கட்டுமரம் : யமுனா ராஜேந்திரன்

 

இந்திய வரலாற்றில் சகி, சகிபாவனை, சகியானி போன்ற வார்த்தைகளைத் தொடரும் கீதி தடானி பன்னாறு ஆண்டுகளாக இந்தியாவில் பெண் சமப்பாலுறவு நடைமுறையில் இருந்தது எனவும், இதற்கான ஆதாரங்கள் வட, தென்னிந்தியக் கோவில்களின்  சிற்பங்களிவும், குகை ஒவியங்களிலும் இருந்தது என்பதை ஆய்வு செய்து நிறுவுகிறார். இது குறித்த முழு நூலொன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.( Sakhiyani : Lesbian Desire in Ancient and Modern India/Cassal- Newyork/1996).

சமப்பாலுறவாளராக இருந்ததற்காக எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டை கிரிமினல் சட்டத்தில் தண்டித்த பிரித்தானியக் காலனியம் இந்தியாவில் அறிமுகமானபோது பாலுறவுத் தூய்மை எனும் பெயரில் விக்டோரியன் பாலுறவு மதிப்பீடுகளை இந்தியாவிலும் நிலைநாட்டத் துவங்கியது. மிக இயல்பாக இருந்த பாலுறவுக் கல்வி, பாலுறவுக் கொண்டாட்டங்கள் போன்றன கண்காணிப்புக்கு உள்ளாகின என்கிறார் கீதி தடானி. இதே கருத்தை ‘காமசூத்ரா’ படத்தை இயக்கிய மீரா நாயரும் பகிர்ந்து கொள்கிறார்

இங்கிலாந்தில் மூன்று நிகழ்வுகள் சமநேரத்தில் நிகழ்ந்தன. ஒரு நிகழ்வில் பேருந்தில் சென்று கொண்டிருந்த இயல்பாக தமக்குள் முத்தமிட்ட பெண் சமப்பாலுறவாளர்கள் இருவரைச் சில வெள்ளை இளைஞர்கள் தம்மையும் அவ்வாறு முத்தமிடுமாறு வற்புறுத்தியதோடு இரத்தகாயம் ஏற்படும் அளவிலும் அவர்களைத் தாக்கினார்கள்.

இன்னொன்று, பிரித்தானிய தேசியப் புள்ளிவிவர ஆய்வகம் சமப்பாலுறவு தொடர்பாக பிரித்தானிய மக்கள் என்ன கருதுகிறார்கள் எனும் விவரத்தை வெளியிட்டிருந்தது. இதில் 60 சதவீத்திற்கும் மேலானவர்கள் சமப்பாலியல்பு கொண்டவர்கள் காதலில், நேசத்தில் ஆழ்ந்திருப்பதை ஒப்புக் கொள்ளும் அதே பொழுதில், அவர்கள் உடலுறவு கொள்வது தொடர்பான ஒவ்வாமையை வெளிப்படுத்தினார்கள்.

மூன்றாவதாக ஒரு நிகழ்வு கல்வித்துறை சார்ந்த ஒரு பெரும் சர்ச்சையாக வடிவம் எடுத்தது.  இனம், நிறம், மதம், பாலியல்பு, சிறுபான்மை மனிதர் தொடர்பான பிரித்தானிய சமத்துவச் சட்டத்தின் அடிப்படையில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு இருபால் பெற்றோர்கள் தவிர சமப்பாலுறவு பெற்றோர்களும் இருக்க முடியம் என்பது தொடர்பான அறிவுறுத்தல் செய்யும் பொருட்டு டேவிட் என்பவர் ஒரு பள்ளியில் போதிக்க ஒரு புத்தகத்தை வடிவமைத்தார். அவரும் ஒரு ஆசிரியர். சிறுமி போல் உடையுடுத்தும் ஒரு சிறுவன் பற்றிய சித்திரம் ஒன்று அவர் எழுதிய நூலில் இடம் பெற்றது.

நூலுக்கு  எதிராக இஸ்லாமிய மதத்துறவி ஒருவர் இயக்கத்தைத் துவங்கினார். எமது ஒழுக்கங்களுக்கு எதிரானது இது என்பது அவரது வாதம். ஆசிரியர்கள் இதனை ஆதரிக்க, இஸ்லாமியப் பெற்றோர் இன்னொரு புறம் நிற்க விவாதம் தொடர்கிறது.

உலகெங்கிலும் சமப்பாலுறவு தொடர்பாக இரு சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. சமப்பாலுறவு இயற்கைக்கு விரோதமானது ஏனெனில் பரிணாமத்தில் இவர்கள் உயிர் மறுஉற்பத்தியில் ஈடுபடுவதில்லை. இது வக்கிரமானது. ஒரு வித மனநோய். இதற்கு மனநில சிகிச்சையளித்து இதனின்று இவர்களை விடுவிக்க வேண்டும். இது ஒரு வகை சிந்தனைப்பள்ளி. எல்லா மதங்களும் இதில் உடன்பாடு கொண்டவை.

பிறிதொரு சிந்தனைப்பள்ளியானது சமப்பாலுறவு இயற்கையானது. இருபால் உறவாளர்கள், இருபால் மற்றும் சமப்பாலுறவாளர்கள், சமப்பாலுறவாளர்கள் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறார்கள். விஞ்ஞானரீதியில் இது மனிதர்களிடம் எதிர்மறை உளநிலைகைள உருவாக்குகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்த உறவுகள் அனைத்திலும் ஈர்ப்பு, மனோரதியம், பாலுறவு விழைச்சு போன்றன பொதுவான பண்புகளாக இருக்கின்றன என்பது இந்தப் பார்வை.

மேலைத்தேய நாடுகளில் சமப்பாலுறவாளர்கள் குடும்பமும், அவர்களால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் கொண்ட அமைப்புகளும் உருவாகிவிட்டன. உயிர்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர் சீருடைகள் கூட பாலின அடிப்படையில் இருதுருவ சீருடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பெண்ணிலைவாதம் என்பது பெண்பால்நிலையின் தனித்துவங்களை நிறுவியதையடுத்து திருநங்கையர், பால்மாறியோர், சமப்பாலுறவாளர்களும் சமூகத்தில் தமது தனித்துவங்களை நிறுவியிருக்கிறார்கள். உலகெங்கிலும் இடதுசாரிகள் இந்தத் தனித்துவங்களையும் உரிமைகளையும் இயல்பானது என ஏற்றிருக்கிறார்கள். என்றாலும், பெண் உடலை அரசியலின் எல்லையாக வைத்துப் பண்பாட்டை எழுதும் மதவாதிகளும் இதுசார் கருத்தியலாளர்களும் இந்த உரிமைகளை மறுத்து வருகிறார்கள்.

இங்கிலாந்தில் கிறித்தவத் தேவாலயங்களில் தற்போது சமப்பாலுறவு அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயமாக ஆகிவிட்டது. சமப்பாலுறவு திருமணமும் இங்கிலாந்தில் சட்டபூர்வமாகிவிட்டது. இந்தியாவிலும் சமப்பாலுறவு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது, திருமணம், சொத்துரிமை போன்ற விஷயங்கள் இன்னும் தெளிவுபட வேண்டியிருக்கின்றன.  துருக்கி, லெபனான் உள்ளிட்ட 10 இஸ்லாமிய நாடுகளில் சமப்பாலுறவு சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது என்றாலும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் அது கிரிமினல் குற்றமாகவே இருந்துவருகிறது.

இத்தகைய உலகக் கலாச்சார அரசியல் நிலைமையில ஒரு சமப்பாலுறவாளராக இருந்து, அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஒதுக்கத்தையும் குடும்ப அமைப்புசார்ந்;த அவர்தம் அனுபங்களையும் தனது தொகையான படங்களில் வெளிபப்டுத்தியவராக ஸ்பானிய இயக்குனரான பெத்ரோ அல்மதோவர் இருக்கிறார். அப்துல் லதீப் கெசிசே இயக்கிய புளு ஈஸ் த வார்மஸ்ட் கலர்(2013) எனும் உணர்ச்சிவசமான பெண் சமப்பாலுறவு குறித்த பிரெஞசுப் படம் கேன் விருதும் பெற்றது.

இந்தியாவிலும் இந்தியிலும் மலையாளத்திலும் பரவலாகப் பெண் சமப்பாலுறவாளர்கள் தொடர்பான படங்கள் வெளியாகி வருகின்றன. இதனது முதல்வரிசை எதிரிகளாக இந்துத்துவவாதிகள் இருக்கிறார்கள். தீபா மேத்தாவின் ‘ஃபயர்’ படம் வெளியிடப்பட்ட சினிமாக் கொட்டகைகளை இவர்கள் அடித்து உடைத்தார்கள். தமிழ்ச் சூழலிலிருந்து இது பற்றிப் பேசிய இயக்குனர் மகேந்திரன் இத்தகைய படங்கள் இந்;தியக் கலாச்சரத்திற்கு எதிரானவை எனக் கோபமுற்றார். இத்தகைய இந்தியத்-தமிழ்ச்சூழலுக்குள்தான்  முதன்முறையாக பெண் சமப்பாலுறவாளர்கள் பற்றிய ஆதுரமான மானுடப் பார்வையுடன் இயக்குனர் சொர்ணவேல் ஈஸ்வரன் தனது ‘கட்டுமரம்’ எனும் நேர்த்தியான திரைப்படத்துடன் பிரவேசிக்கிறார்.

இந்திய சினிமாவிலிருந்து பெண் சமப்பாலுறவைச் சித்தரித்த மூன்று படங்களை எடுத்துக் கொள்வோம். தீபா மேத்தாவின இந்திப் படமான  ஃபயர்(1996), லிஜி புலப்பள்ளி இயக்கிய மலையாளப் படமான சஞ்சாரம்(2004),  கரன் ரஸ்டான் இயக்கிய இந்திப் படமான

கேர்ள் பிரன்ட்(2004). இந்த மூன்ற படங்களும் இந்தியா சமூகத்தில் பாலுறவு தொடர்பாக இந்திய சமூகத்தில் நிலவும் வேறு வேறு சிந்தனைத் தாரைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஃபயர் படத்தில் திருமண வாழ்வில் உடல் சார்ந்து ஆண்களிடம் நெருக்கமில்லாத, மதச் சடங்குகளை அழுத்தமாகக கடைப்பிடிக்கும்   வீட்டில் வாழும் இருபெண்கள் தமக்குள் பாலுறவில்  ஈடுபடுகிறார்கள். ஆண்கள் பெண்களின் பாலுறவு வேட்கையை எதிர்கொள்ளாதபோது இததகைய சமப்பாலுறவுகள் குடும்பங்களில் தோன்றுகிறது என்பதாக இப்;படம் இருக்கிறது. மறுதலையில், ஆண்களால் பாலுறவில் திருப்தியடையும் பெண்கள் சமப்பாலுறவில் நாட்டம் கொள்ள அவசியமில்லை எனவும் இந்தப் படத்தை வாசிக்கலாம்.

கேர்ள் பிரன்ட் படம் சிறுவயதிருந்தே ஒன்றாக வளரும் இரு பெண்களில் ஒருபெண்ணுக்கு மற்ற பெண் மீது பாலுறவு நாட்;டம் இருக்கிறது என்று சொல்கிறது. இந்தப் பாலுறுவு நாட்டம், பிறபெண் ஒரு ஆணுடன் காதலில் ஈடுபடும்போது பொறாமையாக ஆகி அது சம்பந்தப்பட்ட ஆணைக் கொலை செய்யவும் தூண்டுகிறது என்கிறது படம். வன்முறைகள் நிறைந்த, குற்றத்தன்மை வாய்ந்த சமப்பாலுறவு விழைச்சு இப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

சஞ்சாரம் இந்த இரு படங்களில் இருந்தும் வித்தியாசமானது. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளரும் பெண்களிடம் உணர்ச்சிபூர்வமான அன்பு என்பது இயல்பாகவே இருக்கும். பருவமடையும்போது பாலுறவு வேட்கை என்பது எதிர்பாலர்க்கிடையிலும் தோன்றும் சமப்பாலினர்க்கிடையிலும் தோன்றும். சஞ்சாரம் படத்தில்  வரும் இரு பெண்களுக்கு இடையிலான என்பதில் உணர்ச்சிவசமான அன்பும் புரிந்துணர்வும் பாலுறவு வேட்கையும் சமஅளவில் தோன்றுகிறது,

இது குடும்பங்களுக்குத் தெரியவருகிறபோது சமூகம் இந்த உறவின் மீது பெரும்தாக்குதலை நிகழ்த்துகிறது. முதல் இரண்டு படங்களோடு ஒப்பிடுகிறபோது, இந்திய சினிமாவில் பெண்களுக்கு இடையிலான பாலுறவு வேட்கை இயல்பானது, அது குற்றத்தனமை கொண்டதோ, ஆண் பாலுறறு விலக்கத்தினால் நேர்வதோ அல்ல என்பதைச் சஞ்சாரம் படம் முன்வைக்கிறது.

தமிழக இயக்குனரான சொர்ணவேல் ஈஸ்வரன் இயக்கிய  கட்டுமரம்(2019) திரைப்படத்தில் ஆனந்தி 15 வயதாக இருக்கும்போதும், அவளது தம்பி மணி 6 மாதக் கைக்குழந்தையாக இருக்கும்போதும், அவர்களது தாயும் தந்தையும் நாகபபட்டினத்தில் எழுந்த சுனாமியால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறர்கள். ஆனந்தியினதும் மணியினதும் 33 வயது தாய் மாமன் சிங்காரம் அவர்களைப் பொறுப்பெடுத்து வளர்க்கிறார். அவர்களை வளர்த்து ஆளாக்குவதன் பொருட்டு அவர் திருமணம் செய்துகொள்வதும் இல்லை.

கதைநிகழும் காலத்தில் ஆனந்தி இளம்பெண்ணாகி விடுகிறாள். கைக்குழந்தையாக இருந்த மணிக்கு இப்போது 14 வயது. சிங்காரம் மத்தியதர வயதைக் கடந்துவிடுகிறார். அவரது ஆசையெல்லாம் ஆனந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் நடத்திவிட வேண்டும். மணிக்கு நல்ல படிப்பைக் கொடுத்துவிட வேண்டும். இது தான் அவரது வாழ்வின் இலட்சியம்.

ஆனந்திக்குப் பல்வேறு வரன்களைப் பார்த்தும் ஆனந்தி அவர்களில் யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். சிங்காரம் எவவளவோ வற்புறுத்தியும் அவள் திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள். இந்த தருணத்தில் பள்ளி ஆசிரியையான ஆனந்தியின் பள்ளிக்கூடத்தில் சிறுவர் சிறுமியர்க்குப் புகைப்படக்கலை பற்றிப் பயிற்றுவிப்பதற்காக கவிதா எனும் இளம் பெண் மோட்டர் சைக்கிளில் அங்கு வந்து சேர்கிறார்.

கவிதாவுக்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது. கவிதா தான் காதலித்த சமப்பாலுறவுத் துணையைப் பறிகொடுத்தவர். அவளது நினைவில் வாழ்பவர். அவரை திருமணம் செய்ய வற்புறத்தும் தந்தையின் தொந்தரவிலிருந்து தப்பவே இந்தக் கிராமம் வந்தவர். ஆனந்திக்கும் கவிதாவுக்கும் இடையில் ஓரே பள்ளியில் பயிற்றுவிப்பது, பரஸ்பரம் தமது வாழ்வின் துயர்களைப் பகிர்ந்துகொள்வது, உணவைப பகிர்ந்துகொள்வது,  என அன்றாட வாழ்வின் இயல்பான நெருக்கம் வளர்கிறது.

தனது வேட்கையின் இயல்பான தோழமையும் காதலும் கவிதா தான் என்பதை ஆனந்தி உணர்ந்துவிடுகிறாள். கவிதாவின் சமப்பாலுறவுக் காதலியின் வண்ணங்கள் நிறைந்த ஆடையை ஆனந்தி உடுத்தி கடற்கரையில் நிற்கிறாள். தனது இழந்த துணையை ஆனந்தியில் காண்கிறாள் கவிதா. கவிதாவும் ஆனந்தியும் முத்தமிடுகிறார்கள். இருவரும் பரஸ்பரம் தேடியதும் தேர்வதும் ஒரு புள்ளியில் இயல்பாக இணைந்த தருணம் அது.

பழமையில் தோய்ந்த அந்தக் கிராமம் கொந்தளிக்கிறது. பிறன்மனை நாடித்திரியும், ஆனந்தியை வற்புறுத்தி கன்னத்தில் அடிவாங்கிய, காவல்துறை அடியாளும் படகு முதலாளிகளின் கையாளுமானவன் சிங்காரத்தையும் ஆனந்தியையும வஞ்சம் தீர்க்க நினைக்கிறான். கிராமமே இந்த உறவை எதிர்க்கிறது.

சிங்காரம் உடைந்துபோகிறான். சிங்காரம் குடும்ப உறவுகள் சார்ந்து பழைய மரபு பேணுபவன்தான் என்றாலும் நீதியுணர்வுகொண்டவன். காதலியின் கடலுக்குச் சென்ற கணவன் மரணமுற்ற பின்பு கர்ப்பிணியாக இன்று வாடும் அவளுக்காக உருகுபவன் அவன். ஒரு தருணத்தில் மதம் கடந்து,  தனது நண்பன் இக்பாலை ஆனந்தியை மணம் முடிக்கக் கேட்பவன் அவன். கிராமத்தில் அலைந்து திரியும் திருநங்கையிடம் பேரன்பு கொண்டவன் அவன்.

இறுதிக்காட்சியில் ஆனந்தியும் கவிதாவும் மோட்டர் சைக்கிளினருகில் காத்திருக்கிறார்கள். திருநங்கை அருகில் நிற்கிறார். மணியுடன் வரும் சிங்காரம் தான் கொண்வந்த துணிமூட்டையை மோட்டர்சைக்கிளில் இருகக்கட்டிவிட்டு தனது மருமகளை உச்சிமோந்து முத்தமிடுகிறார். மருமகள் அவரது காலில் விழுந்து வணங்குகிறார். ஆனந்தியும் கவிதாவும் மோட்டார் சைக்கி ளில் அமர்ந்து இடதுபுறம் திரும்ப, கொஞ்சம் தாமதித்து சிங்காரமும் மணியும் எதிர்திசையில் கிராமம் நோக்கி நடக்கிறார்கள். திருநங்கை தாமதித்து இடையில் நின்று கொண்டிருக்கிறார்.

அன்பு, பரிவு, ஈரப்பு, மனோரதியம், பாலுறவு விழைச்சு போன்ற ஆதாரப் பண்புகளுடனான பெண்சமப்பாலுறவு இயல்பானது என்று சொன்ன படமாக மட்டுமல்ல, தமிழ்மொழியின் முதல் பெண் சமப்பாலுறவுப் படமாகவும் கட்டுமரம் இருக்கிறது.

படத்தின் கதைக்கு இயல்பாகவே அமைந்த கடலும் கடல்சார்ந்த நிலமும் சுனாமியன் மிஞ்சிய அழிவுகளும் இடிபாடுகளும்  ஜெனிபர் ரெபக்காவின்  கலைப் பாணியில் படத்திற்கு  பிரம்மாண்டத் தன்மையையைக் கொண்டுவந்துவிடுகிறது.  பகலில் கடல் அலைகளின் கொந்தளிப்பும் இரவில் அதன் மோனமும் மானுட உணர்ச்சிகளின் பகுதியாகிவிடுகின்றன. ஒரு நடிகராக சிங்காரமாக நடித்த மிஷ்கினின் நடிப்பு இதுவரைத்திய அவரது நடிப்பு வாழ்வின் உச்சம் இந்தப் படத்தில்தான் எனச் சொல்லவைக்கிறது. முதல் படம் எனாதவாறு ஆனந்தி, கவிதா பாத்திரமேற்றவர்களும் படத்தின் பல கலைஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இரவுக் காட்சிகளில் பரணீதரினின் இசை இசை தவநிலையை ஞாபகமூட்டுகின்றன. கடல் ஒளிப்பதிவாளர்  கார்த்திக் முத்துக்குமாரின் கமெராவினுள் ஒரு திட்டவட்டமான கோரியோகிராபி நடன அரங்காகிவிடுகிறது. துல்லியமான ஒலிகளை இந்தப் படம் போல் பிறிதொரு படத்தில் நான் உணர்ந்ததில்லை.  தபஸ்நாயக், பழனியப்பன் போன்றோரின இசை வடிவமைப்பு அத்தனைத் துல்லியமாக இருக்கிறது. மெஸ்மரைசிங்.    பெரும்பாலும் திரையின் விரிந்த பரப்பில்தான் கடல் காட்சிகள் விரிகின்றன. இது படத்திற்கு இயல்பான காட்சியழகைத் தந்துவிடுகிறது.  படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள்  சின்னஞ்சிறு காட்சிகளாக இருக்கிற நிகழ்வுகள் சிங்காரம் தனது காதலியைக் கண்டுவிட்டு வீடு திரும்பி மீன் குழம்பு சாப்பிட்டபடி ஆனந்தியிடம் மலரை மணந்து கொள்ளப்போகிறேன் என்று சொல்கிற வரையிலான நீண்ட காட்சியின் லாவகம் அருண்குமாரின் படத்தொகுப்பு மேன்மைக்கு ஒரு சாட்சி.

இது தனிமனிதர்களின் கதை அல்ல. ஒரு மரபான கிராமத்தின் கதை. கடலின் மடியில் வாழ்பவர்கள் உயிர்வாழ்தல் சார்ந்த நெருக்கடிகளைக் கடப்பதற்கு  கடலின் அகத்திலும் புறத்திலும் அதிலிருந்து மீள்வத ற்கான ஒரு பாதையைக் கண்டடைகிறார்கள். கட்டுமரம் எனும் சொல் இங்கு ஒரு பிம்பம். விடுதலைக்கான ஒரு குறியீடு அது. இங்கு அத்தகைய கட்டுமரத்தைத் தனது அக்காள் மகளான ஆனந்திக்குத் தந்தவர் நீதியுணர்வு கொண்ட சிங்காரம் எனும் ஒரு மரபார்ந்த மனிதன். அவன் இதன் வழி விடுதலை பெற்ற மனிதனாக ஆகிவிடுகிறான்.

Comments are closed.