வண்ணநிலவனின் ‘எம்.எல்’ அல்லது மதுரைப் பிள்ளைமார் இட்லி சுட்ட வரலாறு

 

என்னிடம் ராமச்சந்திரன் என்ற இளைஞனை அறிமுகப்படுத்தினார்கள். அவன் எனது அலுவலகம் வந்திருந்தான். அவன் தீவிர இடதுசாரி சிந்தனை உள்ளவனாகவும், புரட்சிகர மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்தான். அவனுடன் ஒரு இரு மணி நேரம்தான் உரையாடினேன். அன்றிலிருந்து அவன் என்னைவிட மிகவும் தீவிர இடதுசாரி எதிர்ப்பாளனாகவும் அதைப் பரப்புபவனாகவும் மாறி விட்டான். அந்த ராமச்சந்திரன்தான் வண்ணநிலவன்.

சோ.ராமசாமி

உலகமே புரட்சியைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது. 

வண்ணநிலவன்

I

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, என்வர் ஹோக்ஷா, சாரு மஜூம்தார், போல்பாட் என இவர்கள் அனைவரையும் ஒற்றைப்பட்டையான சிந்தனைமுறை கொண்டவர்கள் எனக் கற்பித்துக்கொண்டு கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பேசுவார்கள்.

கம்யூனிசத்தை விமர்சனபூர்வமாக ஆதரிப்பவர்கள் மேற்கண்ட பெயர்களையும் அவர்கள் சேர்ந்த நாடுகளின் சூழலையும் இவர்தம் அனுபவங்களையும் அவரவர் சூழலில் வைத்து விளக்குவார்கள். கம்யூனிச சமூக அமைப்புக்கான போராட்டம் என்பது வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத, ஏற்றத்தாழ்வுகளும், சாதனைகளும் தவறுகளும் நிறைந்த ஒரு நிகழ்வுப் போக்கு. போல்பாட்டை இவர்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். ஸ்டாலின் காலத்தை சாதனைகளும் கூடவே வேதனைகளும் நிறைந்த காலமாக அணுகுவார்கள்.

கம்யூனிச எதிரிகள் வரலாற்றின் எல்லா விசாரணைகளையும் ரஸ்யப் புரட்சியில் இருந்து துவங்குவார்கள். இவர்களது ஆய்வுகள் ஒரேயொரு நூற்றாண்டுக்குள் உறைந்துவிடும்.

கம்யூனிச ஆதரவாளர்கள் வரலாற்றை அதனது எழுதுமொழிக்கு முன்னிருந்த காலத்திலிருந்து துவங்குவார்கள். நிலப்பிரபுத்துவத்திலிருந்தல்ல, அதற்கும் முந்தைய புராதனக் கம்யூனிசத்தில் இருந்து துவங்குவார்கள். முடியாட்சி, காலனியம், அடிமை வியாபாரம், மதங்களின் ஆட்சி என அவர்தம் ஆய்வுகள் இருக்கும்.

இவர்களைப் பொறுத்து கம்யூனிசம் என்பது பொருளியல்-உழைப்புச் சுரண்டலில் இருந்தும் இயற்கைக்கு மாறான அந்நியமாதலில் இருந்தும் மனிதன் மீட்சி பெறுவது குறித்த ஆய்வுமுறையாகும். இவர்களைப் பொருத்து கம்யூனிச மனிதன் என்பவன் அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுதலைபெற்ற ஓரு கலைஞன்.

II

கம்யூனிசம் என்பது ஒரு தத்துவப்பிரச்சினை. வாழ்வின் பொருளும் கடைத்தேற்றமும் குறித்த ஒரு வாழ்முறை. கசான்டாஸ்கிசும் சரி அம்பேத்கரும் சரி தலாய்லாமாவும் சரி கம்யூனிசம் பற்றி இவ்வாறுதான் பேசாமல் கடக்க முடியாது.

கம்யூனிசம் வெறும் பொருளாதாரப் பார்வையோ அல்லது அரசியல் நடைமுறையோ இல்லை. அது மனித விமோசனம் குறித்த ஒரு தத்துவநோக்கு. கம்யூனிச அரசியலின் வரலாறு என்பதே இந்தத் தத்துவத் தேட்டம்தான். லெனினொடு ரோஸா லுக்சம்பர்க் முரண்படுவார். ஸ்டாலினுடன் லுகாக்ஸ் முரண்படுவார். ஸ்டாலினை விமர்சிக்கும் பிரெக்ட் ஸ்டாலினை விதந்தும் எழுதுவார். சேகுவேரா பற்றி அலன்ஜின்ஸ்பெர்க் உருகி எழுதுவார். நெருதா  இறுதிவரை கம்யூனிசக் கனவைக் காவித்திரிவார்.

ரஸ்ய, சீன, கியூப அனுபவம் அனைத்தும் ஒன்றல்ல. கியூபப்புரட்சி வாகைசூடிய எட்டு ஆண்டுகளில் அந்தச் சமூகத்தில் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றி திரைப்படம் எடுத்தார் கிதராஸ் அலியா.

பொதுவுடமை என்பது ஒரு மாபெரும் கனவு. இரண்டாயிரம் ஆண்டுத் தனியுடமையை ஒரு நூற்றாண்டில் மாற்றிவிட முடியாது. அதற்கான தவறே நிகழாத சூத்திரம் என ஏதும் இல்லை. சோசியத் யூனியன் வீழ்ச்சி ஒரு பின்னடைவு. சமகாலத்தில் சீன, வியட்நாமிய, கியூப சமூகங்களில் நிகழ்ந்துவரும் மாற்றம் அந்தந்த சமூகங்களில் ஜனநாயகத்திற்காக நிகழ்ந்து வரும் போராட்டங்கள்.

முதலாளித்துவம் அதனது இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. கார்ப்பரேட் கலாச்சாரம் மனிதர்கள் குறித்த அக்கறை அற்றது. அதன் ஒரே குறி இலாபம். சூழல் அழிவது பற்றி அதற்கு அக்கறையில்லை. பெண் உடல் பண்டமாக விற்கப்படுவது பற்றி அதற்குப் பொருட்டில்லை. யுத்தங்களே அதனது வாழ்முறை. வேறுபட்ட சமூகவிடுதலை இயக்கங்கள், பல்வேறுபட்ட இடதுசாரி இயக்கங்கள், உரிமை இயக்கங்கள் இன்றும் புதிய உலகுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன.

மார்க்சியர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்ட் சமூகம் வரலாற்றின் இறுதி எனச் சொல்லியதில்லை. அன்றும் முரண்கள் நிலவும். முரண்கள் இன்றி இயங்கியல் என்பதும் மாற்றம் என்பது இல்லை. வரலாறோ வாழ்வோ முடங்கிப்போகவில்லை. உறைந்துபோய் விடவும் இல்லை. மனிதன் சதா வாழ்ந்துகொண்டும் அதே சமூகத்தின் மீது தனது கனவை விதைத்துக் கொண்டும்தான் இருக்கிறான்.

மனிதன் இன்று கனவு காண்பது சோசலிச ஜனநாயக சமூகம்.

III

நக்சல் பிரச்சினை பற்றி இன்று புனைவு எனும் அளவில் வங்கத்திலிருந்து மஹா ஸ்வேதாதேவியின் ‘1084 எண்ணின் அன்னை’, ஜூம்ப்பா லஹரியின் ‘லோ லேன்ட்’, சமரேசு மஜீம்தாரின் ‘ஃபீவர்’,  ‘கால்பலா’ போன்ற நாவல்களும், கேரளத்திலிருந்து ‘பிறவி’, ‘தலப்பாவு’, ‘சகபாடி1975’  என மூன்று முழுநீளத்திரைப்படங்களுக்கு ஆதாரமான நூற்களும், தமிழில் பாரதிநாதன் எழுதிய  ‘தறியுடன்’, ‘வந்தேறிகள்’ என இரு நாவல்களும் வந்திருக்கின்றன.

அறுபதுகளில் உலகெங்கிலும் சமூகமாற்றத்தில் நம்பிக்கை கொண்ட மாணவர்கள் பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறி கலகத்தில் ஈடுபட்டார்கள். ‘மாஸ்கோவும் வேண்டாம் வாஷிங்டனும் வேண்டாம்’ என்றார்கள். வியத்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இவர்கள், அதன்பொருட்டு உலக ராணுவ ஆக்கிரமிப்பாளனான அமெரிக்காவை நிராகரித்தார்கள். அதேவேளை ஸ்டாலின் காலத்தில் ரஸ்யாவில் நிகழ்ந்த கட்டாய உழைப்பு முகாம்களையும் இவர்கள் நிராகரித்தார்கள்.

மாவோ, சே குவேரா, ஹோசிமின் இவர்தம் வழிகாட்டிகள் ஆனார்கள். தம்மறுப்பு, உழவர், மாணவர், தொழிலாளர் ஒற்றுமை, அதிகாரவர்க்க எதிர்ப்பு, சமத்துவ உலகு இவர்தம் கனவு. உலகெங்கிலும் மாணவர்-இளைஞர்-உழவர்-தொழிலாளர் ஒன்றிணைவின் அரசியல் இதுதான். இதுவே இந்த இயக்கத்தின் பொதுப்பண்பு. இந்த வரலாற்றின் இந்திய விளைவு நக்சல் அரசியல்.

சாரு மஜீம்தார், ரித்விக் கடக் எனப் பெரும் அறிவாளிகள், படைப்பாளிகள் இதனால் ஆதர்ஷம் பெற்றனர். அது ஒரு அறிவியக்கம். கலக அரசியல். மிருணாள் சென், சத்யஜித் ரே, புத்ததேவ் தாஸ் குப்தா போன்றோர் இந்த நிகழ்வை ஆதுரமாக அணுகினார். அந்த யுக இளைஞர்களின் கோபத்தை அவர்கள் மதித்தார்கள். பரிவுடன் அணுகினார்கள். அதனது போதாமைகளை அவர்கள் பொறுப்புடன் சுட்டிக் காட்டினர். வெறுப்புடன் அவர்களை இவர்கள் அணுகவில்லை.

ஸ்வேதா தேவி சிதைந்த யுவதிகளின் கனவுகளை, அந்தத் தலைமுறையின் வீரத்தை விதந்து போற்றினார். ஸ்வேதா தேவியின் அன்னை தனது எஞ்சிய மகனின் மனிதவுரிமைக் கனவை முன்னெடுத்துச் செல்பவராக ஆனார். ஜூம்பா லஹரியின் நாவல் நக்சலைட் ஒருவரைக் காதலித்த பெண், காவல்துறையின் வேட்டையில்  அவன் சுட்டுக்கொல்லப்பட, அலனது சகோதரணை மணந்து கொண்டு அமெரிக்கா செல்கிறார். அவரது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான வேறு வேறு சூழல் சார்ந்த அவரது உளநிலை எவ்வாறு அலைகிறது என்பதை அந்த நாவல் சொல்கிறது.   சமரேசு மஜீம்தாரின் இரு நாவல்களது நாயகர்களும் நாயகிகளும் தமது இழந்துபட்ட கடந்தகாலத்தை நிதானத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். இயக்கத்தில் காதலுணர்வு குறித்து நக்சல் இயக்கம் அக்கறை கொள்ளவில்லை என்றார்கள். இயக்கத்தில் நிலவிய சாகசவாதம், அழித்தொழிப்பு அரசியல் விளைவித்த சேதம், இயக்கத்தினுள் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வுகள், படித்தவர்களின் மேட்டிமை, உழவர்களின் தனிமை பற்றி, காவல்துறைச் சித்திரவதையின் தீராத வலி பற்றி சமரேசு மஜீம்தாரின் நாவல்கள் பேசின.

கேரள அனுபவங்களும் திரைப்படங்களும் காவல்துறையின் மனித உரிமைகள் பற்றியே பிரதானமாகப் பேசின. நக்சலைட்டுகளின் ஓர்மும் ஈகமும் பற்றிப் பேசின. உழவர்களின் உரிமைக்கான அவர்தம் சளையாத போராட்டம் பற்றிப் பேசின. தலப்பாவு திரைப்படம் கடத்தப்பட்டு விசாரணையின்றி சித்திரவதை செய்துகொல்லப்பட்ட வர்கீசின் வாழ்வைப் பேசியது. பிறவி, சகபாடி 1975 என இரு படங்கள் காவல்துறையினால் கடத்திக் கொல்லப்பட்டு,  பிணத்தை இரவிரவாக எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்த கோழிக்கோடு பொறியியல் கல்லூரி மாணவனின் காணாமல் போதலால் அவனது பெற்றோரும் சகோதரியும் அடைந்த துயர் பற்றிப் பேசுகிறது.

தமிழகத்தில் கூட கோமல் சவாமிநாதன் தனது ‘அனல்காற்று’ படத்தில் இந்தப் பிரச்சினைகளைப் பேசினார். பாரதிநாதன் தனது இரு நாவல்களில் நெசவாளர்களின் அன்றாடப் பாடுகளையும், அவர்கள் நக்சல்களால் தொழிற்சங்கமாக்கப் படுவதையும், கந்துவட்டிக்கும் சுரண்டலுக்கும் எதிராக அந்த ஏழை மனிதர்கள் போராடுவதையும்,  அவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறைகளைப் பற்றியும் பேசினார்.

இந்தப் படைப்பாளிகள் நக்சலிசத்தை ஒரு வரலாற்றுத் தருணமாககண்டு, அது குறிப்பிட்ட பகுதிவாழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பற்றிப் பேசினர். அதன் தோற்றக்காரணமான உழவர் பிரச்சினை பற்றி, நிலம் பற்றி, அநியாய வட்டிக்கொடுமை பற்றிப் பேசினர். முக்கியமாக ரே, கடக். மிருணாள் சென், அருந்ததி ராய் துவக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன், ஈச்சவாரியார், பாரதிநாதன் வரை இவர்களது படைப்புகளில் வெளிப்பட்ட ஒரு விஷயம் காவல்துறை மற்றும் அதிகாரவர்க்க வன்முறை பற்றியது. இதுவே வங்க, கேரள, தமிழகப் படைப்புகளில் நக்சலிசம் பற்றி வெளிப்பட்டச் சித்தரிப்பு உலகம்.

இந்தப் படைப்புகளில் இருவகையிலான பார்வைகள் வெளிப்பட்டன. வர்க்கப் பகைவர்களை அழித்தொழிப்பது என்பதே பிரதான அரசியலாக ஆனபோது வெகுமக்களிடம் இருந்து இயக்கம் அந்நியமாகியது. எந்த மக்களுக்காகப் போராடினார்களோ அந்த மக்களுக்கும் இயக்கத்துக்குமான பிணைப்பு இல்லாதுபோனது. இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட இந்தப் படைப்புகள், அரச வன்முறையைக் கடுமையாக விமர்சித்ததோடு, ஈகத்துடன் இதில் ஈடுபட்ட தலைமுறையை பரிவுடன் அணுகியது.

IV

வண்ணநிலவனின் ‘எம்.எல்’. நாவல் இரண்டு மதுரைப் பிள்ளைமார் குடும்பங்களின் கதை. ஒருத்தருக்கு கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பர்யம் இருக்கிறது. இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் வேலைசெய்து ஒய்வுபெற்றவர். இவரது வீட்டுக்கு அவ்வப்போது மார்க்சிஸ்ட் அரசியல் பற்றி அரட்டை அடிப்பதற்கு பிள்ளைவாளின் சொந்தங்களும், முன்னாள் தோழர்களும், அந்தப் பகுதி இளைஞர்களும் வந்துபோவார்கள். இவர் நக்சலிசம் வேலைக்கு ஆகாது என்று கருதுகிறார்.  இவரை சாரு மஜீம்தார் வந்து சந்திப்பதும (சாரு மஜீம்தாரை கோபால் பிள்ளை ‘மிஸ்ட்டர் மஜூம்தார்’ என அழைக்கிறார்). இன்னும் சில மெத்தப்படித்த, கொஞ்சம் படித்த  சில இளைஞர்களைச் சாரு சந்திப்பதும் நாவலின் அரசியல் விவாதப்பகுதியாக இருக்கிறது.

இன்னொருத்தருக்கு ஜவுளிக்கடை வியாபாரம். ஜவுளிக் கடைக்காரருக்கு ஒரு சகோதரி. அவருக்கு ஒரு சீட்டாடி புருஷன். அவர் சீட்டாடி ஜெயிலுக்குப் போகிறார். ஜவுளிக் கடைக்காரப் பிள்ளைவாள் அவரை ஜெயிலில் இருந்து எடுக்கிறார். அந்தக் குடும்பத்தில் இன்னொருத்தரை நக்சல் கூட்டம் போட்டார் என ஜெயிலுக்கு இழுத்துக்கொண்ட போகிறார்கள். நாவலில் மையமான சம்பவங்கள் என்பன இவை இரண்டும்தான்.

இரண்டு கூட்டுக் குடும்பக்கதைகள் அதனோடு பெண்களின் துயரம்தான் முழுக்கதையும். சீட்டாடி ஜெயிலுக்குப் போகிறவரால் குடும்பத்துக்குத் துயரம். நக்சல் கூட்டம் போடுபவராலும் குடும்பத்துக்குத் துயரம். இதுவன்றி காவல்துறை அமைப்பு எனும் அளவில் மாநில, மத்திய  உளவுத்துறைக்காரர் இருவருக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் அது சார்ந்த பொறுப்புகள் இருக்கின்றன.

சாரு மஜூமதாருக்கு இந்த நாவலில் என்ன பங்கு? அவர் தனது இயக்கத்தைக் கட்ட தமிழ்நாடு வருகிறார். கோயமுத்தூர் அப்புவை மட்டுமே அவருக்குத் தெரியம். கோபாலப் பிள்ளையை ஒன்றுபட்ட கட்சி கூட்டம் ஒன்றின் போது சந்தித்திருக்கிறார். கோபால் பிள்ளைக்கு இது துப்புரவாக ஞாபகம் இல்லை. கண்ணில்படுகிற எல்லோரையும் இயக்கத்தில் சேர்க்க நினைக்கிறார் சாரு மஜூம்தார். அவர்போலவே தமது விவரங்கள் ஒன்று விடாமல் உளவாளி பிச்சாண்டிக்குத் திறந்து போடுகிற உணர்ச்சிவசமான தோழர்கள் பிச்சாண்டி பற்றி எதுவுமே விசாரிக்காமல் அவரை தாங்கள் துவங்கவிருக்கும் கோட்பாட்டு இதழுக்கு ஆசிரியராகத் தேர்கிறார்கள்.

இதில் ஒரு தோழர் தனது மெத்தப்படித்த நண்பர் ஒருவரைப் பார்க்கப்போகிறார். அவர் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பற்றி ஒரு லெக்சர் கொடுக்கிறார். அந்த லெக்சரைக் கேட்டவுடன் போனவருக்கு ஞானம் வந்து மார்க்சிய அரசியலையே விட்டுவிடுகிறார்.

ஒரு இரண்டுமணி நேர மார்க்சியப் படிப்பு. சாருவின் எட்டு டாகுமென்ட் பக்கம் விரிப்பு. மறுபடி இரண்டு மணி நேர ஆன்ட்டி கம்யூனிஸ்ட் லெக்சர். ஒரு நூற்றாண்டு மார்க்சிய அனுபவங்கள் முடிந்து மதுரைப் பிள்ளைமார் ஒருவருக்கு ஞானம் கிட்டுவதுதான் வண்ணநிலவனின் எம்.எல்.நாவலின் விவரிப்பு.

நாவலின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரசியல் பேசும் இந்த நாவலுக்கு எதற்கு ‘எம்.எல்’ என்று பெயர்?

மலையாளப் படங்களுக்கு பார்வையாளனை ஈர்க்கிற மாதிரி ‘மாமனாரின் இன்பவெறி’ எனப் பெயர் வைப்பார்கள். இதே மாதிரியான ஆபாசமான இலக்கியம்சார் வணிக உத்திதான் மதுரைப் பிள்ளைமார் திரும்பத் திரும்ப இட்லி சுடுவது பற்றிய இந்த நாவலுக்கு வண்ணநிலவன் எம்.எல்.என்று பெயர் சூடடியிருக்கும் தந்திரம்.

V

மதுரையில் பிள்ளைமார் குடும்பம் போன்று கோயமுத்தூரில் எழுபதுகளின் தொழிலாளர் குடும்பம் என இருக்கவே செய்யும். . தொழிற்சங்க இயக்கம் தவிர்க்கமுடியாமல் இருக்கும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சத்தீஷ்காரில் மலைவாழ் மக்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் அடிப்படை வாழ்வே நாசம். இவர்களுக்கும் வேறுபட்ட குடும்ப உறவுகள் குழந்தைகள் இருக்கும் இல்லையா? அவர்கள் வீடுகளிலும பெண்கள் இருப்பார்கள் இல்லையா?

கோயமுத்தூரிலும் சத்தீஷ்காரிலும் தொழிலாளர், உழைப்பாளர் பெண்களும்தான் போராடினார்கள். வண்ணநிலவனின் இரண்டு பிள்ளைவாள் வீட்டுப் பெண்கள் மாதிரி அவர்கள் சதா வெறும் இட்லியும் தோசை மட்டும் சுட்டுக் கொண்டு, தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருக்கவில்லை. அவரவருக்குப் போராடவும் போராடாமல் இருக்கவும் ஒரு நியாயம் இருக்கிறது இல்லையா?

வண்ணநிலவனது நாவலின் சொல்முறையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிள்ளைமார் குடும்பங்களுக்குள் நடக்கிற உரையாடல். இன்னொன்னு வண்ணநிலவன் நாவல் முழுக்கத் தருகிற ரன்னிங் கமென்டரி. இந்த ரன்னிங் கமென்டரி நாவலின் போக்கில் வண்ணநிலவனின் ரோதனையான அரசியல் இடையீடு.

நாவல் எடுத்துக் கொள்ளும் அரசியல் அனுபவம் எனும் அளவில் அது வண்ணநிலவனுக்கு இரண்டாம் கை அனுபவம். வண்ணநிலவனுக்கு இந்த அரசியலில் நேரடி அனுபவமும் இல்லை. ஈடுபாடும் அக்கறையும் இல்லை. இவர்களிடம் உள்ளார்ந்த பரிவுணர்வும் இல்லை. உருப்படாமல் போனவர்கள் அல்லது சாரு மஜூம்தார் எனும் தனிமனிதரால் வாழ்வு கெட்டவர்கள் எனும் புரிதல்தான் இருக்கிறது.

பின்வருவது வண்ணநிலவன் எனும் இரண்டாம் கை கதைசொல்லியின் முன்னுரையிலும் கதைக்கு உள்ளும் நீக்கமற நிறைந்திருக்கும் ரன்னிங் கமென்டரிகள் :

— சாரு மஜீம்தாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால் அவர் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்பினார். அவரது தவறான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை நான் சென்னை வந்தபின் சந்திக்க முடிந்தது. இப்போதும் சத்திஷ்கார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் பரவியுள்ள மாவோயிஸ்ட்டுகளின் முன்னோடி சாரு மஜீம்தார்தான்.

…. மார்க்சின் கொள்கைகளை அமுல்படுத்த முயன்ற ரஸ்யா, சீனா போன்ற நாடுகளில் கூட மார்க்ஸ், லெனின், மாசே துங் போன்றவர்களின் கொள்கைகளுக்கு எதிராகத் தனியுடைமையும் செல்வக் குவிப்பும் ஊக்குவிக்கப்படுகிறது. பொதுவுடமையை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. மார்க்ஸ் சமதாய இயக்கத்தை நிலவுடமை, முதலாளித்துவம், கம்யூனிசம் எனப் படிநிலைகளாகக் கணக்கிட்டார். இது அவரது கற்பனை, யூகம் என்றாகிவிட்டது.

… ரஸ்யாவிலும் சீனாவிலும்  வலிந்து கொண்டுவரப்பட்ட சோசலிச சமுதாயமே இன்று அங்கு இல்லை. நம் நாட்டைப் போன்ற அரசும், தனியாரும் பங்குபெறும் கலப்புப் பொருளதாரமும்தான் அங்கும் இருக்கிறது. அரசுப் பங்களிப்பு இனறைய உலகமயமாக்கலில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.  மார்க்சிய அரசியலிலும் அதனது பொருளாதரத்திலும் தவறுகள் உள்ளன. அதுபோல முதலாளித்துவத்திலும் தவறுகள் உள்ளன. தவறுகள் இல்லாத அரசியல் பொருளாதார நிலை என்பது மனிதக் கற்பனையோ என்று தோன்றுகின்றது.( முன்னுரைப் பக்கங்கள் 5-6)

வண்ணநிலவனுக்கு அடிப்படையான சில விஷயங்களில் தெளிவு இல்லை. நக்சலிசம் என்பது நாடு தழுவிய ஒரு புரட்சியைக் கொணரும் என்பதில் நடைமுறைப்பிரச்சினை இருந்தால் கூட, இன்று மலைவாழ்மக்கள் ஆயதமேந்திப் போராட வேண்டிய உள்ளுர் நிலைமைகள் ஏன் எழுகின்றன? வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இனப் போராட்டங்கள் ஏன் எழுகின்றன? இவைகள் அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கைகளின் மீதுதான் எழுகின்றன. சத்தீஸ்காரில் நடப்பது உள்ளுர் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது அவர்களது உரிமையை நிலைநாட்டும் பண்பு கொண்டன. உழவர் உரிமையின் மீதான கவனக்குவிப்பே நக்சல் எழுச்சியின் ஆதாரம். இன்றும் உழவர்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

பொதுவுடமையை உலகம் ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக முன்னுரையில் எழுதுகிறார் வண்ணநிலவன். உலகில் நடக்கிற மககள் எழுச்சிகள், விழிப்புணர்வு குறித்த அறிவே வண்ணநிலவனிடம் இல்லை. அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொள்வோம். அங்கு ஒரு சதவீதமானவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக 99 சதவீதமானவர்களின் உரிமை என்று போராடுகிறார்கள். இளைய தலைமுறையினரில் 60 சதவீதமானவர்கள் சோசலிச சமூகத்தை விழைகிறார்கள். ‘ஜெகோபின்’ என்று ஒரு சோசலிசச் சஞ்சிகை ரஸ்ய, சீன அனுபவங்களுக்கு மாற்றாக, அமெரிக்க ஜனநாயக சோசலிசம் பற்றிய பிரகடனத்தை வெளியிடுகிறது. இங்கிலாந்தில் தொழிற்கட்சியில் பொதுவுடமையை ஏற்போர் முன்னிலை பெற்று வருகிறார்கள். உலகெங்கிலும் இன்று இடதுசாரிகள் தத்தமது நாட்டுக்கு உகந்த சோசலிசத்தை முன்வைக்கிறார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின் மட்டும் 25 மார்க்சியக் கோட்பாட்டுச் சஞ்சிகைகள் உலகில் தோன்றியிருக்கின்றன.

மார்க்சின் ஆய்வுகள் ஜெர்மன் தத்துவம், பிரெஞ்சு அரசியல், இங்கிலாந்து பொருளியல்(தொழில்துறைப்புரட்சி) என்பதால் ஆனது. இந்த சமூகங்கள் வளர்ந்த விதத்தையே அவரது எழுத்துககளில் காணமுடியும். இதன் பொருள் எல்லாச் சமூகங்களும் இந்தப் படிநிலை வளர்ச்சிகொண்டவை அல்லது இதற்குள் சென்றே வரவேண்டும் என்பது இல்லை. இலத்தினமெரிக்காவில் அதனைக் குறைவளர்ச்சி சமூகம் என மதிப்பிடுவதும், இந்தியாவில ஆசிய உற்பத்தி முறை என்று பேசுவதும், முதலாளித்துவமற்ற பாதையிலான சோசலிசம் என்று பேசுவதும் கூட அந்தந்த நிலப்பரப்புக்கான மார்க்சியம்தான்.

இன்றும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி மற்றும் அதனது தவிர்க்கவியலாத நெருக்கடி பற்றிய மார்க்சின பகுப்பாய்வு தீர்க்கதரிசனம் வாய்ந்தது எனவே உலக வங்கி, பினான்ஷியல் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் சார்ந்த பொருளியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். மார்க்சினுடைய பகுப்பாய்வு கற்பனையோ யூகமோ இல்லை. அது விஞ்ஞானபூர்வ அணுகுமுறை. இதனைப் புரிந்துகொள்ள நிறைய வாசிப்பும் உலக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய அவதானமும் வேண்டும். அல்லவெனில், பிள்ளைமார் இட்லி சுட்ட கதைக்கு ‘எம்.எல்.’எனப் பெயர் வைத்துக்கொண்டு, சிறுபிள்ளை கைசூப்புவது மாதிரி கம்யூனிசத்துக்கு முடிவு கட்டி முன்னுரை எழுதிக் கொண்டிருக்கத்தான வேண்டும்.

கதைக்குள் இடம்பெரும் வரலாற்றுக் கமென்டரி :

— சோவியத் நாடு இதழ்களிலுள்ள புகைப்படங்கள் கட்டுரைகள் எல்லாம்  சோவியத் மண்ணை சொர்க்கபூமியாகக் காட்டின. அந்தப்படங்களில் இடம்பெற்ற ஆண்களின் பெண்களின் முகங்களில்தான்  எவ்ளவு சிரிப்பு. எவவளவு புஷ்டியாக இருக்கிறார்கள் அவர்கள். (பக்கம் : 33)

இந்தச் சித்தரிப்பில் எந்தப்பொய்மையும் இல்லை. உலகில் பேறுகால விடுமுறையை சம்பளத்துடன் உத்திரவாதப்படுத்திய நாடு, குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்திய நாடு, விடுமுறைகால வாசஸ்தலங்களை இலவசமாக அதன் மக்களுக்கு அளித்த நாடு, பெண்களின் பாலுறவுச் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்திய நாடு, பொதுமருத்தவச் சேவையை உத்திரவாதப்படுத்திய நாடு சோவியத் நாடுதான். உலகில் இன்றுவரை இந்தச் சாதனையை உலகின் எந்த முதலாளித்துவ நாடுகளும் எட்டவில்லை.

சாரு மஜீம்தார் பற்றிய விவரணைகைள் எப்போதெல்லாம் இடம்பெறுகிறதோ அப்போதெல்லாம் வண்ணநிலவனின் விகாரமனம் வெளிப்படுகிறது. சாரு மஜீம்தாரிடம் அடிக்கும் பீடி நாத்தம் பற்றி மட்டும் நாவலின் மூன்று இடங்களில் வெவ்வேறு நபர்களின் மனநிலைக் கூற்றாக வண்ணநிலவன் எழுதிச்செல்கிறார்..

—ஒரே பீடி நாற்றம் (பக்கம் 8)

—சாரு மஜீம்தார் வாயைத் திறந்துபேசும்போது அவரிடமிருந்து அடித்த பீடி வாசனையைத் தான் கோபால் பிள்ளையால் சகிக்க முடியவில்லை. எங்கே பீடியைப் பற்றவைத்து விடுவாரோ என்று பயந்தார் கோபால் பிள்ளை (பக்கம் : 55).

—ஏழு ஏழரைக்கெல்லாம் எல்லோரும் தோசை சாப்பிட்டார்கள். சாரு மஜீம்தாரிடம் அடித்த பீடி நெடிதான் வெங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை (பக்கம் :  67)

அவசரநிலைக்காலம், காவல்துறை வன்முறை, சித்திரவதை, விசாரணையின்றி கொல்லப்பட்டமை, என்கவுண்ட்டர் கொலைகள், ஒரு தலைமுறை மாணவர்- இளைஞர் தலைமுறையின் ஈகம், நம்பிக்கைகளின் வீழ்ச்சி, இதற்கு அர்ப்பணித்துக் கொண்ட மிகப்பெலும் அறிவுஜீவிகளின் தலைமுறை, வியர்வைக் கசகசப்புடன் கிராமம், நகரம் என அலைந்த அலைச்சல் பற்றியது, இவற்றுடன் அழித்தொழிப்பு எனும் அரசியல் தவறு பற்றிய விமர்சனம் பற்றியது என்பதுதான் நக்சல் காலம் பற்றிய இதுவரைத்திய இந்திய இலக்கிய மரபு.

வண்ணநிலவனின் நாவலில் இந்தப் பண்புகள் எதுவுமே இல்லை. சாதிய தடித்தனமும் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இயங்குவதில்லை எனக்கருதிக் கொள்கிற சோம்பேறித்தனமும் கொண்ட, அரசியல் சாரா அறிவுஜீவி மத்தியதரவர்க்கத்தின் பார்வையில் வண்ணநிலவன் எம்.எல்.நாவலை எழுதியிருக்கிறார். ஒரு படைப்பாளனுக்கு தனது கதைமாந்தர் மீதும் அவர்தம் பாடுகளின் மீதும் பரிவு இருக்க வேண்டும். வண்ணநிலவனுக்குத் தனது சுயசாதிப் பாத்திரச் சித்தரிப்புகளின் மீதான பாசத்தில் அரைவாசி கூட ‘பிற’ பாத்திரங்களின் மீது இல்லை.

வண்ணநிலவனுக்கு உரைநடை சம்பந்தமான சோஷியல் சென்ஷிபிலிடியே இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். நாவலில் ஒரு உணர்ச்சிகரமான இடம் வருகிறது. கம்யூனிஸ்ட்டான கோபால் பிள்ளை தனது வீட்டிலுள்ள காந்தி படத்துக்குப் பக்கத்தில் மார்க்ஸ் படத்தை மாட்டுகிறார். தந்தை அதனை அகற்றிவிடுகிறார். இதற்கு அவரது மனைவியிடம் அவர் சொல்லும் நியாயம் இது : ‘கண்டவன் படத்தையெல்லாம் வைக்க இது என்ன நாசுவங் கடையா?’(பக்கம் :  16).

இதனை எழுதுபவர் கதைசொல்லியான வண்ணநிலவன். பேசுபவர் ஒரு பிள்ளைமார் சாதிக்காரர். இதனைக் கதையிடை உரையாடல் எனக் கடக்க முடியாது. ‘நாசுவங் கடையா?’ என்பதற்குப் பதிலாக ‘பார்பர் சாப்பா?’ என வண்ணநிலவனால் எழுதியிருக்க முடியும்.

இதையும் மீறி இந்த உரையாடல் இயல்பு எனும் பெயரில் இடம்பெறுகிறது எனில் இதற்கு மறுபேச்சும் நாவலில் இடம்பெற வேண்டும். மகன் ஏதேனும் ஒரு தருணத்தில் இதற்கு எதிர்விணையாற்றலாம். ‘இவரு பெரிய பிள்ளைமாரு மசிரு’ என அது இருக்கவும் கூடும். ஏனென்றால் மகன் கோபத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டே வெளியேறி விடுகிறார். மிகையில் பக்தின் இத்தகைய பேச்சு-மறுபேச்சை நாவலின் பல்குரல் என்கிறார். நாவலில் பிள்ளைவாள்களின் வாழ்வைக் கொண்டாடுகிற வண்ணநிலவன் ‘பிறரை’ மிகச் சாதாரணமாக தனது கதைகூரலில் இழிவுபடுத்திச் செல்கிறார்.

சோவியத் நாடு இதழ்கள் படித்தவன், மார்க்ஸ், லெனின் படித்தவன், சாரு மஜீம்தாரின்  எட்டு டாகுமென்ட் படிததவன் இப்படிச் சிந்திப்பதாக வண்ணநிலவன் எழுதுகிறார் :

— புரட்சிக்குப் பின் இந்த மாதிரி தெருவில் சகஜமாக அலைகிற பசு, நாய்கள் எல்லாம் எங்கே போகும்? (பக்கம் : 124).

VI

நாவலின் 06.05.2018 ஆம் ஆண்டு முன்னுரை போல கதைசொல்லியான வண்ணநிலவனின் தொகுப்புரை ஒன்றுடன் நாவல் முடிகிறது. ‘அரசியலினால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை, உலகம் அதுபாட்டுக்கு நின்ற நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது’ என்பதைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார் வண்ணநிலவன்.

சமகாலத்தில் தமிழக நவபார்ப்பனியர்களால் நடத்தப்பட்ட கிழக்கு பதிப்பக மாத இதழில் இடதுசாரி எதிர்ப்புக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார் வண்ணநிலவன். அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த நவபார்ப்பனர்களால் நடத்தப்படும் இணைய இதழில் எம்.எல்.நாவலை எழுதிக் கொண்டிருந்தார் வண்ணநிலவன். குஜராத் படுகொலைகள் நடந்தன. மாட்டுக் கறியின் பெயரில் படுகொலைகள் நடந்தன. தலித், இஸ்லாமிய சிறுமியர் வல்லுறவு செய்து கொல்லப்பட்டனர். விவசாயிகளின் மிகப்பெரும் பேரணி நாட்டையே உலுக்கியது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது  வழக்குத்தொடுக்கப்பட்டது, எழுத்தாளர்களும், கலைஞர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதே காலத்தில் வண்ணநிலவன் தனது நாவலின் கடைசி வரியாக இதனை எழுதுகிறார் :

‘இப்படித்தான் உலகம் தன்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது’ (பக்கம் 140).

*

thanks to ‘PIRAL’/July 2019

 

 

 

 

 

Comments are closed.