்றில் துப்பாக்கி சுடப்பயிலும் மார்பில் பூணூல் புரளும் காட்சி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினரின் அப்பட்டமான சாயல், இந்துக்கள் தாக்கப்பட்டபோது தெளிவாக அமைக்கப்பட்ட காட்சிகள், முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது தெளிவில்லாமல் காட்டப்படுவது, காந்தியை கொல்வதற்கு இந்த பாலியல் பலாத்காரங்கள், கலவரங்கள் மட்டுமே காரணமல்ல. அதன்பின்னே இருக்கும் அரசியல், இந்துத்துவம் முக்கியமானது. படத்தினை ஹாலிவுட் தரத்திற்கு தொழில்நுட்ப நேர்த்தியாக, பன்முகத்திறமை கொண்ட கதைச்சூழலுக்கு ஏற்ற நடிகர்களை பயன்படுத்தியது, உருவாக்கம், இசை என அதன் பல சிறப்பம்சங்கள், இந்திய சினிமாவில் இது ஒரு மைல்கல் எனவும், படம் வெளிவந்த போது வந்த கலவையான விமர்சனங்கள் குறித்தும், தேவி திரையரங்க ப்ரீவ்யூ திரையிடலில் கமல்ஹாசன் பேசிய போது இப்படம் இந்துக்கள்-முஸ்லிம்கள் கலவரத்தினை பேசி அவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் படம் என்றும், முஸ்லிம்களுக்கு இந்தியா எனது நாடு என்கிற உணர்ச்சி இருக்கிறது என்று முதலில் கூறி பின்பு இருக்கிறதோ இல்லையோ இருக்கும் வகையில் இப்படம் இருக்கிறது என அவர் தன் இந்துத்துவ தன்னிலையை வெளிப்படுத்திக் கொண்டதையும், நாதுராம் கோட்சேவின் சகோதரர் ‘கோபால் கோட்சே’ இத்திரைப்படத்தினை பார்த்து அவரின் பேட்டி குறித்த செய்திகள், அந்த இந்து முஸ்லிம் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பெங்காலிகள், பஞ்சாபிகளின் வாழ்க்கையில் இருந்து படம் உருவாகாமல் போனது நம்பகத்தன்மையை குறைக்கிறது, அதுமட்டுமின்றி கல்கத்தா கலவரத்தின் இரத்தப் பிண்ணனியில் சாகேதராமனின் கதை  பேசப்படுகிறதா? இல்லை சாகேதராமனின் தனிமனித கதையில் கலவரத்தின் இரத்தக்கறை படிய வைக்கப்படுகிறதா? என்கிற மருதையனின் செறிவான விமர்சனத்தை குறிப்பிட்டும் இக்கட்டுரை மிகவிரிவாய் பேசுகிறது. இந்துப்பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு கொடுமைகள், கல்கத்தா கலவரங்கள் போன்றவைகளால் தனிமனித உளவியல் உந்துததால் காந்தியை கொல்லப் புறப்பட்ட சாகேதராமன், கலவரத்தில் பாலியல் வல்லுறவுகளால் கொல்லப்பட்ட இந்துப்பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு குரல் தந்த மற்ற மாநில மக்களின், இஸ்லாமிய மக்களின் மீதான கொடுமைகளையும், வல்லுறவுகளையும் பற்றி பேசாமல் விட்ட இந்துத்துவாக்களின் குரல் தானே அன்றி, காந்தியை கொன்ற கோட்சேவின் குரல் அல்ல! கோட்சேவின் குரல் எதனை நோக்கியது என்பதை தீர்க்கமாய் அவரால் ஹேராமில் அணுக முடியவில்லை, ஏனெனில் அது இந்துத்துவத்தின் குரல்.  அதனை ‘ஹேராம்’ விசாரணை செய்யவில்லை என்கிறார் யமுனா ராஜேந்திரன்.

அடுத்ததாக ‘உலகநாயகனே! கண்டங்கள் கண்டு வியக்கும்! ஐ.நாவும் உன்னை அழைக்கும்!” என்று தன்னை இந்திய சினிமாவின் நாயகனாகவும், அமெரிக்க அதிபரான அணுஆயுத எதிர்ப்பு போராளியான “ஜார்ஜ் புஷ்ஷை” உலக நாயனாக பறைசாற்றிய ‘தசாவாதாரம்’ திரைப்படம் குறித்த “உயிர்க்கொல்லி நாயகனின் தமிழ் அவதாரம்” கட்டுரையில் கமல்ஹாசனின் அமெரிக்க சார்புநிலையை பட்டவர்த்தனமாக விளக்குகிறார் யமுனா. உலகெங்கிலும் அணுஆயுதங்களை ஒழிக்கிறேன் என்று சொல்லும் அமெரிக்கா அதே அணு ஆயுதங்களின் கூடாரமாக இருக்கிறது, அணுஆயுதங்களை பெருமளவில் தயாரித்து வைத்திருக்கிறது. உலகில் முதன்முறையாக அணுஆயுத தாக்குதலை ஹிரோஷிமா-ஜப்பான் மீதும், வியட்நாம் மீதும் ஏவிய நாடு அமெரிக்கா. உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதது, இந்தியர்களின் உணவு குறித்த விமர்சனம், சர்வாதிகார, ஏதேச்சதிகார அடக்குமுறையாளர்களை விசாரிக்க அமைத்த நீதிமன்ற முறையை அங்கீகரிக்காதது, தன் நலன் மட்டுமே சார்ந்து செயல்படும் உலகின் மிகப்பெரிய சுயநல கார்ப்பரேட் அயோக்கியன் அமெரிக்கா. அது ஒரு பக்கம் அணு ஆயுதங்களை தயாரிக்க பணம் தருகிறது, மறுபுறம் அணுஆயுத பரவலை, ஒழிப்பை உலகளவில் முன்னெடுக்கிறது என அரசியலில் இரட்டை பேச்சே இங்கு தவறானது என்கிறார். இதைத்தான் படத்தில் கமல் பேசியிருக்கிறார் என்கிறார். சரி, தசாவாதாரத்தின் முக்கியமான மைய கதைச்சரடு தான் என்ன? கமல்ஹாசன் இந்தியர், அமெரிக்க அணு ஆயுத விஞ்ஞானி, அங்கு கடும் விளைவை விளைவிக்கக் கூடிய உயிர்க்கொல்லி ஆயுதம் தயாரிக்கப்படுகிறது. புஷ் பெரும் முதலீடு அதில் செய்கிறார். அதன் வீரியம் குறித்து ஒரு எதிர்பாராத உயிர்பலியின் மூலம் அறிகிறான் கோவிந்த். அதனை அமெரிக்க பழைய சி.ஐ.ஏ வும், இன்றைய தீவிரவாத ஆதரவாளனுமான வில்லன் பயங்கரவாதிகளுக்கு விற்க முயல்கிறான். அப்போது அந்த சிறிய ‘நியூக்ளியர் பயோ சிந்தெடிக் வெப்பன் வயலை’ நம் இந்திய நாயகன் கோவிந்த் திருடிக் கொண்டு இந்தியா வர, வில்லனும் துரத்திக்கொண்டு வர, இடையில் ஊடாய் பல கிளைக்கதைகள், இறுதியில் வில்லன் உயிர்க்கொல்லி ஆயுதத்தை வாயில் கடித்துக்கொண்டு கடலில் விழ கடலில் பெரும் சுனாமி என்னும் ஆழிப்பேரலைகள் தோன்றி அணு ஆயுத உயிர்க்கொல்லியால் நடக்கவிருந்த பெரும் உலக அழிவை கடலின் உப்பால் காத்திருக்கிறது என்பதாகவும், உலகின் ஆபத்பாந்தவனான ஜார்ஜ் புஷ் இதற்காக கோவிந்தை பாராட்ட நேரடியாக  இந்தியா வந்து தமிழக முதல்வர், பாரதப் பிரதமர் சூழ கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். ஆக தசாவாதாரம் படத்தில் கமல்ஹாசன் தேர்ந்து கொண்ட விஷயம் பன்னாட்டு அரசியல் – அணுஆயுத பரவல்- தீவிரவாதம்- பயங்கரவாதம்- அதன் ஆழமான அரசியல், அது பட்டாம்பூச்சி விளைவு, பேரழிவுக் கோட்பாடு என்னும் முறைப்படி அதாவது உலகில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு தொடர்விளைவுகளாகி, அதாவது ஒரு நாட்டில் எங்கோ  ஒரு மூலையில் நடக்கும் சிறுவிளைவு பெரும் மாற்றத்தை விளைவிப்பதாகும், உலகளவில் தொடர் நிகழ்வாய் விளைவினை விளைவிக்கும் என்ற கருத்தாக்கத்தின் படி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சைவ வைணவ மோதலுக்கும், சமகால உலகில் பெரிதும் ஆபத்தை விளைவிக்கும் அணுஆயுத தாக்குதலுக்கும் முடிச்சுப் போடுகிறார் கமல்ஹாசன். இங்கு சைவ வைணவ மோதலை இணைத்தது அவரின் அப்பட்டமான இந்துத்துவ மனநிலை. ஹேராமில் பூணூலை அணிந்து முறுக்கியதும், தசாவாதாரத்தில் ரங்கராமானுஜ தாசனாக முறுக்கிய வைணவ பிம்பமும் தனக்கு ரத யாத்திரை வந்த இந்துத்துவா கொலை வெறியரான ‘அத்வானி’ யை நினைவு படுத்தின என்கிறார் யமுனா. பத்துவேட மகாத்மியங்கள் நம் ரசிகனுக்கு. அமெரிக்காவுக்கும், அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் அவர் இதன் மூலம் தந்தது “ஜார்ஜ் புஷ்” ஷை உலக நாயகனாக்கியது.  இன்று உலகில் நடக்கும் அணு ஆயுத ஒழிப்புக்கான போரில் குறிப்பாக ஈராக்கில் நடந்த பயங்கரவாத வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவி ஈராக்கிய மக்களுக்கும், அமெரிக்காவுக்கு ஒத்து ஊதும் நாடுகளுக்கும் அவர் தருவது அவர் உலக நாயகனே! இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எனச் சொல்வது பெரும் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம் எனச் சாடுகிறார் யமுனா. கமல்ஹாசனின் அரசியல் படங்களில் கேவலமானதாகவும், அறுவறுப்பானதும் ‘தசாவாதாரம்’ என்கிறார் அவர். பட்டாம்பூச்சி விளைவு, பேரழிவுக் கோட்பாடுகளின் தாக்கமாய் பல படங்கள் வந்திருப்பதாய் சுட்டிக்காட்டுகிறார். போலந்தின் ‘கிறிஸ்டோப் கீவ்லோஸ்கியின்’ “ப்ளைன்டு சான்ஸ் – 1987”, ஆங்கிலத்தில் வெளிவந்த அதன் தழுவலான “ஸ்லைடிங் டோர்ஸ் – 1998”, தமிழில் அதன் தழுவலான ஜீவா இயக்கத்தில் வெளியான  “12பி”, மேலும் “அமெரோஸ் பெரோஸ் (2001)”, தமிழில் அதனை தழுவிய மணிரெத்தினத்தின் “ஆயுத எழுத்து (2004)”, மேலும் குவெண்டின் டேரென்டினோவின் ‘பல்ப் பிக்சென் (1994), டிராபிக் (2000), பேபல் (2006) என பட்டியலிட்டு தசாவாதாரத்தின் கதை சொல்லல் ஒன்றும் உலக சினிமாவிற்கோ, தமிழ் சினிமாவிற்கோ புதியதல்ல என்றும், கமல்ஹாசன் இதனை குறித்து ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது “ நிகழ்வுகள் சுழல்பாதையில்தான் நடக்கிறது, சிலவிஷயங்கள் திரும்பத்திரும்ப நிகழ்கிறது, பிரச்சனை என்னவென்றால் அதிலிருந்து உலகத்தவர் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்” என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளும் யமுனா ராஜேந்திரன் எதிர்வினையாக சில கேள்விகளை கமல்ஹாசனுக்கு வைக்கிறார். சைவ வைணவ முரண்பாடுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதை விட நாம் வியட்நாம் போரிலிருந்தும், ஈராக் பேரழிவு, குஜராத் பேரழிவிலிருந்து தான் பாடம் கற்றுக்கொள்ளாமல் அழிவின் உறைவிடமான “அமெரிக்காவிடமும், இந்துத்துவாவிடமும் கற்றுக்கொள்ள முயல்வது ஏன் ? என்கிறார். மேலும் அவரின் குணா, மகாநதி, தேவர் மகன், விருமாண்டி, அன்பே சிவம் என பயணித்த பாதையும், குருதிப்புனல், ஹேராம், தசாவாதாரம் என பயணம் தடம் புரண்டதையும் குறிப்பிடுகிறார். உங்களின் ஹாலிவுட் கனவுகளுக்காக, உலக சினிமா ஆசைகளுக்காக அமெரிக்க சார்பு நிலையை படத்தில் திணித்து புஷ்ஷை உலக நாயகனாக்க வேண்டியதன் தேவை என்ன எனவும், படத்தின் உள்ளடக்கம் குறித்தும் இக்கட்டுரையில் அவர் விரிவாய் எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக ‘பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்’ கட்டுரையானது,  நீரஜ் பாண்டே இயக்கத்தில் நஸ்ருதீன் ஸா நடித்த திரைப்படம் “ஏ வெட்னஸ் டே”, இதனை தழுவி தமிழில் வெளிவந்த கமல்ஹாசனின் “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களை அலசுகிறது. இந்துக்கள் முஸ்லிம்கள் கலவரம் பிரச்சினைகள் போன்றவற்றிற்கான ஆதி “இந்திய – பாகிஸ்தான் பிரிவினை” எனலாம். அதற்கு பிறகு என்றால் “பாபர் மசூதி இடிப்பு”, அதனை தொடர்ந்து மும்பையில் சிவசேனா  அமைப்பினர் முதலான இந்துத்துவாக்களின் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் அது ஆரம்பமானது. பிறகு அதனைத் தொடர்ந்து அங்கு நடந்த இந்து இஸ்லாமிய கலவரங்கள், குண்டுவெடிப்புகள் என இதனை இருபக்க சமநிலையுடன் விவாதித்த படங்கள் என அனுராக் காஷ்யப் இயக்கிய “ப்ளாக் ப்ரைடே”, நிசிகந்த காமெத்தின் “மும்பை மெர்ரி ஜான்”, மற்ற மும்பை சம்பவத்தின் பின்ணனியில் உருவான படங்களென ‘பம்பாய் (மணிரெத்தினம்), எ வெட்னஸ்டே (நீரஜ் பாண்டே)’ ஆகியவற்றை சொல்லலாம். அதன் பிறகு 2002ல் குஜராத்தில் சமர்பதி விரைவு ரயில் எரிப்பு சம்பத்தை தொடர்ந்து அங்கு ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தங், பாரதிய ஜனதா கட்சியினர் என இந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இஸ்லாமிய மக்களின் மீதான துயரப் படுகொலை, மலகான் இஸ்லாமிய மக்களின் மீதான தாக்குதல்கள் என அது தொடர்ந்தது. குஜராத் பயங்கரவாத தாக்குதல்களை சமநிலையுடன் சொன்ன படங்களாக ஆயிரம் உண்மைக் துயரக்கதைகளை சொன்ன நந்திதா தாஸின் “பிராக்”, ராகுல் தொலாக்கியாவின் (அனுராக் கஷ்யப்பின் ‘மும்பை கட்டிங்”ல் இவருடைய குறும்படம் இருக்கிறது) “ஃபர்ஷானியா”, சசிகுமாரின் “காயா தரன்” எனலாம்.

யமுனா ராஜேந்திரன் இந்தியாவில் நடந்த இத்தகைய தாக்குதல்களின் இரு பரிமாணங்களை தெளிவாக விளக்குகிறார். மும்பை பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்த கலவரங்கள், குண்டு வெடிப்புகள், குஜராத் திட்டமிட்ட படுகொலைகள், மலகான் தாக்குதல்கள் (இந்துத்துவா பயங்கரவாதம்), கோவை குண்டு வெடிப்புகள் (பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சி), தில்லி பாராளுமன்ற தாக்குதல், மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் (சர்வதேச பயங்கரவாதத்தின் விளைவு), மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மார்க்கெட் குண்டுவெடிப்புகள், ஶ்ரீபெரும்பூதூர் மனித வெடிகுண்டு தாக்குதல் என அனைத்துமே ஒரே வரையறைக்குள் வராது என்கிறார். இதில் சர்வதேச பயங்கரவாதமும் ஊடுபரவியிருப்பதை அவர் விளக்கியிருக்கிறார். அது அல்கய்தா, அல் உம்மா, தலீபான், லஷ்கர் இ தொய்பா என பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் பரவி தாக்குதல்களை நடத்திவரும் இஸ்லாமிய ஒற்றைமைய பயங்கரவாதிகள் பங்கும் இதில் இருக்கிறது. இன்னொரு பரிமாணமாக “இந்துத்துவ பயங்கரவாதமும்” இருக்கிறது, அதுதான் பாபர் மசூதி இடிப்பில் தொடங்கியது என்கிறார். எனவே பயங்கரவாதத்தை பேசும் போது இந்துத்துவ பயங்கரவாதம், இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்” என இரண்டையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இன்னொன்றாக போராளிகளின் (பாலஸ்தீன போராளிகள், தமிழின விடுதலைப்புலிகள், காஷ்மீர் போராளிகள், மாவோயிஸ்டுகள்) போராட்ட தாக்குதல்களை வேறு என்றும், அதே அவர்கள் அப்பாவி மக்களை காரணமின்றி தங்கள் போராட்டத்திற்காக கொல்லும் போதும் அதுவும் தான் பயங்கரவாத தாக்குதல்கள் என்கிறார். இன்னொரு பயங்கரவாதமாக அவர் மக்களை கொல்லும் அதிகார மமதை கொண்ட ‘அரச பயங்கரவாதத்தை’ கோடிட்டு காண்பிக்கிறார். காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல்கள், ஈராக் மக்கள் படுகொலைகள், இலங்கை தமிழின பெரும் அழிப்பு என ஆளும் அரசாங்கமே தன்னுடைய நாட்டிலோ, அதன் ஒரு பகுதியிலோ திட்டமிட்டு சிறுபான்மை இன மக்களின் மீது நடத்தும் படுகொலைகளும் பயங்கரவாதம் தான் என்கிறார். இங்கு அந்த சிறுபான்மை இன மக்கள் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுகிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க மேலே குறிப்பிட்ட சில திரைப்படங்களை தவிர பெரும்பாலான திரைப்படங்கள் இந்தச் சம்பங்களை இந்துத்துவ சார்பு பார்வையிலே அணுகி, சர்வதேச பயங்கரவாதத்தை சரியான புரிதலுடன் அணுகாமல் போட்டு குழப்புகின்றன என்கிறார். அதைத்தான் “வெட்னஸ்டே” செய்தது. அதுவாவது பரவாயில்லை சில விஷயங்களை தவிர்த்திருந்தது. குஜராத் படுகொலையை அது தொடவில்லை, நஸ்ருதீன் ஸா விற்கு எந்தவித மத அடையாளமும் பூசவில்லை. உடன் ரயிலில் பயணிக்கும் மத்தியதர இஸ்லாமிய இளைஞன் அவருக்கு அணுக்கமாகிறான் அவன் மும்பை ரயில் குண்டுவெடிப்பில் இறக்க சமானிய பொதுமகனான அவர் (இங்கு சமானிய பொதுமகன் ஜாதி, மத, இன, மொழி, மாநிலம் என பல பிரிவுகளால் ஆனவன், ஆதலால் இந்த பதமே தவறு என்கிறார் யமுனா ) தீவிரவாதத்தை ஒழிக்க நான்கு தீவிரவாதிகளை தன்னிடம் ஒப்படைக்க நகரில் குண்டு வைத்திருப்பதாக காவல்துறையை, அரசை, நீதியதிகாரத்தை மிரட்டி அந்தத் தீவிரவாதிகளை வரவழைத்து தனி மனிதராக தீவிரவாதத்திற்கு இது தான் தண்டனை என கொல்கிறார்.  அதில் மூவர் இஸ்லாமியர், ஒருவர் தீவிரவாதிகளுக்கு உதவும் இந்து. இது சமானிய மனிதனால் செய்யும் சாத்தியங்களற்றது. இத்திரைப்படம் தவறானது என்கிறார். அதே சமயத்தில் “உன்னைப்போல் ஒருவன்” பேசியிருக்கும் அரசியல் மிகவும் தவறானது என்கிறார். இரு படங்களையும் காட்சி ரீதியாக, நடிப்பு ரீதியாக, திரைக்கதை ரீதியாக, வசனங்கள் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, ஒப்பனை ரீதியாக, தமிழில் படம் தயாராகும் போது அதன் பகுதிக்காக தேர்ந்துகொண்ட விஷயங்கள் இரு படத்திற்கும் எவ்வாறு வேறுபடுகிறது என நுணுக்கமாய் அவர் அலசி முன்வைக்கும் கருத்துகள் மிகவும் ஆழமானவை. குஜராத் படுகொலையை வலிந்து திணித்திருப்பது, மும்பை குண்டுவெடிப்பு, கோவை குண்டுவெடிப்பு, ஹைதராபாத், மீனம்பாக்கம், ஶ்ரீபெரும்பூதூர் எனத் தாக்குதல்களை ஒன்றாக பேசியிருப்பது சரியா? சில வசனங்கள் அப்பட்டமாய் இஸ்லாமிய விரோதப் போக்கினை (கைதிகளை வேனில் ஏற்றிக்கொண்டு போகையில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி தன்னுடைய மூன்றாவது மனைவியை கொடூரமாய் படுகொலை செய்யப்பட்டதை சொல்லும்போது இந்து கதாபாத்திரம் அதான் இன்னும் இரண்டு மனைவிகள் இருக்கிறதே? எனக் கேட்பது) காட்டுகிறது ஏன்? என்றும் அடிப்படையில் சமநிலை உங்கள் படத்தில் எங்கு தவறுகிறது என அழுத்தமாய் சுட்டிக் காட்டுகிறார். அவர் கமல்ஹாசனை வசைபாடவில்லை, அவர் மீது இருக்கும் தார்மீக கோபத்தினையும், கோவை குண்டுவெடிப்பு பற்றிய சமநிலையுடன் படமெடுத்திருக்க வேண்டிய அதற்கான அற்புதமான வாய்ப்பு கிடைக்கும் போது நீங்கள் அடிப்படையில் தவறான ஒரு படத்தினை தேர்ந்து கொண்டு அதில் இந்து முஸ்லிம் சமநிலையை பேணுகிறேன் என்ற பெயரில் தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் தருவது சரியா ? என ஆதங்கப்படுகிறார் யமுனா. கமல்ஹாசனை அவர் ‘கமல் முழுமையான இந்துத்துவவாதி அல்ல, நடுநிலைவாதி, தழும்பல்காரர், மும்பையில் முஸ்லிம்கள் முதலில் தாக்குதலை செய்யவில்லை என பம்பாய் திரைப்படம் குறித்து சொன்னதும், குஜராத் கர்ப்பிணிக்காக வருந்தியதும் அவரே என்று கூறுவதின் மூலம் நீங்கள் அவதானிக்கலாம். தீவிரவாதத்திற்கு நீங்கள் தரும் உடனடித் தீர்வு நம்பகத்தன்மை இல்லாமல் அது தவறாகவும் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு உரியதாகிறது என்கிறார்.

‘இவன் யார் என்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா?” என்று பாடல் பிண்ணனியில் கம்பீரமாய் ஒலிக்க, தண்ணீர் ஒரு துளி சொட்டும் விழும் தருணத்தில் அத்தனை வில்லன்களையும் துவைத்து எடுத்து பெருமிதமாய் கமல்ஹாசனின் பார்வை மேலோங்க, அவர் மனைவி ஆச்சரியமாய் பார்ப்பது போல, விஸ்வரூபம் படம் பற்றிய நம்முடைய எதிர்பார்ப்புகளையும், உந்துதலையும் அத்திரைப்படத்தினை  நோக்கி வலுவாக கட்டமைத்திருந்தனர், படம் தணிக்கை, தமிழக இஸ்லாமியர்களால் ஆட்சேபிக்கபட்ட போது, அப்படி படத்தில் என்ன தான் இருக்கிறது? நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்  எல்லோரிடமும் இருந்தது. இப்போது ‘ஞாபகம் வருகிறதா?’ என இரண்டாம் பாகத்திலும் பாடி ஒரு விதமாய் அவர் ஓய்ந்திருக்கிறார். தரத்திலும், உருவாக்கத்திலும் ஹாலிவுட் தரம், பிரம்பிப்பு, எடுத்துக்கொண்ட விஷயம் தலிபான்களின் பயங்கரவாதம் பற்றியது. இந்திய அமெரிக்கா உறவு பற்றியது. யமுனா தனது “அமெரிக்க பைத்தியநிலை தரும் சந்தோஷம்” கட்டுரையில் விஸ்வரூபம் படத்தினை மட்டுமல்ல ஆப்கானிஸ்தான் ஆரம்ப கால பிரச்சினை, அதன் அரசியல், சோவியத் ஆக்கிரமிப்பு, அதனை எதிர்த்து போராடியவர்களில் ஒரு பகுதியினரான தலீபான்கள், தலீபான்கள் நடத்திய பெண்கள் மீதான கடும் அடக்குமுறை, சோவியத்தை வெளியேற்ற ஆப்கனுக்கும், தலீபான்களுக்கும் உதவ உள்ளே நுழைந்த அமெரிக்கப் படைகள்,  தலீபான்கள் வளர்ச்சி, அமெரிக்க படைகள் ஆப்கனில் செய்த கொடூரங்கள் என்ன? போர் அங்குள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட வாழ்க்கைப் பாடுகள், அதன் நில அரசியல், ஆப்கன் மக்களின் வாழ்க்கை முறை சிதைக்கப்பட்ட விதம், அமெரிக்க தலீபான்கள் பினைப்பு, ஆப்கனில் தலீபான்களையும், உலக அளவில் தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்த்தெடுத்த அமெரிக்காவின் கொடூர முகம், அமெரிக்காவின் வியட்நாம், ஈராக், ஆப்கன் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், தலீபான்கள் உடன் இணக்கச்சூழல் நீயூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, தலீபான்களை, பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அது அறிவித்தது என இதனையெல்லாம் தீர்க்கமாக ஆப்கன் சார்ந்து வந்த ஹாலிவுட் படங்கள், ஆப்கன் மற்றும் ஈராக்கிய படங்கள், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்த ஆப்கன் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்துக்கொண்டு ‘விஸ்வரூபத்தினை’ விரிவாய் விசாரணை செய்திருக்கின்றார். இதில் ஹாலிவுட்டில் ஆரம்பித்து நம் இந்திய சினிமாவரை அமெரிக்க ஆதரவு புகழ்பாடும் சினிமாக்கள் இருக்கின்றன என்கிறார். இதனை மறுத்து அமெரிக்கா ஆப்கனில், ஈராக்கில், வியட்நாமில் நடத்திய பாலியல் வல்லுறவுகளையும், கொடூர கொலைகளையும் உள்ளபடியே காட்டியிருக்கும் படங்களையும், அதன் இயக்குநர்களையும் பட்டியலிடுகிறார். சில்வஸ்டர் ஸ்டோலனின் ‘ரேம்போ’, பிஜலோவின் ‘ஜீரோ டார்க் டெர்ட்டி’, கைட் ரன்னர் போன்ற அமெரிக்க ஆதரவு படங்களும், ‘அபோகலிப்ஸ் நவ், தி கேசுவாலிட்டீஸ் ஆப் வார், ரெட் ஆக்டெட், சால்வடோர், தி ஹெவன் அண்ட் எர்த், லயன்ஸ் பார் லேம்ப்’ என மாற்றுப்படங்களையும், ஆப்கன் படங்களான ஈரானிய இயக்குநரான மெக்மல்பாவின் ‘காந்தஹார்’, ஸமீராவின் ‘அட் பைவ் ஆப்டர்நூன்’, சித்திக் பெமாரக்கின் ‘ஒசாமா’, ஜப்பான் இயக்குநரின் படமாக ‘மரீனா’, பெர்மாக் அக்ரமின் ‘காபூலி கிட்’, இந்திய சினிமாவை பொறுத்தவரை “எஸ்கேப் ஃப்ரம் தலீபான்’, காபூல் எக்ஸ்பிரஸ், கந்தஹார், விஸ்வரூபம் என்கிறார். இந்த ஒவ்வொரு படத்தினை பற்றியும் கதையை சுருக்கமாக சொல்லி அந்த திரைப்படங்கள் பேசியிருப்பதை விளக்கியிருக்கிறார் யமுனா. அதே சமயத்தில் இந்தியாவில் உருவான படங்களில் “காபூல் எக்ஸ்பிரஸ்” மட்டுமே நியாமாக நின்று எள்ளல் தன்மையுடன் அமெரிக்கா ஆப்கனில் நடத்தியதை விசாரணை செய்தது என்கிறார். ஹாலிவுட் சினிமாக்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் தீவிரவாத அழிப்பையும், அல்கைதா, பின்லேடன், தலீபான்கள் அழிப்பு என அதன் புகழ்பாடிகளாக இருந்ததே தவிர, அதன் பயங்கரவாத வெறியாட்டத்தை காட்சிப்படுத்தவில்லை என்கிறார். அதே போன்று ஆப்கன்-ஈரானிய இயக்குநர்கள் எடுத்த படங்கள் தலீபான்கள் தோற்றம், வளர்ச்சி, அவர்களின் அரசியல் முதலானவற்றை பேசாமல், தலீபான்கள் நடத்திய பெண்கல்வி மறுப்பு, அடக்குமுறைகள் போன்றவற்றை தான் பெருமளவில் பேசியிருக்கின்றன என்கிறார். இருப்பினும் அந்த மக்களின் பாதிப்பும், வாழ்க்கைப்பாடுகளும், நில அபகரிப்பும் இப்படங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார். ஆனால் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தேர்ந்துகொண்ட கதைச்சூழல் என்ன? இந்திய உளவு அமைப்பும், அமெரிக்க உளவு அமைப்பும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி பூண்டு இணைந்து கொண்டு நம் ‘கஷ்மீரியை’ உளவாளியாக தலீபான்களிடம் அனுப்புகின்றனர். அவர் ‘அல்கைதா’ விற்கே பயிற்சி தரும் பெரிய ஆளாகிறார். தலீபான்கள் வாழ்க்கை காட்டப்படுகிறது, அமெரிக்க கைதிகளை அடைத்து வைத்திருப்பதை காட்டுகிறார்கள், அமெரிக்க கைதி ஒருவரை தலீபான்கள் கழுத்தை அறுப்பதை காட்டுகிறார்கள், பிண்ணனியில் குரான் ஒலிக்கிறது; தலீபான் சிறுவர்கள் கூட விளையாட்டாக துப்பாக்கி சுடுகிறார்கள்,  தலீபான்கள் தமிழ் பேசுகிறார்கள், மதுரை, கோவை, ஹைதராபாத் எல்லாம் பரிச்சயம் என்கிறார்கள். தலீபான்கள் குழந்தைகள் கல்வி குறித்த அக்கறையை வசனத்தில் வைக்கிறார், குரான் ஆங்காங்கே ஓதப்படுகிறது. முல்லா ஓமர் இருக்கிறார், பின்லேடன் வருகிறார். மனித வெடிகுண்டு தாக்குதலில் ஒரு இஸ்லாமிய இளைஞன் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். அமெரிக்காவின் நீயூயார்க் நகரில் தலீபான்கள் நடத்தவிருந்த பயங்கரவாத தாக்குதலை முறியடிக்கிறார் ‘கஷ்மீரி’, அதற்காக இந்தியப் பிரதமர், ஹிலாரி கிளின்டன் வாழ்த்தும், நன்றியும் சொல்ல பெருமிதமாய் கமல் ஜெய்ஹிந்த் சொல்லி நடக்க அவரது மனைவிக்கு பெரும் காதல் பெருக்கெடுக்கிறது. இதை அப்பட்டமான அமெரிக்க ஆதரவு, ஹாலிவுட் ஆசையின் வெளிப்பாடு, இந்திய டெம்ப்ளேட் சினிமா என்றும், மீண்டும் கமல்ஹாசனின் புரிதலின் தவறு குறித்தும், தேவையில்லாமல் தலீபான்கள்களை தமிழக இஸ்லாமியத்தில் இணைப்பது தவறு, இது ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் குறிப்பாக தமிழக இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டத்தை விளைவிக்கும் என்கிறார். மிகவும் ஆழமான கட்டுரையாக இது இருக்கிறது. இதனை தொடர்ந்து இரு பின்னினைப்புகளாக ‘விஸ்வரூப தணிக்கை, தடை குறித்து பல்வேறு நபர்களின் பார்வையாக இருக்கிறது. அடுத்தது அவரின் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகளுக்கு விளக்கம் தந்திருக்கிறது. கமல்ஹாசனின் அரசியல் பிம்பமும், அவரின் தள்ளாடும் அரசியல் நிலைப்பாடுகளையும் ஆழமாக, செறிவாய் இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். இதில் உடைபடும் மாஸ் கதாநாயக பிம்பத்தின் அரசியல் முகம் இப்போதைய சூழலில் அவசியம் கவனிக்கப்பட வேண்டும்.

*

உத்தம வில்லன் (The Anti-Hero) /யமுனா ராஜேந்திரன் /பேசாமொழி வெளியீடு

 

 

 

Comments are closed.